நா. ரமணி |
இந்த இதழில் நாம் சந்திக்கவிருக்கும் திரு. நா.
ரமணி அவர்கள் பார்வையற்றவர்களின் அறிவுத் தள வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர்
சங்கத்தின் (Indian Association for the Blind - IAB) வெளியீடான ‘விழிச்சவால்’ பிரெயில்
மாத இதழின் ஆசிரியர். அதே நி்றுவனத்தின் வெளியீடான ‘பிரெயில் மஞ்சரி’ மாத இதழின் ஒருங்கிணைப்பாளர்.
தமிழ் எழுத்துத் துறையில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து.
கேள்வி:
உங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தாருங்கள்?
பதில்:
என்னுடைய சொந்த ஊர் அருப்புக்கோட்டை. ஆனாலும், நான் சிறுவயதிலிருந்தே மதுரையில் வசித்து
வருகிறேன். அரசுப் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினேன். பிறகு முதுகலை
தமிழ் படித்து, முதுநிலை தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று, தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுப்
பணி நிறைவு பெற்றேன். தற்போது, மதுரை IAB நிறுவனத்தில் என்னால் முடிந்த சில பணிகளைச்
செய்து வருகிறேன்.
கே:
தமிழாசிரியர்கள் புத்தகங்கள் படிப்பது இயல்பானதுதான். நீங்கள் பிழைதிருத்துனரானது
(Proof Reader) எப்படி?
ப:
‘க்ரியா பதிப்பகம்’ அகராதி தயாரிக்கத் தொடங்கியது. அப்பணிக்கு நிறைய பேர் தேவைப்பட்டனர்.
என் நண்பர்களும் அப்பணியில் இருந்தனர். என்னுடைய தமிழார்வத்தைக் கருத்தில் கொண்டு,
அவர்கள் என்னை அழைத்தனர். அந்தப் பதிப்பகத்தின் நூல்களை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்;
பிழையற்ற, செம்மையான படைப்புகளாக அவை இருக்கும். மேலும், இது அகராதிப் பணி என்பதால்
கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அப்படித்தான் நான் பிழை திருத்துனரானேன்.
தொழில் முறையில் பிழை திருத்துனர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் அங்கு நான்
கற்றுக்கொண்டேன்.
கே:
அடுத்த நிலையாக, செம்மைப்படுத்தும் பணியிலும் (Editing) ஈடுபட்டிருக்கிறீர்கள். அது
பற்றி?
ப:
ஆம்! என்னுடைய பணி சரியாக இருந்ததாகக் கருதிய அந்தப் பதிப்பகம், தொடர்ந்து எனக்குத்
தந்த வாய்ப்பு இது. இதில் பல கட்டுரைகளை, கதைகளைச் செம்மைப்படுத்தியிருக்கிறேன். எழுத்தாளர்களுடனேயே
நேரடியாகப் பேசி, அவர்கள் படைப்புகளைத் திருத்தும் வாய்ப்பு பெறுவது எத்தனை பெரிய விஷயம்!
கே:
ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளைச் செம்மைப்படுத்துவதற்கென்றே தனியாக ஆட்களை
வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் எழுத்தாளர்கள் அப்படிச் செய்வதில்லை என்று கூறப்படுகிறதே?
ப:
இல்லை! தமிழ் எழுத்தாளர்கள் யாரும் தொழில்முறையில் செம்மைப்படுத்துபவர்களை வைத்துக்
கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் தங்கள் படைப்புகளை எழுதியவுடன் நெருக்கமான
நண்பர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். எழுத்தாளர் இமயம் தன்
படைப்புகளை நட்பு அடிப்படையில் எனக்கு அனுப்பி கருத்துகளைக் கேட்பார். நம்முடைய கருத்துகளை
எழுத்தாளர்களிடம் கூறவேண்டும்; அது திருத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவர்கள்தான்
முடிவு செய்யவேண்டும். அதே நேரம், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுத்தாளர்களிடம் பெரும்பாலும்
பிழைகள் இருக்காது. இப்போது எழுதுபவர்களிடம்
நிறைய பிழைகளைக் காண முடிகிறது என்பது உண்மையே.
கே:
இந்தப் பதிப்புத் துறையில் தங்களது மறக்க முடியாத அனுபவங்களைக் கூறுங்கள்?
ப:
நிறைய கூறலாம். மொழியியலாளர் பேரா. ஈ. அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்தான்
க்ரியாவின் அகராதியில் பணிபுரிந்தோம். அவருடனான உரையாடலில் நிறைய கற்றுக்கொண்டேன்.
அடுத்தது, எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களது கட்டுரையைச் செம்மைப்படுத்திய நாள் மறக்க
முடியாதது. அவருக்கு முன் அமர்ந்து, அவர் கட்டுரையைப் படித்து, திருத்தங்கள் கூறி,
விளக்கம் பெற்று செம்மைப்படுத்தியதை மறக்க முடியாது. அதேபோல், ‘அஞ்ஞாடி’ நாவலை எழுதிய
பூமணி அவர்களைச் சந்தித்தது சிலமணி நேரம்தான் என்றாலும், மறக்க முடியாத அனுபவம் அது.
கே:
பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை எளிதாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை.
செம்மைப்படுத்துதலில் உள்ள குறைபாடுதான் அதற்குக் காரணம் என்று கூறலாமா?
ப:
இருக்கலாம்! ஆனால், இப்போதெல்லாம் நிறைய தெளிவான மொழிபெயர்ப்புகள் வருகின்றன. இதழ்களில்
நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள் தரமாக வருகின்றன. ஒரே நூலையே காலத்திற்கேற்ப மாற்றி மொழிபெயர்க்கும்
பணியும் நடந்து வருகிறது. ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலுக்கு இப்போது ஒரு மொழிபெயர்ப்பு
வந்துள்ளது. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப் படுவதுதான் குறைவாக உள்ளது.
ஏ.கே. ராமானுஜம் அவர்களைப் போல, சங்க இலக்கியச் சுவையை ஆங்கில மொழிக்குக் கொண்டு சேர்த்தவர்கள்
யாரும் இல்லையே!
கே:
பார்வையற்றவர்களுடனான உங்கள் முதல் அனுபவம் பற்றி கூறுங்கள்?
ப:
பணி ஓய்வுக்குப் பிறகு நான் சுந்தரராஜன்பட்டியில் வீடு கட்டினேன். அது IAB-க்கு மிக
அருகில் இருக்கிறது. அப்போதெல்லாம் தொலைபேசி செய்யவேண்டுமென்றால் IAB டெலிபோன் பூத்துக்குத்தான்
வரவேண்டும்; அதுதான் முதல் அனுபவம். பிறகு மெல்ல மெல்ல தொடர்பு ஏற்பட்டு, IAB மேல்நிலைப்பள்ளியில்
தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். தற்போது பள்ளியிலும், பிரெயில் அச்சகத்திலும் பணிபுரிந்து
வருகிறேன்.
கே:
IAB நிறுவனர் திரு. S.M.A. ஜின்னா அவர்களைப் பற்றி?
ப:
நான் வியந்த பிரம்மாண்டமான ஆளுமை அவர். பார்வையற்றோருக்கு உணவு, உடை போன்றவை போதும்
என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்குக் கல்வி அவசியம் என்று கருதிய முதல்
மனிதர். தனக்குக் கீழ் இயங்கிய பணியாளர்களுக்குப் போதுமான சுதந்திரமும், நம்பிக்கையும்
அளித்தவர்.
கே:
IAB வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறீர்கள். அதற்காக அவருடன் நெருக்கமாக உரையாடியிருப்பீர்கள்
அல்லவா?
ப:
ஆமாம்! அவர் மிகுந்த நினைவுத் திறன் உள்ளவர்! அதனால்தான் அந்த நூலை எழுத முடிந்தது.
அவருடைய சுயசரிதையை எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை; அதையும் அவரிடம் கூறியிருந்தேன்.
அதை இன்னும் வலியுறுத்தி, பணியைத் தொடங்கியிருந்தால் அவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரோ
என்று தோன்றுகிறது! நமக்குப் பிடித்தமான வேலையில் இருக்கும்போது, மனம் பொலிவு பெற்று
ஆயுளை நீளச் செய்யும் இல்லையா?
கே:
ஆம்! உங்கள் வரவுக்குப் பிறகு IAB பிரெயில் அச்சகம் பல மைல்கற்களைத் தொட்டிருக்கிறது.
அவற்றுள் சிறந்ததாக நீங்கள் கருதுவது?
ப:
நாங்கள் நிறைய பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் அச்சேற்றி வெளியிட்டிருக்கிறோம். அவற்றிலெல்லாம்
கிடைக்காத மகிழ்ச்சி சிறு வெளியீடுகளில் கிடைக்கிறது. அண்மையில், மதுரை வேளாண் பல்கலைக்கழகம்
நடத்திய மூங்கில் தொடர்பான ஒரு பயிற்சியில் பார்வையற்றவர் ஒருவர் கலந்துகொண்டார். பயிற்சியில்
கலந்துகொண்ட அனைவருக்கும் மூங்கில் வளர்ப்பு தொடர்பான ஒரு சிறு கையேடு தரப்பட்டது.
இவரும் பெற்றிருக்கிறார்; ஆனாலும் அதை எப்படி இவரால் படிக்க முடியும்? இங்கே வந்து
கொடுத்தார்; அதை நாங்கள் பிரெயிலில் மாற்றிக் கொடுத்தோம். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை; இத்தகைய மகிழ்ச்சிதான் மன நிறைவைத் தருகிறது.
கே:
ஓர் அச்சுப் பிரதியை பிரெயிலில் மாற்றும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அவற்றைப் புரிந்துகொள்வதில் உங்களுக்குச் சிரமம் இருந்ததா?
ப:
கொஞ்சம் இருந்தது. என்ன இருந்தாலும், நான் வழிகாட்டத்தான் முடியும். பிரெயில் வாசிப்பவர்கள்தான்
தீர்வை உறுதிப்படுத்த முடியும். குறிப்பாக, பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை பிரெயிலில்
மாற்ற பல வழிகள் உள்ளன. அவற்றை வாக்கியங்களாக மாற்றித் தரலாம்; தொட்டுப் பார்த்துப்
புரிந்துகொள்ளும் வடிவமைப்பில் படங்களைக் கொண்டுவரலாம். என்னைப் பொறுத்த வரை, இவ்விரு
முறைகளிலும் என்னோடு பணி செய்யும் பிரெயில் வாசிப்பாளரின் திருப்திதான் முக்கியமானது.
சில நேரங்களில், அவரைப் போலவே மற்ற பிரெயில் வாசிப்பவர்களும் புரிந்துகொள்வார்களா என்றும்
எனக்குத் தோன்றியது உண்டு.
கே:
உங்கள் வாசிப்புப் பழக்கம் எப்போது தொடங்கியது?
ப:
சிறுவயதிலேயே! அப்பா தினமும் தினமணி படித்துவிட்டுத் தான் பிற பணிகளைச் செய்வார். அம்மாவின்
குடும்பம் திராவிடர் கழகம் சார்ந்தது என்பதால் அவருக்கும் வாசிப்புப் பழக்கம் இயல்பாகவே
இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் நான் நிறைய நாவல்களைத் தொடக்க காலத்தில் படித்தேன்.
கல்கி தொடங்கி ஜெயகாந்தன் வரை தொடர்ச்சியாகப் பல கதைகளைப் படித்தேன். கல்லூரிக் காலத்திலிருந்து
ஆய்வு நூல்களையும் இலக்கிய நூல்களையும் படிக்கத் தொடங்கினேன்.
கே:
நீங்கள் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள். பார்வை மாற்றுத்திறனாளிகள் பலருக்கு
பல புத்தகங்களை வாசித்துத் தந்திருக்கிறீர்கள். நேரடியாகவோ, ஒலிப்பதிவு செய்தோ பல பார்வையற்றவர்கள்
உங்களால் பயனடைந்திருக்கிறார்கள். இந்தப் பணியில் மறக்கமுடியாத அனுபவம்?
ப:
பாண்டி என்ற பையன் IAB பள்ளியில் படித்தார். பிறகு அமெரிக்கன் கல்லூரியில் அவர் படிக்கும்போது,
நள்ளிரவு 12 மணி வரை அவருக்கு வாசித்திருக்கிறேன். அவருக்கான பாடங்களை வாசித்துகாட்டிய
நாட்களில்தான் மொழியியல் மீது எனக்கு ஆர்வம் அதிகமானது. அவரும் மொழியியலை நன்கு படித்து
பல மாணவர்களுக்கும் விளக்கியிருக்கிறார். என்னை ஒரு வாசிப்பாளராக மிக நன்றாகப் பயன்படுத்திக்
கொண்டவர் அவர்தான். இப்போது அவர் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
கே:
கல்வியாளராக, அச்சுப் புத்தக வடிவமைப்பாளராக, பிரெயில் புத்தக வடிவமைப்பாளராக புதிய
பாடப் புத்தகங்கள் பற்றி உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்?
ப:
நிறைய பாடங்கள் இருக்கின்றன. இவ்வளவு தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். வளர்ந்த நாடுகளில்
பாடச் சுமையைக் குறைத்து வருகிறார்கள்; வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக் கல்வியைக்
கற்பிக்கிறார்கள். ஆனால், இங்கு நாம் புத்தகங்களில் முடங்கியிருக்கிறோம். என் நண்பர்
வீட்டுப் பையன் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறான்; நம் புத்தகங்களைப் பார்த்து மிரட்சியடைகிறான்.
அப்படித்தான் இருக்கிறது கல்வி நிலை. ஆசிரியர்களுக்குப் போதிய சுதந்திரம் அளித்து,
பாடங்களைக் குறைத்து, தேர்வுகளையும் குறைத்தால் இன்னும் சிந்தனை வளம் மிகுந்த தலைமுறையை
உருவாக்கலாம்.
பாடப்
புத்தகங்களைப் பொறுத்தவரை, நிறைய படங்கள் இருக்கின்றன; பிழைகளும் நிறைய இருக்கின்றன;
பக்க அமைப்பும் மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லை.
பிரெயில்
புத்தகங்களை வடிவமைப்பதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பாடத்திட்ட வடிவமைப்பிலேயே
பார்வையற்றோருக்குப் புத்தகங்கள் தயாரிக்கும் முறை குறித்தும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
கே:
நிறைய வாசிக்கிறீர்கள். எழுத்தாளர் ரமணி அதிகமாக வெளிப்படுவதில்லையே?
ப:
எழுதவேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. இன்னும் படிக்க நிறைய இருக்கிறது. இப்போதுதான்
திருக்குறளின் பரிமேலழகர் உரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அது மற்ற உரைகளிலிருந்து
எவ்வளவு மேன்மையானது, எல்லா உரையாசிரியர்களும் ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள் என இப்போதுதான்
புரிகிறது. இன்னும் நிறைய படிக்கவேண்டியிருக்கிறது!
கே:
பார்வையற்றோர் நலன் தொடர்பாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறீர்கள். பலன் கிடைக்கிறதா?
ப:
நிச்சயமாக. என் பணி ஓய்விற்குப் பிறகுதான் நிறைய படிக்கிறேன், ஒரு நற்பணியை மேற்கொண்டு
வருகிறேன் என்று மனம் நிறைவாக இருக்கிறது. மிகச் சிறந்த பார்வையற்ற எழுத்தாளர்கள் உருவாகவேண்டும்
என்பது என் ஆசை. அது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் பல சிறந்த
பார்வையற்ற எழுத்தாளர்களைக் காணமுடியும் என்று தோன்றுகிறது.
கே:
எங்கள் இதழ் பற்றி தங்கள் கருத்து?
ப:
மிக முக்கியமான முயற்சி. வரவேற்கப்பட வேண்டியது; தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். இன்னும்
நிறைய பார்வையற்றவர்களைச் சென்று சேரவேண்டும்; பொதுவான வாசகர்களையும் ஈர்க்கவேண்டும்.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பாலகணேசன்:
நன்றி ஐயா.
ரமணி:
மிக்க நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக