நமது நாடு பலதரப்பட்ட மக்களின் கூடாரம். இங்கு
ஜனநாயக அடிப்படையில் அரசுகள் இயங்கி வருகின்றன. அத்தகு அரசியலையும், மக்களின் எண்ணங்களையும்
எடுத்து இயம்பும் கண்ணாடியாக திகழ்கிறது ஊடகங்கள்.
தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சி நமது நாகரிகத்தை மேலும் மேலும் மெருகேற்றி, வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
தகவல் தொழில்நுட்பம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று எண்ணிப் பெருமிதம்
கொள்ளும் இச்சூழ்நிலையில், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தன்பால்
ஈர்த்து வைத்திருக்கின்றன தொலைக்காட்சிகள்.
பலதரப்பட்ட சமூக
அவலங்களையும், சமூக அநீதிகளையும் தோலுரித்துக் காட்டவும், நல்ல, அரிய படைப்புகளை
பாராட்டும் கடமையும் இத்தகு ஊடகங்களுக்கு உள்ள நிலையில், சமீப காலங்களாக நிகழ்ச்சிகள் என்ற
பெயரில் தொலைக்காட்சிகள் அடித்து வரும் கூத்துகள் பலரை முகம் சுளிக்கவே வைக்கிறது.
இந்தியா
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் மக்களை ஒன்றுதிரட்டும் மாபெரும்
சக்தியாக அன்றைய செய்தி ஊடகங்கள் விளங்கின என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால்,
இக்காலச் சூழலில் ஊடகங்களின் பார்வை பொதுமக்களைவிட பிரபலங்கள்மீதே அதிகம்
பதிகின்றன.
மேலும்,
வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை அலுப்பு தட்டும் காதல்
கதைகளும். அடுத்தவரை எப்படி ஏமாற்றிப் பிழைப்பது, கள்ள உறவுகள், கொலை. கொள்ளை
போன்ற சமூகத்தை சீரழிக்கும் தகவல்களே அதிகம் பகிரப்படுகின்றன. இதுபோன்ற விடையங்கள்
பெரியவர்களைவிட குழந்தைகளின் எண்ண பொக்கினை அதிகம் மாற்றியமைத்து விடுகிறது.
குழந்தைகள்
பார்க்கும்
நிகழ்ச்சிகளில்கூட சண்டைக் காட்சிகள் அதிகம் காணப்படுவது அவர்கள் எளிதில்
உணர்ச்சிவசப்பட காரணமாக உள்ளது.
சில நிகழ்ச்சிகள்
குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது போல
அமைக்கப்படுகின்றன. இது மன அழுத்தத்தில்
இருக்கும் பாமரர்களின் மனக் குமுறல்களை, குடும்ப பிரச்சனைகளை உலகமே பார்க்கச்
செய்து, பின் வழிகாட்டல் என்ற பெயருடன் முடிவடைகின்றன. இது பிரச்சனைக்குறியவர்களுக்கு
அந்த நேரம் ஆறுதலாக அமைந்தாலும், பின் எழும் சமுதாய பிரச்சனைகள் ஏராளம். அதுவும்
பெண்கள் என்னும்போது, இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையே மாறுகிறது. நிகழ்ச்சியை
பார்த்து உதவுபவர்களைவிட கேலி பேசுபவர்களும், வசை பேசுபவர்களும் அதிகம்.
சில
நிகழ்ச்சிகள் ஒரு ஆணுக்காக பல பெண்கள் தங்களின்
நிறைகுறைகளை கூறுவது போல சித்தரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இதில் ஒரு பெண்
தன் கன்னித் தன்மையை இழந்தவள் என்று கூறுவது போலவும் உள்ளது. இதுபோன்ற உதாரணங்கள்
கணவனோடு தனிப்பட்ட வாழ்க்கையில் நுழையும் பெண்களுக்கு
எடுத்துக்காட்டாக அமையக் கூடும். தொலைக்காட்சிகளைப் பார்த்து, தானும் இதுபோல
கூறினால் தவறில்லை, செய்தால் தவறில்லை என்று நினைக்கும் பட்சத்தில், இருவரது
இல்வாழ்க்கை கேள்விக் குறியாக அமைய வாய்ப்புகள் அதிகம்.
அதையும் தாண்டி,
கிராமங்களுக்கு சென்று அங்கு வாழ்வது போல சித்தரிக்கப்படும் நிகழ்ச்சிகளில்
பெண்களின் ஆடை அலங்காரம் கிராமத்து பெண்கள்
குறித்த தவறான புரிதலை ஏற்படுத்துவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில்
வாழும் பெண்களின் வாழ்க்கை முறை வேறு.
நகரத்தில் ஒரு பெண் ஒன்பது மணிக்கு எழ முடியும்; ஆனால், கிராமத்து
பெண்கள் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்பவர்கள் அல்லர்.
வயல் வேலைகள்,
ஆடு மாடு மேய்த்தல், வீட்டு வேலைகள் செய்தல், உறவுகளை கவனித்தல் என ஆயிரம் ஆயிரம்
வேலைகளை கற்றுத் தரலாம். சமையல் செய்தல், கோலம்
போடுதல், இன்ன பிற கலைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி அப்பெண்களின் பெருமையை
உலகறியச் செய்யலாம். அதை விட்டுவிட்டு, விளையாட்டு என்ற பெயரில் மனிதர் மீது
உண்ணும் உணவை கட்டித் தொங்க விட்டு, அதை எதிர் பாலினத்தவர் சாப்பிடுவது போல
அமைத்திருப்பது சற்று சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தவே செய்கிறது.
பெண்கள் உடல்
முழுவதும் வண்ணச் சாயங்களை பூசிக்கொண்டு, பலகையின்மீது உரசும்போது ஆபாசமாக இருக்கிறது. மேலும், நிகழ்ச்சித்
தொகுப்பாளர்களின் வர்ணனைகள் முகத்தை சுளிக்கச் செய்கின்றன. மக்களின் மனதில் பதியும் இதுபோன்ற செயல்களுக்கு நாகரிகம் என்று பெயர்
சூட்டினாலும், பார்க்கும் பார்வையாளர்களின் வயது, நமது கலாச்சாரம், பண்பாடு இவைகளை
மனதில் நிறுத்தி நிகழ்ச்சிகளை உருவாக்கிட வேண்டும்.
குடும்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள நமது சமுதாயத்தை
பிரதிபலிக்கும் கடமையும், கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பும் ஊடகங்களுக்கு
உண்டு என்பதை நினைவில் கொண்டு செயல்படுதல் வேண்டும்; லாப நோக்கத்தை மட்டுமே
குறிக்கோளாகக் கொண்டு இயங்குமாயின், அது சிறந்த ஊடகமாக திகழ முடியாது.
மக்களின் ஆகச்சிறந்த
நண்பன் இந்த ஊடகங்கள். இதில் மாணவர்களுக்கான கல்விசார் நிகழ்ச்சிகள், கலை,
அறிவியல், வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை காண்பது அரிதாகி வருகிறது. வெறும் பணத்திற்காக மட்டுமே தயாரிக்கப்படும்
நிகழ்ச்சிகள் தரமற்றதாகவே இருக்கும்; இருப்பினும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில்
பங்குபெறுவோர் ஆரோக்கியமான சமுதாயம் அமைய பாடுபடுதல் வேண்டும்.
வளரும் குழந்தைகள்
என் தேசம், பண்பாடு மறந்து, கலாச்சாரம் துறந்து, மனித மிருகங்களாய் மாற ஊடகங்களும்
ஒரு சாளரமாய் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, சமுதாய பொறுப்போடு
இயங்குவது ஊடகங்களின் கடமை; அவை தவறான பாதையில் பயணிக்கும்போது அதனை
எடுத்துரைப்பது எங்கள் உரிமை!
***
(கட்டுரையாளர்
தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்).
தொடர்புக்கு:
sophiamalathi77@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக