இட ஒதுக்கீடு குறித்த வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது
தமிழகம். விடுதலைக்கு முன்பிருந்தே இட ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு போராட்டங்களும்,
முன்னெடுப்புகளும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத
அளவிற்கு 69% இட ஒதுக்கீடு கொண்ட மாநிலம் தமிழ்நாடு!
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை கல்வியிலும்,
வேலைவாய்ப்பிலும் 4% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இப்போது, அரசியலிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு
இட ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் தமிழகத்திலிருந்து பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த நவம்பர் 30 அன்று, ‘டிசம்பர் 3’ இயக்கத்தின்
சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில்
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளோடு, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், CPM, CPI முதலான
கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான
இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் உயிர்நாடியான உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து
நமக்கான பிரதிநிதித்துவத்தைத் தொடங்குவதுதான் சரி. அதன் பிறகு சட்டமன்றம், நாடாளுமன்றங்களிலும்
நமக்கான இட ஒதுக்கீட்டினை நாம் கோர வேண்டும். நம்முடைய பிரச்சனைகளை நாமே எடுத்துரைக்க
வேண்டும். நமக்கான தீர்வுகளுக்கான ஆலோசனைகளை நம்மவர்களே அரசாங்கத்தின் முன் வைக்கவேண்டும்.
சம வாய்ப்பு என்பது அதிகாரப் பங்கீடுதான்.
அதிகாரத்தில் நாம் பங்குபெற்று நம்முடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கால்கோல் நவம்பர்
30, 2018 அன்று தமிழகத்திலிருந்து இடப்பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமையே. எல்லாவற்றிற்கும்
மேலாக, இத்தீர்மானத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தவும், தக்க வைக்கவும் அரசியல் விழிப்புணர்வு
அவசியம். சக மாற்றுத்திறனாளிகளிடம் அரசியல் விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரின்
கடமை.
“உணர்ந்ததைச்
சொல்கிறோம் உலகிற்கு”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக