ராகரதம் (13): உள்ளம் திறந்து உரையாடுங்கள் - ப. சரவணமணிகண்டன்

  கணினிகள் கைக்கெட்டிய பிறகு உரையாடல்களும் இயந்திரமயமாகிவிட்டன என்றே தோன்றுகிறது. எங்கோ இருப்பவரிடம் சமூகவளைதளங்கள் மூலம் உரையாடுவதில் மனநிறைவுகொள்ளும் நாம், அருகாமையில் இருப்பவர்களிடமிருந்து விலகியே நிற்கிறோம். பக்கத்து வீட்டுக்காரர் யார், எங்கு வேலை பார்க்கிறார் என்பதை நாம் யோசிப்பதற்கே அவரைத் தேடிப் புதிதாக ஒரு நபர் வரவேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் சிறுநகரங்களில் கட்டப்பட்ட வாடகை வீடுகள் எளிமையானவையாகவும், ஒரு ஒழுங்குடனும் அமைந்திருந்தன. எல்லா வீடுகளும் சிறு இடைவெளிகளுடனேயே பிணைக்கப்பட்டிருந்தன. வீட்டுச் சுவர்கள் பல அந்தரங்கக் கதைகளை விழுங்கி வீங்கின. ஆனால், வாசற்படிகளோ வகைதொகையின்றி, அறை இரகசியங்களை அம்பலமேற்றிக்கொண்டிருந்தன. அப்போது தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்.

வீட்டு வேலைகளை முடித்துவிட்ட திருப்தியோடு, மாலை ஆறு மணிக்கெல்லாம் இல்லத்தரசிகள் ஒரு வீட்டின் வாசற்படியில் ஒன்றுகூடி, பல கதைகள் பேசி  உரையாடும் அந்தக் காட்சியெல்லாம் இப்போது காணக்கிடைப்பதில்லை. அந்தக் கூடுகைகளில் குடும்பம், சுகாதாரம், சமையல், திரைப்படம் என அனைத்தும் உரையாடு பொருள்களாக இருந்தன. குடும்ப நல நீதிமன்றங்களில் சிக்கிக்கொண்டு, வழக்கு, வாய்தாக்கள் என்று ஆயுளைக் கழித்துவிடும் ஆபத்திலிருந்து பல ஜோடிகள் காக்கப்பட்டதும் இதுபோன்ற வாயில்கூட்டங்களால்தான்.

இதுபோன்ற கூட்டு உரையாடள்களால் பெண்கள் தங்கள் வாழ்வியல் தொடர்பான பல தெளிவுகளைப் பெற்றும் பகிர்ந்தும் கொண்டார்கள். இதனால் தன் சௌகரியத்தை வெகுவாக இழந்துகொண்டிருந்த ஆண் வர்க்கமே, இந்த உரையாடல்களுக்குப்ப் புறணி அதாவது புறங்கூறுதல் என்ற பெயரைச் சூட்டியிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

இன்று வீட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்வது சுருங்கிவிட்டது. அன்றாட ஓட்டத்தில் திரும்பிப் பார்த்தல், பரிசீளித்தல் என்பதற்கெல்லாம் அவகாசம் தருவதில்லை நாம். அதுவும் குழந்தைகளோடான உரையாடல் என்பது குறுகிக்கொண்டே வருகிறது. அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு, நம்மை மட்டுமல்ல, நம் குழந்தைகளையும் சேர்த்தே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.

என் மகனுக்கு நான் தந்தையாக அல்ல, நல்ல தோழனாகவே இருக்க விரும்புகிறேன்என்று நவீன அப்பாக்கள் பேசிக்கொண்டிருப்பதைப் பரவலாகக் கேட்க முடிகிறது. ஆனால், இதே வாக்கியத்தை அத்தனை எளிதாகத் தன் மகளுக்காகச் சொல்ல பெரும்பாலான நவீனத் தந்தைகளுக்கு மனம் வருவதே இல்லை. அப்படியும் மீறிச் சொல்பவர்கள் அவளின் பூப்பெய்தலுக்குப் பிறகு, மெல்லத் தங்கள் தோழமைக் கரங்களை உள்ளிழுத்துக்கொண்டு, தகப்பன் என்கிற அதிகார மகுடம் தரித்துக்கொள்கிறார்கள். இன்றைய காலத்திலேயே இதுதான் நடைமுறை என்றால், ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத்தேவை இல்லை.

அத்தகைய இறுக்கமான காலகட்டத்தில்தான், தன் தந்தையின் முதல் காதல்குறித்து அவரிடமே உரையாட விரும்புகிற மகளையும், அந்த உரையாடலை மனமுவந்து முன்னெடுக்கிற தந்தையையும் கட்டமைத்து அதை வெற்றியும் பெறச் செய்தது தமிழ்சினிமாவின் புரட்சிகளில் ஒன்று. அந்த அறிவுள்ள அழகு மகளாக நதியாவும், அன்புள்ள அப்பாவாக சிவாஜியும் நடித்ததாலேயே இதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் போலும்.

படமும் பாடலும் அன்புள்ள அப்பா என்றே தொடங்கும். ஆனால், மகளாக சைலஜா, தந்தையாக SPB. அதுவரை காதல் ஜோடிகளாகப் பாடிவந்த அண்ணன் தங்கையை அப்பா மகளாகப் பாடவைத்துப் புதுமை செய்திருப்பார்கள் இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ். உரையாடலை எந்த இடத்திலும் தொந்தரவு செய்யாமல், பாடலுக்கான இசை வழங்கப்பட்டிருப்பது சிறப்பு.

ஒரு மலர்க்காட்சியில்தான், அந்த நந்தவனத்தைச் சந்தித்தேன்
என்கிற சொற்சூச்சுமம் தொடங்கி,
சீலையில் எனது முகம் துடைப்பாள்,
கொஞ்சம் சினுங்கினால் செல்ல அடிகொடுப்பாள்
என எதுகை மோனையுடன்  உரையாடளை உன்னதமாக்கியிருப்பார் கவிப்பேரரசு.

உங்கள் மணவாழ்வில் மலரும் நினைவுகள் உண்டா?”
உரிமையும், பாசமும் கலந்த கேள்வியை உச்சரிக்கையில், தன் குரல்நாணைக் கொஞ்சம் தடிக்கச் செய்து, அதிலும் மென்மையைக் கலந்திருக்கும் சைலஜா, பாக்கியராஜ் சொல்வதுபோல உண்மையில் குளிர்ச்சிக் குரல் அழகிதான்.

தாயாய் அவளைப் பார்த்ததுண்டு, - என்
தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு, - ஒரு
தேன் குடமாய் அவளைப் பார்த்ததுண்டு; - But,
அவள் உறங்கி மட்டும், நான் பார்த்ததில்லை
SPB உச்சரித்த அந்த நானைஎப்படி மொழிப்படுத்துவது? கேட்டுப் பாருங்கள், கலங்கடித்துவிடுவார் நம் பாட்டுக்கொரு தலைவன். (பாடலைக் கேட்க).

அப்பா! நீங்க அம்மாவப் பார்த்தது எப்போது? நியாபகம் உண்டா இப்போது?"
மகளின் கேள்வி எளிமையானது. ஆனால், அப்பாவின் பதிலில் வெறும் தகவல் மட்டுமே இருந்திருந்தால் அவரும் சராசரித் தகப்பனாகவே இருந்திருப்பார். அதிலும் அவளுக்கான ஒரு இரகசியத்தை உடைத்துச் சொல்வதாலேயே அவர் அன்புள்ள அப்பாவாக மாறிவிடுகிறார். அந்த இரகசியம் இதுதான்.
முதல் முத்தத்தையும், முதல் காதலையும் மறக்க முடியாது மகளே!”

எப்போதும் நமக்கான இரகசியங்கள் அழகானவை. அவை நம்மவர்களுக்குச் சொல்லப்படுகையில் இன்னும் அழகு பெறுகின்றன. அத்தகைய நம்மவர்களைக் கண்டுகொள்ள, உள்ளம் திறந்து உரையாடுங்கள். உலகம் உங்கள் வசமாகும்.
...ரதம் பயணிக்கும்.
***

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக