சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில்,
சாதனையாளர் ஹெலன் கெல்லர் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தித் திரைப்படம் ‘பிளாக்’.
இத்திரைப்படத்தில் செவி மற்றும் பார்வை மாற்றுத்திறன் இளம்பருவ சிறுமியாக ஆயிஷா
கபூரும், பிந்தைய பருவத்தில் நடிகை ராணி முகர்ஜியும், அவரது ஆசிரியராக நடிகர்
அமிதாப் பச்சனும் நடித்திருப்பர். இத்திரைப்படம் பற்றிய முழுமையான அனுபவம் பெற
வேண்டுமென்றால், முதலில் ஹெலன் கெல்லர் அவர்களின் சுயசரிதையான ‘என் கதை’ (தமிழில்
கண்ணதாசன் பதிப்பகம்) என்னும் நூலைப் படித்துவிட வேண்டுகிறேன். அடுத்ததாக,
இத்திரைப்படத்தை ஒருமுறையாவது பார்த்துவிடவும் வேண்டுகிறேன். இத்திரைப்படத்தின் யூ-டியூப்
லிங்க் - https://m.youtube.com/watch?v=97joWcX1w7Q (ஆங்கில சப்-டைட்டிலுடன்).
மிஷல் என்னும் பெயர் கொண்ட நாயகி, வசதியான ஆங்கிலோ-இந்தியன் குடும்பத்தில்
பிறந்தவள். தன்னுடைய இரண்டு வயதில், தனக்கு ஒரு இளைய சகோதரி (சாரா) பிறந்திருந்த காலகட்டத்தில்,
தன்னுடைய செவித் திறனையும், பார்வைத் திறனையும் இழக்கிறார். சிகிச்சையைத் தவிர
வேறு எந்தப் பயிற்சியும் அளிக்கப்படாமல் அதற்கடுத்த ஐந்தாறு ஆண்டுகள் கழிகிறது.
அதற்குப் பிறகு, ஓய்வுபெற்ற சிறப்புப் பள்ளி ஆசிரியரான தேவராஜ், மிஷலின் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். அவரது முயற்சிகள்
மற்றும் மிஷலின் கோபம், பிடிவாதம், வெற்றி, தோல்வி, நெகிழ்ச்சி, ஏமாற்றம், பெருமிதம் ஆகியவற்றின் தொகுப்புதான் ‘பிளாக்’ திரைப்படம்.
அவளது குறைபாட்டினாலும், எவ்வித பயிற்சிகளும் அளிக்கப்படாததாலும், வசதியாக, செல்லமாக வளர்க்கப்படுவதாலும், முரட்டுத்தனமான பிடிவாதம்
மற்றும் கோபம் கொண்டவளாக வளர்கிறாள் மிஷல். அவள் தன்னுடைய மகளே அல்ல; ஏதோ ஒரு வீட்டு விலங்கு என்ற மனநிலை கொண்டவர் அவளது தந்தை
பால். அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறியாத, அறிந்துகொள்ளத் துடிக்கும் பாசம் கொண்டவர் அவளது தாய்
கேத்தரின். அதாவது, ஒருபக்கம் முழுமையான புறக்கணிப்பு; இன்னொரு பக்கம் அறியாமை நிறைந்த பாசம்: இதுதான் சிறுமி
மிஷலின் வளர்ப்புச் சூழல். இந்தச் சூழல் எந்தவொரு மாற்றுத்திறனாளியின் இளமைக்
காலத்திற்கும் ஓரளவிற்கேனும் பொருந்தும்.
அவளது கழுத்தில் மணி ஒன்று கட்டித் தொங்குகிறது; அவளது சுய தேவையின்போது அழைப்பதற்கு. வீட்டில் சுவரைத் தடவிக்கொண்டே நடந்து திரிகிறாள்; சாப்பாட்டு மேசையைச் சுற்றிவரும் போது எது கையில்
கிடைக்கிறதோ அதை எடுத்து உண்கிறாள்; வாய்க்குள் சென்றது போக எஞ்சியவை உடையிலும் தரையிலும்
சிந்துகிறது. கேட்கவும் பார்க்கவும் இயலாத அவள் முகத்தில், புதியவரான ஆசிரியரின்
தாடி மற்றும் மூக்குக் கண்ணாடியைத் தடவிப் பார்த்தவுடன் புதிய ஒன்றைக் கண்டுகொண்ட
மகிழ்ச்சி தோன்றுகிறது; இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் அவளுக்குப் புதிய
விசயம்! அவள் கழுத்தில் இருந்த மணியைக் கழட்டி வீசி, அவளை மனுஷியாக மாற்றுகிறார் ஆசிரியர்.
அதற்கடுத்து, அவளை நாற்காலியில் அமர்த்தி, கரண்டியில் எடுத்து உண்ணச் செய்ய வேண்டும். அங்கிருந்துதான்
ஆசிரியரின் கண்டிப்பும், சிறுமியின் பிடிவாதமும் போட்டியிடத் தொடங்குகிறது. இந்த
உக்கிரமான போராட்டத்தைக் காணும் பெற்றோர், இப்படியொரு பயிற்சியே வேண்டாம் என்கின்றனர். ஆனால்,
இப்படியே விட்டுவிடுவது தவறு என்கிறார் ஆசிரியர். தந்தைக்குத் தெரியாமல்,
ஆசிரியரின் வேண்டுகோளுக்கு ஒரு இருபது நாட்கள் வாய்ப்பு அளிக்கிறார் அவளது தாய்.
முதலாவதாக அறையில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. தொட்டு நடப்பதற்கு
எதுவுமே இல்லாத நிலையில் தடுமாறி விழுந்து, விழுந்து ஓரளவு சுயமாக நடக்கப் பழகுகிறாள். அடுத்ததாக
கரண்டி மூலமாக எடுத்துச் சாப்பிட, கைக்குட்டை மூலமாக துடைத்துக்கொள்ளப் பழகுகிறாள். இதைக் கண்ட தாய் கேத்தரின்
ஆச்சரியத்தில் விக்கித்து நிற்கிறார். தனது மகளால் சுயமாக இயங்க முடியும் என்ற
நம்பிக்கை தாய்க்கு ஏற்படுகிறது.
ஆனாலும், பயிற்சி தொடங்கப்பட்ட இருபது நாட்களில் ஒவ்வொரு பொருளுக்கும்,
செயலுக்கும் ஒரு சொல் இருக்கிறது; அந்தச் சொல்லைக் குறிக்க எழுத்துக்கள் இருக்கின்றன என்பதை சிறுமி மிஷலால் உணர
முடியவில்லை. ஆசிரியரின் அத்தனை முயற்சிகளும் தோற்று, சிறுமியின் பிடிவாதமே வெல்கிறது. ‘இருபது நாட்கள் செய்த
முயற்சிகள் அனைத்தும் தோற்றுவிட்டன’ என்கிறார் தாய் கேத்தரின். ‘இருபது நாட்கள்
முடிவதற்கு இன்னமும் சில மணி நேரம் இருக்கிறது’ என வாய்ப்பு கேட்கிறார்
ஆசிரியர். ‘இருபது நாட்களில் முடியாதது, இந்த சில மணி நேரத்தில் எப்படி முடியும்’ என நம்பிக்கை
இழந்து கேட்கிறார் தாய். ‘கற்றுக்கொள்வது என்பது நெருப்புப் பற்றிக் கொள்வதைப்
போன்றது. அதற்குச் சில நொடிகள் கூடப் போதுமானதுதான்’ என்று கூறிவிட்டு, முயற்சியைத்
தொடர்கிறார் ஆசிரியர்.
ஆனாலும், பயிற்சி முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் பழைய முறையில் கைக்குக் கிடைத்ததைச்
சாப்பிடுகிறாள் மிஷல். அது தவறான பழக்கம்; அதை அனுமதிக்கக்கூடாது என்று கண்டிக்கிறார் ஆசிரியர்
தேவராஜ். இருந்தாலும், இப்போதுதான் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று
அனுமதிக்கிறார் தாய். இப்படிப் பழக்கவழக்கங்கள் தொடர்பான பயிற்சிகள் பள்ளியில்
அளிக்கப்படுவதும், வீட்டில் செல்லம் கொடுத்து வீணடிப்பதும் தமிழ்த் திரைப்படம்
எதிலாவது காட்டப்பட்டிருக்கிறதா? அதனால்தான் இத்திரைப்படம் முக்கியமானதாகிறது. அந்த முயற்சியிலும் தோற்றுப்போன
ஆசிரியர்,
கோபத்தில் சிறுமி மிஷலைத் தோட்டத்தில் உள்ள நீரூற்றுத்
தொட்டியில் போடுகிறார். தன் மீது விழுகின்ற நீர்த்துளிகளை ஏந்திக்கொண்டு, அது என்னவென்று கேட்கிறாள் மிஷல். எட்டு வயதுச் சிறுமி தனது
வாழ்நாளில் கேட்கின்ற முதல் கேள்வி அது! நெருப்புப் பொறி பற்றிக்கொண்டதைக்
கண்டுகொள்கிறார் ஆசிரியர் தேவராஜ். மிஷலின் ஒரு கையைத் தனது வாய் மீது வைத்து, ‘வாட்டர்... டபிள்யூ... ஏ... டி... ஈ... ஆர்...’ என உச்சரித்தும்,
இன்னொரு கையின் உள்ளங்கையில் தனது விரலை வைத்து எழுதியும் காட்டுகிறார். நிறைய காற்றுடன்
மெல்லிய குரலில், ‘வாட்டர்’ என உச்சரிக்கிறாள் மிஷல்.
மிஷல் அத்துடன் நிறுத்தவில்லை. அருகில் இருக்கும் செடிகள், மலர்கள், தொட்டிகள், புற்கள்
என ஒவ்வொன்றின் பெயரையும் கேட்கிறாள்; ஆசிரியர் உச்சரிக்கும் போது, அவரது உதட்டில் கையை வைத்து
உணர்ந்து கொண்டு, திருப்பி உச்சரிக்கிறாள். இப்படியே
ஒவ்வொன்றையும் உச்சரித்துக் கொண்டே தன் தாயிடம் வருகிறாள். தாயைத் தொட்டுக்கொண்டே
ஆசிரியரை நோக்குகிறாள். ஆசிரியர் சொல்ல, மிஷல் திரும்பச் சொல்கிறாள், ‘மதர்... ம்மா...’ அடுத்த நொடியில் பெருங்குரலெடுத்து
அழுதபடியே கண்களில் நீர் வழிய மகளை அணைத்துக் கொள்கிறார் தாய். தனது குழந்தை
மாற்றுத்திறனாளியாக இருந்துவிட்டால் அக்குழந்தையை என்ன செய்வது, அதற்கு என்ன தெரியும், அக்குழந்தை எதிர்காலத்தில் என்னவாகும் என்று தெரியாமல்
பெற்றோர்கள் வேதனையுடனும் விரக்தியுடனும் எவ்வளவு காலம் அலைகின்றனர்? குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏதேனும் ஒரு
வழி புலப்படுகிறது. அந்த வழியைக் கண்ட தருணம்தான், பிரசவித்த மகிழ்ச்சியை ஒத்த தருணம். அந்தத் தருணத்தைத்
திரையில் காட்டிய முதல் திரைப்படம் இதுதான் என உறுதியாகக் கூறலாம்.
பல்கலைக்கழகத்தில் மிஷலுக்கு இடம் கிடைக்கும்போது, ‘ஒரு காலத்தில் எங்களது உணவு மேசையில் அவளுக்கு இடமில்லை; ஆனால் இன்று உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இடம்
கிடைத்திருக்கிறது’ என்று மகிழ்கிறார் தந்தை பால். இளம் வயதில் ஒருமுறை விருந்தினர்
இருக்கும்போது உணவுப்
பாத்திரங்களை வீசி எறிகிறாள்; அப்போது, ‘இவள் எனது மகள் அல்ல’ என வசை பாடுகிறார் தந்தை. அதே தந்தை,
பிற்காலத்தில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் மிஷலைச்
சுட்டிக்காட்டி, தனது மகள் என்று பெருமிதப்படுகிறார். சுமையாக இருந்த, அவமானமாக இருந்த, புரிபடாமல் இருந்த ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக் குழந்தையும்
பெற்றோருக்கு மன நிம்மதியையும் பெருமிதத்தையும் வழங்குகின்ற தருணம் அது. இந்த
மாற்றுத்திறனாளிக் குழந்தையை எப்படி வளர்ப்பது, வளர்க்க வேண்டுமா என நினைத்த பெற்றோர்களை, அதே மாற்றுத்திறனாளிகள்தான் பிற்காலத்தில் பொறுப்புடன்
பராமரிக்கின்றனர் என்பது எதார்த்தம் தானே!
தனது இளைய சகோதரி சாராவின் திருமணத்தில் மணமகள் தோழியாக இருக்க விரும்புகிறாள்
மிஷல். ஆனால், இதை அனுமதிக்க சாரா விரும்பவில்லை. ஏனென்றால், இதுநாள் வரையிலும்
வீட்டிலும் வெளியிலும் விழாக்களிலும் மிஷல் பற்றிப் பேசப்படுவதையே பார்த்து
வளர்கிறாள் சாரா. தனது மூத்த சகோதரி மாற்றுத்திறனாளியாக இருப்பதால், அவளுக்கு உதவியாக இருப்பது இயல்பான அன்றாடப் பழக்கமாக
ஏற்றுக்கொண்டாள் சாரா. ஆனால், வீட்டில் மிஷலுக்குக் கொடுக்கப்படும்
முக்கியத்துவத்தில் துளியளவுகூட சாராவிடம் காட்டப்படுவதில்லை. மாற்றுத்திறனாளி
ஒருவரின் உடன்பிறந்தவராக இருக்கும் மாற்றுத்திறனாளி அல்லாதவரின் சிக்கல்களை மிக
எதார்த்தமாக, மிக
நியாயமான முறையில், அதாவது எதிர்மறை எண்ணம் தோன்றாமல் சித்தரித்த விதம்
குறிப்பிடத்தக்கது.
தனது சகோதரியின் திருமணத்தின்போது நடைபெறும் நிகழ்வுகளை ஆசிரியரின் சைகை
மற்றும் உச்சரிப்பு (உதடுகள் மீது கை வைத்து) மூலமாக கவனிக்கிறாள் மிஷல். ‘மணமக்கள்
முத்தமிடுகின்றனர்’ என்கிறார் ஆசிரியர். ‘நெற்றியிலா? கன்னத்திலா?’ என்று
கேட்கிறாள் மிஷல். ‘உதட்டில்’ என்கிறார் ஆசிரியர். ‘உதட்டிலா?’ என்று கேட்கிறாள்
மிஷல். ‘ஆமாம், உதட்டில்
தான்’ என்கிறார் ஆசிரியர். ‘உதட்டில் எப்படி?’ என்று மீண்டும் கேட்கிறாள் மிஷல்.
திருமண நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. ஆனாலும், மிஷலின் சிந்தனை முழுவதும் ‘உதட்டில்
முத்தம்’ என்பதிலேயே இருக்கிறது. இறுதியாக ஆசிரியரிடம் மீண்டும் கேட்கிறாள்; கூடுதலாக அந்த முத்தத்தைத் தனக்குக் கொடுக்குமாறு
ஆசிரியரிடம் வேண்டுகிறாள். மிஷலுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்த ஆசிரியர், அந்த முத்தத்தையும் தனது பணியாகக் கருதி நிறைவேற்றுகிறார்.
சுயமாக உண்பதில் தொடங்கி முத்தம் வரை குழந்தை, பெற்றோர், உடன்பிறந்தவர் மற்றும் ஆசிரியருக்கான உறவு என ஒவ்வொரு நிலையையும் மிகத்
தெளிவாகக் காட்டிய முதல் திரைப்படம் மட்டுமின்றி, ஒரே திரைப்படம் ‘பிளாக்’
மட்டுமே. இத்தனை காட்சிகள் மட்டுமின்றி இன்னமும் பல குறிப்பிடத்தக்க காட்சிகள் இத்திரைப்படத்தில்
இருக்கின்றன. அவற்றை வாசகர்கள் வர்ணிக்க வேண்டும் என்பதே இத்திரைப்படத்திற்குச்
செலுத்தப்படும் சரியான மரியாதை ஆகும். மேலும், காட்சிகள் மூலமாக திரைப்படத்தின்
கலைஞர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதால்
தனித்தனியாக கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுவது அவசியமற்றதாகிவிட்டது. இதைவிட எப்படி
உருவாக்க முடியும் என்று கேட்பவர்களுக்கும், மழுப்புபவர்களுக்கும் இத்திரைப்படமே
சரியான பதில்.
இந்தத் தொடர் மூலமாக முகமறியாத பல நண்பர்களை மட்டுமின்றி, பழைய நண்பர்களான முருகானந்தன், பூபதி போன்றோரையும் பெற்றுத் தந்தமைக்கு ‘விரல்மொழியர்’
மின்னிதழுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொடர்
எழுதுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தது மட்டுமின்றி, பல திரைப்படங்களை அறிமுகம்
செய்தும்,
முன் விமர்சனம் மூலமாக பல கருத்துக்களை, திருத்தங்களைத் தெரிவித்தும் உதவிய சரவணமணிகண்டன்
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை
விரல்மொழியர் மின்னிதழுக்கும், மின்னிதழின் வாசகர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த
நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, மிகவும் பொருத்தமான திரைப்படத்துடன் இத்தொடர் நிறைவுபெற்றது என்ற நம்பிக்கையுடன்
விடைபெறுகிறேன். நன்றி!
***
(கட்டுரையாளர் ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு
உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: teacherselvam@gmail.com
இப்படத்தை நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் MPhil படிக்கும் பொழுது எனது நண்பன் ஒருவரின் உதவியோடு பார்த்து முடித்தேன் சார்! உங்களது இந்த கட்டுரையை படித்தவுடன் மீண்டும் ஒருமுறை அந்த படத்தை பார்க்க தோணுது. ரொம்ப நன்றி சார்! பழைய ஞாபகங்களை என்னுள்ளே கொண்டுவந்ததற்கு.
பதிலளிநீக்குநன்றி பாலகிருஷ்ணன். இது போன்ற படைப்புகள் அவ்வப்போது நினைவு கூறப்படுவது அவசியமானதும் அழகானதும் கூட.
நீக்குஇவ்வளவு தரமான தொடரை வழங்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் அறிமுகம் செய்த ஒவ்வொரு படமும் பார்வையற்றவர்களோடு வாழ்பவர்கள் பார்க்கவேண்டிய படம். இந்த தொடரின் மணிமகுடம் என்றால் அது இந்த கடைசி பகுதிதான்.
பதிலளிநீக்குபடத்தை தமிழில் யாரேனும் கொண்டுவந்தால் மகிழ்வேன்.
இந்த கடைசி பகுதியின் ஒவ்வொரு வரிகளையும் என்னோடு பொறுத்தி பார்த்துக்கொள்கிறேன்.
இந்த படத்தில் காட்டப்பட்ட தந்தையைப்போல எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட தனது பார்வையற்ற மகளை இதே பானியில்தான் டீல்செய்துகொண்டிருக்கிறார்.
அமீதாப் போன்ற ஆசிரியரும் கேத்தரின் போன்ற அம்மாவும் அவருக்கு வாய்க்கப்பெறாதது துரதிஷ்டமே.
தங்களின் இதுபோன்ற தரமான மற்றொரு தொடருக்காக காத்திருக்கிறது விரல்மொழியர்.
இத்தொடருக்கான வாய்ப்பு அளித்தமைக்கு விரல் மொழியர் ஆசிரியர் குழுவில் ஒருவராக தங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தின் காட்சிகள் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தியிருக்கும் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.
நீக்குBlack படம் சிறந்த படம் asl American sign language பயன் படுத்த பட்டுள்ளது ஆசிரியர் பணி சிறப்பானது
பதிலளிநீக்கு