விவாதம்: சுதந்திரம் பெற்றுவிட்டார்களா பார்வை மாற்றுத்திறனாளிகள்? - பாலகிருஷ்ணன் மருதமுத்து

  பார்வையற்றோரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தேடிப் பார்த்தால் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர ஏனையவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை என்றே ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகம் தோன்றி பல்லாயிரம் கோடி ஆண்டுகள் ஆகிற்று, மனிதர்கள் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் ஆகிற்று என அறிவியலும் வரலாறும் கூறுகின்றன. ஆனால், உலகில் முதல் பார்வையற்றவர் ஆணா? பெண்ணா? அவர்கள் எப்படி காலத்தைப் போக்கினார்கள்? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் இவ்வலவு தொழில்நுட்பங்களை  வைத்துக்கொண்டு நம்மாலேயே ஊனமல்லாதவர்களோடு காலம் தள்ள எத்தனை வகுப்பு எடுத்தாலும் அவர்களுக்குப் புரிவதில்லையே!  அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படி வாழ்ந்து இருப்பார்கள்? அவர்கள் தன்னிச்சையாக வாழ்ந்தார்களா? இல்லை பிறரைச் சார்ந்து இருந்தார்களா? இல்லை அப்பொழுதே இந்த பார்வை உள்ளவர்களின் ஆதிக்கம் அவர்களின் மேல் இருந்து வருகிறதா?

பொதுவாக பார்வையற்றவர்களின் வாழ்க்கையை லூயி பிரெயிலுக்கு முன், லூயி பிரெயிலுக்குப் பின் என இரண்டு காலமாகப் பிரிக்கலாம். லூயி பிரெயிலுக்கு முந்தைய காலத்தை பார்வையற்றவர்களுக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லி ஒதுக்கப்பட்டார்கள்; லூயி பிரெயிலுக்குப் பிந்தைய காலத்திலிருந்து அவர்களுக்கு எல்லாமே தெரியும் எனக் கூறி ஒதுக்குகிறார்கள்.

இரு முறைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றார்கள். முதலாவது பார்வை உள்ளவர்களால் அன்பு, இரக்கம், கருணை, அக்கறை போன்றவைகளைக் காரணம் காட்டி பார்வையற்றவர்கள் குறிப்பிட்ட நான்கு சுவர்களுக்குள் முடக்கப்படுகிறார்கள். இரண்டாவது பார்வையற்றவர்களே அவர்களை முடக்கிக்கொல்கிறார்கள். உதாரணமாக தயக்கம், என்னை எல்லோரும் தேடி வரணும் என்கின்ற கர்வம், கூச்சம் முதலியன. சரி, முதலில் பார்வையுள்ளவர்கள் எவ்வாறு பார்வை இல்லாதவர்களைப் பார்க்கிறார்கள் என்று பார்க்கலாம்.

நம்மீது ஒருவர் வைக்கும் அதீத அன்பும், அதீத அக்கறையும் நம்மை அவருக்கு அடிமையாக்கும் அல்லது நமது சுதந்திரத்தை இழக்க வைக்கும்.இது தான் அன்று தொடங்கி இன்று வறை பார்வையற்றவர்கள் வாழ்வில் நடந்து வருகிறது. அது மாதா, பிதா குரு தொடங்கி நண்பர்கள், உறவினர்கள் பொதுமக்கள் வரை நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு மாற்றுத்திறனாளி தனியாகச் செயல்பட நினைத்தாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனுமதிப்பது இல்லை. ஒரு வயது வந்த பெண்ணைவிட பொத்திப் பாதுகாக்கிறார்கள். அப்படி அவர்களால் எத்தனை ஆண்டுகள் தான் பாதுகாக்க முடியும்? நாளை அவர்கள் இறந்துபோனால் அவரால் எவ்வாறு இயங்க முடியும் என நினைப்பார்களா என்று தெறியவில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம்படத்தில் வரும் சந்தோஷ்தான் இங்கே மாற்றுத்திறனாளி, ’சுப்பிரமணியம்தான் அவர்களைச் சூழ்ந்திருக்கும் பார்வை உள்ளவர்கள். என்ன அதுல சுப்பிரமணியம் திருந்திட்டாருஇங்கே இன்னும் ஆயிரக்கணக்கான கேல்விக்குறிகள் தான். இங்கே இருக்கும் பல பார்வையற்றவர்களுக்குத்  திறமை இருக்கும்; ஆனால், அவர்களை தன்னிச்சையாக இயங்கவிடாமல் அவர்களது பெற்றோர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் முதலியோர் தான் தடையாக இருந்து வருகிறார்கள். நான் எல்லாப் பார்வையுள்ளவர்களையும் குறை கூறவில்லை. எனக்குத் தெரிந்து சிறந்த பெற்றோர்களும் நண்பர்களும் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இக்கட்டுரை அவர்களைப் பற்றியது இல்லை. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி இரயில் நிலையத்திற்கு முன்பாக ஒரு விபத்தில் பார்வை மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பேருந்தில் இருந்து இறங்கிய உடனே ஒரு 'குட்டி யானை' என்றழைக்கப்படும் (mini auto) மூலம் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். சாலை விதிகள் குறித்து அடிப்படை அறிவு இருக்கும் அனைவருக்கும் தெரியும், தவறு யார் மீது என்று. இதில் என்ன கோபம் என்றால் காவல்துறையோ அவர்களது பெற்றோர்களோ சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் தர முன்வரவில்லை. உடன் பணிபுரியும் ஏனைய பார்வை மாற்றுத்திரனாளிகள் கேட்டும் மழுப்பிவிட்டது இந்த சமூகம். இங்கே பெற்றோர்கள் தங்கள் பார்வையற்ற மகனின் மீது காட்டும் அக்கறையை நினைத்தால்தான் ரொம்பவும் வருத்தமாக உள்ளது.

பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டின் உள்ளே முடங்கிக் கிடப்பதற்குக் காரணம் அவர்களது பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்களின் அறியாமைதான். அந்தப் பார்வையற்றவனுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் சரி, எவ்வளவு படித்திருந்தாலும் சரி, அவரது வீட்டைப் பொருத்தவரை அவன் முடியாதவன் தான். அவனை நம்பி எந்த ஒரு குடும்பப் பொறுப்பினையும் தர மாட்டார்கள். அதே பார்வையற்றவன் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து போதுமான அளவிற்கு பணம் சம்பாதிக்கக்கூடியவராக இருந்தாலும் சரி, அவனுடைய கடிவாளத்தை மீண்டும் பெற்றோர்களே எடுத்துக்கொள்ள பார்ப்பார்கள் அல்லது முன்பைவிட அக்கறை அதிகமாக இருக்கும். இப்படித்தான் அவனுக்கு என இருக்கும் சுதந்திரம், சுய சிந்தனை அத்தனையும் அவர்களால் முடக்கப்படுகிறது. நீங்களே கூறுங்கள் இங்கே ஊனமுற்றவனாக அவன் மாற்றப்படுவது கடவுளாலா? இல்லை இந்தச் சமூகத்தாலா?

படிக்கும் இடத்தில் பார்வையற்றவர்களின் நிலை "ஊறுகாய் பொழப்புதான்." அவர்களோடு படிக்கும் சக மாணவர்கள் அக்கறை என்ற போர்வையில் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும் விதம் தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. சலுகைகளை தவறாகப் பயன்படுத்துவது, பார்வையற்றவர்களைக் கவனிப்பது போல் எதிர்பாலினத்தவரை சைட் அடிப்பது, மேலும் பார்வையற்ற மாணவர்களுக்கு எல்லாமே தெரியும், அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை எனக் கூறி அவர்களை ஒதுக்கி வைப்பது முதலியவை இங்கு இயல்பாக நடக்கக்கூடியவை. அதே போன்று ஒரு சாதாரண செயலை செய்து முடித்தால் அதனை மிகவும் ஆச்சரியப்பட்டுப் பார்ப்பது, என்னவோ அசாத்தியமான செயலை செய்து முடிப்பது போல் பாராட்டுவது முதலியவை மிகவும் வருந்தத்தக்கவை. இந்த மாதிரியான நபர்களிடம் இருந்து வரும் அதீதப் புகழ்ச்சி தான் பார்வை மாற்றுத்திறனாளிகளை மேலும் முடக்கிப்போட்டு விடுகிறது.

பொழுதுபோக்கிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் பார்வை உள்ளவர்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்றால் மிகையில்லை. உதாரணமாக ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தமது குடும்பத்தினருடன் சேர்ந்து கோவில், உறவினர்களின் திருமணம் போன்ற ஏனைய விசேஷங்களுக்கும், தனது பார்வையுள்ள நண்பர்களோடோ, உடன் பணியாற்றும் பணியாளர்களோடோ, சுற்றுலா போன்றவைகளுக்கு பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்லும் பொழுது தான் அவர்களது பொழுதுபோக்கு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. மேலே நான் கூறிய பார்வையுள்ள உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் இவர்கள் அனைவரும் தங்களுக்கான பொழுதுபோக்கையும் தங்களுக்கான மகிழ்ச்சியையும் மட்டும்தான் யோசிப்பார்கள். கூட வந்த அந்த பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சிந்தனை அப்பொழுது அவர்களுக்கு அறவே இருக்காது. நான் அவர்களைப் பற்றி தவறாக கூறவில்லை. இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய இயல்பான எண்ணம்தான். ஆனால், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக பார்வை உள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கணக்கில் கொண்டு அதனை அவர்களுக்கு வழங்கிட முயற்சி  செய்திருப்பார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இன்று வரை நான் கண்ட பார்வையுள்ளவர்களிலேயே வெளியில் செல்லும்போது எனது மகிழ்ச்சியினை கருத்தில் கொள்ளும் ஒரே ஒரு நபர் என்றால் அவன் எனது இளைய தம்பி "ஸ்வர்ணமூர்த்தி" தான்.

பார்வை மாற்றுத்திறனாளிகள் பார்வை உள்ளவர்கள் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வது போல் பார்வை உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முறை குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வதில் காட்டும் தயக்கம் தான் நான் மேலே கூறிய அனைத்து விஷயங்களுக்கும் காரணமாக அமைகிறது. அவ்வாறு கேட்டுத் தெரிந்துகொள்ளும் பட்சத்தில் இம்மாதிரியான வேறுபாடுகள் நிச்சயமாக களையப்படுவதற்கு  வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே நான் கூறியது போல பார்வை உள்ளவர்களுக்கு பார்வை மாற்றுத்திறனாளி இடம் அவர்கள் குறித்து கேட்பதற்கு நீண்ட தயக்கங்கள் இருப்பதை நன்கு அறிவேன். உதாரணமாக நீங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உலகில் செய்த மிகப்பெரிய சாதனைகளை பார்வை உள்ளவர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கேட்டால் அவர்களது குரலில் ஒருவித ஆச்சரியமும் இரக்கத்தையும் உங்களால் கேட்க முடியும். இதன்மூலம் அதனை கேட்பவர்கள் மத்தியிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து அதே அனுதாபமும், இரக்கமும் தான் ஏற்படும்.

சில மாதங்களுக்கு முன்பு பெண்களின் பாலியல் சீண்டலுக்கு எதிராக {MeToo) இயக்கம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. அதேவேளையில் சென்னையில் ஒரு இரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஒரு பார்வையற்ற பெண் சில குடிகார ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டார். இச்செய்தியை சில செய்தித்தாள்கள் வெளியிட்டன. ஆனால் அப்பொழுது இந்த இயக்கத்தை சமூகத்தளத்தில் முன்னெடுத்துச் சென்றவர்கள் இந்த நிகழ்வை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. பிரபல பின்னணிப் பாடகி திருமதி. சின்மயி அவர்கள் பல செய்திகளை இந்த இயக்கத்தின் மூலம் உலக மக்களின் கவனத்திற்கு கீழ் கொண்டு வந்தார். பாவம் அந்த செய்தித்தாளை அவர் படிக்கவில்லை போலும். இந்த இயக்கம் பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலையினருக்கானதல்ல என அப்பட்டமாகத் தெரிகிறது. அதனால் தான் எனக்கு அந்த இயக்கம் மீது நம்பிக்கை அறவே இல்லாமல் போனது.

நான் மேலே கூறிய்ப்பிட்ட நிகழ்வுகள் தான் எல்லா இடங்களிளும் பெரும்பாலும் நடக்கிறது. அதேவேலையில் பார்வையற்றவர்களும் சில நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தங்களோடு படிக்கின்ற அல்லது வேலை புரியும் பார்வை உள்ளவர்களை பார்வை மாற்றுத்திறனாளிகளும் அதிக வேலை வாங்குவது, அவர்கள் நமக்காக ஒரு வேலையை ஈடுபாட்டுடன் செய்தால் அதை நாம் அதிக உரிமையோடு எடுப்பது போன்றவைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். காரணம், அவர்களுக்கும் சுதந்திரம், சந்தோசம் எல்லாம் இருக்குது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தான் நாம் மற்றவர்களிடம் இதே உரிமையைக் கேட்க முடியும்.

இறுதியாக, உங்களை ஒரு பார்வை உள்ள நபர் பீச், பார்க், பார், கோவில் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்கின்றார் என்றால் அதில் இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனைகள் இருக்கும்போது பிரச்சனை இல்லை. மாறாக, நீங்கள் அதனைப் பெருமையாக நினைத்து, அவர்கள் உங்களைப் பயன்படுத்திக்கொண்டால்? நன்கு யோசித்துப் பாருங்கள் அது பெருமையா என்று.

இன்று 5 வயது குழந்தைகள் மட்டும் தான் லூயி பிரெயிலுக்கு பிந்தைய காலத்தில் வாழ்ந்து பிறகு லூயி பிரெயிலுக்கு முந்தைய காலத்திற்குச் செல்கிறார்கள். இன்று உலகின் பெரும்பான்மையான பார்வையுள்ள மக்கள் லூயி பிரையிலுக்கு முந்தைய காலத்தில் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.
***

தொடர்புக்கு: m.bala10991@gmail.com

2 கருத்துகள்:

  1. சிறந்த கட்டுரையப்பா. புதுக்கோட்டையில் நான் மன்னர் கல்லூரியில் படிக்கும்போது, ஆசிரியரின் வினாவிற்கு பதில் சொல்லிவிட்டால்போதும் கைதட்டுவார்கள். இந்நிகழ்வு எனக்கு மிகவும் கடுப்பேற்றியவற்றுள் முக்கியமானது!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கட்டுரை இது மரந்த பல நினைவுகளையும் மரக்க நினைக்கும் நினைவுகளையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது.

    பதிலளிநீக்கு