சமூகம்: பெண்களே! எதை நோக்கியது உங்களின் பயணம்? - சோஃபியா சுரேஷ்


பாலியல் வன்புணர்வை குறிக்கும் குறிப்புப் படம்
  காலம் காலமாய் இருந்து வந்த பெண்களின் அடிமை நிலைதனை உடைத்தெறிந்து வீறுகொண்டு எழும் இன்றைய இளைய பெண் சமுதாயம் எதை நோக்கமாக கொண்டு, எங்கு, யாரோடு பயணித்து வருகிறது?  தன்னை பேண தெரியாத, தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாத கோழைகளாய் உங்களை மாற்றியது எது? அன்பு, நட்பு, காதல் என்ற போர்வைக்குள் நீங்கள் தேடுவது வெறும் காமத்தீயை என்பதை உணர்த்தியிருக்கிறது பொள்ளாச்சி கொடூரம்!

நாகரிகம், கலாச்சார மாற்றம் என்ற பெயரில் நீங்கள் கடைபிடித்தது என்ன? அசட்டு தைரியம், அராஜக போக்கு, பெற்றோரை உதாசினப்படுத்துவது; அதற்கான பலன் தான், வெறிபிடித்த நரிகளுக்கு பலி ஆன ஆடுகளாகிப்போனது. ஆண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அவசர அவசரமாய் அறிவை இழந்து செவிமடுத்து, உங்களை இழக்கத் துணியும் நீங்கள், சற்றே பெற்றோரின் உணர்வுகளுக்கும், கதறல்களுக்கும் செவி மடுக்க மறுப்பதன் விளைவே இது.

ஒரு பெண்ணாக நடந்ததைக் கண்டு ஆண்களை குற்றஞ்சாட்டி வசைபாடியிருக்க வேண்டிய நான், முதலில் கோபம் கொண்டது என் தோழிகள், என் சகோதரிகளான உங்கள் மீதுதான். அதற்காக நான் ஆண்களை ஆதரிப்பவள் அல்ல; அவர்கள் குற்றவாளிகள் என்றால் நீங்களும் குற்றம் செய்தவர்கள் தான். ஆண்களின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து வாழுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டதேயன்றி, ஆண்களின் அன்பெனும் மாய வலைக்குள் சிக்கி வீணாகுவது என்ன நியாயம்?

சுதந்திரமாக வாழ்கிறோம் என்ற பெயரில் நீங்க கண்டது என்ன? படித்த பெண்கள் இவ்வாறாக ஏமாந்து கிடப்பது இன்றைய இளைய சமுதாயத்தின் மாபெரும் தோல்வியே! உங்கள் பெற்றோராக, ஆசிரியராக, சமூக உறுப்பினராக, சக தோழியாக நாங்கள் வைத்த நம்பிக்கைக்கு புதைகுழி வெட்டத் தூண்டியது உங்களின் அசட்டு தைரியமே. கையில் அலைபேசிகளை வைத்துக் கொண்டு நீங்கள் அடிக்கும் கூத்து எங்களின் கருவறைகளை கசக்கி தான் போடுகிறது; இனி பெண் குழந்தைகளே வேண்டாம் என்ற எண்ணத்தை எங்களுள் விதைக்கத்தான் செய்கிறது! சமூக வலைதளங்களில் எவ்வாறு இருக்க வேண்டும், முகம் தெரியாதவரிடம் எப்படி பழக வேண்டும், நல்ல தொடுதல், தீய தொடுதல் என படம் போட்டு பாகம் குறித்தும் உங்கள் சிந்தனையில் எட்டாதது ஏன்?

காம வார்த்தைகள் நட்பில் வருமா? வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? முதலில்  அவர்களைப் புறக்கணிப்பது மட்டும்தானே. அதைவிடுத்து அத்தகு உறவுகளை நம்பி, உங்களது பெற்றோர்களுக்கு மறைத்து, உங்களது  அந்தரங்கங்களை பகிர்வது ஞானத்தின் வளர்ச்சியா; நாகரிகத்தின் புரட்சியா? வீட்டில் உள்ள உறவுகளுடன்கூட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், பழக வேண்டும்  என்று அறிவுறுத்தும் இந்தகாலச் சூழலில், முகம் தெரியாத எவரெவரையோ ஒரு சில தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு நம்பி, தனி இடங்களுக்கு சென்று பின் அலறுவதும், கதறுவதும் எதற்கு?

வீரப் பெண்மணிகள் என்று தோள் தட்டும் உங்களை கோழைகளாக்குவது அன்பென்னும் ஆயுதமா? ஹார்மோன்களின் சூட்சுமமா? என் தோழிகள் வீரப் பெண்கள் என்று புகழாரம் சூட்டும் வேளையில், உங்களின் நடவடிக்கைகள் எங்களை புதைகுழியில் தள்ளி புதைத்தே போடுகிறது. ஆண்களை நல்லவர்கள் என்றோ, அவர்கள் செய்தது தவறே அல்ல என்பதோ என் வாதம் இல்லை; ஆனால், உங்கள் அறிவின் நுண்துகள்கள் வேலை செய்யாமல் போனது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் ஆயிரம் பெண்களை நாம் அனுதினமும் பலதரப்பட்ட சமூக வலைதளங்களில் கண்டு, அதைப் பற்றி பேசி, போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, நீங்கள் இப்படி ஏமாந்து இருப்பது சற்று சலிப்பை தருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்கிறார்கள்; ஆம், பாதிப்பு என்றும் நம்மைப் போன்ற பெண்களுக்கு தான்! என்ன செய்வது? இயற்கையின் நியதி அது. ஆனால், இன்னல்களை சமாளித்து எதிர்த்து போராடும் சக்தியையும் இயற்கை நமக்கு தானே கொடுத்திருக்கிறது? முகநூலில் பயணிக்கும் நீங்கள், அலைபேசிகளில் புதைந்து கிடக்கும் நீங்கள், சற்று நிமிர்ந்து பாருங்கள்; உங்கள் தலைமீது விழுவது பூமாலையா அல்லது கழுகு போடும் பாம்பா என்று.

பெண்களே! முதலில் தெளிதல் வேண்டும். சின்னத்திரை தொடர்களும், வெள்ளித்திரையும் காட்டும் வன்முறைகளை, வன்புணர்ச்சிகளை கண்டு புரிதல் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நம்மை விழித்துக் கொள்ள செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் அவற்றுள் வெறும் காதலையும், காமத்தையும் பார்த்து, அதை நிஜவாழ்விலும் தேடுவது சிறந்தது ஆகுமா?

பெற்றோர்களே! பெண்களுக்கு மட்டும் கற்பை கற்பிதம் செய்யாதீர். ‘ஆணுக்கு கீழ் தான் பெண்’ என்ற கான்செப்ட்டை மாற்றுங்கள். அன்பு, அகிம்சை இவை இரண்டும் இன்றைய காலகட்டத்தில் நம்மை கொல்லும் ஆயுதம் என கற்பியுங்கள். தற்காப்பு தான் தேவையேயன்றி, நாணமும் மடமையும் தேவையில்லை. செல்லம் என்ற பெயரில் குழந்தைகளை சீரழிப்பதை விடுத்து சற்று அச்சப்படவும் பழக்கி விடுங்கள். குறிப்பிட்ட வயதிற்கு பின் தந்தையிடமும் தள்ளி நிற்பது சாலச் சிறந்தது. நட்பின் எல்லைகளையும், காதலின் பொல்லாங்குகளையும் கூட குழந்தைகளிடம் பேசுங்கள். அணைத்து வளர்ப்பது போலவே, கொஞ்சம் அடிக்கவும் செய்யலாம். தோல்விகளை பழக்குங்கள். இல்லை என்ற வார்த்தையை அறிமுகம் செய்யுங்கள்.

பாடத்திட்டத்தில் முடிந்துபோன கதைகளை நிறுத்திவிட்டு வீரத்தையும், எதார்த்தத்தையும், அனுபவங்களையும் கற்பிக்க வேண்டும். ஆண்கள் பெண்களை மதிக்க கற்றுத் தருதல் வேண்டும். அடிபட்ட பின் அழுவது பயன் ஒன்றும் தராது. அடிபடாமல் பயணிக்க, அவசரங்களை குறைக்க, ஆயுதங்களை கண்டறிய, அம்புகளை வென்றெடுக்க, ஹார்மோன்களை அளந்து பார்க்க, ஆசைகளை அணைபோட்டு தடுக்க சிந்தனைகளை சீர்செய்யுங்கள். வீட்டைத் தாண்டும் முன், சற்று பெற்றோரையும் சிந்தியுங்கள்.

உன் மனதை நேசிப்பவன் எவனும் உன் உடலை யாசிப்பது இல்லை. முகநூலில் தனிப்பட்ட குறுந்தகவல்களை புறக்கணியுங்கள். எவரும் நம் சுமையை சுமக்கப் போவதில்லை; நமக்கு மேலும் சுமையாகாமல் இருந்தால் போதும். அரைகுறை ஆடைகளுடன் உங்களது ஆபாச நடனங்களும், அங்க அசைவுகளும் உங்கள் நண்பர்களால் விரும்பப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் முட்டாள் தனம்.  அவை உங்களது தேடல் இன்னதென்று காட்டுமேயன்றி, உங்களை ரசிக்கத் தூண்டுவதில்லை. ‘நான் ஆபாசமாக உள்ளேன், என்னை பாருங்கள்’ என்று கூவி கூவி அழைத்துவிட்டு, பின் ‘பார்த்தான். பழகினோம். பாதிக்கப்பட்டு விட்டேன். பிரச்சனை எனக்கு மட்டும் தான்’ என்றால் என்ன நியாயம்? இது அனைத்து பெண்களுக்குமானது அல்ல; உள்ளவர்க்கு சுடும், இல்லாதவர்க்கு எச்சரிக்கை மணியாய் மாறும். ஆசை வார்த்தைகளை நம்பி எவருடனும் எங்கும் பயணிப்பதை விடுத்து, உங்கள் நட்பை பெற்றோரிடம் அறிமுகம் செய்யுங்கள். உங்களை மர்மமாய் வைத்துக்கொள்ளாமல் வாழ்க்கையை வாழ பழகுங்கள்.

வீரப் பெண்மணிகளது கதைகளை வாசியுங்கள்; அவர்களது வீர வாழ்க்கை, போர்த்திறம், தோல்வியை கையாண்ட விதம், அவர்கள் பட்ட பாடு, அடிமைத்தனம் என அனைத்தையும் சுவாசியுங்கள். வெறும் புத்தக புழுக்களாய் இருப்பதை விடுத்து, அரசியலைத் தெரிந்துகொள்ளுங்கள். வெளியுலகை அறிந்த எந்த பெண்ணும் எளிதில் ஏமாறுவதில்லை; ஏமாற்றப்பட்டு தெளிந்த பெண்மை என்றும் சோர்வதில்லை. கடந்துபோன கயவர்களை உதறி தள்ளிவிட்டு, வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து பயணியுங்கள். தற்கொலைகளை மறந்து, தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளுங்கள். பெண்களே! புதிய அவதாரமாய் புறப்படுவோம், வாருங்கள்!
***

(கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்).
தொடர்புக்கு: sophiamalathi77@gmail.com

4 கருத்துகள்:

  1. வீரம் செறிந்த இக்காலத்திற்கு தேவையான கட்டுரை. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப் புரட்சி.

    பதிலளிநீக்கு
  2. "‘நான் ஆபாசமாக உள்ளேன், என்னை பாருங்கள்’ என்று கூவி கூவி அழைத்துவிட்டு, பின் ‘பார்த்தான். பழகினோம். பாதிக்கப்பட்டு விட்டேன். பிரச்சனை எனக்கு மட்டும் தான்’ என்றால் என்ன நியாயம்?"
    I disagree with this view. This is an older generation article blaming the girls out of proportion. Media, society, the highly rigid family structure of the Kongu region, all have played a part in the Pollaachi incidents. This kind of essays which blame the girls in absolute terms are highly dangerous.

    பதிலளிநீக்கு
  3. பெண்ணே உன் பாதுகாப்பு ஒரு, கேள்விக் குறியாகிவிட்டது?- கருவறை முதல் கல்லறை வரை... ஜாக்கிரதை!

    பதிலளிநீக்கு
  4. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு மோசமான சதிச்செயல். இதில் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாய் சித்தரித்துவிட்டு, எல்லாம் பெண்ணே உன் நன்மைக்குத்தான் என்பதெல்லாம் பலப்பல ஆண்டுகளாகக் கேட்டுப் புளித்த வார்த்தைகள். பெண்களைக் கற்பு, குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற கற்பிதங்களால் சிறைப்படுத்தியிருப்போரைக் கேள்வி கேட்பதே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிச்சயம் நியாயம் செய்வதாய் அமையும்.

    பதிலளிநீக்கு