கொண்டாட்டம்: எங்கள் வீட்டு ஈஸ்டர் ஸ்பெஷல்:

X. செலின்மேரி 
graphic இயேசு உயிர்த்தெழுதலைக் குறிப்பிடும் படம்

கடந்த 21 4 19 அன்று, ஈஸ்டர் சிறப்பாக எல்லாக் கிறிஸ்தவ மக்களாலும் கொண்டாடப்பட்டது நீங்கள் அறிந்ததே. எங்கள் வீட்டில் ஈஸ்டர் ஸ்பெஷல் என்ன தெரியுமா? "மனர்ப்பிட்டு". எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? விளக்கம் இதோ.

ஒரு காலத்தில், விளையாட்டுப் பொருளாக இருந்த மணல், இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாறி விட்டது.  சிறு வயதில், நான் மணலில் விளையாடுவதைப் பொழுது போக்காக கொண்டிருந்தேன். கல்வியின் காரணமாக, வாழ்வின் பெரும் பகுதி விடுதியில் கழிந்து விடுவதால், விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டிற்கு வரும் வழக்கம் எனக்கு இருந்தது. 
அப்போது,உறவினர்களைச் சந்திப்பது, சிறுவர்களோடு விளையாடுவது, பதநீர், நுங்கு, பணங்காய், பனங்கிழங்கு என ஒவ்வொன்றாகக் கேட்டுச் சுவைப்பது, பனங்காய் வண்டிகளில் தெருக்களைச் சுற்றி வருவது, நண்பர்களுடன் கருவேல மரங்களில் தேன் எடுக்கச் செல்வது, குறிப்பாக மணலில் வீடு மற்றும் கோவில் கட்டுவது, குழிதோண்டி ஈர மணலில் பிட்டு செய்து விளையாடுவது எனப் பலவற்றை என் வழக்கமாகக்  கொண்டிருந்தேன். அவற்றை என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களாகவே நான் கருதுகிறேன்.

என் சிறுவயது நினைவுகளை  என் 4 வயதுக் குழந்தை ஆலியாவுக்கு இரவு நேரக் கதைகளாக உறங்கச் செல்லும் முன் சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறேன். அன்று, அவற்றில் ஒன்ரை  நிஜமாகவே நிகழ்த்திக் காட்டும் வாய்ப்புக் கிட்டியது.

ஆம்! இந்த ஆண்டுக்  கோடை விடுமுறைக்காக குறிப்பாக தேர்தலில் வாக்களிப்பதற்காக, இராமநாத புரத்திலுள்ள என் தாய் வீட்டிற்குஆலியாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.  இங்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் இருந்த போதிலும் மணலில் விளையாடுவது அவளுக்கு பிடித்திருப்பதுதான் மிகுந்த  ஆச்சரியத்தைத் தருகிறது. பிறந்ததிலிருந்தே நகரத்தில் வளரும் ஆலியா, கிராமத்துக்கு வருவதையும், இங்குள்ள குழந்தைகளோடு கொல கொலயா முந்திரிக்கா, கண்ணாமூச்சிமற்றும் மணலில் விளையாடும் விளையாட்டுக்களை விரும்பி விளையாடுவதையும், பேருந்துகள்  ஓடாத கிராமத்துச் சாலைகளை ரவுடி பேபி பாடலைப் பாடிக்கொண்டு உல்லாசமாகச் சுற்றி வருவதையும், கிராமிய வாசனையை ரசிக்கும் நான், கிராம மக்களோடு மக்களாக வியப்புடன் கண்டு களித்திருக்கிறேன்.

"உங்க  மாமா மகள் அனுஷ்யா கூட விளையாட வந்திருக்கிறாயா ஆலியா என்று கேட்கும் ஊர்க்கார உறவுகளுக்கு, இல்லை; நான் மணலில் விளையாட வந்திருக்கிறேன் என்று பதிலளிப்பாள் ஆலியா.  மேலும், "உங்க ஊர்ல மண்ணு இருக்கா ஆலியா?" என்போரிடம், "இல்லை; அதனால் தான் இங்க வந்து விளையாடிக்கிட்டு இருக்கேன்" என்ற மழலையின் பேச்சில் மயங்கிப் பேச்சுக் கொடுத்து, அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுவோர் பலர். சில சமயங்களில், அவளது மழலைப் பேச்சு பலரது பேசுபொருளாக மாறியும் விட்டது.

அனுஷியா வேறு யாரும் அல்ல. என் உடன் பிறந்த அண்ணன் மகள். இருவருக்கும் ஒரே வயது தான். அனுஷியா 6 மாதக் குழந்தையாக இருந்த போதே தாயை இறந்து விட்டதால், தன் பாட்டியிடம் வளர்கிறாள்; ஆலியா அனுசுயாவை  விட 3 மாதம் மூத்தவள், அவ்வளவுதான். சரி, விஷயத்துக்கு வந்துவிடுவோம்.


graphic மணல்வீடு கட்டி விளையாடும் இரு பெண் குழந்தைகள்


தினமும் மாலை வேளைகளில் வீட்டின் முன்புறம் குழிகளைத் தோண்டி இருவரும் விளையாடுவர். அம்மா இருவருக்கும் தனித்தனிக் குறிகளைத் தோண்டிக் கொடுத்து விளையாட வைப்பார். இருவரும் ஈஸ்டர் அன்று ஒரே குளிக்குச் சண்டை போட்டுக் கொண்டனர். உடனே என் பங்கைச் செலுத்தும் விதமாகவீட்டின் முற்றத்திற்கு அருகில் அதிக நிலச்சூடு இல்லாத மணற் பரப்பான பகுதியைத் தேடி அமர்ந்து கொண்டேன். அப்போது ஆலியா மிகுந்த ஆர்வத்துடன் "நீ என்ன செய்யப் போகிறாய் அம்மா?" என்று கேட்டாள். "ஒரு பிளாஸ்டிக் கரண்டி எடுத்து வா" என்று நான் சொல்ல, அவளும் கொஞ்சம் நீளமான கரண்டியைத் தேடிப் பிடித்து எடுத்து வந்தாள். மணலைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிவிட்டு குழி தோண்ட ஆரம்பித்தேன்.
அப்போது, "அம்மா, பிளாக் மண் எப்ப வரும்?" என்று கேட்டபடி, என்  செயல்களில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் ஆலியா.

சிறுவயதில் நான் விளையாடிய காலங்களில், என் மணிக்கட்டு அளவுக்குத் தோண்டும் போதே ஈர மணல் வந்து விடும். தற்போது, நிலத்தடி நீரின் அளவு குறைந்து விட்டதால் இர மணலுக்கே முழங்கை அளவுக்குத் தோண்ட வேண்டி இருக்கிறது. அப்போதெல்லாம் நீர் அதிகம் ஊறக்கூடிய கிணறுகளும், வெயில் காலத்திலும் வற்றாத ஊற்றுக்களும், மழை காலங்களில் நிரம்பி வழிகின்ற கன்மாய்களும்  அதிகம் இருந்தன. இப்போது தண்ணீர்த் தேவை மிகுந்து இருந்த போதும், தெருக் குழாய்களில் பயன்பாடு அதிகரித்துவிட்டதாலும், குறைந்த நீரை அளவோடு பயன்படுத்திப் பழகிவிட்டதாலும்  என் ஊர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் என்றெல்லாம் சொல்வதுமில்லை; அதிகமான நீர்த்தேவை ஏற்படும் சமயங்களில், காலிக் குடங்களுடன் நீண்டதூரம் பொடிநடையாகச் சென்று, நீர்  அதிகம் ஊறும் கிணறுகளை அடைண்து  நீர் எடுத்துவரத் தயங்குவதுமில்லை.

ஈர மணல் கையில் பட்டவுடன் அதை தேங்காய் சிரட்டைகளை எடுத்து வரச் சொல்லி நிரப்பி கொடுத்து "இதுதான் என் கதைகளில் வரும் பிட்டு" என்றபடி  அவளை தரையில் வைக்கச் சொன்னேன்.
அவளுக்கு அந்தப்  பிட்டின் வடிவம் மிகவும் பிடித்து விட்டது. அனுஷியாவும்  ஒரு பக்கம் குழி தோண்டிப் பிட்டுகளை வரிசையாக அமைக்க ஆரம்பித்து விட்டால். இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. 

எங்களுடைய பிட்டுகள் ஒரு வரிசையிலும் அனுஷியாவின் பிட்டுகள் மற்றொரு வரிசையிலும் அமைந்திருந்தன. எண்ணிக்கையில் எங்களுடையது அதிகமாக இருந்தது; உடனே ஆலியா "நாங்கதான் ஜெயிச்சோம்" என்று சொல்லிக்கொண்டு ஒரு பிட்டை அனுஷியோடு பகிர்ந்துகொண்டாள். இருவரும் மாற்றி மாற்றி பகிர்ந்ததோடு எனக்கும் பக்கத்து வீட்டுக் குட்டிக் குழந்தைகளுக்கும் பகிர்ந்தளித்தனர். அவர்களோடு விளையாடியதில்,   ஒன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை. நான்கரை மணிக்கு ஆரம்பித்த பிட்டு விளையாட்டு ஆறு மணி வரைத் தொடர்ந்தது.

இருளின் பரவல் அடுத்த விளையாட்டுக்கு அழைப்பு விடுக்கவே, இவ்விளையாட்டிற்கு விருப்பமில்லாமல் விடைகொடுக்க முயன்றனர். இருவரும் குழிகளை மூடும் வேலையில் இறங்கி விட்டனர். மூடியபோது மேலே இருந்த மணலை சிறிய டப்பாக்களில் நிரப்பி, "இதுதான் மணல் பிரியாணி. எல்லாருக்கும் தனித்தனி பார்சல். சாப்டுங்க" என்று ஆலியா குழந்தைகளைத் தேடித் தேடிப்வ் பகிரத் தொடங்கினாள். அனுஷிக்கும் பிடித்துவிட, இருவரின் சிரித்த முகத்தோடு விளையாட்டு முற்றுப் பெற்றது.

இதுபோன்ற பழமையைப் பிரதிபலிக்கும் வாழ்க்கைச் சம்பவங்கள் குழந்தைகளோடு பகிரப்படும்போது, பழமையின் மகத்துவம் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய அனுபவ அறிவாக அவர்களுக்குள் விதைக்கப்படுவதோடு, சாத்தியக் கூறுகள் அமையும் பட்சத்தில், கதைகளை நிஜமாக்கலாம் என்ற புதிய யுக்தியும் கற்பிக்கப் படுவதாகவே நான் உணர்கிறேன். மேலும், கிராம மண்ணின் அதிசயம் தெரியாத நவநாகரிக நகரவாசிகளை இப்பகிர்வு சிறிதேனும் சிந்திக்க வைத்திருக்கும் என நம்புகிறேன்.

எது எப்படி இருந்தாலும், அதிகாலையில் எழுந்து, மணலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து, மாலை வேளைகளில் குழந்தைகள் கலைத்து விளையாடுவதைக் கண்டு ரசிக்கும் கிராமத்துப் பெண்களின் பொறுமையும், தாராள குணமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே!
தொடர்புக்கு: celinmaryx@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக