இசையமைப்பாளர் தேவா |
பொழுதுபோக்கு ஊடகங்கள் நடத்தும் இசை தொடர்பான
போட்டி நிகழ்ச்சிகளில் சில பாடல்கள் மட்டும் பாடப்பட்டதே இல்லை. அவை திட்டமிட்டுப்
புறக்கணிக்கப்படுகின்றனவா அல்லது அந்தப் பாடல்கள் குறித்து பங்கேற்பாளர்கள்,
நிகழ்ச்சி நெறியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அறிந்திருக்கவில்லையா என்பது
புரியவில்லை. அதிலும், இசையமைப்பாளர் தேவா அவர்களின் துவக்க கால மெட்டுகள்
எவராலும் தெரிவு செய்யப்படுவதில்லை. ‘வைகாசி பொறந்தாச்சு’ – ‘நீலக்குயிலே,
நீலக்குயிலே’, ‘ஊர்மரியாதை’ – ‘கிச்சிலி சம்பா குத்தியெடுத்தேன்’, ‘பாஸ்மார்க்’ – ‘உன்
புன்னகை போதுமடி’, ‘புருஷ லட்சனம்’ – ‘காக்கைச் சிறகினிலே’, ‘மகாபிரபு’ – ‘சொல்லவா,
சொல்லவா’ இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதில் முரண்
என்னவெனில், நான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த வகைப் பாடல்கள்தான் குமுக்குகளும்,
ஜிலுப்புகளும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு எங்கள் ஊர்ப் பகுதிகளில் அனைத்து
தனியார்ப் பேருந்துகளிலும் ரசிக்கும்படியாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பஸ் பாஸ்
இருந்தாலும், இந்தப் பாடல்களைக் கேட்டபடி பயணிப்பது தனிசுகம் அன்றோ என்ற ரீதியில்
அவ்வப்போது தனியார் பேருந்துகளையும் தெரிவாகக் கொள்வது என் வழக்கம்.
அதிலும் அந்தப்
பாடல் ஒலிக்கும் எந்த இடத்திலும் என்னை அறியாமலேயே என் கால்கள் இரண்டு வினாடிகள்
நின்றுவிடுவது உண்டு; அது டீக்கடையானாலும் சரி, தெருமுக்கம் ஆனாலும் சரி! இசை
தேவாதான். பாடியவர்கள், SPB
மற்றும் சித்ரா. பாடலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை; ஆனால்,
அத்தனை எளிமையான உள்ளம் நிறைக்கும் வரிகள். பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் அந்தக்
குழுவினர்க் குரல்களே அத்தனை இதமாக இருக்கும். இடையில் தேவா புல்லாங்குழலையும்
சிந்தூரையும் கலந்து தந்திருக்கும் இடையிசை மெய்மறக்கச் செய்துவிடும்.
நாயகன்:
“போதை தெளிந்த பின்னும்
கால்வழுக்கிப்
பூவில் விழுந்து விட்டேன்”.
நாயகி:
“தூக்கி நிறுத்த வந்தேன்,
தொட்டவுடன் தோளில்
விழுந்துவிட்டேன்”.
பாடல் முழுக்கப்
பயில்வது இருவருக்குமிடையேயான ஓர் சுகமான பட்டிமன்றம். நாயகன், நாயகி என
இருவருக்குமே சொல்லத் துடிக்கிற மனசுதான். எப்படியேனும் அவள் தனக்குத்தானே
இட்டுக்கொண்டிருக்கிற வாய்ப்பூட்டைத் திறந்துவிடத் துடிக்கிறான் நாயகன். ஆனால்,
மென்று விழுங்குகிற மென்மைதான் பெண்மைக்கே உரித்தாயிற்றே! நாம் எங்கோ
கவனித்திருக்க, சுட்டுவிரலால் நம்மைத் தொடுவார்கள்; என்ன என்று கேட்டால், தூசு
என்று தூரம் நின்றுகொள்வார்கள். கண் அசந்த சில வினாடிகள் நம் தலைமுடி கோதும் அந்த மென்விரல்களைக்
கேள்வி மட்டும் கேட்டுவிட்டால், வெள்ளை முடி தெரிந்தது என்று தாங்கள் விலகியும்
நம்மை விலக்கியும் வைத்துவிடுவார்கள். நமக்கும் கொஞ்சம் அதிகம்தான்; அவர்கள்
தயங்கித் தயங்கி ஆரம்பிப்பதையே புரிந்துகொள்ளாமல், தடல்புடல் செய்ய முயற்சித்துத்
தோற்போம்.
அப்படித்தான் நாயகி,
‘அங்கம்
உனதங்கம், மிருதங்கம், அது தங்கம்’
என தொட்டதுதான் தாமதம். நாயகன்,
‘அள்ளித்
தழுவும் பள்ளிக் குயிலே,
முத்தங்களின் சந்தங்களில்
பண்பாடிடு தேனே’
என டாப் கியர்
போட்டுவிடுவார். அது சரி, நாயகன் சத்யராஜ் ஆயிற்றே! சத்யராஜ்-பானுப்பிரியா இணைந்து
நடித்த ‘புதுமனிதன்’ திரைப்படம் 1991-இல் வெளியாகி, இசைக்காக தேவாவிற்கு மாநில
அரசு விருதைப் பெற்றுத் தந்தது.
அது நாங்கள்
ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாத காலம்; அவள் என் அறைக்கு வந்திருந்தாள்.
மனதால் நெருங்கியும், உடலால் விலகியும் இருந்த அந்த நிமிடங்களுக்குப் பின்னணி
இசையாய் ஒலித்துக்கொண்டிருந்தன சென்னை ரேடியோ மிர்ச்சி ஒலிபரப்பிய நடுத்தர திரையிசைப்
பாடல்கள். அவளோடு ஏதேதோ பேசிக்கொண்டிருந்த நான் இந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கிய
மறுகணம் அமைதியாகி, பாடலை ரசிக்கத் தொடங்கிவிட்டேன். அவள் அப்போதுதான் அந்தப்
பாடலை முதல்முறையாகக் கேட்டாள் என்று நினைக்கிறேன்.
முதல் சரணம் வரை அமைதி. பிறகு இதுதான் வாய்ப்பு என்று
நினைத்து, இரண்டாம் சரணத்தின் தொடக்க வரியை SPB-யோடு சேர்ந்துகொண்டு வேண்டுமென்றே நானும் சத்தமாகப் பாடினேன்.
‘காதல்
பிறந்துவிட்டால், பெண்மையதைக் காட்டிக்கொடுப்பதில்லை’.
“ஐயையோ இப்படி பீடிகை போடுகிறானே” என்று ஒன்றும்
சொல்ல இயலாதவளாய் ஒரு நொடி உள்ளூரத் திகைத்தவளை,
‘பூக்கள்
திறந்துகொண்டால், வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை’
என்பதான அடுத்த வரி
தன்னைச் சரியாகக் காப்பாற்றிவிட்டது என்பதை அவள் உச்சுக்கொட்டி ரசித்ததால்
அறிந்துகொண்டேன். இன்று, எங்கள் திருமண உறவில் மேலும் தித்திப்பைக் கூட்டுகிற சில பாடல்களில்
இதுவும் முக்கிய இடம் வகிக்கிறது (பாடலைக் கேட்க). எல்லாப் புகழும் தேவாவுக்கே!
...ரதம் பயணிக்கும்
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
ராகரதம் இனிமை நானும் அந்த பாடலை கேட்கப்போகிறேன் நன்றி.
பதிலளிநீக்கு