பணி வாய்ப்பும் சவால்களும் (5): ரயில் வியாபாரம் - J. யோகேஷ்

  இத்தொடரின் கடந்த பகுதியின் முடிவில் மசாஜ் உள்ளிட்ட சில சுயதொழில்களைப் பற்றி பதிவுசெய்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் சரியான தரவுகளை என்னால் திரட்ட முடியாததால், அதுகுறித்து எழுத முடியாமைக்கு வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாத கட்டுரையை, ரயில் வியாபாரம் குறித்து களத்தில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதை வைத்து எழுதியிருக்கிறேன். ரயில் வியாபாரத்தை/வியாபாரிகளைக் குறைத்து மதிப்பிடுவதோ, புதியவர்களை ரயில் வியாபாரம் செய்ய வலியுறுத்துவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. முழுநேரமாகவோ, பகுதிநேரமாகவோ எப்படி வியாபாரம் செய்தாலும் ஓரளவுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையிலான வருமானத்தை ரயில் வியாபாரம் மூலம் ஈட்டிவிடலாம் என்றாலும் அங்கீகரிக்கப்படாத, எந்த நேரமும் சீட்டு பரிசோதகர்களாலும் ரயில்வே காவல் படையினராலும் ரயிலிலிருந்து இறக்கிவிடப்படலாம் என்பது மாதிரியான சிக்கலான சூழலில் வியாபாரம் செய்வதற்கு மாற்றான பணியை நிச்சயம் இளம் தலைமுறையினர் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.

எப்படி நடக்கிறது ரயில் வியாபாரம்?
  ஒவ்வொருவரும் தங்களின் பணத்தேவை, உடற்தகுதி, விற்பனை செய்யும் திறன் அடிப்படையில் வியாபாரத்திற்கான பொருட்கள், ரயில் வண்டிகள் மற்றும் வழித்தடங்களை தேர்வு செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கிளம்புபவர்கள் வியாபாரத்திற்குச் செல்லும் முன்னரே, இன்றைக்குத் தான் இந்த ரயில் தடத்தில், இந்த வண்டியில் விற்பனைக்குச் செல்லப்போகிறேன் என்பதை மற்றவர்களுடன் அலைபேசியில் பகிர்ந்து கொள்கிறார்கள். அவ்வப்போது மாற்றப்படும் ரயில் நேரங்களையும் தாமதமாக வரும் ரயில்களைப் பற்றியும் ஆண்டிராய்டு கைபேசி மூலமாகத் தெரிந்துகொண்டு, சக நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லி போல ஒவ்வொரு ரயில் வழித்தடங்களிலும் ஒவ்வொரு பொருட்களின் விற்பனையில் நம்  பார்வையற்றவர்கள் பிரதானமாக ஈடுபடுகிறார்கள்.

சென்னையின் மின்சார ரயில் வழித்தடங்களில் கடலை பர்பி, பாப்கார்ன், கமர்கட் போன்ற தின்பண்டங்களும் பேனா, ஏ.டி.எம். மற்றும் ஸ்மார்ட் கார்ட் கவர், நகவெட்டி போன்ற பொருட்களின் விற்பனை பிரதானமாக உள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலும், சென்னையிலிருந்து கிளம்பும் சில அதிவிரைவு வண்டிகளிலும் காற்றுத் தலையணை, தைலம், பொம்மைகள் போன்ற பொருட்கள் பார்வையற்றவர்களால் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி, சேலம் மற்றும் கோவை சுற்றுப்பகுதிகளில் ஊதுபத்தி, ஜவ்வாது, ஓடோனில், லவ்லி பேக் எனப்படும் துணி அலமாரிகளில் வாசனைக்காக வைக்கப்படும் நறுமண பொருளை உள்ளடக்கிய பாக்கெட் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள்; விளையாட்டு பொம்மைகள் விற்பனையும் ஒருசிலரால் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, தமிழகத்தின் அனைத்து ரயில் வழித்தடங்களிலும் பேனா விற்பனையில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

வருடத்திற்கு ஓரிருமுறை சில தனியார் தொண்டு அமைப்புகளால் அந்தந்த பகுதியில் வசிக்கும் பார்வையற்ற வியாபாரிகளுக்கு சில விற்பனை பொருட்கள் இலவசமாகவே வழங்கப்படுகிறது. திருச்சியிலுள்ள ‘லூப்ரா’ என்ற தனியார் அமைப்பு, ஊதுபத்தி வியாபாரிகளுக்கென தனி விடுதி ஒன்றை நடத்தி வருகிறது. அவர்களே வியாபாரத்திற்கான ஊதுபத்தியையும் கொடுத்துவிடுகிறார்கள். இந்த விடுதியில் தங்கியிருப்பவர்கள், கிடைக்கும் லாபத்தில் 30 விழுக்காட்டைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு, மீதத்தை நிர்வாகத்திடம் கொடுத்துவிட வேண்டும். நிர்வாகமே இவர்களுக்குத் திருமணம், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற வியாபாரிகளும் இந்த நிறுவனத்திடமிருந்து  விற்பனைக்கான ஊதுபத்தியை வாங்கிக் கொள்ளலாம்!

இதுபோன்ற இன்னும் சில அமைப்புகள் திருச்சியில் ஊதுபத்தி வியாபாரிகளுக்காக இயங்கி வருகிறது. ஊதுபத்தி தவிர மற்ற பொருட்களின் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு உதவுவதற்கென்று சொல்லிக்கொள்ளும் அளவிற்குத் தனியார் அமைப்புகள் இல்லை.

திருச்சி, கோவை மற்றும் சென்னை போன்ற நகரங்கள்தான் பல வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் புறப்படும்/கடந்துசெல்லும் இடமாக இருப்பதால், தென்மாவட்டங்களோடு ஒப்பிடும்போது அதிக ரயில் வியாபாரம் நடைபெறும் பகுதிகளாக இவை இருக்கின்றன. இதனால், ரயில் வியாபாரத்தில் ஈடுபட நினைக்கும் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகிறார்கள். தங்கள் சொந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரம் செய்யும்போது, சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களின் பார்வையில் பட்டு ஏளனத்திற்குள்ளாகி விடுவோம் என்கிற அச்சமும் இத்தகைய இடப்பெயர்வுக்குக் காரணம் என்பது சில தென்மாவட்ட நண்பர்களோடு பேசியதில் தெரியவந்தது.

சாதகமும் பாதகமும்
  அரசு மற்றும் தனியார் துறைகளில் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல், குடும்பத்தினராலும் புறக்கணிக்கப்பட்டு, தங்களின் அன்றாட வாழ்வை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் பார்வையற்றவர்களுக்கு ரயில் வியாபாரம் ஒரு அட்சயப் பாத்திரம் என்றால் அது மிகையில்லை. பதிவுமூப்பு அடிப்படையில் அரசுப் பணி வழங்கும் முறையைக் கைவிட்டு போட்டித்தேர்வு முறையை கொண்டுவந்து விட்டதால், பல வருடங்களுக்கு முன்பாகவே படிப்பை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, என்றேனும் அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வயிற்றுப்பாட்டிற்காக ரயில் வியாபாரத்திற்கு வந்தவர்கள் இப்போதைய போட்டித்தேர்வை எதிர்கொள்வதெல்லாம் சிரமமான காரியம். இத்தகையவர்களுக்கு ரயில் வியாபாரத்தை தவிர சிறந்த மாற்று வேலை வேறெதுவாக இருக்க முடியும்?

இவர்களின் ஒரு நாளைய சராசரி வருமானம் ரூபாய் 500 முதல் 800 வரை என்றும், விடுமுறை நாட்களில் ரூபாய் 2000 வரை கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். ரயிலில் வியாபாரம் செய்துவந்த ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த அரசு ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, மீண்டும் ரயில் வியாபாரத்திற்கே வந்திருக்கிறார் என்றால் இதில் கிடைக்கும் உண்மையான வருமானம் எவ்வளவாக இருக்க முடியும் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். பெரும்பாலான நேரங்களில் ரயில் பயணிகள் தங்களின் தேவையின் அடிப்படையில் அல்லாமல், பார்வையற்றவர்கள் மீதுள்ள கரிசனம் காரணமாகவே பொருட்களை வாங்குவதால் நம்மவர்கள் ஏமாற்றப்படுவதென்பது மிகமிகக் குறைவே. வியாபாரத்திற்குச் செல்லும்போது சில நேரங்களில் பயணிகளாலேயே மதிய உணவும் கிடைத்து விடுவதாக சிலர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

ரயில்களில் வியாபாரம் செய்ய, பணம் செலுத்தி அரசிடமிருந்து அனுமதிச் சீட்டுப் பெறவேண்டும். ஆனால், ஒன்றிரண்டு பேரைத்தவிர பெரும்பாலானோர் அனுமதியின்றியே வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால், சில கடுமையான சீட்டு பரிசோதகர்களோ, ரயில்வே காவல் படையினரோ பணியிலிருந்தால் இடையிலேயே பார்வையற்ற வியாபாரிகளை  இறக்கிவிட்டுவிடுகிறார்கள். சென்னையின் மின்சார ரயில் வழித்தடங்களில் அதிகமானோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஊதுபத்தி வியாபாரம் பெரும்பாலும் கருணை அடிப்படையிலேயே நடப்பதால், இந்த வியாபாரிகள் மொத்தமாக பொருட்களை வாங்கும் இடங்களில் தரம் குறைவான பொருட்களையே தருகிறார்கள்.

பட்டம் படித்தவர்களும், பணத்திற்காகப் படிப்பை தொலைத்த பணயக் கைதிகளும்
  ரயில் வியாபாரிகளில் கல்லூரி படிப்பிற்கிடையில் பகுதிநேரமாக வியாபாரம் செய்பவர்களும், கல்வியியல் பட்டத்தோடு முதுகலைப் பட்டம் பெற்றவர்களும், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டம் பெற்றவர்களுமே ஏராளம்; TET, NET மற்றும் SLET தேர்ச்சி பெற்றவர்களும் இவர்களில் அடக்கம்! நிரந்தர அரசுப் பணியே இவர்கள் அனைவரின் குறிக்கோள் என்றாலும், அன்றாட பிழைப்பிற்காக இவர்கள் இந்த வியாபாரத்திற்குள் நுழைகிறார்கள். கல்வியியலில் தேர்ச்சியோடு முதுகலைப் பட்டம் பெற்றவர்களும், ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்களும் ரயிலில் வியாபாரம் செய்யும்  பேரவலத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கம் அனைவருக்கும் அரசுப் பணி வழங்காவிட்டாலும், மறுவாழ்விற்கான எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளாமல் இருப்பது நிச்சயமாக கண்டனத்திற்குரியது.

படித்துப் பட்டம் பெற்றவர்களின் பாடே திண்டாட்டமாக உள்ள இந்தச் சூழலில், பார்வையற்றவர்களுக்கான விடுதியில் தங்கி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பார்வையுள்ளவர்கள் படிக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர், விடுதிகளில் முறையான வழிகாட்டுதல்களும் கண்டிப்பும்  இல்லாததால், வார விடுமுறை நாட்களில் கிடைக்கும் அதிகமான வருமானத்திற்காக இந்த ரயில் வியாபாரத்தில் ஈடுபடும் அவலத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பதின்பருவத்திலேயே பணப்புழக்கம் அதிகமாகி விடுவதால், இவர்களில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புகளும், அதனாலேயே கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் போகும் சாத்தியங்களும் அதிகம். நான் விசாரித்த வரை, இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை; ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம்.

தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சனைகளும், தீர்வுகளும்
  வேலையில்லா திண்டாட்டம் என்பது பார்வையுள்ளவர்/பார்வையற்றவர் என அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் இந்தத் தாய்த்திருநாட்டில், இருக்கிற சில அரசு, தனியார் பணிகளைப் பெற நம்மாலான முயற்சியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் படிப்பை முடித்தவர்கள் ரயில் வியாபாரத்தில் கிடைக்கும் மிகையான வருமானத்திற்கு அடிமையாகிவிடாமல், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் முயற்சிக்காக செலவிடலாம். அவ்வாறு செய்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், நம் வளர்ச்சிக்கான நமது சிறு முயற்சியாக இதனைச் செய்தே ஆகவேண்டும். எல்லோரும் இதனைச் செய்ய வேண்டும் என்று எழுதுவது எளிது; ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே படிப்பை முடித்து ரயில் வியாபாரத்திற்குள் நுழைந்து குடும்பம், குழந்தைகள் என ஒரு வட்டத்திற்குள் சென்றுவிட்டவர்களுக்கு இதெல்லாம் சாத்தியப்படுவது கொஞ்சம் கடினம் என்பதாலேயே, சமீபத்தில் படிப்பை முடித்தவர்கள் என எழுத வேண்டியிருக்கிறது.

முறையாக விண்ணப்பித்து ரயில்வே துறையினரின் முன் அனுமதி பெற்று, பொதுமக்களின் கருணை அடிப்படையில் அல்லாமல் அவர்களின் தேவையின் அடிப்படையி்ல் பொருட்களை தேர்வுசெய்து விற்பனை செய்யலாம். ரயில் வியாபாரம் என்கிற பெயரில் ரயிலில் கையேந்தும் போக்கு சமீபத்தில் நம் சமூகத்தினரிடையே அதிகரித்துவிட்டதாக அறியமுடிகிறது. சமூகத்தில் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராகப் பார்வையற்றவர்கள் இருப்பதால், ஒருவரைக் கொண்டே மற்ற பார்வையற்றவர்களும் மதிப்பிடப்படுவார்கள் என்பதை புரிந்துகொண்டு, முறையான வியாபாரத்தில் ஈடுபடுவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் நம் பார்வையற்ற சமூகத்திற்கே தலைநிமிர்வாக இருக்கும். இதனால் அன்றாட வருமானம் சிறிது குறையும் என்றாலும் தன்மானமும், சமூக மானமும் காப்பாற்றப்படும் என்பது நிச்சயம் மகிழ்ச்சிக்கு உரியதுதானே?

பின்குறிப்பு
  இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் அனைத்துத் தகவல்களும், தரவுகளும் இந்த வியாபாரத்தில் இருக்கும் சில நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டவையே. ரயில் வியாபாரம் முறைப்படுத்தப் படாததால், துல்லியமான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை என்பதாலேயே கட்டுரையில் ‘பெரும்பாலும்’, ‘பெரும்பான்மை’ மாதிரியான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதாயிற்று. தவறான தகவல்கள் ஏதேனும் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பின், வாசகர்கள் தாராளமாக அவற்றைச் சுட்டலாம்.
***

தொடர்புக்கு: romioyogesh@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக