இலக்கியம்: சாதி ஒழிப்பில் பாவேந்தர்


கீ. லெஷ்மி நாராயணன்.

graphic பாரதிதாசன்
 தமிழில் சங்ககாலம் தொட்டு சமணம், பெளத்தம், வைதிகக் கருத்துக்கள் இலக்கியங்களில் பரவலாக காணப்படுகின்றன. சமயம் ஏற்றத்தாழ்வைக் கற்பித்து மூட நம்பிக்கையை வளர்க்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மதம் தான் ஒரு மனிதனை முழுமையாக அறியாமையில் வீழ்த்துகிறது. வருணாசிரமம், மனுதர்மம், சாதி, சமயம் இவை எல்லாமே மதம் என்ற ஒன்றினுள் அடங்கும். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் இனத்தை அறிவு பெறச் செய்தது பாவேந்தரின் பாடல்கள். அவர் பாடுவதற்கும் முக்கியமான காரணம் பெரியாரின் சிந்தனைகள். பாவேந்தருக்கு முன்னரும் சில அறிஞர்கள் மதம் போன்றவற்றை எதிர்த்திருந்தாலும் சமூக அநீதிகளை பாவேந்தர் காலத்திலும்சரி, அதற்கு பின்னரும் சரி, எதிர்த்த கவிஞர்களோ, அறிஞர்களோ இல்லை.

சமூகத்தை ஏற்றத்தாழ்வான நிலையிலே எப்போதும் வைத்திருக்கும் சிந்தனை:

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததற்குப் பிறகே மதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுவரை மனுதர்மம், நால்வர்ண பகுப்பு என்பவற்றை அறியாதவர்கள் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள். இவற்றை வளர்ப்பதற்கெனவே மடாலயங்களும் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. மடத் தலைவர்கள்  பற்றி கூறும்போது கொடுந்தடியர்எனக் குறிக்கின்றார் திருவள்ளுவர் மீது அதிகப் பற்று கொண்ட  பாவேந்தர். அரசன் வாழுமிடந்தான் கோவில் என்பது பாவேந்தர் கருத்து. திருவள்ளுவர் கோவில் பற்றி கூறவில்லை. அதன் நேர் பொருளை கவிஞர் புரிந்து கொண்டு கோவிலை சதிக் கிடங்குஎன்று சாடுகிறார்.

இவர் யார்!

செம்பிலும் தங்கத்திலும் உருவமாக வடித்து வைத்துள்ளதைத் தெய்வம் என்றும் அந்த இடத்தைக் கோவில் என்றும் கூறுகின்றனர். எங்கும் இறைவன் என்று கூறிவிட்டு அவன் இங்கு குந்திக் கொண்டால் சமூகத்தில் நடப்பதை அவன் எப்படி அறிவான் என்று கவிஞர் வினவுகிறார். கடவுளைப் படைத்தவன் முட்டாள் என்கிற பெரியாரைப் போல அறிவிலான் படைத்த சாணி முண்டங்களாகிய கடவுள்களால் ஒன்றும் ஆகாது என்றுரைக்கிறார்.

எது தமிழ்க் கொள்கை:

கல்லிலும். செம்பிலும், பொறிக்கப்பட்ட உருவத்தைக் கை எடுத்துத் தொழுவது தமிழ்க் கொள்கை அன்று; அறத்தை நாடுவதும், அதன் திறத்தைப் பாடுவதும்தான் தமிழ்க் கொள்கை என்கிறார் பாவேந்தர்.
சாதி மதம் தமிழ் இல்லை அந்தச் சாதி மதத்தைத் தமிழ் கொள்வதும் இல்லை என்றும் கேட்டுக்குத் தெய்வமென்றே பேர், அதைக் கெஞ்சல் இறைஞ்சல் தமிழ்க் கொள்கை இல்லை, ஈசன் என்றே ஒன்றைக் கூறி இடர் ஏற்பதை நம் தமிழ் ஏற்பதும் இல்லை”.

மக்கள் அடிமையாய் இருப்பதை

வர்க்கம், வருணம், சாதி இவைகள் வெவ்வேறு துருவங்களில் வேறுபடும். வர்ணமும் சாதியும் சமயத்தின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டு சுரண்டப்படுகிறது. பழைய நம்பிக்கையில் விடாப்பிடியில் மக்கள் சமயம் எனும் முதலாளியிடம் அடிமையாய் இருப்பதைக் கண்டு கொதிக்கின்றார்.

பற்றுக்கள் போமென்று பற்றேபற் றுக்கோடாய்
உற்று வரும் பிறவி ஓடுமென்றும் புற்கைக்குப்
போரடித்து மக்கள் புழுவாய்த் துடிக்கையிலும்
ஊரடித்துத் தின்னும் உளவுதனை யாரறிவார்
என்பதில் சுரண்டலை அறிய முடியாமல் கிடக்கும் உலகின் துயரத்தைக் கண்டு ஏங்குகிறார் பாவேந்தர்.

ஏழை அறிவை வேட்டை இட்டதினாலே
இழிகோயில் என்னும் காட்டை விழியிற் காட்டி
பாழாக்கச் சொல்லி அதிற்பறித்திடும் பணமூட்டை
பார்க்கவும் சகியேன் ஆத்திகன் வீட்டை

மதம் என்ற ஒன்று மக்களிடையே சிந்திக்க விடாமல் அவர்களது ஆரோக்கியமான வாழ்க்கையைத் தடுக்கிறது. இது நன்மை, தீமை என்று பகுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர். இதைக் கண்டு
மதம் என்ற கருங்கற் பாங்கில்
மல்லிகை பூப்பதில்லை!
மதியினில் மயக்கம் என்ற
நஞ்சொன்றே மலரும்; நாட்டில்
புதியதோர் பொல்லாங் கென்றும்
எரிமலை புகையும்! மக்கள்
இது நலம், இது தீ தென்னும்
எண்ணமும் இழந்து போவார்!என்கிறார்.

பொதுவாக மடாலயங்கள் உழைப்பவர்களைக் கொண்டு இருக்கின்ற சொத்துகளை மடத் தலைவர்களும் அவர்கள் கீழ் இயங்கும் எடுபிடிகளும் கொழுத்து வாழும் இடமாக இருக்கின்றன. நீர், நிலம். பொன், பொருள், ஆடு, மாடு போன்ற அத்தனை பொருள்களும் இறைவனின் பெயரால் மடத்திற்கு அளிக்கப்படுகின்றன. ஆனால், அப்பொருட்களை பயன்படுத்துபவரெல்லாம் மடத்தின் குருமார்களே. இதனை பாவேந்தர் இப்படிச் சாடுகின்றார்.

முப்பத்து முக்கோடி மக்களினால் பெற்றபேறு இங்கு
மூச்சுவிடக் கூட மார்க்கமில்லாமச் சேறு மண்ணில்
எப்பக்கங் காணினும் இன்பத்திலேறு முன்னேற்றம் இங்கு
ஈன மதப்பலி பீடத்திலே முடை நாற்றம்
மூர்க்கமாய் வளர்ந்திடும் மூடவழக்கக் காடு
மொய்க்கும் ஆத்திகள் வீடுமுடை நாற்றச் சுடுகாடு”.

சாதி தோன்றியதற்குச் சில மதக் கொள்கைகளே காரணம் என்று அம்பேத்கர் கருதுகிறார். மதமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஆரியர் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் சாதி தோன்றியது.
நால் வகுப்பு என்பது நூல் வகுப்பா தமிழ்நாட்டில்
நற்றமிழ் மக்கள் ஒரே வகுப்பே தமிழ் ஏட்டில்
நமது கொள்கை மக்களெல்லாம் நிகர்
மிக்குயர்ந்த சாதி கீழ்ச் சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழர்க்கில்லை
ஒன்றே அலால் குலமில்லை
என்றதோர் தமிழரின் சொல்லை
சாதி மதம் தமிழ் இல்லை அந்தச்
சாதி மதத்தைத் தமிழ் கொள்வதில்லை

நால் வருணப் பாகுபாட்டையும் சாதி எதிர்ப்பையும் புரட்சிக் கவியில் இப்படிப் பாடுகிறார்.
நால் வருணங்கள் விதித்தார் நாட்டார்கள் அன்னவற்றில்
மேல் வருணம் கோல் கொண்டு மேதினியை ஆள்வருணம்
காதல் நெருப்பால் கடலுண் மேல் தாவிடுவேன்
சாதி எனும் சங்கிலி என் தாளைப் பிணித்ததடி
பானைச் சிரிப்பில் நான் இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தென்னும் நச்சரவுக் கென்செய்வேன்

சங்க காலம் தொட்டே சமயம், சாதி என்பது இருந்துள்ளது என்பதை இலக்கியங்கள் வழி அறிகிறோம். நம் முந்தையோர் பெரும்பாலும் மனமாற்றத்தையே எதிர்பார்த்துள்ளனர் என்று கைலாசபதி கூறுகிறார். பாரதியும் கூட அப்பட்டியலில் அடங்குவார். திருவள்ளுவர் சாதி எதிர்ப்பை மறைமுகமாகத்தான் பாடியுள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

முதன் முதலில் திருநாவுக்கரசர் சாதியை சழக்கு என்று சாடுகிறார். கம்பனும்
நீதியால் வந்ததொரு நெடுந்தரும் நெறியுள்ளால்
சாதியால் வந்த சிறு நெறியறியான் என் தம்பிஎன்கிறார்.
சமுதாய எதிர்ப்பை ஓரளவு அவ்வை பாடலில் காணலாம்.
(சாதி இரண்டொழிய வேறில்லை).

பின்னாளில் பல இலக்கியங்களிலும் கவிஞர்களும் மன மாற்றத்தை ஏற்படுத்தவே முயன்றுள்ளனர். நிலைமையை மாற்றுவதற்கு பாவேந்தர்தான் முன் முயற்சியாக முயன்றுள்ளார். அவருக்குப் பின்னால் பெரியார் எனும் பகுத்தறிவுச் சுடர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகரென்று கொட்டு முரசே! பொய்மைச்
சாதி வகுப்பினை எல்லாம்
உண்மையாய் வாழ்வார்க்கு ஒரு மதமும் வேண்டாம் என்கிறார்.
ஒரு மதமும் வேண்டாம் தம்பி
உண்மை உடையார்க்கே
graphic பாவேந்தரின் கையொப்பம்

இவ்வாறு மதம், சமயம், சாதி இவற்றை எழுத்தில் மட்டும் ஒன்றுவதோடு இல்லாமல் சமூகத்தின் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடி வந்துள்ளார் என்பது வரலாறு.
(கட்டுரையாளர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளர்)
தொடர்புக்கு: klvstamil@gmail.com

1 கருத்து: