நினைவுகள்: அன்புள்ள முதல் காதலிக்கு! - பார்வையற்றவன்


அன்புள்ள முதல் காதலிக்கு!
  நான் மிகுந்த நலம். உன் நலத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
நீ வந்ததால் நான் எத்தனை துயரத்தை அனுபவித்தேன் தெரியுமா? நீ போன பின்பு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன்!

இதயத்திற்குள் இசை நுழைந்திருக்கும் குறிப்புப் படம்உனக்கு மட்டும் ஏன் இனிமையான குரல் இருந்தது? அங்கு தான் நான் விழுந்தேன். அதை வைத்து அடிக்கடி பேசி இருந்தாலாவது கேட்டுக்கேட்டு விரைவில் பிடிக்காமலாவது போயிருக்கும்! திருச்சி வானொலியில் ஒலிக்கும் திரையிசைப் பாடல் போல, எப்போதாவது தான் நீ வாய் திறந்து பேசுவாய்!

உனது குரலைக் கேட்பதற்காக நான் வகுப்புத் தலைவனான வரலாறு உனக்குத் தெரியுமா?
வகுப்பறையில் நீ பேசாமடந்தை; விடுதியிலோ நீ வாயாடிக் குழந்தை! இதன் விளைவு என்ன தெரியுமா? உனக்கெங்கே தெரியப் போகிறது; சொல்கிறேன் கேள்! கிரிக்கெட் போட்டிகளின் கோப்பைகளாக முறுக்கும், மிக்ஸரும் இருக்கும்.  ஒருமுறை மிக்ஸர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் எளிமையான கேட்சை நான் தவறவிட, அது சிக்ஸராகிப்போனது! அப்புறம் என்ன, மிக்ஸர் எதிரணிக்குப் போனது. அந்தக் கேட்சை ஏன் தவறவிட்டேன் தெரியுமா? நீ குயில் போல மாடியில் பேசிக்கொண்டிருந்தாய்! அதில் கவனத்தைச் செலுத்தியதால்தான்! அணி வீரர்கள் மொத்தமாய் என்னைத் திட்ட, அன்று நீ சத்தமாய்க் கத்த, அந்த சங்கீதக் குரலில் என்னை மறந்து வானில் பறந்துகொண்டிருந்தேன்!  இப்படி இழந்த கோப்பைகள் ஏராளம். பெண் பேச்சைக் கேட்டால் முன்னேற முடியாது என இதனால்தான் சொன்னார்களோ!

‘அந்தப் பொண்ணு  ஒன்னையத்தான் பாக்குது’ என சில பார்ஷியலி நண்பர்கள் பரிந்துரை செய்ய, பயங்கரமாய்க் காதல் மனதுக்குள் படரத் தொடங்கியது. உனது பெயர் வரும் பாடல்கள் எங்கேனும் ஒலித்தால், நான் அதை நின்று கேட்காமல் செல்ல மாட்டேன். எப்பொழுது 10-ஆம் வகுப்பு படிக்கப்போகிறோம், அப்பொழுது தானே டேப்ரெக்கார்டர்கள் கொடுப்பார்கள், அதில் அவளின் பெயர் வரும் பாடல்களாகப் பதிந்து கேட்க வேண்டும் என மனம் துடிக்கும். நாணயம் சுண்டி, நாள் குறித்து, காதலை உன்னிடம் சொல்ல வந்தேன்; நீ அன்று வேறொரு பையனோடு பேசினாய்! கோட்டைகள் சரிய, துக்கத்தோடு விடுதி திரும்பி, தூக்கத்தில் கனவில் புலம்பினேன்.

அடுத்த நாள் விருந்துச் சாப்பாட்டில் கொடுத்த லட்டை எனக்குக் கொடுத்தாய்! நல்ல வேளை, அல்வா கொடுக்கவில்லை. பித்தாகரஸ் தேற்றம் கூட எளிமையாய் புரிந்தது; பிள்ளைகள் மனசைத்தான் புரிஞ்சுக்க முடியல எனப் புலம்பினேன்!

ஒரு பேப்பரை என்னிடம் கொடுத்து வாசித்துப் பார்க்கச் சொன்னாய். ஆர்வம் கொப்பளிக்க வாங்கினேன்; படித்த உடனேயே தலைதூக்கிய ஆர்வம் தலையைத் தொங்கப்போட்டுவிட்டது. ‘காடுகளின் பயன்’ என தலைப்பிருந்தது! வாசித்து முடித்துவிட்டு, “இதை யார் எழுதியது” எனக் கேட்டேன். “நான் தான்” என உற்சாகமாய் சொன்னாய்!இவ்வளவு அருமையாய்க் கட்டுரை எழுதுகிறாயே!” ஒருவித அமைதி உன்னிடம். இந்த வாய்ப்பை விடக்கூடாது என மேலே தொடர்ந்தேன்.கட்டுரையில் வார்த்தைகளை அழகாகத் தேர்ந்தெடுத்துக் கோர்த்திருக்கிறாய், ஒரு பக்கத்திற்குள் முடித்திருப்பது கட்டுரை உலகில் ஒரு புதுமை” என விடாமல் ஒரு சொற்பொழிவையே ஆற்றி விட்டேன்! கையிலிருந்து விரைவாக பேப்பரைப் பிடுங்கிய நீ, “இந்தக் கவிதை எப்படி இருக்கு என்று கேட்கத்தான் இந்த பேப்பரைக் கொடுத்தேன்” எனக் கூறிவிட்டு விரைவாக நடந்தாய்!

அன்று பேசியவள் தான்; அதற்குப் பிறகு நான் பேசப் பல முயற்சிகள் செய்தும் பேசவைக்க முடியவில்லை! காலங்களும் உருண்டோடியது. 10-ஆம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டாள். இப்போதெல்லாம் கேட்சுகளை நான் நழுவ விடுவதில்லை!

ஆதாரம்: ‘ஒரு முழுப் பார்வையற்றவனின் முதல் காதல் அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து. சத்தியாலய வெளியீடு. ரூ. நீங்கள் விரும்பியதைக் கொடுக்கலாம்!

பின் குறிப்பு: கட்டுரையாளரின் அனுபவமல்ல இக்கட்டுரை! கட்டுரையாளர் சிங்கிளுக்கே சிங்கியடிக்கிறார்! அவருக்கு எங்கே முதல் காதலி, இரண்டாவது காதலி எல்லாம் இருக்கும்!
***

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

4 கருத்துகள்: