காலை 7.45 மணி. பேருந்தில் ஆட்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தார்கள். “இதெல்லாம்
போட நேரம் இருக்குமானு தெரியல, இது கண்டக்டர் இல்லாத பஸ்”
வரிசையாக எல்லோரையும் இருக்கையமர்த்திக்கொண்டிருந்தவரின் பதிலைக் கேட்டு, வசதியாக
சாய்ந்திருந்த நானும் நண்பரும் சற்று நிமிர்ந்து அமர்ந்தோம். “இந்த
பஸ்ல செல்லாது. எங்ககிட்ட இருக்கிற மினிமம் டிக்கெட்டே ஐம்பது ரூபாய்தான்.”
போனவர் பஸ் கிளம்பியபோது மீண்டும் வந்து சொன்னது இது. “அதெல்லாம்
சொல்லக்கூடாது” இது நண்பரின் குரல். “சார் நீங்க ஃபுல் டிக்கெட்டே போடுங்க, ஆனா இந்த பஸ்ல பாஸ்
செல்லாதுன்னு எழுதிக்கொடுத்திடுங்க”, இது நான்.
முதலில் காலத்தை நேரத்தைக் காரணம் காட்டியவர், பிறகு நடத்துனரில்லாத
பேருந்தில் சலுகைக் கட்டணம் செல்லாது என்றே சொல்லிவிட்டார். எனினும், எனது
கோரிக்கையான பாஸ் செல்லாது என எழுதித்தருவது என்பதற்கு மட்டும் அவர் முகம்
கொடுக்கவே இல்லை. அவருக்கும் எங்களுக்குமிடையேயான வாக்குவாதம் வலுக்கத்
தொடங்கியது. “டிக்கெட் எடுக்கலைனா, பஸ்ஸை விட்டு இறங்குங்க; பப்லிக்கை
போகவிடுங்க” அவர் அப்படிச் சொன்னதுதான் தாமதம், பேருந்தில் இருந்த சக பயணிகள்
எங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். காலை நேரம், அவர்களுக்கு
அவர்களின் அவசரம். பறிபோவது எவனோ ஒரு மூனாவது மனிதனின் உரிமைதானே.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து முழுக்கட்டணம் செலுத்திப் பயணச்சீட்டு
வாங்கினேன். பேருந்தில் பயணித்தபடியே, புதுகை நகர ஊடக நண்பர்களின் ப்ரேக்கிங்
நியூஸ் வாட்ஸ் ஆப் குழுமத்தில் இந்தத் தகவலைப் புகைப்பட ஆதாரங்களோடு அனுப்பினேன்.
அடுத்த நாள் அது செய்தியானது. இப்போது நடத்துனரில்லாப் பேருந்திலும் சலுகைக் கட்டணத்தில்
பயணிக்க அனுமதிக்கிறார்கள்.
மறுக்கப்படும் உரிமைகளுக்காய் மல்லுக்கட்டும் வாய்ப்பு பெரும்பாலான
மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்க்கத்தான் செய்கிறது. சிலர் அவற்றை எதிர்கொள்ளாது
தவிர்த்துவிடுகிறார்கள். வெகுசிலரே, அவற்றை எதிர்கொண்டு உரிமை மீட்கிறார்கள். ஆனால்,
அத்தகைய செயல்களில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், ஏளனப் பேச்சுகள் ஏராளம். நாம்
நவீனகாலம் என்று சொல்கிற இன்றைக்கும் இதுதான் நிலை என்றால், ஒரு ஐம்பது
ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அடேயப்பா!
எவ்வளவு ஏளனங்களையும், இழிச்சொற்களையும் சுமந்திருப்பார்கள் நம்
முன்னவர்கள்.
பொதுவாகவே, இப்போது போராடுகிற உணர்வு மாற்றுத்திறனாளிகளிடையே, அதிலும்
குறிப்பாகப் பார்வையற்றோரிடையே மலுங்கிவிட்டதாகக் குறைபட்டுக்கொள்கிறோம். ஆனால்
போராட்டக்களங்களை சற்று கூர்ந்து நோக்கினால், இங்கு தேவையின் பொருட்டே
போராட்டத்தின் தீவிரம் தீர்மானிக்கப்படுகிறது. பணிக்குச் செல்லாத பார்வையற்ற
கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் வீரியமான போராட்டத்தைப் போல வேறு
எந்த பார்வையற்ற அமைப்பும் போராட்டங்களை முன்னெடுப்பதில்லை. இன்னும் தெளிவாகச்
சொன்னால், அதே சங்கத்தின் ஒருங்கிணைப்பில் வேலைவாய்ப்பிற்காகப் போராடும் பல
பார்வையற்றவர்கள் பணி கிடைத்தபின் தங்கள் ஜாகைகளையே வேறு சங்கத்திற்கு இடம்
மாற்றிக்கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும், தனிமனித போராட்டங்களை
அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்வையற்றவர்கள் அன்றாடம் நடத்தி, பொது உரிமை மீட்புப்
பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாற்பதாண்டுகால அநீதிக்கு முற்றுப்புள்ளி
சுந்தரேசன் கடந்த 2014-ஆம் ஆண்டில் வங்கித்துறைக்கு நடத்தப்பட்ட
ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். அதே ஆண்டு, பாண்டியன் கிராம வங்கி அறிவித்த
180 காலிப்பணியிடப் பட்டியலில் பார்வையற்றோருக்கான இரண்டு பணியிடங்களும் மறைக்கப்பட்டன.
பார்வையற்றவர் எவரும் தேர்ச்சி பெறவில்லை எனக் குறிப்பிட்டிருந்ததோடு, தகுதி
பெற்றிருந்த சுந்தரேசன் போன்ற பார்வையற்றோரைப் புறக்கணித்துவிட்டு, தொடர்புடைய
வங்கி நேர்முகத்தேர்வையும் நடத்தி முடித்துவிட்டது.
தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த சுந்தரேசன், அகில இந்திய
பார்வையற்றோர் சம்மேளனத்தை (AICFB) நாடினார். அந்த அமைப்பின் தென்னிந்தியப் பொதுச்செயலாளர் திருமதி.
முத்துச்செல்வி அவர்களின் முயற்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாண்டியன் கிராம
வங்கியை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. பார்வையற்றோருக்கான பணியிடங்களை
ஒதுக்கி, உடனடியாக சிறப்பு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியுடைய
பார்வையற்றோரைப் பணியமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால், கடந்த நாற்பது ஆண்டுகளாகப்
பார்வையற்றோருக்கான பணிவாய்ப்பை மறுத்துவந்த பல்லவன், பாண்டியன் போன்ற கிராம வங்கிகளின்
வழக்கம் ஒரு முடிவுக்கு வந்தது என்கிறார் சுந்தரேசன் பெருமையாக.
“இவனையெல்லாம்
ஏன் மேடை ஏத்துனீங்க?”
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், பணிவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான
இட ஒதுக்கீட்டை முறையாக அமல்ப்படுத்தக் கோரி, ஆளுநர் கையால் தான் வாங்கிய முனைவர்
பட்டத்தை அதே மேடையில் அவரிடமே திருப்பிக்கொடுத்தார் நெல்லை மாவட்டம்
சேரன்மாதேவியைச் சேர்ந்த பேராசிரியர் பெரியதுரை. உன்னதமான அவரின் இந்தத் தனிமனிதப்
புரட்சிக்குக் கைமாறாய் பார்வையற்றோர் சமூகம் அவரைக் கொண்டாடித் தீர்த்திருக்க
வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதையும் ஒரு செய்தியாகவே
கடந்ததுதான் சோகம். “இழனையெல்லாம்
ஏன் மேடை ஏத்துனீங்க” என்று அந்த மேடையிலேயே ஒரு முக்கிய அதிகாரியின் குரல் ஒலித்தது.
அனைவரும் பார்க்க, அப்படி ஒரு வசையைச் செவிமடுப்பதெல்லாம் எத்தனை வலிநிறைந்தது
என்பதை அனுபவித்தால் மட்டுமே விளங்கிக்கொள்ள இயலும்.
அதே பேராசிரியர் பெரியதுரைதான், பொது இடத்தில் தன்
உடல்க்குறைப்பாட்டைச் சுட்டி, தன்னை மனவேதனைக்குள்ளாக்கிய முன்னால் காவல் ஆய்வாளர்
சிதம்பரம் மீது, சேரன்மாதேவி காவல்நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016
பிரிவு 92-ன்கீழ் புகார் செய்து முதல்
தகவல் அறிக்கை பெற்றுள்ளார். இதுதான் புதிதாக இயற்றப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள்
உரிமைகள் சட்டம் 2016ஐ பயன்படுத்தி தமிழகத்தில் போடப்பட்டுள்ள முதல் முதல் தகவல்
அறிக்கையாகும்.
நீண்ட காலமாக நம்மவர்கள் எழுப்பி வந்த உரிமைக்குரல்களின் எதிரொலிப்பாய்,
நம்மை ஆள்பவர்களை நமக்கான சட்டங்களை இயற்றுவதில், கருணைத்தளத்திலிருந்து
உரிமைத்தளத்திற்கு நகர்த்தியிருக்கிறோம். ஆனாலும், இந்தச் சட்டத்தினை தமிழில்
மொழிபெயர்த்த முனைவர் கு. சன்முக வேலாயுதம் அவர்கள் சொல்வதைப்போல, எந்த சட்டமும்
உரிமைகளைச் சுட்டிக்காட்டுமே தவிர வழங்காது. மாறாக உரிமைகள் என்பவை எடுத்துக் கொள்ளப்பட
வேண்டியவை. எனவே புதிதாக வந்திருக்கும் சட்டம் ஏராளமான குறைபாடுகளைக்
கொண்டிருக்கலாம். ஆயினும், அதுதான் நம் உரிமைப்போரில் நாம் பயன்படுத்த வேண்டிய
ஆயுதம். எனவே ஆயுதம் பழகுவோம்.
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக