2018 பார்வையற்றோருக்கு எப்படி அமைந்தது?
இந்த ஆண்டில் நாம் பெற்ற பலன்களும் சிரமங்களும் என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்.
பெருமிதத்
தருணங்கள்
- லூயி பிரெயில் பிறந்த நாளான ஜனவரி 4-ஆம் நாள், ‘உலக பிரெயில் நாளாகக்’ கொண்டாடப்பட வேண்டும் என ஐ.நா. பொது அவை அறிவித்துள்ளது. உலக பார்வையற்றோர் ஒன்றியம் (World Blind Union - WBU) மேற்கொண்ட பல ஆண்டுகால முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.
- கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட பார்வையற்றோருக்கான 5-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்றுள்ள 5 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 4 கோப்பைகளைத் தட்டி வந்திருக்கிறது இந்தியா.
- மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் பிரிஞ்சாளா பாட்டில், IAS தேர்வில் வெற்றி பெற்று, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
- தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரே நேரத்தில் 10 பார்வையற்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.
- இந்திய விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற்றார், அங்கூர் தாமா என்ற பார்வை மாற்றுத்திறனாளி. இவர் ஒரு ஓட்டப்பந்தய வீரர்.
- நமது ‘விரல்மொழியர்’ மின்னிதழ் இந்த ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. தமிழ் இதழியல் வரலாற்றிலும், பார்வையற்றோருக்கான இதழியல் வரலாற்றிலும் இத்தகைய மின்னிதழ் முதல் முயற்சி.
- 'பார்வையற்றோர் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பு இந்த ஆண்டில் உதயமானது. முற்போக்குச் சிந்தனை என்ற அரசியல் சொல்லாடலோடு தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் அமைப்பு இது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ‘டிசம்பர் 3’ இயக்கம் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் விழிப்புணர்வு மாநாடாக நடத்தப்பட்ட இம்மாநாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையால் வழங்கப்படும் ‘தமிழ்ச் செம்மல்’ விருதைப் பெற்றார் பேரா. கோ. கண்ணன் என்ற பார்வையற்றவர். இவர் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்.
சிக்கல்களும்
சர்ச்சைகளும்
- மார்ச் 20, 21, 22 ஆகிய நாட்களில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் (CSGAB) சார்பில் சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. பார்வையற்றோருக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல முக்கியக் கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
- இதே அமைப்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளான டிசம்பர் 3-ஐ கருப்பு நாளாக அனுசரித்தது. அன்று இவ்வமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
- கடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில், சரவணன் என்ற பார்வையற்றவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது.
- பார்வையற்ற ஆசிரியர்களின் இட மாறுதல்களில் அவர்களுக்கான முன்னுரிமையைப் பயன்படுத்துவதில் கடுமையான நிபந்தனைகளை விதித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது ஆயிரக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- கடந்த மே 7-ஆம் நாள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
- தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பிரெயிலிலும், ஒலி வடிவிலும் கிடைக்க நிகழ்ந்த தாமதம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. தற்போது வரை பிரெயில் புத்தகங்கள் மட்டுமே மத்திய அரசு நிறுவனமான NIVH துணையுடன் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒலிப்பதிவுகள் அனைத்தும் தொண்டு நிறுவனங்களின் முயற்சியால்தான் வெளிவருகின்றன. பிரெயில் புத்தகப் பணிகளும் இன்னும் முழுமை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள NIVH தென்மண்டல மையத்தில் வழக்கமாக நடத்தப்படும் பார்வையற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் இந்தக் கல்வியாண்டில் திடீரென நிறுத்தப்பட்டது சர்ச்சையானது. பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதால் வகுப்புகள் நடத்தப்படுவது தாமதமாவதாகத் தெரிவித்த மையத்தின் நிர்வாகம் சில பயிற்சி வகுப்புகளை மட்டும் தற்போது நடத்தி வருகிறது.
- பிரெயிலில் திருக்குறள் புத்தகம் இல்லை என வேலூரைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தனியார் அமைப்புகள் பிரெயிலில் திருக்குறள் புத்தகங்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
- வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றிருக்கும் மாற்றுத்திறனாளிகளைக் கணக்கெடுக்கும் பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளை இனம் கண்டு அவர்களுக்கான வசதிகளை வாக்குச் சாவடிகளில் மேற்கொள்வதற்காக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
- ஹஜ் புனித யாத்திரை செல்வதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அரசின் 2018-2022 ஹஜ் கொள்கையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு இத்தடை நீங்கியது.
ஊடகம்
- இந்த ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளியைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இப்படத்தில் கௌதம் கார்த்திக் குறை பார்வையுடைய பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார்.
- பார்வையற்ற பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட ஒரு திருமணம் நின்றுபோனதைத் தொடர்ந்து அவருக்குத் திருமணம் நடந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மன மகிழ்வைத் தந்திருக்கிறது.
- வழக்கம் போலவே தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கெடுத்தனர். குறிப்பாக, ‘Z தமிழ்’ தொலைக்காட்சியின் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் சஹானா என்ற பார்வையற்ற சிறுமி பாடி அசத்தினார். ‘சன்’ தொலைக்காட்சியின் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் பரமேஸ்வரி என்ற பார்வையற்ற சிறுமி பாடினார்.
- பார்வையற்றவர்களின் வாழ்முறையை அடிப்படையாகக் கொண்டு விஜய் தொலைக்காட்சியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடைபெறும் உரையாடல் நிகழ்ச்சிகளின் (Talk Shows) வரலாற்றில் இது முதல் முறை.
- தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இறப்பைத் தொடர்ந்து, அவரது கோபாலபுரம் இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு முன் பார்வையற்ற மாணவி ஒருவர் அவரைப் புகழ்ந்து பிரெயிலில் கவிதை வாசித்தது வைரலானது.
தொழில்நுட்பம்
- பார்வையற்றோருக்கு வசதி செய்து தரும் வகையில் பல்வேறு கருவிகளும், செயலிகளும் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
- கூகுள் தமிழில் பேசவும், எழுதவும் தொடங்கியிருப்பது பல பார்வையற்றவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது.
- ’Envision AI’ என்ற செயலி படமெடுக்கப்பட்ட தமிழ் கையெழுத்துப் பிரதிகளையும் பெருமளவில் தெளிவாகப் படிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
- பதிலி எழுத்தர்களாகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களையும், தேவையுள்ள பார்வையற்றவர்களையும் இணைக்கும் வண்ணம் ‘Scribe Finder’ என்ற செயலி இந்த ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- கையடக்க பிரெயில் டிஸ்பிலே ஒன்றை மும்பை IIT-யின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதில் பிரெயிலில் எழுத, படிக்க, எழுதியதைச் சேமித்துக் கொள்ள என பல வசதிகள் உண்டு. இக்கருவி பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தால் பிரெயில் முறையை அது நவீனப்படுத்தும்.
விளையாட்டு
- முதல் முறையாக, ரஞ்சிக் கோப்பையையொத்த நாடு தழுவிய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டுள்ளது. பார்வையற்றோர் கிரிக்கெட் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட நாகேஷ் என்பவரின் நினைவாக நடத்தப்படும் இப்போட்டியில் 23 மாநிலங்கள் கலந்துகொண்டிருக்கின்றன.
- மாற்றுத்திறனாளிகளுக்கான தெற்காசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் இந்த ஆண்டு நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொண்ட இந்திய மாற்றுத்திறனாளி வீரர்களுக்குத் தங்கும் இடம் மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தவேண்டும் என்ற விதிமுறை இருக்க, இந்திய அரசு தனக்கான தொகையைச் செலுத்தாததே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. பிறகு இந்திய அரசு பணம் செலுத்தி, நம் நாட்டு வீரர்களைப் போட்டிகளில் பங்குகொள்ள வைத்தது.
- கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுகளில் பார்வையற்றோரின் ஆர்வம் சற்று தணியத் தொடங்கியதைக் கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்த, ‘தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம்’ (Tamilnadu Blind Sports Association - TABSA) அமைப்பு உருவாகியுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் பார்வையற்றோருக்கென பல போட்டிகளை நடத்த உள்ளது.
இறப்புகள்
- இந்த ஆண்டு பணியில் இருக்கும் பல பார்வையற்ற ஆசிரியர்கள் மரணமடைந்தது வேதனையானது. பார்வையற்றவர்கள் தங்கள் உடல் நலனைப் பேணுவதில் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்பதை இந்நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.
- மதுரை IAB விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்றுவந்த சுதாகர் என்ற மாணவனின் தற்கொலை அதிர்ச்சியளித்தது. இத்தகைய தற்கொலைகள் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே அரிதானது.
- ஜாவேத் அபிதி என்ற மாற்றுத்திறனாளிகள் நலப் போராளி இந்த ஆண்டு காலமானார். அவர் பார்வையற்றவர் இல்லை என்றபோதிலும், பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
எதிர்பார்ப்பு
- மத்திய அரசு, மாநில அரசுகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
- இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டை BCCI அங்கீகரிக்க வேண்டும்.
- புதிதாக வெளிவரும் பல்வேறு ரூபாய்த் தாள்களும், நாணயங்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும் என்ற பல அமைப்புகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும்.
2019 ஒவொரு பார்வையற்றவருக்கும் சிறந்த ஆண்டாக
அமைய விரல்மொழியரின் வாழ்த்துகள்.
***
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக