அதிவேக குஜராத் மாதிரி வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கருப்புப்பணம் ஒழிப்பு
உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியமைத்த பா.ஜ.க.-வின்
மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஐந்து ஆண்டு காலத்தை பூர்த்திசெய்து, மறுமுறையும்
வாய்ப்பு கேட்டு தேர்தலை சந்திக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுல் மிக முக்கியமான, இந்தியாவின்
மொத்த மக்கள் தொகையில் 2.1
விழுக்காடு குடிமக்களான ஊனமுற்றோருக்கு இந்த ஆட்சியும், கடந்த ஐந்து ஆண்டு காலமும்
எப்படி அமைந்திருந்தது என்பதை சுருக்கமாக அலசுவோம்.
ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் (Rights of Persons with
Disabilities Act – 2016) நிறைவேற்றம்
ஊனமுற்றோரின் உரிமைகளைப் பாதுகாத்து,
சமூகவியல் நோக்கில் சம பங்கேற்பையும், அதிகாரம் அளித்தலையும் நோக்கமாகக் கொண்டு ‘ஊனமுற்றோர்
உரிமைச் சட்டம்’ கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டே உருவாக்கப்பட்ட இந்தச் சட்டத்தின் வரைவு, பல்வேறு விவாதங்களுக்கும்
மாற்றங்களுக்கும் உள்ளானது. சட்ட முன்வரைவில் கூறப்பட்ட பல்வேறு அம்சங்கள், குறிப்பாக நியாயமான காரணம் இருப்பின் ஊனமுற்றோருக்கு எதிராக பாகுபாடு
காட்டுவது சரியே என்று பொருள்படும்படியான அம்சம், ஊனமுற்றோர்
அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களின் மிகக் கடுமையான எதிர்ப்பிற்குள்ளானது.
சட்ட வரைவின் மீது பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுள் சிலவற்றை ஏற்று, திருத்தப்பட்ட
வடிவில் இச்சட்டம் டிசம்பர் 16, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட வெகுசில உறுப்பினர்களே இது
தொடர்பான விவாதத்தில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஊனமுற்றோர் நலன் குறித்தோ,
உரிமைகள் குறித்தோ கொள்கைகள் அல்லது நிலைப்பாடுகள் இருக்கவில்லை என்பது விவாதங்களின்போது
தெள்ளத்தெளிவாகப் புலப்பட்டது. இச்சட்டம் 2017-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டு,
சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு விதிகளும் உருவாக்கப்பட்டன. மத்திய அரசைப்
பின்பற்றி, மாநில அரசுகளும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தினை தங்களது மாநிலங்களில்
அமலாக்குவதற்கான நடவடிக்கைகளை மிக சாவகாசமாக எடுத்து வருகின்றன!
மனநலப் பாதுகாப்புச் சட்டம் (Mental Health Care Act –
2017)
இந்தியாவில் மனநலம்
பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளையும், உரிமைகளையும் உறுதிப்படுத்தும்
பொருட்டு இச்சட்டம் மார்ச் 27, 2017 அன்று இந்திய நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1987-இல் கொண்டுவரப்பட்ட
இந்திய மனநலச் சட்டத்தை மாற்றி, மனநலம் பாதிப்புக்குள்ளானோர் தமக்கென முடிவுகளை
மேற்கொள்ளும் உரிமை, சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை, குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை போன்றவற்றை உறுதிப்படுத்தியது.
இச்சட்டம் சில முக்கியமான குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக, இந்தியாவில் மனநலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணிகளாக
தொடர்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள், சமூக சாதிய ஒடுக்குமுறைகள், மூடநம்பிக்கைகள்
போன்றவற்றை கட்டுப்படுத்துவது குறித்தோ, மனநலக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து
தடுப்பதற்கான முக்கியத்துவம் குறித்தோ இதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும்
மத்திய, மாநில, மாவட்ட அளவுகளில் மனநல
சிகிச்சை மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரின் வசிப்பிடம்,
சிகிச்சை முறை, நடத்தப்படும் விதம் போன்றவற்றை
அவர்களின் தெரிவுகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் முடிவுசெய்வது முதலிய அம்சங்கள்
இந்தியச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை!
அணுகத்தக்க இந்தியா (அ) அனைவருக்குமான இந்தியா திட்டம்
(Accessible India Campaign)
மோடி அரசு ஊனமுற்றோர்
நலனுக்கென்று தானாகவே உருவாக்கிய ஒரே திட்டம் இதுதான்! இத்திட்டத்தின்கீழ் அரசு இணையதளங்கள், திட்ட
ஆவணங்கள், புதிதாக உருவாக்கப்படும் ‘திறன் நகரங்கள்’ (Smart Cities) என அனைத்தும், அனைத்துவகை ஊனமுற்றோராலும் அணுகத்தக்க
வகையில் மாற்றியமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதற்கான திட்டங்கள் உருப்படியான
முறையில் வகுக்கப்படவில்லை என்பதோடு, ‘மேக் இன் இந்தியா’ திட்டம் போன்று இதுவும் வெறும் பெயரளவிலான விளம்பரத் திட்டமாகவே உள்ளது. இன்றளவிலும்
கூட இரயில் முன்பதிவுகளை மேற்கொள்ளும் IRCTC இணையதளத்தை திரைவாசிப்பான்கள்
பயன்படுத்தும் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் சீரமைக்கக் கோரிய வழக்கு மும்பை
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது! ஊனமுற்றோருக்கான இணைய சேவையை வழங்கும்
பொறுப்பும் கடமையும் கொண்ட அரசு,
‘அக்சசபில் இந்தியா’ என்ற திட்டத்தையும்
வகுத்துவிட்டு,
மும்பை உயர்நீதிமன்றத்தில்
இன்னும் காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறது!
புனித உடல் கொண்டோர் என்னும் பட்டம்
‘மான் கி பாத்’ (மனதின் குரல்)
என்ற தலைப்பில், இந்தியப் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலி மூலம் நாட்டு
மக்களுக்கு உரையாற்றி வந்தார். டிசம்பர் 22, 2015 அன்று அவ்வாறு அவர்
உரையாற்றியபோது, என்ன திடீர் வெளிச்சம் அவர் மனதுக்குள் பாய்ந்து தொலைத்ததோ, “இனி ஊனமுற்றோரை ஹிந்தியில் ‘விக்லாங்க்’ (உடல் ஊனமுற்றோர்) என்று அழைப்பதற்கு பதிலாக, ‘திவ்யாங்’ (புனித உடல் கொண்டோர்) என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்” என்று பேசினார்.
உடனே ஊனமுற்றோர் மேம்பாட்டுத் துறை
உள்ளிட்ட அரசு அமைச்சகங்களும், வலதுசாரி அமைப்புகளும் இந்தச் சொல்லைப்
பிடித்துக்கொண்டன. ஆனால் ஊனமுற்றோரின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்களின்
வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் எதுவும் செய்யாத மோடி அரசு, தம்மை ‘புனித உடல் கொண்ட தெய்வப்
பிறவிகள் போன்று பெயரிட்டு அழைப்பது முழு மோசடி’ என்று கூறி, ஊனமுற்றோர்
அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின்
பெரும் எதிர்ப்பையும் மீறி இச்சொல்லை மத்திய அரசின் அமைச்சகங்கள் பலவும்
பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்திய இரயில்வே அமைச்சகமும் ‘திவ்யாங்’ என்ற
சொல்லையே பயன்படுத்தி வருகிறது!
பண மதிப்பிழப்பும், சர்ச்சைக்குரிய புதிய
ரூபாய் நோட்டுகளும்
2016
நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிப்பு
வெளியிட்டது மோடி அரசு. இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் அடைந்த துன்பங்களை இங்கு
மீண்டும் விளக்கத் தேவையில்லை. வங்கி தொடர்பான சேவைகளை பெறுவதற்கு
பொதுவாகவே பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு உள்ளாகும் ஊனமுற்றோர், இந்த
நடவடிக்கையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். வரிசைகளில் காத்திருக்க இயலாதவர்களும்,
வங்கிச் சேவைகளைப் பற்றி அதிகம் அறிந்திராத ஊனமுற்றோர் பலரும் அன்றாட வாழ்வை
நகர்த்துவதற்கே திண்டாடும் நிலை உருவாகியது.
அரசுப் பணியில் இருக்கும் எனக்கே, கள்ளக்குறிச்சி ஆந்திர வங்கியின் கிளை
மேலாளர் கருணைகூர்ந்து மாலை ஐந்து மணிக்கு மேல் கொடுத்த ரொக்கத்தில்தான் அந்த
ஒன்றரை மாதகாலம் ஓடிற்று என்றால், வியாபாரத்திலும் பிற தொழில்களிலும்
ஈடுபட்டிருக்கும் ஊனமுற்றோர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று
புரிந்துகொள்ளலாம். கணுக்கால் வரை மட்டுமே திறந்திருந்த ஆந்திர வங்கியின்
கதவுக்குள் தவழ்ந்து சென்று, நானும் எனது நண்பரும் பணம் பெற்ற அனுபவம் மறக்க முடியாதது;
இதுபோன்று எத்தனை அனுபவங்கள் எத்தனை ஊனமுற்றோருக்கு ஏற்பட்டதோ தெரியாது!
தொடர்ந்து மோடி அரசு அறிமுகப்படுத்திய புதிய 500, 2000, 100, 50, 10 ரூபாய் தாள்கள் பார்வையற்றோர் வேறுபடுத்திக் கண்டறிய முடியாத அளவுக்கு
சிறிதும் அக்கறையின்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், பார்வையற்றோரின் தனிமனித
உரிமையும், பொருளாதாரச் சுதந்திரமும் அப்பட்டமான முறையில்
கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை எதிர்த்தும்,
அவற்றை திரும்பப் பெறக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்தல், புதிய தேர்தல் அறிக்கைகள்
இந்திய
அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, தேசிய
கட்சிகளுள் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை பார்வையற்றோரும்
படிக்க இயலாதவர்களும் கேட்கும் வகையில் ஒலி வடிவில் வெளியிட்டுள்ளது. மேலும், இக்கட்சியின் 2019
தேர்தலுக்கான வாக்குறுதிகளுள் ஊனமுற்றோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அம்சங்கள்
இடம்பெற்றுள்ளன என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும். காங்கிரஸ் கட்சியும்,
பா.ஜ.க.-வும் கூட ஊனமுற்றோர்
நலன்
குறித்த பெயரளவிலான
சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், டிஸ்லெக்ஸியா பாதிப்புக்கு
உள்ளானோர் குறித்து மோடி தெரிவித்த மிக அநாகரிகமான கருத்து சர்ச்சைக்குள்ளானது. ராகுல்
காந்தி, மோடியை
ஸ்கிர்சோஃபிணியா எனப்படும் மனச்சிதைவு நோய் கண்டவர் என்று விமர்சித்ததும் சர்ச்சைக்குள்ளானது. உதட்டளவிலான
ஊனமுற்றோர் குறித்த கரிசனத்தைத் தாண்டி, ஊனமுற்றோர் சம உரிமையும் உணர்வுகளும்
கொண்ட மனிதர்கள் என்ற புரிதல் வெகுசில அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்
தலைவர்களுக்கும் மட்டுமே இருப்பது கவலைக்குரியதாகும். நிலப் பிரபுத்துவச் சிந்தனைகள்
கோலோச்சும் வட இந்தியாவில், ஊனமுற்றோர் குறித்த புரிதல்களும், அவர்தம் உரிமைகள்
குறித்த கவனமும் அரசியல் கட்சிகளுக்கு ஏறத்தாழ இல்லையென்றே சொல்லிவிடலாம்.
இந்நிலையில், தேர்தலில்
பங்கேற்பவர்கள்
என்றும், தேர்தலுக்கான
குறிப்பிடத்தக்க வாக்காளர்கள் பிரிவு என்றும் தற்போதுதான் ஊனமுற்றோரை அரசியல்
கட்சிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி
நமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதும், முன்னெடுக்கப்பட்ட அமைப்புச்
செயல்பாடுகளை முறைப்படுத்தி நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதும் ஊனமுற்ற சமூகத்தின்
முன்னால் இருக்கும் சவால்கள்.
***
(கட்டுரையாளர்
கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின்
ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர். இவர் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன
உறுப்பினர்).
தொடர்புக்கு:
send2kmn@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக