பல்லவி.
ஒளி பொருந்திய
இறைச் சுடரது
எழில் கமழ்ந்திடும்
மனு உருவினை ஏற்றது.
பனி பொழிந்திடும்
நடு இரவினில்
புவி மகிழ்ந்திடும்
புது உறவென வந்தது!
உன்னத வாழ்வை அளித்திட,
விண்நின்று மீட்பு
பிறந்தது!
மண்ணகம் அமைதியில்
மகிழ்வுற,
அன்புடன் குழந்தையாய்த்
தவழ்ந்தது!
சரணம் - 1.
பரிசுத்த ஆவியின்
கருணையினால் - தூய
ஒளி ஒன்று மரியிடம்
கருவானது.
காபிரியேல் தூதர்
மொழிகள் கேட்டு,
நீதிமான் சூசை
நிழலில் வாழ்ந்து,
மீட்பை நல்கிடும்
இறை வெண்மலரே,
மாட்டுக் கொட்டிலில்
மலர்ந்ததுவே!
சரணம் - 2.
விண்ணோர்கள் புகழ்
கீதம் இசைத்திடவே - அன்று
மண்ணோர்கள் மலர்ப்
பாதம் பணிந்திடவே,
வாலில்லா நட்சத்ரம்
உருவாகிடவே,
ஞானியர் மூவர்க்கும்
வழிகாட்டிடவே,
வாழ்வில் வளங்கள்
பொழியும் அமுதே,
மகிமை விளங்க மலர்ந்ததுவே!
சரணம் - 3.
இறைமையை உலகுக்கு
அறிவிக்கவும் - பாவ
அடிமையை விடுவித்து
அருள் தரவும்,
அன்பின் செயல்களில்
அகம் வென்றிடவும்,
ஆறுதல் வழியில்
சுகம் தந்திடவும்,
ஆற்றல் நிறைந்த
அழகின் உருவே,
அற்புதம் நிகழ்த்தப்
பிறந்ததுவே!
***
(கவிஞர் புதுக்கோட்டை
மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).
தொடர்புக்கு:
celinmaryx@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக