பாடகி சுஜாதா |
ரோஜாவின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ‘தமிழா! தமிழா’-வை இன்றுவரை தேசபக்திப் பாடலாகக் குத்தகையெடுத்துக் கொண்டிருக்கிற பள்ளி
விழாக்கள் அதிகம். ‘சின்னச் சின்ன ஆசை’ அன்றைய யுவதிகள் மற்றும் முற்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட பெண்களின்
உதட்டோர முனுமுனுப்பாக இருந்ததை நான் அறிவேன். அட! அப்போது
ருக்குமணிப் பாட்டிக்கே பெருங்கூட்டம் ஆரவாரித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
படத்தின், ‘புது வெள்ளை மழை’
பாடல் காஷ்மீரின் குளுமையைக் கேட்போரின் காதில் நிறைத்தது என்றால், அந்தப் பாடலில்
ஒலித்த ஒரு குரல், விடுதலைக்கு ஏங்கி நிற்கிற ராப்பட்சியின் குரலாய் மற்றொரு
பாடலில் ஒலித்தது. அந்தக் குரல் தந்த ஏக்கத்தினாலோ என்னவோ, பாடலை SPB உருகி உருகிப் பாடியிருப்பார். ‘என்னானதோ? ஏதானதோ? சொல் சொல்’ என்று SPB
போலவே அன்றைய ரசிகர்களை மறுகச் செய்த அதே குரல், இன்றும் ‘தித்திக்குதே’ என புதிய தலைமுறையைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது.
‘நேற்று இல்லாத மாற்றம் என்னது? காற்று என் காதில்
ஏதோ சொன்னது’ என ரஹ்மானின் இசையில் மட்டுமல்ல, சுஜாதாவின் குரலிலும்
சொக்கிப்போய் ரசிகன் கேட்டான். ‘ஜெண்டில்மேன்’
படப் பாடலில், ‘எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது’ என SPB
குழைய, ‘ஹூம்ஹூம் அனுபவமோ?’ எனக் கேட்கும் சுஜாதாவின் இதழ் பிரிக்காத புன்னகைக்கு இரவோடு கரைவதும்,
பகலோடு உறைவதுமே என் போன்ற ரசிகர்களின் அன்றாடமாகிப்போனது.
‘உறவாட நிலவொன்று சதிராட, கடிதங்கள் வாராமல் உயிர்வாட, அஞ்சலகம் எங்கு
என்று தேடுகிறேன் நான்’ என அவர் ‘காதலுக்கு மரியாதை’
ஷாலினிக்காகக் கிறங்குவதைக் கேட்கக் கேட்க, ‘மனம் பித்துப்
பிடிக்குது ஆத்தீ! ஆத்தீ! ஆத்தீ!’ ரஹ்மானைத்
தொடர்ந்து தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், பரணி, ஏன் ராகதேவனும் நல்ல நல்ல
வாய்ப்புகளை சுஜாதாவிற்கு வழங்கி, என் போன்ற ரசிகனின் மனதிற்குள் இறக்குமதி
செய்தார்கள் இணையற்ற காதலையும், எண்ணற்ற கற்பனைக் காதலிகளையும்!
‘திரு திருடா! திரு திருடா! தீஞ்சுவை
நானடா’ என்று கிளறுவது, பின்பு ‘யார்
மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ?’ என்று கேட்டுக்
கிறங்கடிப்பது என என் இளமைக் காற்றிற்கு அவர் புதுப்புது வாசம் சேர்த்தார். ‘வரவர பொம்பளப் பொழப்பையே, வம்புல மாட்டுறுயே’,
இப்படியெல்லாம் தன் குரல் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு இரக்கமே இல்லாமல் இதம்
செய்தால், போகப்போக மாமன்களுக்குப் புத்தி மாறாமல் என்ன செய்யும்?
90-களின் பிற்பகுதி நாயகிகளான மீனா, கௌசல்யா, சுபலட்சுமி போன்றோரின் முகங்களைக்
கண்முன் நிறுத்திய அவரின் குரல், பின்பாக வந்த ஷாலினி, லைலா, ஜோதிகா, பாவனா போன்றோரையும்
அச்சு அசலாகப் பிரதிபலித்தது. ‘உன்
மணக்கட்டி வண்டி மீது, நான் மெனக்கெட்டு ஏறும்போது, கடகடவென்று, தடதடவென்று
இழுத்தவன் நீதானே’ எனக் கூத்தாடவும், ‘போதி
கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்’ என இடம் பொருள் பார்த்துக்
கொஞ்சிக் குழையவுமான நெகிழ்வும் திருத்தமும் கொண்டது அவரது குரல்.
அவர் குரல்வழிவந்த எத்தனையோ பாடல்களில் எனக்கு மயக்கம் இருந்தாலும், நான்
எப்போதும் விரும்பிக் கேட்கிற பாடல், ‘தேசியகீதம்’ திரைப்படத்தில் அவர் பாடிய ‘நா வாக்கப்பட்டு போகப்போற ஊரப்பத்திக் கேளு’.
ராகதேவன் இசையில் சுஜாதாவின் குரல் இசைந்து, கலந்து, இயைந்து
செல்கையில், நான் மயங்கி, மரித்து, மீண்டும் உயிர்க்கிறேன். தேசியகீதம் என்கிற
வெறுமையும், வன்மையும் கொண்ட படத்தில் இருக்கிற ஒரே ஆறுதலும், இனிமையும் இந்தப்
பாடல்தான்.
‘புன்னை மரப் பொந்துக்குள்ள, பச்சக்கிளி கொஞ்சயில,
கேட்கும் காதல் பேச்சு - அதைக் கேட்டா மனசே போச்சு’.
இந்த வரியை அவர் பாடுவதைக் கேட்டாலே மனசு போச்சுதான்.
‘மாம்பூவு வாசம் வரும், மண்ணோட நேசம் வரும்’.
வாசம், நேசம் என்கிற வார்த்தைகளை அவர் வாயவிழ்க்கையில், மேலும் பல வாசங்களும்,
வண்ணங்களும் வந்து குடியேறுகிறது மனதில்.
‘மேற்கால வைகை அணை, யானைமலை, தேனீச்சுனை, நண்டு நடக்கிற நிலம், செந்நாரை
பறக்கிற இடம்’ என ஒற்றை ராகதேவதையாய், ராகதேவன் விரல் பிடித்தபடி,
ஓர் வனத்தையே சுற்றிக்காட்டுகிறார் சுஜாதா. ஓர் அறையில் ஒற்றை ஆளாய்ப் பாடலைக்
கேட்கத் தொடங்கிய நான், உலகின் வனப்பு, வனாந்திரங்கள் என அத்தனையையும் ஐந்தே
நிமிடங்களில் சுற்றி வந்துவிட்டேன். என் அனுபவம் உங்களுக்கும் வாய்க்க, பாடலைக்
கேளுங்கள். (பாடலைக் கேட்க).
துள்ளும் குற்றாலக் காற்றின் குளிர்ச்சியாய் உங்கள் மனதில் இறங்கி மாயம்
செய்வார் ராகதேவதை சுஜாதா!
...ரதம் பயணிக்கும்
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக