விளையாட்டு: துரோணரின் வாரிசுகள்

வெளையாட்டுப்பய
அனைவரின் வாழ்வையும் உயர்த்த முயலும் ஆசிரியர்கள் இவர்களை மட்டும் கைவிட்டது ஏன்இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இந்தியாவில் மட்டும்தான் விளையாட்டு வீரர்களின் வாழ்வை விளையாட்டாகப் பார்க்கிறார்கள். இங்கே விளையாட்டு வீரர்கள் தெருக்களைத் திடலாகப் பாவித்து விளையாடி முன்னேற நினைக்கின்றனர். அவர்கள் கோலியைப்போல்மெஸ்சியைப்போல்,உசைன்போல்டைப்போல், சிந்துவைப்போல்சானியா மிர்ஸாவைப்போல் நாங்களும் ஒருநாள் சாதிப்போம் என்ற கனவுகளைச்சுமந்து விளையாடுகின்றனர். முறையான வழிகாட்டுதல் இல்லாமலும், சரியான பயிற்சியாளர் இல்லாமலும் தங்கள் இலட்சியங்களைத்தொலைத்தவர்கள் இங்கே ஏராளம். விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியாளர்கள் மிகவும் அவசியம். அவர்களின் அனுபவத்தோடு வீரர்களின் ஆற்றலும் இணையும்போது வெற்றிக்கான வழியை விரைந்து கண்டடையமுடியும்.

 120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் சொற்பமானவர்களே ஒளிம்பிக்சில் விளையாடத்தகுதி பெறுகின்றனர். நாமோ ஒற்றைப்பதக்கமாவது இந்தியாவுக்குக் கிடைக்குமா என ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். இச்சூழலை நினைக்கும்போது புதுமைப்பித்தனின்,
 “ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!
என்ற வரிகள்தான் நினைவுக்கு வரும். நம்மிடம் வளங்களிருக்கின்றன; அதை முறைப்படுத்திப் பயன்படுத்துவதில்லை.
"எந்நேரமும் வெளையாண்டுக்கிட்டே இருந்தா உருப்புட்ட மாதிரிதான்" என எல்லா பெற்றோர்களும் உருப்போட்டுத் திட்டுவதுதான் நம் ஒலிம்பிக் கனவுகளை ஓரங்கட்டி விட்டது என்பது விஷயம் தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களின் வாதம்.

 விளையாட்டுக் கட்டமைப்பில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் 3000 குழந்தைகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்  என்ற விகிதமே உள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லைஅதைவிடக்கொடுமை பல பள்ளிகளில் மைதானங்களே இல்லை. அப்படி என்றால் விளையாட்டு உபகரணங்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. விளையாட்டுப் பாடவேளைகளைக் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். உடற்கல்வி ஆசிரியரின் கையில் கம்பைக்கொடுத்து மாணவர்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மீது, அதிக ஒடுக்குமுறைகளை ஆசிரியர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். அதையும் தாண்டி சிலர் மேலே வந்தால் விளையாட்டிற்குள் நிலவும் அரசியல் அவர்களை நெட்டி தள்ளிவிடுகிறது.

   அண்டை நாடான சீனாவின் வளர்ச்சி சாதாரணமாக வந்ததில்லை. பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொள்ளவேண்டும். அவர்கள் எதில் அதிக திறமையைக் காட்டுகிறார்களோ அவ்விளையாட்டிற்கு மேலும் பயிற்சி வழங்கப்படும். ஒரு ஊடக செய்தியில்  "இந்தியாவிலும் இத்திட்டம் உள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் உள்ளன" என்கிறது நமது அரசு. காரணம் கூறுவதில் நாம் கைதேர்ந்தவர்கள் அல்லவா?

இங்கே உலக அளவில் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் நகரத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் மேல்தட்டைச் சேர்ந்தவர்களாகவோ, சாதிய அடுக்கில் உயர்தட்டைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பர். இந்தக் குறுங்குழுவினர் விளையாட்டில் தங்கள் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். கீழ்நிலையிலிருந்து ஒருவர் உலகளவில் சாதித்துவிட்டால், இந்தியாவே அவரை தூக்கிவைத்துக் கொண்டாடும். ஆனால், இவர்கள் மட்டும் மனதிற்குள்ளே குமைவார்கள். வென்றவர் என்னைப்போல கஷ்டப்படுபவர்களை அரசு கைகொடுத்துத்தூக்கிவிட வேண்டுமென உரக்க சொல்வார் பேட்டிகளில். உரத்த குரலைவிட, அந்த குறுங்குழுவின் மனக்குமைவுதான் அரசின் காதுகளுக்கு முதலில் எட்டும். தாமதமாகவோ அல்லது குறைவாகவோ அரசுகள் உதவித்தொகையை அறிவிக்கும். அது தவிர விளையாட்டை மேம்படுத்த அரசு பல திட்டங்களைச்செயல்படுத்த உள்ளது என்ற அறிவிப்பும் வரும். வெற்றிக்கொண்டாட்டங்கள் முடிந்த உடன் நாமும் மறந்துவிடுவோம். அரசும் அமைதியாக இருந்துவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விளையாட்டு என்பது எட்டாக்கனி என்ற பிம்பம் மக்களிடம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு தொடர்பாக அரசுகளிடம் நேரடியாய் உதவிகள் கேட்டாலும் கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை காணும்போதுநீங்களெல்லாம் ஏன் விளையாட வருகிறீர்கள் என்று அரசுகள் ஏளனமாய் கேட்பதுபோல இருக்கிறது.  

அந்தக் குறுங்குழுவில் ஓரளவு ஜொலித்தவர்களும், ஓகோ என ஜொலித்தவர்களும் பின்னாளில் பயிற்சி மையங்களைத் தொடங்குகின்றனர். இவர்கள் பயிற்சி கொடுப்பதோடு, ஒவ்வொருவரும் பவர்சென்டர்களாக மாறி, வீரர்களின் வாழ்வோடு பகடையாடத் தொடங்குகின்றனர். இவர்களிலிருந்துதான் ஒருவர் சிறந்த பயிற்சியாளராக, அரசின் விருதுக்கு தெரிவுசெய்யப்படுகிறார்.

சிறந்த பயிற்சியாளருக்கு நம் நாட்டில் அளிக்கப்படும் உயரிய விருது துரோணாச்சாரியா. பெயர் பொருத்தம் அமோகம். இவர்களின் பயிற்சி மையங்களில் பாண்டவர்களும் கௌரவர்களுமே பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஏழை ஏகலைவன்களிடம் கட்டைவிரலைக் கேட்கவில்லை. கட்டுக் கட்டாய்  ரூபாயைக்கேட்கின்றனர். இதனால் தெருக்களுக்கே திரும்பிவிட்டார்கள், ஏழை ஏகலைவன்கள். 
தொடர்புக்கு: velayaadduppaya@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக