சிந்தனை: செல்வத்தைத் தேய்க்கும் படை



graphic கண்ணீர் சுரப்பி
 பல முக்கியச் செயல்பாடுகளின் விளைவாக/வடிகாலாக நம் உடலிலுள்ள நீர்மங்கள் அமைந்துவிடுகின்றன. உணவின் மீதான ஆசையை வெளிக்காட்டும் உமிழ்நீர், களைப்பையும், பதற்றத்தையும் அறிவிக்கும் வேர்வை என்று இவற்றைப் பட்டியல் போடலாம். இத்தகைய நீர்மங்களில் மனிதனை உறையச் செய்வது கண்ணீர் மட்டுமே. வருத்தம், கோபம், மகிழ்ச்சி என நம் ஆழ்மன உணர்வுகளை நாம் மறைத்தாலும் வெளிப்படுத்தும் ஆற்றல் கண்ணீருக்கு உண்டு.

அறிவியல் கண்ணீரை மூன்றாக வகைப்படுத்துகிறது. முதலாவது, அடிப்படைக் கண்ணீர். இது கண்களை ஈரமாக வைத்திருக்கும்; வெளிக் கிருமிகள் அண்டாமல் இருப்பதற்கும், கண்களை உரசலின்றி திறந்து மூடவும் இது உதவுகிறது. இரண்டாவது, எதிர்வினைக் கண்ணீர். தூசு கண்களில் விழும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும், காரமான உணவை உட்கொள்ளும்போதும் உருவாகும் கண்ணீர் இது. மூன்றாவதுதான் உணர்ச்சிக் கண்ணீர். நம் வருத்தம், கோபம், மகிழ்ச்சி முதலிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும்.

தமிழில் நீலிக் கண்ணீர்என்ற சொல்லாட்சி உண்டு. தன் கணவனால் கொல்லப்பட்ட நீலி என்ற பெண் மீண்டும் கணவனோடு வாழவேண்டும் என ஊர்ப் பெரியவர்கள் முன் பேயாய் வந்து அழுகிறாள். ஊரவர் வற்புறுத்தலால் அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் கணவன் அன்றிரவே கொல்லப்படுகிறான்; நீலியும் காணாமல் போய்விடுகிறாள். இதுதான் இச்சொல்லின் வரலாற்றுக் காரணமான நாட்டுப்புறக் கதை. தற்போது போலிக்கண்ணீர் என்ற பொருளிலேயே இச்சொல் பயன்படுத்தப் பட்டாலும் நீலியின் கண்ணீர் நியாயமானதுதான்.

graphic செயற்கைக் கண்ணீர்ச் சுரப்பிகள்
 போலிக் கண்ணீர் சாத்தியமானதுதானா என தெரியவில்லை. திரைப்படங்களில் கிளிசரின் துணைகொண்டு அழலாம். ஆனாலும், ‘சோகக் காட்சிகளில் எங்கள் பழைய சோகங்களை நினைத்துக்கொல்வோம்என்று பல பிரபலங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஒரு படி மேல் போய், சோகக் காட்சிகளுக்கான எதார்த்த நடிப்பிற்காக பல நடிகைகள் பிரபல இயக்குநர்களிடமும், நடிகர்களிடமும் வாங்கிய அறைகளைப் பெருமையாகச் சொல்வதும் உண்டு.

தொலைக்காட்சிக் கண்ணீர்தான் விசித்திரமானது. எதார்த்த நிகழ்ச்சிகளின் (reality shows) வணிகத்தில் கண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. ஆடல், பாடல், சமயல் என எல்லாப் போட்டித்தொடர்களிலும் குறைந்தபட்சம் வாரம் ஒரு கண்ணீர் நிகழ்வு இருந்தே ஆகவேண்டும். பங்கேற்பாளர் மட்டுமின்றி, அவர்களின் உறவினர்கள், நடுவர்கள், தொகுப்பாளர், பார்வையாளர்கள் என அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர். இது முறையாகத் திட்டமிட்டுத் தூண்டப்பட்டு வீட்டில் பார்த்துக்கொண்டிருப்போரும் கண்ணீர் மழை பொழிகின்றனர். இதைவிடச் சிறப்பானது பிரபலங்களின் (celebrities) கண்ணீர். அவர்கள் அழுதுவிட்டால் தொலைக்காட்சிக்கு வருமானமும் TRP-யும் எகிறுகிறது. இதைப் போலிக் கண்ணீர் என்று முழுமையாக ஒதுக்கிவிடமுடியாது.

மற்றவர்களின் கடந்தகால நிகழ்வுக்காய் அல்லது மற்றவர்களின் வெளியேற்றத்திற்காய் ( elimination) கலங்கும் மென்மனம் படைத்தவர்களா நாம்? அப்படியானால், இலங்கைத் தமிழர் பேரழிவு, ஸ்டெர்லைட் கொலைகள், குஜராத் கலவரம் போன்ற நிகழ்வுகள் குறித்த நம் நிலை என்ன? அப்போதெல்லாம் நாம் அழுதிருக்கிறோமா? செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்து அழுபவர்கள் என்று நாம் எத்தனை பேரைச் சொல்லமுடியும்? பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகத் தொடர்களையும், போட்டிகளையும் பார்த்து அழுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே! ஏன்? ஒருவேளை பிறர் மீதான இரக்கத்தை வெளிப்படுத்த கண்ணீர்தான் இறுதித் தீர்வு என கருதி, அடுத்த வேலைக்கு ஆயத்தமாகிவிடுகிறோமா?

அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீரன்றே
  செல்வத்தைத் தேய்க்கும் படைஎன்கிறார் வள்ளுவர். ஆனால் இங்கு கண்ணீர் செல்வத்தை மட்டுமல்ல; செல்வாக்கையும் வளர்த்துவிடுகிறது.

களம் காணவேண்டிய சிக்கல்களில் நம் உடனடி வடிகாலான கண்ணீரை உதிர்ப்பதோடு நில்லாமல், நீண்டகாலத் தீர்வுக்கான சிந்தனையையும் வளர்க்கவேண்டும். கண்ணீரை உரமாகக் கொண்ட சிந்தனைதான் செல்வத்தையும், கொடுமைகளையும் தேய்க்கும் படையாக அமையும்.
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக