இந்த ஆண்டின் கடந்துவிட்ட மார்ச் 10-ஆம் நாள்,
பார்வையற்றோர் வரலாற்றில் நிகழவிருக்கிற அடுத்தடுத்த ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கான
தொடக்கப்புள்ளியாக அமைந்தது. பதிவேட்டில் பக்கம் பக்கமாய் தீட்டி வைத்திருக்கிற
தங்கள் நோக்கங்களைப் பறைசாற்றிக்கொள்ள, ஆண்டில் ஒருநாளை முடிவுசெய்து, அரங்கு
தெரிந்து, அறிக்கை படித்து, ‘நன்றி மீண்டும் வருக அடுத்தாண்டு’ என்ற தொனியில்
கலைகிற பல அமைப்புகளின் ஆண்டுவிழாக்களுக்கு நடுவே, அங்கிங்கென சிதறிக் கிடக்கிற
கருத்து மணிகளை ஒரே கூடையில் அள்ளவும், அந்தக் கருத்துகளுக்குரியவர்களை ஒரே
குடைநிழலில் அவர்தம் விருப்பத்தோடே தள்ளவும் முடிந்திருக்கிறது, பார்வையற்ற
கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் இளைஞர் படைக்கு.
துடிப்பும் தொழில்நுட்பமும்
வாய்க்கப்பெற்ற இளைஞர் கூட்டம் பொறுப்பேற்றது முதலாகவே புதுமையாகவும், பயன்
விளையும் வகையிலும் ஏதேனும் செய்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தோடே இருந்தார்கள்.
அதன் ஒரு பதம்தான் கருப்பு நாளாக அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்
அனுசரிக்கப்பட்டது. அப்போதும் தங்கள் ஆதரவைத் தொலைபேசியிலும், வாட்ஸ்அப்பிலும்
பகிர்ந்துவிட்டுப் பம்மிக்கொண்ட என் போன்றவர்களை எப்படித் தங்கள் இடத்திற்கு
இழுத்து வருவது என்று யோசித்தார்களோ என்னவோ, கருத்தரங்கு என்பதைக்
கருத்துருவாக்கினார்கள்.
‘பார்வையற்றோரின்
இன்றைய வளர்ச்சியும் எதிர்கால சவால்களும்’ என்ற தலைப்பைச்
சிந்தித்து, அதனை கல்வி, இலக்கியம், சமூகம், பெண்கள், ஊடகம் என பல்வேறு தளங்களில்
விவாதிப்பதற்கான கருத்தரங்கு மேடையை உருவாக்கினர். பேசினோம், கலைந்தோம் என இனி
எதுவும் விரயமாகிவிடக்கூடாது என்று எண்ணி, அனைத்துத் தரப்புக் கருத்துகளை
அச்சிலேற்றவும், அதனை ஆண்டுவிழாவில் வெளியிட்டு ஒரு வரலாற்றைப் பதிவு செய்யவும்
முடிவு செய்தார்கள். அவர்களின் கனவு 35 கட்டுரைகளாய், 350-க்கும் மேற்பட்ட பக்கங்கள்
கொண்ட பார்வையற்றோர் குறித்த ஆவணமாய் விரிந்தது.
எங்கெங்கு
காணினும் தன்னார்வலர் தொண்டு
மாலையில் ஆண்டுவிழா, காலையில் கருத்தரங்கு என்ற
திட்டமிடலோடு சென்னை வைஷ்ணவா கல்லூரியில் தொடங்கியது நிகழ்ச்சி. கல்லூரி
நுழைவாயிலைத் தொடும் முன்னதாகவே எங்கிருந்தோ ஒரு குரல் “இந்தப்ப்பக்கம்” என்று அழைத்தது. வாசலில் எங்களைப் பற்றிய சில கரங்கள், பரிமாறி, நாங்கள்
கைகழுவி, தண்ணீர் அருந்தும்வரை எங்களோடே பயணித்தன. என்னையும் நண்பர் சுரேஷையும்
வழிநடத்திக் கூட்டிவந்த எங்கள் நண்பர் செல்வத்தையும் பார்வையற்றவர் என்றெண்ணி,
அவரையும் வழிகாட்டி அழைத்துச் சென்றதில் வெளிப்பட்டது தன்னார்வச் சேவையின் கண்ணி
எங்கும் அறுந்துவிடக்கூடாது என்கிற அந்தப் பெண்மணிகளின் சீரிய அக்கறை.
தேநீர்
கொடுப்பார்கள்; குடித்து முடித்து எங்கு வைக்கலாம் என்ற யோசனை எழுவதற்குள் அதை
வாங்கிக்கொள்ள எங்கிருந்தோ இன்னொரு கை நீளும். அவ்வப்போது ‘தண்ணீர் வேண்டுமா?’ என்று விசாரித்தது
தொடங்கி, அரங்கில் பார்வையற்றோர் எங்கும் எதற்கும் தடுமாறிவிடாமல் விரைந்துவந்து
நீண்டன உதவிக்கரங்கள். கருத்தரங்கில் பொதுச்சமூகம் குறித்த ஆதங்கங்கள் ஆவேசக்
கருத்துக்கனைகளாய் பாய்ந்துகொண்டிருக்க, எதையும் பொருட்படுத்தாது, அவையை
அமைதிப்படுத்துவதும், சிறிய டார்ச் விளக்குகளோடு அரங்கின் தூய்மையைக்
கண்காணித்தலுமாய் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்துக்கொண்டிருந்தார்கள்
பார்வையற்றோர் மீது பேரன்பும், பெரும் புரிதலும் கொண்ட சில பொதுச்சமூக
அங்கத்தினர். நிச்சயம் சென்னைக்கு வெளியே இது சாத்தியமில்லை!
வரலாறு
திரும்புகிறது
கருத்தரங்கு சற்று தாமதமாகத்தான் தொடங்கியது
என்றாலும், அதனைத் தொடக்கிவைத்த பேரா. மாதேஸ்வரன் முதல், வாழ்த்துரை வழங்கிய சங்க
முன்னோடிகளான ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் திரு. ராஜேந்திரன், திரு. பொன்முடி, பேரா.
உமாபதி என அனைவரின் பேச்சும் நோக்கம் சார்ந்த, கவனிக்கும்படியான உரைகளாய் அமைந்தன.
பார்வையற்றோர் குறித்த பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசினார் பேரா. மாதேஸ்வரன்;
சங்கம் தொடங்கப்பட்ட வரலாற்றைக் கொஞ்சம் தொட்டுக்காட்டினார் திரு. ராஜேந்திரன்; சங்கத்தின்
பல்வேறு சாதனைகளையும், பிரசவித்த அரசாணைகளையும் எடுத்துரைக்க அந்த மேடையில்
காலத்தின் சாட்சியாய் நின்றார் பேரா. உமாபதி. எம்.ஜி.ஆர். காலத்தில் சங்கம் நடத்திக்காட்டிய
மாபெரும் போராட்டம், அதன்பிறகு அரசிடமிருந்து பார்வையற்றவர்கள் படிப்படியாக பெற்ற
உரிமைகள் என அவர் ஒவ்வொன்றாய் விளக்கினார்.
சங்கம்
உருவானதில் முக்கியப் பங்காற்றிய சென்னைவாழ் பார்வையற்ற பட்டதாரிகளின் தந்தையும்,
பொதுவுடைமைத் தோழருமான மறைந்த திரு. கண்ணன் ஐயா அவர்கள் பற்றி திரு. பொன்முடி
அவர்கள் பேசப்பேச உணர்வெழுச்சிக் கூடமாய் மாறியது அரங்கு. இதுவரை சங்கம் கடந்துவந்த
பாதை குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும் தனது தம்பிகளுக்கு
கோடிட்டுக் காட்டினார் திரு. பொன்முடி. இளையோரின் ஆவணப்படுத்தல் முயற்சியை வரவேற்ற
அவர், “கணினிகள்
இல்லாத அந்தக் காலங்களிலும்கூட சங்கத்தின் நடவடிக்கைகள் தொகுக்கப்பட்டு ஆண்டு மலர்களாக
வெளியிடப்பட்டன; ஆனால், அவை அவ்வப்போது சென்னையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களில்
அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இப்போது வரலாறு மீண்டும்
திரும்புகிறது. உங்கள் கைகளுக்குத் தொழில்நுட்பம் வந்து சேர்ந்திருக்கிறது; அதனைப்
பயன்படுத்தி வரலாற்றைப் பதிப்பியுங்கள்” என்று வாழ்த்தினார்.
விவசாயி
மகன்
கருத்தரங்கு மூன்று அமர்வுகளாகப் பகுக்கப்பட்டு,
முதல் அமர்விற்கு பேரா. முருகேசன் தலைமை வகித்தார். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள்
மற்றும் பட்டதாரிகள் சங்கம் கடந்த 2014-இல் நடத்திய மிகப்பெரிய போராட்டம் குறித்த
தனது கட்டுரையின் உள்ளடக்கத்தை தான் சொன்னபடியே ஐந்தே நிமிடங்களில் சுருக்கி
உரைத்தார் பேரா. ஊ. மகேந்திரன். அந்த மாபெரும் போராட்ட நாட்களில் அரசு தங்கள்மீது
மேற்கொண்ட ஒடுக்குமுறை குறித்து தனக்கே உரிய ஆவேசத்துடன் அனைவரின் மனங்கொள்ளும்
வகையில் எடுத்துரைத்து அமர்ந்தார்.
பார்வையற்ற
மகளிரின் பொருளாதார நிலை குறித்து அந்தோனியம்மாள் தனது கட்டுரைச் சுருக்கத்தை
முன்வைத்தார். சங்கம் கடந்து வந்த பாதை குறித்து கட்டுரை தந்திருக்கும் பேரா.
உமாபதி அதன் சுருக்கத்தை அனைவருக்கும் எடுத்துரைத்தார். இந்த அமர்வில், ‘பார்வையற்றோரும்
விவசாயமும்’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்த கார்த்திக், தஞ்சை மாவட்டத்தைச்
சார்ந்த பழனி என்கிற பார்வையற்ற விவசாயி பற்றிச் சொன்னார். அவர் பல ஏக்கர்கள்
விவசாயம் செய்து, தனது பார்வையற்ற மகனையும் உயர்கல்வி பயில வைத்திருக்கிறார்
என்றபோது பார்வையாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்; அந்தப் பார்வையற்ற மகன்தான்
இதோ இந்த கார்த்திக் என்று அமர்வின் தலைவர் சொன்னபோது, நெகிழ்ந்துவிட்டது அரங்கு.
சாபமாக
நினைத்தவர்களின் சபைக்கு நான் தலைவி
இரண்டாம் அமர்வைத் தலைமை ஏற்று நடத்தினார்
பேரா. சிவராமன் அவர்கள். தலைமை உரையோடு, தனது கட்டுரையான ‘பார்வையற்றோர் கல்வியின்
இன்றைய நிலை’ என்ற தலைப்பை தனது மாணவர் மகேந்திரன் போலவே ஐந்தே நிமிடங்களில்
விளக்கிவிடுவதாகச் சொல்லித் தொடங்கினார். அவரின் உரை நிறைய ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக்
கொண்டிருந்தும், நீட்டி முழக்கப்பட்ட வரையறைகளால், அடுத்து பேசவிருந்தோரின்
நிமிடங்களையும் செரித்து முப்பது நிமிடங்களைத் தாண்டியது. இதனால் அந்த அமர்வின்
பிற கருத்தாளர்களில் ஒருவனான எனது நேரமும் சுருங்கிவிட்ட பதட்டத்தில், ‘பார்வையற்றோர்
கல்வியில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள்’ குறித்து நான்
விரைந்து பேச முற்பட்டேன். எனது விரைவு வீர ஆவேசமாய் உருவெடுத்துவிட்டதை நண்பர்கள்
மூலம் அறிந்து, தவறுக்கு வருந்தினேன்.
பார்வையற்றோர்
மீதான திரைப்பட வெளிச்சம் குறித்த தனது கட்டுரையின் சாரத்தை மிக எளிய நடையில்
விளக்கி அமர்ந்தார் ஆசிரியர் கா. செல்வம். திரு. பானுகோபன் அவர்கள் ‘இலக்கியமும்
பார்வையற்றோரும்’ என்ற தனது படைப்பின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்தார். ஊடகங்கள்
இன்றைய நிலையில் பார்வையற்றோரை எவ்வாறு கையாளுகின்றன என்பது பற்றிப் பிறர்
மனங்கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார் திரு. அரங்கராஜா.
மூன்றாம்
அமர்விற்குத் தலைமை ஏற்றவர் அலகாபாத் வங்கிக் கிளை மேலாளர் திருமதி.
முத்துச்செல்வி. முதல் அமர்விற்குத் தலைமை வகித்த திரு. முருகேசன், இந்த அமர்வில் ‘பார்வையற்றோரும்
குழந்தை வளர்ப்பும்’ என்ற தனது கட்டுரையின் முக்கியக் கூறுகளைத் தொகுத்துச்
சொன்னார். இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய இந்தியன்
வங்கி ஊழியர் திரு. பாண்டியராஜ் அவர்கள், வங்கிப் பணியில் பார்வையற்றோர்
எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மிக எளிமையாகச் சொல்லிச் சென்றார்.
கல்லூரிகள்
மற்றும் பணியிடங்களில் பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசினார்
செல்வி சுகன்யா. பார்வையற்றோரின் பொதுவான வாழ்முறை மற்றும் சிக்கல்கள் குறித்த
தனது கட்டுரை உள்ளடக்கத்தை விளக்கினார் திரு. வில்வநாதன். தன்னைச் சாபம் என்று
கருதிய தன் ஊர் மக்கள், இன்று கிராமத்துப் பொங்கல் விழாவிற்குத் தன்னைத் தலைமை
ஏற்க அழைத்தது குறித்து செல்வி ஐயம்மாள் பூரிக்க, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
தன் வாழ்வில் நடந்தேறிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்குக் காரணம் கல்வி
ஒன்றுதான் என மேடை அலங்காரம் எதுவுமின்றி அவர் சொன்னபோது, அரங்கில் இருந்த
அனைத்துப் பார்வையற்றோரும் அந்த உண்மையோடு தங்களையும் பொருத்திப்
பார்த்துக்கொண்டனர்.
இத்தனை சிறப்பாக
நடந்தேறிய கருத்தரங்கில் சிறுசிறு குறைகளும் இல்லாமல் இல்லை. துவக்கம் முதலாக இந்த
முயற்சியில் பங்கேற்று, அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்தறிந்தவர்கள்
அமர்வுகளுக்குத் தலைமை ஏற்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். இதுபோன்ற
கருத்துரையாடல்கள் காலத்தின் தேவை என்பதால், கருத்தாளர்களுக்கும்
பார்வையாளர்களுக்கும் இடையேயான உரையாடலை வலுப்படுத்தும் வகையில், விரைவாகத்
தொடங்கப்பட்டு, உரைகளுக்கும், கேள்வி நேரத்திற்கும் போதிய கால அவகாசம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயினும்,
பார்வையற்றோரிடையே குடிகொண்டிருந்த ஒருவித எழுச்சியின்மையை, அசமந்தத்தை அசைத்துப்
பார்த்திருக்கிற இந்த முயற்சியை நாம் உளமார வரவேற்கிறோம். இறுதியாக, நிகழ்ச்சியின்
பிரமாண்ட வெற்றிக்கு உழைத்த தன்னார்வலர்கள், வாசிப்பாளர்களுக்கும் விரல்மொழியர்
சார்பாக நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம். ஏனெனில், அவர்களால்தான் சாத்தியமானது, புரட்சிப்
பாசறையில் ஒரு நெகிழ்ச்சிக் கூடுகை.
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
நிறைகளை மட்டும் சொல்லி போலியாக இல்லாமல். இருந்த குறைகளையும் உண்மையாக அனுபவித்து சுட்டிக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றிகள். முதல் முறையாக நடத்திய இந்தக் கருத்தரங்கில் ஏற்பட்ட குறைகளுக்கு நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். எதிர்காலத்தில் நிச்சயம் அதனை திருத்திக் கொள்வோம். இந்த கட்டுரையின் தலைப்பு மிக அழகாகவும் எதார்த்தமாகவும் இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிறைகளை மட்டும் சொல்லி போலியாக இல்லாமல். இருந்த குறைகளையும் உண்மையாக அனுபவித்து சுட்டிக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றிகள். முதல் முறையாக நடத்திய இந்தக் கருத்தரங்கில் ஏற்பட்ட குறைகளுக்கு நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். எதிர்காலத்தில் நிச்சயம் அதனை திருத்திக் கொள்வோம். இந்த கட்டுரையின் தலைப்பு மிக அழகாகவும் எதார்த்தமாகவும் இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு