பிரெயில்: ஒரு புள்ளியில் தொடங்கிய வாழ்க்கை - வினோத் சுப்பிரமணியன்

graphic ஆறு புள்ளிகள்
ஆறு புள்ளிகள்
 பிரெயில். இது வெரும் வார்த்தையல்ல. இது ஒரு சமூதாயத்தின் மொழி. சத்தமில்லாமல் ஆங்காங்கே கட்டமைக்கப்பட்ட ஒரு சாம்ராஜியத்தின் மொழி. வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்ட, வெவ்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்ட ஒரு கூட்டத்தின் மொழி. இது வெரும் மொழி மட்டும் அல்ல. ஒரு சமூதாயத்தின் அடையாளம். அங்கீகாரத்திற்காக அனுதினமும் போராடிக்கொண்டிருக்கும், ஏதோ ஒருவகையில் சபிக்கப்பட்ட ஒரு சமூதாயத்தின் அடையாளம். சொற்களாலும், பொருளாலும், வார்த்தையாலும் எழுத்துக்களாலும் மட்டுமல்லாமல் உணர்வுகளால் உருவாக்கப்பட்ட ஒரு உன்னத மொழி. விழியற்றோர் வாழ்வில் விரல்களால் விடியலை ஏற்படுத்த வந்த விரல்மொழிதான் இந்த பிரெயில் மொழி. இந்த பிரெயிலின் வரலாறு எல்லோருக்கும் தெரியும். இல்லையென்றாலும் அதைப் பற்றி அறிந்துகொள்வதில் எந்த ஒரு சிறமமும் இந்த காலத்து தலைமுறையினருக்கு இருக்காது என்றுதான் நினைக்கிறேன். இருப்பினும் இந்த பிரெயிலின் வரலாற்றைப் பற்றி ஒரு சில வரிகள் மட்டும் குறிப்பிட்டுவிட்டு எனது வாழ்வில் இந்த பிரெயில் அளித்த பங்களிப்பைப் பற்றி சொல்கிறேன்.

graphic லூயி பிரெயில்
ஃப்ரான்சு நாட்டில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் லூயி பிரெயில். சிறுவயதில் தனது கண்ணில் ஆணி பாய்ந்ததால் பாற்வையை இழந்தவன். பிறகு அந்த நாட்டின் ரானுவத்தில் தகவல்களை அறிந்துகொள்ள அவர்கள் பயன்படுத்திய குறியீடுகளைத் தனதாக்கி, பிறகு அதை ஒரு சமூதாயத்தின் அடையாளமாக்கினான். விளைவு, அந்த கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே வைக்கப்பட்டது. எந்த ஆணியால் பார்வை போனதோ, அதே ஆணியால் உருவாக்கப்பட்டதுதான் இந்த பிரெயில் என்னும் எழுத்து வடிவம்.

1997 மார்ச் வரை பிரெயில் என்ற ஒன்று இருப்பது எனக்கு தெரியாது. நான் எல்.கெ.ஜி. முடித்த கையோடு எனது அம்மாவின் கையில் ஏதோ கொடுத்தனுப்பி என்னை பயிற்சி செய்ய சொன்னார்கள். செவ்வக வடிவில் இருந்தது அந்தக் கருவி. மேலிருந்து கீழாக ஆறு வரிகளும், பக்கவாட்டில் முப்பது துவாரங்களும் இருந்தது. ஒரு பேப்பரை அந்த கருவியினுள் நுழைத்து கூர்மையாக ஏதோ கையில் கொடுத்தார் அம்மா. ஒவ்வொரு துவாரத்தையும் அந்த கூர்மையான கருவியால் நிரப்பவேண்டும். ஒவ்வொரு துவாரத்திலும் ஆறு புள்ளிகள் விழுந்திருக்கவேண்டும். அதுதான் எனக்கு என் அம்மா கல்வி சம்மந்தமாக கற்பித்த முதல் பாடம். கடைசி பாடமும் அதுதான். அந்த ஆறு புள்ளிகளைத் தாண்டி என் அம்மா எதுவும் பிரெயிலில் கற்கவில்லை. அந்த கூர்மையான கருவியை ஸ்டைலஸ் என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள். அதையே நான் இரண்டாம் வகுப்பில்தான் தெரிந்துகொண்டேன். ஆனாலும் தமிழில் உள்ள உயிர், மெய் எழுத்துக்களை முதலாம் வகுப்பிலேயே எப்படி எழுதுவது என்று கற்றுத்தரத் துவங்கிவிட்டார்கள்.

ஆச்சர்யம் என்னவென்றால் யாரேனும் தவறாக எழுதினால் ஸ்கேலால் விரலில் பின்பகுதியில் ஷாந்தி டீச்சர் அடிக்கும் அடி எனக்கு கிடைத்ததில்லை. அந்த அலவிற்கு பாராட்டத்தகுந்த நிலையில்தான் இருந்தது எனது நிலை. ஆனாலும் மற்றவர்கள் அடி வாங்கும்போது கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. இரண்டாம் வகுப்பில் ஆங்கிலம் கற்றுத்தந்தார்கள். மூன்றாம் வகுப்பில் சுருக்கெழுத்து. நான்காம் வகுப்பில் நாங்களே சுருக்கெழுத்துகளை உருவாக்கிக்கொண்டோம். ஐந்தாம் வகுப்பு புத்தகத்தை அடுத்தவரிடமிருந்து வாங்கிக்கொண்டோம். எனக்கு ஜான்சி அக்காவிடம் இருந்து அவரது பிரெயிலால் எழுதப்பட்ட நோட்டு புத்தகங்கள் கிடைத்தது. ஜான்சி அக்கா எனக்கு ஒரு வகுப்பு மூத்தவர்.

பிரெயிலில் எழுதவேண்டும். பிரெயில் புத்தகங்களைப் படிக்கவேண்டும். இவைதான் எங்களின் முதல் கற்றலாக இருந்தது.  ஒவ்வொரு முறையும் புள்ளிகளை தொட்டு படிக்கும்போது ஏற்படும் உணர்வு எத்தகையது என்பது பிரெயிலை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். எனக்குப் புரிந்தது.

சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் சாயங்காலம் நான்கறைமணி வாக்கில் மைதானத்தில் உட்கார்ந்து பிரெயிலால் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் குருவிகளைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும்போது, மரத்திலிருந்து காக்கைகள் அந்தப் புத்தகத்திலிருந்த புள்ளிகளின்மீது கோலம் போட்டது ஒரு கொடுமை என்றால், கோபத்தில் நான் அவற்றின்மீது கல் எரியப்போய் அது என் மீதே விழுந்தது இன்னொரு கொடுமை. விவிலியத்தை பிரெயில் வடிவில் பார்த்தது ஒரு சந்தோஷம் என்றால், இன்னொரு நாள் நாட்காட்டியை பிரெயிலில் படித்து அதில் தீபாவலியைத் தேடியது இன்னொரு விதமான சந்தோஷம்.

நான் ஆங்கில வழியில் (English Medium) படிக்கவேண்டும் என்று கேட்டபோது நிராகரித்த அதே தலைமை ஆசிரியர்தான் பெரிய  பிரெயில் (27 line) பலகை வேண்டும் என்று கேட்டபோதும் நிராகரித்தார். நான் முதன்முதலில் வாங்கிய பிரெயிலின் விளை 35 ரூபாய். “இது எவ்வளவு டா இருக்கும்? ஒரு 100 ரூபாய் இருக்குமா? எங்க கிடைக்கும்னு சொல்லு. நான் என் கையால உனக்கு வாங்கித்தர்றேன்.” என்று சொன்ன அன்றைய பக்கத்து வீட்டு அண்ணனை அடுத்தமுறை பார்க்கச் சென்றபோது அவரை யாரோ பெற்றொல் ஊற்றி எரித்து கொன்று விட்டார்கள் என்று கெள்விபட்டது இன்னும் நினைவிலிருக்கிறது.

நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு பிரெயில் பலகை கொடுத்து அனுப்புவார்கள். நான் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டுவரும்போது எனக்காக மெனக்கெட்டு இருப்பதிலேயே நல்ல பிரெயில் பலகையாக தேடிக் கொடுத்த தோழி ரேனுகாவை எத்தனை முறை வேண்டுமென்றாலும் நினைத்துப்பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நட்பின் அடையாளமாக பத்திரமாக வைத்திருந்த அதே பிரெயில் பலகையை என்னை எனக்கே பிடிக்கவைத்த ஒரு பெண்ணிடம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்ததும் மரக்க முடியாத நினைவுதான்.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது திரு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்திற்கு எங்களை கூட்டிச்சென்றிருந்தார்கள். அங்கிருந்த ஒவ்வொரு செடிப்பற்றியும் அதற்கு அருகிலுள்ள ஒவ்வொரு பிரெயில் அட்டையிலும் எழுதப்பட்டிருந்தது. அன்றைய தினம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வருவதாக அறிவித்திருந்தார்கள். முதல்வர் வந்தால் படிக்கச்சொன்னால் படிக்கவேண்டும் என்று அறிவுருத்தியிருந்தார்கள். நானும் தயாராக ஒரு செடியின் அருகே இருந்த பிரெயில் பலகையின் அருகே நின்றுகொண்டிருந்தேன். முதல்வர் ஜெயலலிதா வந்தார். என் வலது தோள் மீது கையை வைத்துக்கொண்டார். ‘வாசி’ என்றார். ஒரு நிமிடம் கழித்து ‘போதும்’ என்று சொல்லிவிட்டு தோளின்மீது இருந்து கையை எடுத்துவிட்டுச் சென்றார். நானும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்தநாள் நாளிதழ்களில் செய்தியை எனது படத்துடன் போட்டுவிட்டார்கள். நண்பண் நவரசனின்  அப்பாதான் வந்து சொன்னார். எங்கள் வீட்டிற்கும் விஷையம் எப்படியோ பரவ கடை கடையாக சென்று நாளிதழ்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தை மட்டும் துண்டாக்கி ஒரு கோப்பில் போட்டுவைத்திருக்கிறார் அப்பா. இது ஒருபுரம் இருக்க. சொந்தக்கார தாத்தா ஒருவருக்கு நான் செய்தித்தாளில் வந்த செய்தி தெரிய, “முதல்வர் கூட இருக்குரது என் பேரந்தான். இதுக்கப்புரம் கட்சியில நாந்தான் பெரியாளு. ஊருல இருக்கவங்க குடுக்கரத குடுத்தா அவங்கவங்க வேல நடக்கும்” என்று  கூறி தனது ஒரு மாதத்திற்கான மதுவிற்கான வருமானத்தை ஒரே நாளில் சம்பாதித்துவிட்டார். பிறகென்ன? அந்த ஒரு மாதத்திற்கு தாத்தா செம்ம டைட்டு! அந்த பிரெயில் வாசிப்பு அப்படி ஒரு எதிர்பாராத அனுபவத்தை என் வாழ்வில் ஏற்படுத்தும் என்று நானே நினைக்கவில்லை.

அப்படித்தான் நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அண்ணா பல்களைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி வாசிப்பாலராக வந்தார். அவர் சொல்லச் சொல்ல நான் பிரெயிலில் எழுதிக்கொண்டிருந்தேன். பிரெயிலில் எப்படி எழுதுவது என்றும் அந்த மாணவிக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். மருபடியும் அவர் சொல்ல ஆரம்பித்தார். நான் பிரெயிலில் குரிப்பெடுக்க ஆரம்பித்தேன். ஏதோ அறிவியல் சம்மந்தமாக எழுதிக்கொண்டிருக்கும்போது அவர் ஒரு விஷையத்தை சொன்னார். நான் அப்படியே மனதில் வைத்துக்கொண்டேன். திடீரெண்ரு ஒருநாள் திரு அப்துல் கலாம் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு கேள்விகள் கேட்களாம் என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு அந்த அண்ணா பல்களைக்கழக மாணவி கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. எனது ஆசிரியரிடம் சொன்னேன். உடனே ஒப்புக்கொண்டார் ஆசிரியர். பிறகு அந்த கேள்வி திரு கலாமிடம் கேட்கப்பட்டது. இன்று வேண்டுமென்றால் அந்த கேள்வி புளித்துப்போன கேள்வியாக இருக்கலாம். ஆனால் பத்து வருடத்திற்கு முன்னால் அது மிகவும் இன்றியமையாத கேள்வியாக இருந்தது. “எல்லாரும் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தா யாரு விவசாயம் பாப்பா? விவசாயமே இல்லாம எப்படி சாப்பாடு கிடைக்கும்?” என்ற கெள்விதான் அது. நான் அந்தப் பெண்ணிற்கு பிரெயில் பற்றி சொன்னேன். அந்தப் பெண் எனக்கு வாழ்க்கையைப் பற்றி சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அந்த கேள்வி திரு அப்துல் கலாம் வரை செல்லும் என்று சத்தியமாக நினைத்துப்பார்க்கவில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலம் முதல் தாளை முடித்துவிட்டு இரண்டாம் தாளுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது விடுதிக் காப்பாலர் வந்து “தம்பி எப்படி டா பரிச்ச எழுதுன? அந்த ஸ்கிரைப் கொஞ்சமாச்சும் பரவாயில்லையா?” என்று கேட்டார். சரியாக அந்த நேரத்தில் மொழியாக்கத்திற்கான பழமொழிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த பிரெயில் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு நடந்து கொண்டே, “நல்லா இருந்திச்சு பிரதர்.” என்று சொல்லி நகர்ந்தேன். நான் நகர்கையில் விடுதிக் காப்பாலருக்கு அருகிலிருந்த நண்பண் தர்மராஜ் ”அவனுக்கு கண்ணு கலங்குது பிரதர்.” என்று சொன்னது காதில் கேட்க அந்தத் தருனத்தில் பிரெயில் புத்தகத்தில் கையை வைத்தபோது கையில் தட்டுப்பட்ட பழமொழி ‘இன்னலிலும் இன்பமுண்டு’ என்பதுதான். அது இன்னும் புள்ளிகளாக விரலிலேயே நிற்கிறது.

நான் கல்லூரி சேர்ந்து முதுகளை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது பிறந்தநால் வந்தது. பல பரிசுகள் தோழர்களிடமிருந்தும் தோழிகலிடமிருந்தும் கிடைத்தன. அந்த வரிசையில் மரக்க முடியாத பரிசை கொடுத்தவர் தோழி நான்சி. பிறந்த நாலுக்கு பத்துநாட்களுக்குமுன்பு எனது பிரெயில் பலகையை வாங்கிச் சென்று பிறந்தநாள் அன்று கொண்டுவந்து கொடுத்தார். கூடவே இன்னொரு பொருளையும் கொடுத்தார். அதுதான் பரிசு. ஒரு சார்ட்டில் ஆங்கிலத்தில் பிரெயில் எழுத்துக்கள் பொரிக்கப்பட்டு அது கிஃப்ட் போல அழகாக பேக் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட பத்து வரிகளுக்கு எழுதியிருந்தார் தோழி நான்சி. தவிற ஆங்காங்கே பிரெயிலால் கோடுகள் போட்டு அலைன்மெண்ட் வேறு. இதை ஒரு பார்வையற்ற தோழி செய்திருந்தால் எந்த ஒரு சுவாரசியமும் இருந்திருக்காது. ஆனால் செய்தது ஒரு பார்வையுள்ள பெண். எனக்காக பிரெயில் கற்றுக்கொண்டு அதை எனது பிறந்தநாள் பரிசாகத் தந்த தோழி நான்சிக்கு என்னால் எதையும் திரும்பத் தர இயலவில்லை. அந்த பிரெயில் பலகையை தவிற. முதன்முதலில் திருக்குறலின் மூன்றாம் பாகத்தை யாருக்கும் தெரியாமல் திருடிப்படித்தது பிரெயில் மொழியில்தான். முதன்முதலில் பேப்பர் கிரிக்கட் விளையாடியது பிரெயில் மொழியில்தான். முதன்முதலில் கவிதை எழுதியதும், கட்டுரை எழுதியதும், பாடல் எழுதியதும், பாட சம்மந்தமான புத்தகங்கள் எழுதியதும், எல்லாம் பிரெயிலில்தான். அவ்வளவு ஏன்? பிரெயிலைக்கற்றதனால்தான் டிரான்சிஸ்டரை புத்தகத்திற்கு அடியில் வைத்துக்கொண்டு இந்தியா ஆஸ்திரேலியா இருதி கிரிக்கட் போட்டியின் வர்னனையை திருட்டுத்தனமாக கேட்க முடிந்தது. பிரெயில் தெரியாதவர்கள் புத்தகத்தை வைத்திருந்தால் அங்கிருக்கும் ஆசிரியர்கள் நம்ப மாட்டார்கள். அதனால் அது ஒரு அட்வாண்டேஜ்தான் அன்று எனக்கு.

அலுவலகத்திலும் எனக்கான மதிப்பைப் பெற்றுத்தந்தது பிரெயில்தான். வேலைக்குச் சென்ற கொஞ்ச நாளில் என்னைப் பற்றி நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பிரெயில் பலகையை கொண்டு சென்று அன்றைய மேலாளரிடம் காட்டி ”இது என்னனு தெரியுதா?” என்று கேட்க “இது உங்க பிரெயில்தான?”  என்று பிரெயிலை பற்றி ஏற்கனவே தெரிந்துவைத்திருந்து கேட்ட மேலாளர் திருமதி தேன்மொழி அன்று தெய்வமாகத் தெரிந்தார். இன்றும் அப்படித்தான்.
என்னிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கிய பலரை பேசவைத்தது பிரெயில்தான். “இத எப்படி யூஸ் பண்ணூவீங்க?” என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பித்த பேச்சுகள் பலவும் நட்பு வட்டாரத்திற்குள் வந்திருக்கின்றன. பிரெயில் இல்லையென்றால் அதெல்லாம் சாத்தியமாகியிருக்காது.

நான் படிக்கும்போது பிரெயில் மொழியை கற்றறியாத பார்வையற்றோர்களையும் பார்த்திருக்கின்றேன். நான் பள்ளி படிக்கும் காளங்களில் அவர்கள் ஒலிநாடாவின் உதவியுடன் படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் முயற்சி செய்து பார்த்திருக்கின்றேன். பிறகு ஒலிப்பதிவு செய்வதற்காகவே பிரத்தியேக கருவிகளை இறக்கினார்கள். அதையும் முயற்சி செய்து பார்த்திருக்கின்றேன். கல்லூரி காளங்களில் ஒரு ஐ-பாடை வாங்கி பாடங்களை ஆசிரியர்கள் நடத்தும்போது ஒலிப்பதிவு செய்து படித்திருக்கின்றேன். சில நாட்கள் கழித்து அலைபேசியில் ஒலிப்பதிவு செய்து படித்தேன். ஆனால் இருதியில் ஒன்றுமட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது. யாமறிந்த வழிகளிலே பார்வையற்றோர்களுக்கு பிரெயில் மொழி போன்று சிறப்பானதொரு கற்றல் வழிமுறையை எங்கும் கண்டதில்லை. இன்று கணினியின் உதவியுடன் படித்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அது முழூ திருப்தி தராததுபோலத்தான் இருக்கிறது எனக்கு. கேட்டலைவிட தொடுதலில் இருக்கும் உணர்வு உயரியது என்று எனக்குமட்டும்தான் தோன்றுகிறதா என்று தெரியவில்லை. எத்தனை திருமணங்கள் செய்திருந்தாலும், எத்தனைமுறை காதலில் விழுந்திருந்தாலும், வாழ்வின் முதல் காதலுக்கு என்றுமே மனதில் ஒரு தனி இடம் இருக்கும். அது உணர்வுப்பூர்வமானது. நினைவோடு கலந்தது. கற்றலைப் பொருத்தவரையில் பிரெயில்தான் எனது முதல் காதல்.

இப்போது கூட ரயில்நிலையங்களில் இருக்கும் மின்தூக்கிகளின் பொத்தான்களில் பிரெயில் எழுத்துக்கள் பொரிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கத்தோன்றும். அப்படி ஒருசில ரயில்நிலையங்களில் பார்க்கும்போது அதன் ஆநந்தமே அலாதியானது. ரயிலின் உள்ளே சென்றதும் நமது இருக்கையின்மேலே அதன் எண்ணை பிரெயிலில் பொரித்துவைத்திருப்பதை தொட்டுப்பார்த்ததும் அதை இன்னொருமுரை தொட்டுப்பார்த்து சந்தோஷபட்டதெல்லாம் சொல்லிப்புரியாது. முதன்முறை கல்கத்தாவிற்கு விமானத்தில் சென்றபோது விதிமுறைகளை ஒரு பணிப்பெண் பிரெயிலில் கொண்டுவந்து கொடுத்தபோது அங்கீகரிக்கப்பட்டதாய் உணர்ந்தேன் நான். நாட்டில் பிரெயிலை மையமாக கொண்டு பார்வையற்றோர்களுக்காக நடத்தப்படும் கார் ராலிகள் ஒரு சமூதாயத்திற்கு கிடைத்த ஆகப்பெரிய சந்தோஷம் என்பதில் எத்தனை பேருக்கு மாற்று கருத்து இருக்கமுடியும்?. ஏ.டி.எம்களில் பணமெடுக்க செல்லும்போதெல்லாம் அதில் பிரெயில் எழுத்துக்கள் பொரிக்கப்பட்டிருக்கிறதா என்று தேடியிருக்கிறேன்.  அப்படி இருக்கும்பட்சம் அலவில்லாத மகிழ்ச்சி எனக்குள் ஏற்பட்டதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் உள்ளிருந்துவரும் ரூபாய் நோட்டுகள் என்னை வருந்தச்செய்யும்.

இந்திய ரூபாய் நோட்டுக்களில் பிரெயில் எழுத்துக்கள் பொரிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் என்னைப் போன்ற பல பார்வையற்றோர்க்கு உண்டு என்பதை விசாரித்துப்பார்த்தால் தெரியும். அப்படி ஒரு திட்டத்தை மட்டும் அமல் படுத்தி இருந்தால் எத்தனை பார்வையற்றோர் பயணடைந்திருப்பார்கள்? எத்தனை பார்வையற்றோருக்கு வேலை கிடைத்திருக்கும்? என்று எண்ணிப்பார்க்கும்போது வருத்தம்தான் மிஞ்சுகிறது.

ஒரு சில நாடுகளில் அவர்களின் பணத்தில் பிரெயில் எழுத்துக்களும் சேர்க்கப்பட்டிருக்குமாம். உதாரனத்திற்கு ஆஸ்திரேலியா என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன செய்ய? அதெல்லாம் இந்த நாட்டில் வசிக்கும் பார்வையற்றோருக்கு எட்டாக்கணியாகத்தான் தெரிகிறது. ஒரு புள்ளியில் துவங்கிய பல பார்வையற்றோரின் வாழ்க்கை முற்றுப்பெறாமலேயே முடிந்துகொண்டிருக்கிறது.
***

(கட்டுரையாளர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பணியாற்றி வருகிறார். ‘www.slvinoth.blogspot.com’ என்ற தனது வலைப் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்).
தொடர்புக்கு: slvinoth91@gmail.com

2 கருத்துகள்:

  1. வினோத்,
    உண்மையில் இது ஒரு உணர்வுபூர்வமான உருவாக்கம்.
    என்னுடன் பயின்ற எனது தோழன் வரைந்த ஓவியம் இவ்வாறு பலரால் கண்டு ரசிக்கப்படுவதை எண்ணி எல்லையில்லா இன்பமுறுகிறேன்.
    பரவட்டும் உம் படைப்புகள் பாரெங்கும்
    ஒலிக்கட்டும் உம் எழுத்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நெகிழ்ச்சியான பதிவு! கல்லூரிகளில் பிரெயிலை அறிந்துகொள்ளும் நோக்கில் நன்பர்களானவர்கள் எனக்குமுண்டு.

    பதிலளிநீக்கு