சமூகம்: எரி கிணறுகள்!


சோஃபியா 
தமிழகத்தைப் பல பிரச்சனைகள் ஆட்டி வைக்கும் சூழலில் அனைத்தையும் வென்று வீர வாகை சூடுவது நம் தமிழ் மண்ணின் பெருமை. அப்படி நம் வீரத்தையும்  விவேகத்தையும் வினாக்குறி ஆக்கியிருக்கிறது நெடுவாசல் பிரச்சனை. தமிழர் அனைவரும் புரிதல் கொண்டு பொங்கி எழுந்து போராட வேண்டியது இங்கு அவசியமாகிறது. ஆம். நெடுவாசல் என்றாலே நம் நினைவிற்கு வருவது பசுமையான வயல்வெளிகள்தான்.

இது புதுக்கோட்டையின் ஒரு பகுதி. வானம் பார்த்த பூமிதான் புதுக்கோட்டை. ஆனால் நெடுவாசல் இளைஞர்கள் தங்களின் தியாகத்தால் நெடுவாசலைப் பசுமை நிறைந்த பூமியாக்கி அழகுபார்த்தனர். அப்படியிருக்க மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு இன்று நெடுவாசல் பாலைநிலமாக்கப்படக் காத்திருக்கிறது.

காவிரி படுகையின்மீது தங்கள் வேட்டையை ஆரம்பித்த அரசு, அதற்கு மீத்தேன் எனப் பெயர் சூட்டியது. தமிழர் தம் போராட்டத்தினால் மீத்தேன் நிறுத்தப்பட்டுப் பின் ஆட்சி மாற்றத்தோடு பெயர்மாற்றம் கொண்டு இன்று ஹைட்ரோகார்பன் திட்டம் என அம்பலத்தில் அரங்கேறியுள்ளது.

எதையும் எதிர்த்துக் கேட்கும் எமக்குப் பெயர் தீவிரவாதி என்றால், ஆம்! தீவிரமாய் வாதம் செய்து எம்மை, எம் சந்ததியினரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. சரி என்ன இந்த ஹைட்ரோ கார்பன்? நீர்மக் கரிமம் என்பது இதன் அர்த்தம். பூமிக்கு அடியில் கிடக்கும் அனைத்துவகை எரிபொருளின் ஆதாரம். இதை ஆழ்துளை இட்டு, கிணறுகள் அமைத்து, எடுத்து வினியோகம் செய்வது திட்டம். ஆனால் ஆழ்துளையிலிருந்து எடுக்கப்படும் நீர்மக் கரிமம் இருந்த இடத்தில் நிலத்தடிநீர் வறண்டுபோகும் அதேசமையம் காலியாக உள்ள இடத்தை கடல்நீர் ஆக்கிரமித்துப் பின் விவசாயம் அற்றுப்போகும்.
  
graphic திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்கள்
இத்திட்டத்தின் விளைவுகளை, உண்மைகளை உணர்ந்த மக்கள், வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கினர். ஆனால் இதுவரை இத்திட்டம் கைவிடப்படவில்லை என்பதே வருந்தத்தக்கது. அதோடு அரசுக்கு நம் மீதான அக்கறையை இது பிரதிபளிக்கிறது.

தஞ்சை, திருவாவூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி எனக் காவிரித்தாயின் மடியைச் சுரண்டி நமது உணவுக்கோப்பை, நெற்களஞ்சியத்தை உடைக்கும் திட்டம் இது. நீர் ஆதாரம் சரியாகக் கிடைக்கும்பட்சத்தில் 60% உணவை வழங்கிப் பெருமிதம் கொள்ளும் தஞ்சை அதைச் சுற்றியுள்ள பகுதிகள். நீர் இல்லாமல் காவிரி பொய்த்துப் போனாலும் 35%  உணவை வழங்கிடும். அப்படியிருக்க விவசாயத்தை அழித்து எதை உண்போம்
நீரை இழந்து எதை அருந்தக் காத்திருக்கிறது நமது அரசுகள்? நீர்மக் கரிமத்தையா? அல்லது தமிழக மக்களின் குருதியையா

கல்வி, மருத்துவம் போன்ற மனிதனின் அடிப்படைத் தேவைகளைத் தனியாரிடம் கொடுத்துவிடும் அரசுகள் இத்திட்டத்தையும் தனியார் கார்ப்பரேட் கம்பனி வசம் கொடுத்திருக்கிறது. மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுத்து லாபம் இல்லை என்று கூறும் சூழலில் நீர்மக் கரிமத் திட்டம் தனியார் வசம் தந்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சரி இத்திட்டம் செயல்படத் துவங்கினால் அதன் விளைவுகள் என்ன

graphic வெடித்துக் கிளம்பும் கிணறுகள்
 துர்க்மிஸ்தான் எரிவாயு வளத்தில் உலகிலேயே ஆறாவது இடத்தை வகிக்கும் வறுமை நாடு.  கரக்கூவம் என்னும் கருப்பு பாலைவனம்தான் மீத்தேன் வாயு அதிகம் கிடைக்கும் இடம்.  சோவியத் ஒன்றியத்தில் ஒரு நாடு. சோவியத் அரசு தர்பாரா கிராமத்தில் மீத்தேன் ஆழ்துளைக் கிணறுகள் தோன்றின. அதில் ஒரு கிணற்றில் ஏற்பட்ட சிறு விபத்தால் 1971 முதல்  அந்தக் கிணறு இன்றளவும் எரிந்துகொண்டே இருக்கிறது. 228 அடி சுற்றளவு கொண்ட இக்கிணறானது  98 அடி ஆழத்தில் எரிந்துவருகிறது. இதை  அணைக்க முயன்றால் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மீத்தேன் வாயுவால் பாலைவனமாக மாற்றப்படும் என்பதுதான் உண்மை. 

ஆப்ரிக்கா கண்டத்தின் மனித வளமும் இயற்கை வளமும் கொண்ட வறுமையின்  நாடு நைஜீரியா. 1950 களில் செல் நிறுவனம் எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் நைஜீரியா டெல்டா பகுதிகளில்  அதிகம் இருப்பதைக் கண்டறிந்து ஆழ்துளைகள் இடத் துவங்கின.  இதன் விளைவுகளை உணர்ந்த  அக்கோடி இன மக்கள்  அகிம்சை வழியில் போராடத் துவங்கினர். இந்த போராட்டம் இயக்கமாக மாறியது.

பெண்களைக் கற்பழித்தும், ஆண்களை அடித்தும், குழந்தைகளைக் காவு வாங்கியும், மக்களைச் சுட்டு கொன்றும், சூறையாடியும் போராட்டத்தை ஒடுக்கியது நைஜீரியா ராணுவம். ராணுவம் ஷெல் நிறுவனத்தின் அடிமையாய் மாறியது. பணம் பாதாளம்வரை பாய்ந்து பின் 60 சுத்திகரிப்பு ஆலைகள் 700 எண்ணெய்க் கிணறுகள் தோன்றி ஒரு நாளைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் எடுத்துவருகிறது. 

கிணறு மற்றும் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்பட்ட வெடி விபத்துகளினால் பல ஏக்கர் விவசாயநிலம் தரிசாய் மாறியது. நன்னீர் நிலைகள் மீத்தேன்  கழிவுகள் கலந்த கசடாய் மாறியது. மக்கள் நோய்வாய்பட்டு வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது. 

இயற்கை வளங்களின் உச்சகட்ட நாடு இன்று பாலைவனமாக மாறிவருகிறது. அப்படியிருக்க தமிழ்நாடு இந்த சூழலுக்குத் தள்ளப்படும் என்ற முன்யோசனை இன்றி சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்து எந்தவிதக் கண்காணிப்பும் இன்றி தஞ்சையைப் பலியிட நினைத்துவிட்டது. 

ஆம் தோழர்களே!  இது நாம் ஒன்றுசேர வேண்டிய நேரம். சாதிகள், மதம், இனம் என நம்மைப் பிரிக்கும் சக்திகளைத் துறந்து வாடிவாசல் செல்லும்வரை வீடு வாசல் செல்லமாட்டோம் என்று களம்கண்டு வெற்றிவாகை சூடியதைப்போல் ஒன்றுசேருவோம். நம் பூமியை, நம் வருங்காலச் சந்ததியினரை காக்க கரம் கோர்ப்போம். புதிய உலகை படைப்போம்.

வரப்பு உயர, நீர் உயரும்;
நீர் உயர, நெல் உயரும்;
நெல் உயர, குடி உயரும்;
குடி உயர, மன்னன் உயருவான். என்பதை உணர்ந்து நடப்பது அரசின் கடமை. 
       தொடர்புக்கு sophiamalathi77@gmail.com    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக