அனுபவம்: செம்ம பிலைண்ட் - பார்வையற்றவன்

  நான் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கச் சென்றபோது, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு விண்ணப்பமேதும் இருக்கிறதா என அங்கிருந்த அதிகாரிக்கு ஒரு சந்தேகமெழுந்தது. உடனடியாக உயரதிகாரிக்கு ஃபோன் செய்து கேட்டார். நான் அருகில் இருந்ததால் என் மனது புண்படுமென நினைத்து, ‘கண்ணு தெரியாதவங்க’ எனச் சொல்லத் தயங்கினார்.

இச்சமூகம் அத்தனை கருணை மிக்கதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘குருடன்’ என்ற சொல் ‘ஒன்றும் அறியாதவன்’ என்ற பொருளில்தான் இன்றும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. பட்டங்கள் பெற்று பல சாதனைகள் செய்த பின்பும், அறியாமையைச் சுட்ட நாங்கள் இன்னும் குறியீடாய் இருப்பதை நினைத்தால் கோபம் வருகிறது. இந்த சமூகம் அடிப்பதென்றால் ஒரேயடியாகச் சாத்துகிறது; அன்பு செலுத்துவது என்றால் ஒரேயடியாகக் கருணை காட்டுகிறது. ‘இவருக்குப் பார்வை தெரியாது. பார்த்து கூட்டிப் போங்க சார்’, இதுபோன்ற இடங்களில் பார்வை இழப்பைச் சுட்டுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இழிவுபடுத்தும் நோக்கத்தில் பார்வையற்றவர்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதைத்தான் நாங்கள் வெறுக்கிறோம். பார்வை இன்மையால் ஏற்படும் இடர்களைக் கண்டு சில நேரங்களில் நாங்கள் வருந்தியதுண்டு. இருப்பினும், இந்த உலகை நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் எதிர்கொள்கிறோம். மொத்தத்தில், எங்கள் வாழ்வைக் கொண்டாடித் தீர்க்கிறோம்.

தமிழ் பேசும் பார்வையற்றோர் சமூகத்தில் பார்வையற்றவன், பார்வையற்றவர்கள் என்ற சொற்களை விட, ‘பிலைண்ட்’ என்ற சொல்லைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.

நான் படித்த IAB விடுதியில், ‘செம்ம பிலைண்ட்’ என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அப்படி என்றால் என்ன என உங்களுக்கு வினா எழும். பார்வையற்றோருக்கான குண இயல்புகளைத் தனித்துவமாக வெளிப்படுத்தும் ஒருவர் இச்சொல்லால் பாராட்டப்படுவார். நாம் பிறரைச் சாராது சுயமாக  இயங்குவதற்குப் பல தனித்துவமான உத்திகளை வைத்திருக்கிறோம். அதனை வெளிப்படுத்தும் தருணங்களில் நாம் செம்ம பிலைண்டுக்கான தகுதியைப் பெறுகிறோம். சில உதாரணங்களைச் சொன்னால் உங்களுக்குப் புரியும்.

சிமெண்ட் தரையில் ஒரு நாணயம் விழுந்தால், அந்த நாணயம் உருண்டோடும் திசையை கவனித்தபடியே பின்னால் சென்று, நாணயம் சாய்ந்து ஒலி நிற்குமிடத்தில் தடவிப் பார்த்து அதைச் சரியாக சிலர் எடுத்துவிடுவார்கள். மண் தரையில் பந்து உள்ளிட்ட பொருட்கள் விழுந்தால், அதை எடுக்க மண், கல் போன்றவற்றை எத்திவிட்டு, அந்தப் பொருள் மீது அவை படும் போது எழும் ஒலி வந்த திசையை நோக்கிச் சென்று அப்பொருளைச் சரியாக சிலர் எடுப்பர். அவர்களைப் பெருமைப்படுத்த செம்ம பிலைண்ட் என்று சொல்வோம்!

பார்வையற்றோரின் கண்களாக பெரும்பாலும் கைகளே இருக்கின்றன. ஒரு ஆளை அடையாளம் காண அவரது கையை தொட்டுப் பார்த்து இன்னாரெனக் கண்டுபிடிப்போம். புதிதாய் ஒரு நபரைச் சந்திக்கும் பொழுது, அவரது கையை பிடித்துப் பார்ப்பதன் மூலம் அவரது உருவத்தை மனதுக்குள் கொண்டு வந்துவிடுவோம். இதிலிருந்து மாறுபட்டு சிலர் இருக்கின்றனர்; தலையைத் தொட்டுப் பார்த்தும், காதைப் பிடித்துப் பார்த்தும் இன்னார் என்று அடையாளம் கண்டு சொல்வார்கள். இவர்களையும் செம்ம பிலைண்ட் என்றுதான் சொல்வோம். வாசத்தை வைத்து ஆளைக் கண்டுபிடிக்கும் நபர்களும் எங்கள் மத்தியில் இருந்தனர். ஒரு புத்தகத்தை எந்தப் பெண்ணிடமிருந்து வாங்கி வந்தோம் என்பதை அதன் பக்கங்களை முகர்ந்து பார்த்து கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர்களை செம்ம பிலைண்ட் என்றுதானே சொல்லி ஆகவேண்டும்!

நான் உடை தைக்கும் ஊசியில் நூலைக் கோர்க்க நாக்கைப் பயன்படுத்துவேன்! அதன் துளையை நாக்கால் கண்டறிந்து, எதிர்முனையில் நூலை வைக்கும்பொழுது அது நாக்கில் படும். அதை வைத்து மறுபுறம் இழுத்துக்கொள்வேன்; எனவே, நானும் செம்ம பிலைண்ட்தான்.

ஃபிலிப்ஸ் டேப்ரெக்கார்டர்களிலும், வானொலிகளிலும் வயர் அறுந்துவிட்டால் பத்த வைப்பது பார்வையற்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். எனவே, செம்புக் கம்பிகளை வைத்து அதில் இருக்கும் சிறு துளைகளைக் கண்டுபிடித்து, அதில் கோர்த்து வானொலியைச் சரிசெய்பவர்களுக்கும் இந்தப் பட்டம் சாலப்பொருந்தும்.

உடனே அனைவரும் உங்களது திறமையை வியந்து பார்த்து, நாங்களும் செம்ம பிலைண்ட்தான் என மகிழக்கூடும்! இன்னும் சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

பெரியார் பேருந்து நிலையத்தில் நானும் என் நண்பனும் அழகர்கோவில் பேருந்தில் ஏறுவதற்காக இரண்டாவது நடைமேடையில் தேடிக்கொண்டிருந்தோம். அவனுக்குக் கொஞ்சம் பார்வை தெரியும். “வாடா! பழக்கடை அண்ணனிடம் அழகர்கோவில் பேருந்து எங்கே நிற்கிறது எனக் கேட்டு ஏறுவோம்” என்று நான் அழைத்ததற்கு, “நானே பார்த்துச் சொல்கிறேன்” என வீராப்பாய் சொல்லிவிட்டு, ஒவ்வொரு பேருந்தின் முன் பக்கமாகவும் நின்று உற்றுப் பார்க்கத் தொடங்கினான். என் நண்பன், போர்டின் முதலெழுத்தைப் பார்த்துவிட்டு அது எந்த ஊர் செல்லக்கூடியது எனச் சொல்லும் திறமை படைத்தவன். நீண்ட நேரம் உற்றுப் பார்த்ததின் விளைவாய், ஒரு பேருந்தில் ‘அ’ என்ற எழுத்தைப் பார்த்துவிட்டான். ‘அ’ என்றவுடன் அழகர்கோவில் என்று சொல்லிவிடலாம்; ஆனால், அதே நடைமேடையில்தான் அலங்காநல்லூர் செல்லும் பேருந்துகளும் நிற்கும் என்பதால், இப்பொழுது அடுத்த எழுத்தைப் படிப்பதற்கு ஆயத்தமானான். அதற்குள், டீ குடிக்கப் போன ஓட்டுனர் வண்டியை எடுக்க வந்துவிட்டார். “தம்பி கொஞ்சம் விலகிக்கப்பா” என்று அவர் சொன்னதும், “அண்ணே! இது அழகர்கோவில் போகுமா?” என்று அவரிடமே கேட்டான். அவரும் “ஆமாம்” எனச் சொல்ல, பேருந்தில் ஏறினோம். “இப்படி பத்து நிமிஷம் வெயிலில் நிக்கிறதுக்கு பதிலா, அப்பவே கேட்டிருந்தா பேருந்தில் ஏறி உட்கார்ந்திருக்கலாம். தேவையில்லாம வெயிலில் நிக்க வச்சுட்டியேடா” என அவனைக் கடிந்துகொண்டு, பேருந்தில் ஏறினேன்.

எங்கள் விடுதியில், பெற்றோருடன் தொலைபேசுவதற்காகக் காயின் பாக்ஸ் ஒன்றை வைத்திருந்தனர். அதை உயரத்தில் தொங்கவிட்டிருந்ததால், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுக்கு அது எட்டாது. அப்படித்தான், தமிழ்வளவன் என்ற சிறுவன் இசக்கிராஜாவிடம் உதவி கேட்டான். காயினை வாங்கிப் போட்டுவிட்டு, அவன் சொன்ன நம்பர்களை உற்றுப் பார்த்தபடியே ஒவ்வொரு பட்டனாக அழுத்திக் கொண்டிருந்தான் இசக்கி. மிகவும் நெருங்கி உற்றுப் பார்த்ததால், அவன் மூக்கு ஸ்டார் பட்டனில் பட்டு, அந்த காயின் பாக்ஸ்சுக்குள் விழுந்துவிட்டது. “சாரிடா” எனச் சொல்லிவிட்டு, அடுத்த ஒரு ரூபாய் காயினை வாங்கினான்; இப்படியே 5 ரூபாய்க்கும் மேல் வீணாகிவிட்டது. உடனே அந்தச் சிறுவன் அழத் தொடங்கிவிட்டான். பிறகு இசக்கி தனது ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, வேறு ஒரு நண்பரிடம் நம்பர் போட்டுத் தரச் சொல்லிவிட்டு நகர்ந்து போனான்.

இவர்களையும் நாங்கள் செம்ம பிலைண்ட் என்றுதான் சொல்வோம். தங்களைப் பார்வை உள்ளவரைப் போல நினைத்துக் கொண்டு, எதையும் பார்த்துதான் செய்வேன் என அடம்பிடிக்கும் மிகவும் குறைப் பார்வையுடையவர்கள், குரல் வரும் திசையை கவனிக்காது வேறுபுறம் கையை நீட்டுபவர்கள், இடது வலது குழப்பத்தில் இருப்பவர்கள் ஆகியோர் இரண்டாவது வகை செம்ம பிலைண்டுகள். இது கேலிப்பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே சொல்தான் என்றாலும், அது சொல்லப்படும் சூழலால் வெவ்வேறு பொருளைத்தரும். எனவே, உங்களது செயலைப் பொறுத்து நீங்கள் எந்த வகை செம்ம பிலைண்ட் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

கட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம்; ஏதாவது ஒரு நீதி சொல்லி ஆகவேண்டும் அல்லவா? நாம் முதலில் நம் ஊனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்கான தீர்வுகளை நோக்கி முன்னேற முடியும். குறைப் பார்வையுடைய நண்பர்கள் தங்களால் என்ன முடியும் என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு பார்வையை பயன்படுத்த வேண்டும். அதன் மூலமாகவே உங்கள் பார்வையை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்ள முடியும். அனைத்துப் பார்வையற்றவர்களும் மொபிலிட்டி கற்றுக்கொண்டு. அதன்படி நடக்க முன்வர வேண்டும். அப்போதுதான், நீங்கள் ‘செம்ம பிலைண்ட்’ எனப் பாராட்டும்படி நடக்க முடியும்!
***

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

4 கருத்துகள்:

  1. னன்பரே மிக சுவாரசியமாக இருன்தது உன்கல் பதிவு.
    னானும் குரை பார்வை உடையவன்தான்.
    முயர்ச்சி செய்கிரேன் னானும் செம பிலைன்டு ஆவதர்க்கு.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமை நண்பா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமை நண்பா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு