ராகரதம்: (16) ஊரெல்லாம் உன் பாட்டுதான்:

ப. சரவணமணிகண்டன்

‘உன் பெயர் உச்சரிக்கும்,
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும், - இங்கு
நீ இல்லாது, வாழ்வில் ஏது, வேநீர் காலம்தான்.’

ஆம்! சில ஆண்டுகளாகவே வேநீர் காலமான ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் என்னளவில் சோகமாய் கடப்பதே வாடிக்கையாகிவிட்டது. நானே மறந்திருந்தாலும், ஏதோ ஒரு தளத்தில் யாரோ ஒரு ரசிகர் அந்தக் குரல்குறித்துத் தன் தீராத சோகத்தை  எழுதிக்கொண்டேதான் இருக்கிறார். அதனால், “நீ எங்கே? என் அன்பே” என்று அந்த சொக்கவைக்கும் சொர்ணக் குரலை நோக்கி நானும் குரல் உயர்த்த தலைபடுகிறேன்.

“அன்பே ஓடிவா! அன்பால் கூடவா!” என்கிற அந்தக் குளிர்ச்சிக்குரலில் கதகதப்பை உணர்ந்த ரசிகன், ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது என உருகத் தொடங்கிய தொன்னூறுகளின் காலம் அது. கொட்டுகிற அருவியில் மெட்டுக்கட்டும் குருவியாய் வந்து சேர்ந்த சொர்ணலதா, “குயிலே போ போ, இனி நான்தானே” என்று சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. ஜானகியின் இடத்தை சின்னக்குயில் சித்ரா கைப்பற்றியதுபோல, சித்ராவின் இடத்தைப் பிடித்து பெருவெற்றி பெற்றவர் சொர்ணலதா.

graphic சொர்ணலதா

“யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு” எனப் பாடியவர், பாடல்கள் ஒவ்வொன்றிலும் தன் தனித்துவத்தின் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்கத் தொடங்கினார். காதல், காமம், கிறக்கம், தாபம், தினவு, மிரட்சி என பாடலுக்குப் பாடல் அவர் தன் குரல் குழைத்து காற்றில் உலவவிட்ட அபினயங்கள் ஏராளம். ‘என்னுள்ளே, என்னுள்ளே,’என அவர் ஏக்கம் விதைத்தபோது, ‘காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு; இக்கனத்தைப் போலே இன்பம் எது சொல்லு’ எனக் கிறங்கியவர்களில் நானும் ஒருவன்.

‘இப்போது பாப்போய், என் பேச்சைக் கேட்போய், பின்னால என்னாவேலோ. ஏன்னா’ எனத் திமிரிய மாமியாய் ரசிகர்களைத் திணறடித்த அதே குரல்தான், ‘மாமன் நெனப்பில் சின்னத்தாயிதான், மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்’ என்று கரிசல்காட்டு மாமன்களுக்குத் தன்  உருகிய குரலால் ஒத்தடமும் தந்தது.

‘அழகர்மலக் காத்துவந்து தூது சொல்லாதோ’ என வெடலப்புள்ள இதழ் பிரித்த குளிர்காற்று பட்டு செல்கள் அத்தனையும் செவிவழி சில்லிட்டன. ‘நெஞ்சமே! பாட்டெழுது’ என்று அவர் குரல் நம்மிடம் கிசிகிசுத்துக்கொண்டே இருப்பதால், இந்தப் பிறவி முழுக்க ‘நீயின்றிநான் பாட வேறேது கீர்த்தனம்’ என்று கிறங்கிக்கொண்டே இருப்பதைத் தவிர நமக்கு வேறு வழி ஏது?

எத்தனை ராகங்கள் இருந்ததோ, அத்தனையிலும் பல ரசவாதங்களைத் தன் குரல்வழி குழைத்துத் தந்த சொர்ணலதாவை, அன்றைய ராஜா தொடங்கி, இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ் வரை ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வாவா!’ என அழைத்துக்கொண்டே இருந்தார்கள். நீதிக்கு தண்டனை திரைப்படத்தில் M.S. விஸ்வநாதன் இசையில் சின்னஞ்சிறு கிளியாக தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய சொர்ணலதா, மூன்று தலைமுறைகளைக் கடந்து, கடைசியாக பீமா திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ரங்கு ரங்கையா’ என்று கம்பீரமாய் இசை அபிநயம் செய்தார்.

SPB யோடு குதூகளமும், மனோவோடு கும்மாளமுமாய் அவர் இறங்கியடித்த இசை ஆட்டங்களில் எல்லாம்  ரசிகனின் மனப்பந்து என்னவோ அவரையே சுற்றிச் சுற்றி வந்தது. அவர் காலமானார் என்ற செய்தியைச் செவிமடுத்த மறுகனமே, ‘அத்தனையும் பொய்யாச்சே ராசா’ என்று அவர் குரல் எடுத்தே தேம்பி, திணறிப் பின் தேறினார்கள்  ரசிகர்கள்.

“இப்படிச் செய்துவிட்டீர்களே சொர்ணா?” என்று அவர் பிரிவின் ஆற்றாமைக்கு அழுது புரண்ட தன் ரசிகனுக்கு, ‘இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்’ என்று தன் பாடல் ஒன்றிலேயே பதிலும் வைத்திருந்தார் அவர். இறப்பின் பொருட்டு, அவர் நினைவுகூரப்படும்போதெல்லாம் தேம்பும் மனதும் திரளும் கண்ணீருமாய் நானும் அவருடைய ஒரு பாடல் வழியாகவே அவரோடு இப்படி உரையாடிக்கொண்டிருக்கிறேன்.

‘சென்றது கண் உறக்கம், - நெஞ்சில்
நின்றது உன் மயக்கம். – இங்கு
ஓய்வதேது, தேய்வதேது,
உந்தன் ஞாபகம்.
உன்னிடம் சொல்வதற்கு – எண்ணம்
ஒன்றல்ல நூறிருக்கு. – அதை
நீயும் கேட்க நானும் சொல்ல
ஏது வாசகம்.

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்,
ஊரெல்லாம் உன் பாட்டுதான்,
உள்ளத்தை மீட்டுது.
பாடலைக் கேட்க

ரதம் பயணிக்கும்.
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com
இந்தத் தொடரின் முந்தைய பகுதிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக