ரவிக்குமார்:
நான் சென்னையில் வசிக்கிறேன். தாய், தந்தை, இரண்டு அண்ணன்கள், தம்பி என கலகலப்பான குடும்பம்
என்னுடையது. கணினிப் பொறியியல் பட்டப்படிப்பு
முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.
கேள்வி:
தங்களுக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?
பதில்:
கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாசேஷாத்ரி பாலபவனில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான
வாசிப்பாளர் மையம் ஒன்று இயங்கி வருகிறது. 2013 ஆம் ஆண்டு என் நண்பர்தான் அதை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஓய்வு
நேரங்களில் அவர்களுக்குப் புத்தகங்களைப் படித்துக் காட்டுவதற்காக நானும் என்
நண்பரும் அவ்வப்போது சென்றுவந்தோம். இவ்வாறுதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுடன்
எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது பலரும் தன்னார்வமாக
இச்சமூகத்திற்கு உதவினர். அதனால் உந்தப்பட்டு நாமும் இச்சமூகத்திற்கு ஏதேனும்
ஒன்றை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாசிப்பு மையங்களுக்கு
தொடர்ச்சியாக செல்லத்தொடங்கினேன். அப்போது செல்வமணி என்பவர் கல்கியின் ‘தியாகபூமி’ நாவலை வாசித்துக்காட்டச் சொன்னார் நான்
வாசிப்பதைப் பார்த்துவிட்டு, “மிகவும் சிறப்பாக வாசிக்கிறீர்கள்!
எனது முனைவர் பட்ட ஆய்விற்கான நூல்களைப் பதிவு செய்துதர இயலுமா?” எனக் கேட்டார். அதனால் அவரது முனைவர் பட்ட நூல்களை பதிவுசெய்து
கொடுத்தேன். இக்காலகட்டத்தில் பார்வையற்றோர் சிலரோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது.
பிறகு செய்திகள்,
கதைகள் போன்றவற்றைப் பதிவுசெய்து தரவா எனக்
கேட்டபோது, 'வள்ளுவன் பார்வை' என்ற ஒரு மின்மடல் குழுமம் இருக்கிறது; அதில் இதுபோன்ற செய்திகளை பார்வை மாற்றுத்திறனாளிகளே பகிர்கிறார்கள்
எனச் சொல்லி எனக்கு பாண்டியராஜன் சார் அறிமுகப்படுத்தினார். அதில் இணைந்தபிறகு
இன்னும் பலரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
கே: பார்வை
மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு இணைய நூலகத்தைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம்
உங்களுக்கு எப்படித் தோன்றியது?
ப: வள்ளுவன்
பார்வை மின்மடல் குழுமத்தில் இணைந்தபிறகு அதன் செயல்பாடுகளைக் கண்டு மிகவும் வியந்தேன்.
இத்தனை அறிவுச்சேகரமும் ஆவணப்படுத்தப்படாமல் போகிறதே என்ற ஆதங்கத்தைப்
பாண்டியராஜன் சாரிடம் பகிர்ந்துகொண்டேன். எனவே இதுவரை ஒலி மற்றும் மின் வடிவில்
உருவாக்கப்பட்டுள்ள நூல்கள், அவை கிடைக்குமிடங்கள் போன்றவற்றை
இணையத்தில் தொகுத்து வெளியிடலாம் என முடிவுசெய்தோம். தங்களிடம் உள்ள நூல்கள்
குறித்த விவரங்களை தரலாம் என்ற மின்னஞ்சலைக் குழுவில் அனுப்பினோம். பெரியளவில் யாரும் விவரங்களைத் தர முன்வரவில்லை. அதற்கு
முக்கியமான காரணம் அவர்களுக்கு அவற்றை எவ்வாறு தருவது போன்ற விவரங்கள்
தெரியாமல்கூட இருக்கலாம்.
தொடக்கத்திலிருந்து
எனது பயன்பாட்டிற்காக தினசரிகளில் வரும் தொடர்களை மின்னூலாக உருவாக்கி
வைத்திருந்தேன். எனவே வள்ளுவன் பார்வை குழுமத்தின் நிறுவனர் வெங்கடேசனிடம்
அந்நூல்களை இங்கே பகிரலாமா என அனுமதி கேட்டபோது, தாராளமாகப் பகிரலாம் என்றார். தொடக்கத்தில் மாதம் ஒரு நூல் என்ற விகிதத்தில்
பகிரத் தொடங்கினேன். பிறகு மாதம் 10 நூல் என்ற அளவிற்கு அதன் வளர்ச்சி
இருந்தது. அதிலும் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு மாதம் கடந்த பிறகு முதல் மாதத்தின்
நூல்களை யாரேனும் கேட்பார்கள். அதற்கு ஒரு மாதத்திற்கு முந்தய மின்னஞ்சலை தேடி
எடுக்க வேண்டும். அதனால் பெரும்பாலும் யாரும் மறுமொழி இடமாட்டார்கள். நான்
பகிர்ந்ததால் அவர்களுக்கு உடனடியாக என்னால் நூல்களை மீண்டும் பகிர முடிந்தது.
அதுபோலவே புதிதாய் இணைந்தவர்களுக்கும் இதுவரைப் பகிரப்பட்ட நூல்கள் பற்றி எதுவும்
தெரியாது. இதுபோன்ற சிக்கலைப் போக்க இணைய நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என
முடிவுசெய்தேன். அதற்காக ஒரு வலைப்பூவை 2017 ஜூனில் உருவாக்கினேன். அவ்வலைப்பூ பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு
உகந்ததாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அமேசானில் அணுகல் தன்மைப் பரிசோதகராக
இருந்த அப்சரணிடம் அனுப்பினேன். தலைப்புகள் கொடுத்தல் போன்ற ஆலோசனைகளை அவர் எனக்கு
வழங்கினார். அதன்படியே வலைப்பூவை வடிவமைத்து 2017 அப்துல்கலாம் நினைவு நாளன்று வாசிப்போம் நூலகம் பயன்பாட்டிற்கு
வந்தது.
கே:
இந்நூலகத்திற்கு வாசிப்போம் எனப் பெயர் வைப்பதற்குக் காரணம் ஏதேனும் இருக்கிறதா?
ப: எஸ்.
ராமகிருஷ்ணன் ‘எனது இந்தியா’ தொடரை எழுதும் பொழுது ‘வாசிப்போம்
வாருங்கள்’ என்ற தலைப்பில் தான் படித்த நூல்களை
மேற்கோள் காட்டுவார். அந்த வாசகத்தின்
தாக்கத்தால் இணைய முகவரிக்கு வாசிப்போம் என்றும், இணைய முதன்மைக் குறிப்பாக ‘வாசிப்போம்
வாருங்கள்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
கே: பார்வை
மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்கெனவே சில நூலகங்கள் இயங்கிவருகின்றன. அவற்றிலிருந்து
வாசிப்போம் எந்த வகையில் வேறுபடுகிறது?
ப: வள்ளுவன்
பார்வை குழுமத்தில் இருந்தபோது ஏதேனும் ஒரு நூலைக் கேட்டால் புக்ஷேரில் இருக்கிறது
எனச் சொல்வார்கள். அவ்வாறு தான் அந்நூலகம் எனக்கு அறிமுகம். புக் ஷேர் நூலகத்தில்
கணக்கு உள்ள ஒரு நண்பரை அழைத்து, அவருடன் அமர்ந்து அந்நூலகத்தில் உள்ள
நூல்களைப் பார்வையிட்டேன். அங்கே லட்சக்கணக்கான நூல்கள் இருந்தாலும் தமிழ் நூல்கள் மிகவும் சொற்பமாகவே இருந்தன. Project
Madurai, freetamilebooks போன்ற தளங்களில் காப்புரிமைச்
சிக்கலற்ற நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களே இடம்பெற்றிருக்கின்றன. இந்த இடத்தில்தான்
வாசிப்போம் வேறுபடுகிறது. காப்புரிமையில் விலக்கிருப்பதால் புதிய நூல்கள்
உருவாக்கப்படுகின்றன. மின்னூலுக்கென பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் ஒலி
நூல்களுக்கென்று தளங்கள் இல்லை. எனவே மின் நூலும் ஒலி நூலும் ஒருங்கே
கிடைக்குமிடமாக வாசிப்போம் நூலகம் திகழ்கிறது என்ற வாசகம் இருந்தபோதிலும் இன்னும்
சிறு பயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் பயனாளர்கள்மூலம் மட்டுமே
இந்நூலகத்தை அறிந்துகொண்டால் சிறப்பாக
இருக்குமென நினைக்கிறேன். மேலும் கூகுள் தேடுபொறியில் நூலகம் தொடர்பான எந்தப்
பக்கத்தையும் அணுக இயலாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
கே: நம்மிடம்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஒரே நூலையே மீண்டும் மீண்டும் பார்வை
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு வடிவமைப்பது. அதிலிருந்து வேறுபட நீங்கள் எத்தகைய
வழியைக் கையாளுகிறீர்கள்?
ப: இணையத்
தேடல்கள் வழியாகத்தான் தரவுகளைத் தொகுத்து சரிபார்க்கிறேன். Project
Madurai, freetamilebooks போன்ற தளங்களில் மின்னூல்கள்
கிடைக்கின்றன. ஆனால் அங்குள்ள நூல்களையே பல தளங்கள் மீண்டும்
பதிவேற்றிவைத்துள்ளனர். ஒலி நூல்களைப் பொருத்தவரை பொன்னியின் செல்வனை தயவுசெய்து
விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும்படி நிலைமை இருக்கிறது. மீண்டும் மீண்டும்
ஒலிப்பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்படுகிறது. எனவே அதைவிடுத்துப் புதிய நூல்களை
உருவாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கே: வாசிப்போம்
நூலகத்தில் எவ்வாறு உறுப்பினராவது என்பது பற்றி வாசகர்களுக்குக் கூறுங்கள்.
ப: நூலகத்தின்
முகப்புப் பக்கத்தில் உறுப்பினர் படிவம் உள்ளது. அதில் தங்களது பெயர், மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை உள்ளிட்டு,
அதனோடு ஊனமுற்றோர் அடையாள அட்டையை புகைப்படம்
எடுத்து இணைத்து அனுப்பினால், கணக்குத் தொடங்கப்பட்டு நூலகத்தை
அணுகுவதற்கான அனுமதி அளிக்கப்படும். அதுதவிர vaasippom@gmail.com என்ற மின்னஞ்சலிலும் இதே தகவல்களை அனுப்பி உறுப்பினராகலாம்.
கே: வாசிப்போம்
நூலகத்தில் ஒலிவடிவில் தற்போது இருக்கும் நூல்கள் எத்தனை? வரிவடிவில் எத்தனை?
ப: எந்தவிதப்
பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காக இரு பிரிவிலும் சமமாக 300 நூல்கள் இடம்பெற்றுள்ளன.
கே: ஒரே நூலை
இரு வடிவத்திலும் தருகிறீர்களா?
ப: அப்படி
இல்லை. சில நூல்கள் அவ்வாறு இடம்பெற்றுள்ளன. அவற்றை எளிமையாகக் கண்டறிய, அனைத்து நூல்களின் பக்கம் என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதில் 580 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இரு வடிவிலும் இருக்கும் நூல்களை அங்கு
சென்று அறிந்துகொள்ளலாம்.
இரு வடிவிலும்
நூல்களைக் கொடுத்தால் சிறப்பாகத்தான் இருக்கும். அது அதிக நேரத்தையும், உழைப்பையும் கோரும். எனவே, ஒவ்வொரு நூலும்
எந்த வடிவில் கிடைக்கிறதோ அதை அவ்வாறே பதிவேற்றுகிறோம்.
பயனாளர்கள்
எவ்வடிவ நூல்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை அறிய அண்மையில் கணக்கெடுப்பு
நடத்தப்பட்டது. அதில் மின்நூலே அதிக வாக்குகளைப் பெற்றது. கணினியைப் பயன்படுத்த
இயலாத அல்லது தொடக்கநிலைக் கணிணி மற்றும் கைபேசி பயனாளர்களே ஒலிப்புத்தகங்களை
அதிகம் விரும்புகின்றனர். அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டால் நூல்களைப்
படிப்பதற்கான பரந்தவெளி விரிந்துகிடக்கிறது.
கே: தளத்தில்
அதிக வரவேற்பைப் பெற்ற நூல் எது?
ப: வாசிப்போம்
தொடங்கியபோது ‘பெரியோர்களே தாய்மார்களே’, ‘எனது இந்தியா’ ஆகிய நூல்கள் அதிகம் வாசிக்கப்பட்டன.
தற்போது ‘வேள்பாரி’ நாவல் அதிக வரவேற்பைப் பெற்ற நூலாக இருக்கிறது.
கே: அதிக
வேலையைக் கோரிய நூல் என்று ஏதேனும் இருக்கிறதா?
ப: வேலை எனச்
சொல்ல முடியாது. ஒரு மெனக்கெடல் எனச் சொல்லலாம். கிழக்குப் பதிப்பகத்தின் ஒலி
நூல்களைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுபோன்ற ஒலித்தரத்தில் நூல்களை
உருவாக்கினால் என்ன எனத் தோன்றியது. அதன் பயனாக, ‘எனது இந்தியா’ நூலை அதே வடிவில் உருவாக்கினேன்.
தினமும் ஒரு கோப்பு என்ற வீதத்தில், 100 நாட்கள் அப்பணி நீண்டது.
மின்னூல்கள்
அடிப்படையில் என்று பார்த்தால்,மலேசியாவில் ஜெயமோகனின் தீவிர விசிறி
ஒருவர் இருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘வெண்முரசு’ நூலை மின்னூலாக மாற்றினேன். மொத்தம் 1500 அத்தியாயங்கள் கொண்ட அந்த பெரிய நூலைத் தொகுப்பதற்கு 30 மணிநேரமானது.
கே:
உங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் எது?
ப: பார்வையற்ற
கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் வாசிப்பாளர் தினத்தைக்
கொண்டாடியபோது என்னை விருந்தினராக அழைத்திருந்தனர். அதுபோலவே அந்தகக்கவி
பேரவையினர் வாசிப்போம் நூலகம் குறித்துப் பேச அழைத்திருந்தனர். இந்நிகழ்வுகள்
மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தன.
அது தவிர
நூலகத்தைப் பயன்படுத்துவோர், தான் படிக்கும் வகையில் இந்நூல்
கிடைத்தது என சொல்லும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்! “தேவைப்படும் நூல்களை சென்னை வந்துதான் பெற்றுக்கொள்ள இயலும்.
அந்நிலையை மாற்றி இன்று இந்நூலகத்தின் வாயிலாக என்னால் இருந்த இடத்திலிருந்தே
அவற்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது” என தொலைதூரத்தில் உள்ளவர்கள்
சொல்லும்போது நெகிழ்ச்சியாக இருக்கும்! இவ்வாறு எனக்குக் கிடைத்த விமர்சனங்களை
அந்நூலை வாசித்த வாசிப்பாளர்களுக்கும் கொண்டுசேர்ப்பேன்.
கே:
வாசிப்போமின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
ப: பெயரைச்
சட்டரீதியாக பதிவுசெய்ய வேண்டும்; இணையதளம் ஒன்று உருவாக்க வேண்டும்;
கைபேசி செயலி ஒன்றை வடிவமைக்க வேண்டும் இவைதான்
நீண்டகாலத் திட்டங்கள்.
ப: வாசிப்போம்
முதலாமாண்டு நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எஸ். ராமகிருஷ்ணன் வந்தார்.
எனவே அவருக்கு இத்தளம் பற்றி தெரியும். வாசிப்போம் முகப்புப் பக்கத்தில் ‘பெரியார் இன்றும் என்றும்’ ஒலிப்புத்தகம்
இடம்பெற்றிருக்கிறது. அது எழுத்தாளர் சொக்கன் அவர்களின் கவனத்திற்குச் சென்று,
அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
பாரதிதம்பி அவர்களின் நூல் வாசிப்போமில் உள்ளது என்பதை அறிந்து, அந்நூலையும் முகப்புப் பக்கத்தில் இடம்பெறச் செய்ய வேண்டுமென
கோரிக்கை வைத்தார். தினமலர் ஆசிரியர் முருகராஜ் இந்நூலகம் பற்றி செய்தி
வெளியிட்டுள்ளார்.
கே: மின்னூல்களை
தொகுத்தல், ஒழுங்குபடுத்துதல், ஒலிநூல்களை தரமானதாக மாற்றுதல், இணையத்தில் பதிவேற்றம் என அதிகப் பணியைக் கோறும் ஒன்றாக இணைய நூலகம்
இருக்கிறது. எத்தனைபேர் உங்களோடு இணைந்து இதில் பணியாற்றுகின்றனர்?
ப: அனைத்தையும்
நான் ஒற்றை ஆளாகத்தான் செய்துவருகிறேன். தற்போது வாசிப்போம் நூலகத்தில் இணைக்கப்பட்டுள்ள
மின்னூல்கள் என் முயற்சியில் உருவானவைதான். ஒலிநூல்களை மென்பொருள் வாயிலாக
மெருகேற்றிப் பதிவேற்றுகிறேன். அவற்றை இணையப் பக்கமாக மாற்றும் வேலை மிகவும்
சிக்கலான ஒன்று. எனவே இதை நானே கையாளுகிறேன். வாசகர்கள் கேட்டுக்கொண்டதால்,
புதிதாக இப்போது ocr செய்யும் பணியும் நடைபெற்றுவருகிறது. அப்பணியையும் நானே
செய்துவருகிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைச் சரியாக
மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை மேம்போக்காக பார்ப்பதற்கே இரண்டரை மணிநேரமாகிறது.
என்னைப்
பொருத்தவரை, தற்போதைக்கு OCR செய்வதைக்கூட கைவிட்டுவிடலாம். ஏனெனில் இணையத்தில் ஒருங்குறியில் பல
தொடர்கள் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்தாலே பல மின்னூல்கள் கிடைக்கும். நூலகத்தின்
உறுப்பினரான வசந்தி என்பவர் இதுவரை எட்டு தொடர்களை நூலாகத் தொகுத்துத்
தந்திருக்கிறார். வாசிப்பாளர்கள் நூல்களைப் பதிவுசெய்து தருகிறார்கள்.
எஸ்.ரா பரிந்துரைத்த
100 நாவல்கள் திட்டத்திற்காக ஒலிநூல்களைப்
பதிவுசெய்யும் பணிகள் நடந்துவருகின்றன. இதுவரை 25க்கும் மேற்பட்ட நாவல்கள் பதியப்பட்டிருக்கின்றன. அவற்றை மெருகூட்டி
இணைப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறது.
இதற்கு
முன்புவரை திரைப்படம் பார்த்தல், புத்தகங்களை வாசித்தல் என இருந்த என்
வாழ்க்கையில்,வாசிப்போம் நூலகம் தொடங்கப்பட்ட பிறகு
அவற்றிற்கெள்ளாம் நேரம் கிடைப்பதில்லை. நூல்களை ஒலிப்பதிவு செய்யும்போதே அந்நூலைப்
படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னூல் தயாரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால்,
அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.
கே: இந்தப்
பணிக்கு உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கிறது?
ப: என் பணியைச்
செய்வதற்கான சுதந்திர வெளியை அவர்கள் தந்திருக்கிறார்கள். வாசிப்போம் முதலாம்
ஆண்டு நிறைவு விழாவின்போது என் குடும்பத்தினர், வாசிப்பாளர்கள் என ஒன்றரக் கலந்திருந்தது
ஒரு மகிழ்ச்சியான தருணம்.
கே: இப்பணியில்
உங்களைச் சங்கடப்படுத்திய தருணங்கள் ஏதேனும்?
ப: தளத்தில்
உறுப்பினராக அடையாள அட்டையைக் கேட்கும்போது, “அது எங்களது பிரைவசியைப் பாதிக்கிறது; தவறான வழியில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் நாங்கள்
இந்நூலகத்தில் இணையவில்லை” என சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இதை நான் புரிதலின்மை என்றே எடுத்துக்கொள்கிறேன். காப்புரிமைச் சிக்களைத்
தவிப்பதற்காக மட்டுமே அடையாள அட்டை கேட்கப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள்
புகைப்படம் எடுத்து அனுப்புவதுகூட தெளிவாக இருக்காது. இருப்பினும் அவர்
பார்வையற்றவர் என்பது உறுதிசெய்யப்பட்டால் நூலகத்தில் இணைக்கப்படுவார். அடுத்ததாக
தரமற்ற நூல்களை உருவாக்கிப் பகிர்தல் என்பது என்னை மிகவும் சங்கடப்படுத்தக்கூடிய
ஒன்று. அதற்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்களைச்
செய்துவருகிறேன். அதனாலும் பல எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறேன்.
“எங்களுக்கு
அறிவுப் பசி. அதனால் நாங்கள் கிடைப்பதை படிக்கிறோம்” என சொல்வார்கள். அது தவிர ஒரே நூலை மீண்டும் மீண்டும் ஒலிநூலாகவும்
மின்னூலாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும் நான் வேடிக்கையாகச்
சொல்வதுண்டு. பசிக்கிறது என்றால் நூறு ரூபாய்க்கு அரிசி மட்டும் வாங்கினால் போதுமா?
காய்கறி போன்றவற்றை வாங்க வேண்டுமல்லவா?
அப்போதுதானே சிறப்பான சாப்பாட்டைச் சமைத்துப்
பசியாற முடியும். எனவே வளங்களை முறையாகத் திட்டமிட்டுத் தரமான நூல்களை
உருவாக்கவேண்டும். நானே பல தரமான நூல்களை உருவாக்கி்ப் பகிர்ந்தேன். அதை படித்துப்
பின்னர் தரமான நூல்களே வேண்டுமென்று தங்கள் எண்ணத்தை பலர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாசிப்போம் நூல்களின்
எண்ணிக்கையைவிட தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
கே: நீங்கள்
அறிமுகப்படுத்தியிருக்கும் ‘நமக்கு நாமே’ திட்டம் பற்றி கூறுங்கள்?
ப:
புத்தகக்கண்காட்சியின்போது, நமக்குத் தேவைப்படும் புத்தகங்களை ஏன்
நாமே பணம் கொடுத்து வாங்கக்கூடாது? என்ற சிந்தனையின் அடிப்படையில்
இத்திட்டம் உதித்தது.500 ரூபாய் கொடுக்க விரும்பும்
உறுப்பினர்கள் இத்திட்டத்தில் இணையலாம் என அறிவிக்கப்பட்டது. மிகக் குறைவான
நபர்களே அதற்கு முன்வந்தனர். பிறகு மாதம் 100 ரூபாய் கொடுக்க முடிந்தவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். அவர்கள்
எந்த மாதத்தில் வேண்டுமானாலும் விலகிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது மே
மாதத்தில் 69 நபர்கள் இத்திட்டத்தில்
சேர்ந்துள்ளனர். முதல் கட்டமாக பல மின்னூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அச்சு
நூல்களை வாங்கி அவற்றை அவுட்சோர்சிங் முறையில் மின்னூலாக
மாற்றலாம் என்ற திட்டமும் இருக்கிறது.
தன்னார்வலர்களிடம்
குறித்த நேரத்திற்குள் ஒரு நூலை முடித்துத் தாருங்கள் எனக் கேட்க மிகவும் சங்கடமாக
இருக்கிறது. இதையே அவுட்சோர்சிங் முறையில் பணியாக வெளியே கொடுக்கும் பொழுது அவற்றை நாம் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் அதிக நபர்கள் இணைந்தால் பதிப்பாளர்களை அணுகி,
“உரிய தொகையைச் செலுத்துகிறோம், நீங்கள் வெளியிடும் அனைத்து நூல்களின் பிரதி ஒன்றை வாசிப்போமிற்கும்
அனுப்புங்கள்” என்று கேட்கலாம். ஒரு பார்வையற்றவர்
சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “என்னிடம் அறுபதிற்கும் மேற்பட்ட அச்சு நூல்கள் இருக்கின்றன. ஆனால்
அதை என்னால் படிக்க இயலவில்லை” என்றார். பார்வையுள்ளவர் நூல்களைப்
படிக்க இயலவில்லை என்று சொன்னால், அது அவரது சோம்பேறித்தனத்தின் காரணமாக
என்று சொல்லலாம். ஆனால் ஒரு நூலைப் படிக்க விருப்பம் இருப்பவர் நூலைப் படிக்க
முடியவில்லை என்று சொல்லும் போது மிகவும் வருந்தினேன். அதன் காரணமாகவே அச்சு
நூல்களை அவர்கள் படிக்கும் வகையில் மின்நூல்களாகவிரைந்து மாற்ற வேண்டும் என்ற
எண்ணம் தோன்றியது.
கே:
ஒவ்வொருவருக்கும் வாசிப்பதில் தனிப்பட்ட தேர்வு இருக்கும். அவை பல இடங்களில்
பிரதிபலிக்கும். ஆனால் இந்நூலகத்தில் அனைத்து வகையான நூல்களும்இருக்கிறதே அது
எப்படி?
ப:
சிறுவயதிலிருந்தே அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்கும் ஆர்வம் என்னிடம் இருந்தது.
குறிப்பாய் மாற்றுக்கருத்துக்களுக்கும் செவிகொடுக்கும் பழக்கமுண்டு. இறுதியில்
அவற்றை ஒன்றாக அலசி ஆராயும்பொழுது சரியானவற்றைக்
கண்டடையலாம். அவற்றைக் கேளாமலே விட்டால் சிறப்பாய் சிந்திக்கும் வாய்ப்பை
இழந்துவிடுகிறோம். அதனால்தான் அனைத்து நூல்களுமே இடம்பெற்றுள்ளன.
இந்த
இடத்தில்தான் மின்னூல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மின்னூல்கள்
அனைத்தையுமே செயற்கைக்குரல் வேறுபாடு காட்டாமல் படித்துக் காட்டிவிடும். ஒலிநூலைப்
பொருத்தவரை வாசிப்பாளருக்கென தனி விருப்பு வெறுப்புகள் இருக்கும். வாசிப்பாளர்
தனக்குப் பிடிக்காத அல்லது புரியாத நூலைப் படிக்கும்போது அவை சிறப்பாய் வருவதற்கு
வாய்ப்பில்லை.
கே: எனது
ஆலோசனைகள் இங்கே சிலவற்றைக் கூற விரும்புகிறேன். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான
நூல்களும், 18+ நூல்களும் இந்நூலகத்தில் இடம்
பெற்றால்சிறப்பாக இருக்கும்.
ப: கட்டாயம்
இடம் பெற முயற்சிகள் எடுக்கப்படும். அது தவிர அண்மையில் வயது மூப்பின் காரணமாகப்
பார்வைக்குறைபாடு உடையவர்களுக்கும் இந்நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள்
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
கே:
விரல்மொழியர் பற்றி?
ப: ஒரு
தலைப்பின் கீழ் இத்தனை விஷயங்களைச் சொல்ல முடியுமா என இதழைப் படித்து
வியந்திருக்கிறேன். இணைய வடிவமைப்பைப் பொறுத்தவரைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்
மிகச் சிறப்பாகஇருக்கிறது.
தொகுப்பு: பொன்.
சக்திவேல்
தொடர்புக்கு: vaasippom@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக