கவிதை: எனது காதல் - அ. கௌரி


சந்திரனும் என்னைப் பார்த்து சந்தோஷம் கொண்டது;
சூரியனும் உனது காதல் சுகமானது என்றது;
வானகமும் எனை அழைத்து வாழ்த்துகளைச் சொன்னது;
மேகமும் தன் மேனியைதான் மெத்தையாக்கித் தந்தது!

அலைகடலும் கைகள் நீட்டி ஆசிகளை அளித்தது;
ஆரவாரக் காற்றும் அங்கு ஆர்ப்பரித்து நின்றது!
அந்தரங்கம் கண்டு கொள்ள பந்து நிலா வந்தது;
அந்திசாயும் வேளை பார்த்து ஆசையோடு எழுந்தது!

வண்டினமும் தேன் சொரிந்து வாழ்த்துப் பாடல் படித்தது;
வண்ண வண்ண கிளிகள் கூட்டம் விருந்து உண்ண விரைந்தது; 
மயிலும் தனது மகிழ்ச்சி பொங்க நடனமாடிச் சென்றது;
மலர்கள் கூட்டம் மாறிமாறி மெல்லிதழை உதிர்த்தது!

கண்களில் நீர் வழிய சோகம் தோய்ந்த பெண்ணின் படம்நதியும் எனது நாணம் கண்டு நாணிக் கோனி வளைந்தது;
நாணல் எந்தன் நளினம் தன்னை இரவல் வாங்கிச் சென்றது!
பூமி தனது பசுமை தன்னில் புடவை நெய்து தந்தது;
புலரும் பொழுதில் பறவைக் கூட்டம் புதிய கீதம் படித்தது!

இயற்கையெல்லாம் நம்மை என்றும் இணைத்துப் பார்க்க நினைத்தது;
எனது காதல் உனக்கு மட்டும் புரியாமல் போனது!
***

(கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தின் கணக்கர்).
தொடர்புக்கு: gowri.sgg@gmail.com

2 கருத்துகள்: