சிறப்புக் கட்டுரை: பார்வையற்றோர் வாசிப்புக் களமும், அருகிவரும் நேரடி வாசிப்பும் - பேரா. முனைவர் சே. திவாகர்


ஒரு பார்வையுள்ளவர் பார்வையற்றவருக்கு வாசிப்பாளராக செயல்படும் காட்சி
  பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உரிமை வழங்கப்பட்ட காலம் தொட்டு வாசிப்புக்களத்தில் அவர்களுக்கென்று சில புதிய வாசிப்பு பரிணாமங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பிரெயிலின் துணைகொண்டு நேரடியாக எழுதவும், படிக்கவும் பயிற்சி மேற்கொண்ட பார்வையற்றவர்கள் பாடப்புத்தகங்களையும், பைபிள் போன்ற சமய நூல்களையும்  தவிர வேறு எந்த வாசிப்பினையும் நேரடியாக அணுகவியலாத நிலையில், பார்வையுள்ளவர்களின் துணைகொண்டு செய்தித்தாள்களையும், இன்ன பிற புத்தகங்களையும் வாசிக்கலாயினர். பார்வையுள்ளவர்கள் நேரடியாக பார்வையற்றோருக்கு வாசித்துக் காட்டுதல், வாசித்த பாடங்கள் அல்லது புத்தகங்களை ஒலி நாடாவில் பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட ஒலிப்பேழைகளை ஓரிடத்தில் தொகுத்து வைத்து ஒலி நூலகம் அமைத்தல் என்ற ஆரம்பப் படிகளைக் கொண்ட பார்வையற்றோர் வாசிப்புக்களமானது, இன்றைய கணினி யுகத் தோன்றலால் விண்ணை முட்டும் இமயமென வளர்ந்திருக்கிறது. அதன் நன்மை, தீமைகளை ஆராய்கிறது இந்த அனுபவக் கட்டுரை.

திருமதி. அன்னம் நாராயணன் என்பவர் பார்வையற்றவர்களுக்கென முதன்முதலில் வாசிப்பாளர் சங்கத்தினைத் தோற்றுவித்தார். ‘ஒரு பார்வையற்றவருக்கு நீங்கள் செலவிடும் ஒருமணி நேரமானது, நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு சமம்’ என்ற அவருடைய செய்தித்தாள் விளம்பரம் பலரை இத்துறையில் கால்பதிக்கத் தூண்டியது. இன்று சென்னையில் பல்வேறு அமைப்புகள் பார்வையற்றோருக்கு புத்தகங்கள் வாசித்துக் காட்டுவதையும், ஒலிப்பதிவு செய்வதையும் சிறப்புடன் செய்து வருகின்றன.

இன்று கணினி வழியாக மின் புத்தகங்கள் வாசிப்பு, OCR எனப்படும் எழுத்துணரிகள் வழியாக புத்தகங்கள் வாசிப்பு முதலானவற்றின் ஊடாக பார்வையற்றோர் வாசிக்க முற்படுகின்றனர். ஒலிப்பதிவுக் களத்தை ஆக்கிரமித்திருந்த ஒலி நாடாவின் இடத்தை இன்று எண்ணிலக்க ஒலிப்பதிவுக் கருவிகள் (Digital Voice Recorders) பெற்றுவிட்டன. அதன் காரணமாக, ஒரே ஒரு ‘விரலி’ எனப்படும் பென் டிரைவ் (Pen Drive) இருந்தால் போதும்; நூறு புத்தகங்களைக் கூட அதில் உள்ளடக்கலாம். இதனால், நேரடியாக வாசிப்பாளர்களை அணுகி புத்தகங்களை வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது என்றாலும் வாசிப்பாளர்களின் துணைகொண்டு வாசிப்பதனை பலரும் விரும்பத்தான் செய்கிறார்கள்.

கல்லூரி மாணவர் விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் வாரந்தோறும் நடத்தப்படும் வாசிப்பு மையங்களுக்குச் சென்று தங்களுடைய கல்வி அறிவினைப் பெருக்கிக் கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை வள்ளுவர் கோட்டம், ‘பத்மா சேஷாத்ரி’ பள்ளியில் நடைபெறும் வாசிப்பு மையமும், திங்கட்கிழமைகளில் தர்ஷினிஎன்ற அமைப்பின் சார்பாக ‘யூத்’ விடுதியில் நடைபெறும் வாசிப்பு மையமும் மேற்கூறியவற்றிற்கு சிறந்த சான்றுகளாகும். இது போன்ற எண்ணற்ற வாசிப்பு மையங்கள் பார்வையற்ற மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிக் கொண்டிருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட வாசிப்பு மையங்களுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். இதனை புரிந்துகொண்டு, பல நேரங்களில் மாணவர்களின் பொருள் தேவைகளைக்கூட இதுபோன்ற வாசிப்பு மையங்கள் நிறைவேற்றுவதுண்டு! கல்வி மேம்பாட்டோடு பொருளாதாரம், உணவு முதலான தேவைகளையும் புரிந்துகொண்டு இவ்வமைப்புகள் செயலாற்றுவது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும்.

இதுமட்டுமின்றி, சில வாசிப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கே மாணவர்களை அழைத்து படித்துக் காட்டுவது, வீட்டுப் பாடங்கள் எழுதுவதற்கு உதவுவது, ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தரவுகள் திரட்டுவது முதலான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுள் சிலரும் தங்கள் கவனத்துக்கு வரும் மாணவர்களின் பொருளாதாரத் தேவைகளில் இயன்றவரை பங்கு கொள்கிறார்கள்!

இதுபோன்ற வாசிப்பு மையங்களுக்குச் சென்று படிக்க மாணவர்கள் அதிக நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. மேலும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே இந்த வாசிப்பு மையங்கள் இயங்கும்; இது வாசிப்பாளர்களின் வீட்டிற்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

இந்த வாசிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, கணினியின் ஊடாக வாசிக்கும் முறை. கணினியை இயக்கும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்; கணினியில் சரியான திரைநவிலி (Screen Reader) இருக்க வேண்டும். அவ்வளவுதான்!  வாசிப்பு, பொருள், காலம் முதலானவற்றை நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். பயணக் களைப்பும், அதற்கு நாம் செலவிடும் நேரமும் மிச்சமாகின்றது. புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டிய முறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை; கணினியில் எல்லாவற்றையும்  சேமித்துக் கொள்ளலாம். இப்படி எண்ணற்ற நல்ல விளைவுகள் கணினி கற்றலின் மூலம் விளைகின்றன.

ஆனால், நேரடி வாசிப்பிற்கும் கணினி வாசிப்பிற்கும் இடையே உள்ள சில வேறுபாடுகளையும் நாம் தெரிந்து தெளியவேண்டும். நேரடி வாசிப்பில் நாம் புதிய வாசிப்பு அனுபவங்களைப் பெறுகிறோம். வாசிப்பின் போது குரலின் ஏற்ற இரக்கங்களை நாம் கற்க முடிகிறது. நேரடி வாசிப்பின் மூலம் வாசிப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுகிறது. ஒரு புத்தகத்தினை வாசிக்கும் போது ஏற்படும் ஐயங்களை எளிதில் தீர்த்துக் கொள்ள முடிவதோடு மட்டுமின்றி, இன்ன பிற கூடுதல் செய்திகளையும் கூட அவர்களிடமிருந்து நாம் அறிந்துகொள்ள இயலும். நாம் சோர்வுறும் நேரங்களில் நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, நமக்கு தேறுதல் மொழிகள் பல கூறி நம்மை ஆற்றுப்படுத்துவதும் நமது வாசிப்பாளர்கள் தானே? மேலும், பல இடங்களுக்குச் சென்று நாம் படிப்பதன் மூலம், நமக்கு தனித்தியங்கும் ஆற்றல் வளர்கிறது; தன்னம்பிக்கை பெருகுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு வாசிப்பாளருக்கும் நம்மைப் பற்றிய புரிதல்கள் ஏற்படுவதன் மூலம், சமூகப் பிணைப்பும் உருவாகிறது.

வாசிப்பாளர்களின் துணையோடு நாம் எழுதும் ஆய்வுகள், கட்டுரைகள் அவர்களால் திருத்தப்படுவதோடு, நமது எழுத்துகளுக்கு வாசிப்பாளர்களே முதல் ரசிகர்களாகும் அற்புதமும் சிலவிடங்களில் நிகழ்வதுண்டு. கணினி வாசிப்பு, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது; திரைநவிலியின் குரல் மட்டுமே அங்கு பிரதான  இடத்தைப் பெறுகிறது. கணினித் தட்டச்சில் நாம் செய்யும் தவறுகள் திருத்தப்படுவதற்கு இடமிருப்பினும், அது மீள்வாசிப்பின் வாயிலாகவே சாத்தியப்படுகிறது.

இப்படி உணர்வியல், இயங்கியல் என்ற இருவேறு களங்களைக் கொண்ட பார்வையற்றோர் வாசிப்புக் களங்களுள், இயங்கியலுக்கே இன்று முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கணினியைக் கொண்டு வாசிக்கும் வழக்கம் இன்று பார்வையற்றவர்களிடையே பல்கிப் பெருகி இருக்கிறது; இது வரவேற்கத் தக்கதாயினும், உணர்வுகள் வளரவும் ஊக்கம் பெறுகவும் நேரடி வாசிப்பு மிகவும் இன்றியமையாதது.

பொதுவாக எழுத்துக்களில் ஏற்படும் தடுமாற்றங்களைப் போக்கிக் கொள்வதற்கு நேரடி வாசிப்பு மிகவும் துணை புரிகிறது. கற்றலும் கற்பித்தலும் வாசிப்பின் பயன் என்பர்; நேரடி வாசிப்பில் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சாத்தியப்படுகின்றது. 2500-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தில் இன்று 1500-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், வங்கிகளிலும், இன்ன பிற அலுவலகங்களிலும் பணியாற்றுவதோடு, வழக்கறிஞர்களாகவும், இரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை ஊழியர்களாகவும், ஆட்சித் துறை அலுவலர்களாகவும், இன்ன பிற துறைகளிலும் பணி வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது நேரடி வாசிப்பின் ஊடே விளைந்த பயன் எனின், அது மிகை அன்று!

காலம் நமது கையில் கணினியைச் சேர்த்திருக்கிறது; அது இப்போதைய தேவையும் கூட. ஆனால், உணர்வின் பிணைப்புகளை நாம் உடைக்காமல் இருப்பதே நமது குறிக்கோள்களையும், தன்னம்பிக்கையையும், தனித்தியங்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளத் துணைபுரியும். நற்கருத்தினைப் புகட்டுகின்ற நூல்களை வாசிப்பாளரின் துணைகொண்டு கற்பது நமது அறிவுத் தேடலுக்காக மட்டுமன்று, நமது  ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும்தான் என்பதை ஒவ்வொரு பார்வையற்றவரும் உணர வேண்டும்!
***

(கட்டுரையாளர் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: adiva24@gmail.com

1 கருத்து:

  1. வாசிப்பாளர்களின் வரளாற்றை பதிவுசெய்வதில் இக்கட்டுரை முக்கிய மயில்க்கல்.
    இக்கட்டுரையின் தலைப்பே ஒருவித பொருள் மயக்கத்தைத்தருகிறது. நேரடி வாசிப்பு என்பது தான் யாருடைய உதவியுமின்றி பிரெயிலில் வாசிப்பதையே குறிக்கும். கட்டுரையானது பிறரின் உதவியுடன் பார்வைமாற்றுத்திறனாலிகள் வாசிப்பது குறித்து பேசியிருக்கிறது. எனவே துவக்கத்திலேயே ஒரு பொருள் விளக்கத்தை தந்திருக்கலாம். கணினி மற்றும் வாசிப்பாளர் உதவியுடன் வாசிப்பதில் எழுத்துப்பிழைகள் வராது என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. பிறருடன் பழகுதல், புதிய தொடர்வுகளை உறுவாக்கிக்கொள்ளுதல், போன்றவை நம்மவர்களுக்கு புதிய நம்பிக்கையைக்கொடுக்குமென்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு