ப. சரவணமணிகண்டன்
உலகில் தீர்க்க முடியாத நோய் என்றால், அது பசிதான். இத்தனை வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப யுகத்திலும், பசியும், பட்டினிச்சாவுகளும் அன்றாடத்தின் வழக்கங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இன்றைக்கும் இந்தியாவின் 40 விழுக்காடு மக்கள் இரவுவேலை பசித்த வயிறுடன் தூங்குகிறார்கள் என்பதையும், இன்னொருபுறம், கோடீஸ்வரர்களின் இல்ல விழாக்களில் டன் கணக்கில் உணவுகள் வீணாகின்றன என்பதான கசப்பையும் எதைத் தின்று செரிப்பது?
உலகில் தீர்க்க முடியாத நோய் என்றால், அது பசிதான். இத்தனை வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப யுகத்திலும், பசியும், பட்டினிச்சாவுகளும் அன்றாடத்தின் வழக்கங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இன்றைக்கும் இந்தியாவின் 40 விழுக்காடு மக்கள் இரவுவேலை பசித்த வயிறுடன் தூங்குகிறார்கள் என்பதையும், இன்னொருபுறம், கோடீஸ்வரர்களின் இல்ல விழாக்களில் டன் கணக்கில் உணவுகள் வீணாகின்றன என்பதான கசப்பையும் எதைத் தின்று செரிப்பது?
வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம் என மனிதன் தொடர்ந்து அடைந்த பரிணாம
வளர்ச்சிக்கும், மேற்கொண்ட இடம்பெயர்வுகளுக்கு முக்கியக் காரணமே உணவுத் தேடல்தான்.
ஆசை, பாசம், காமம் துறந்த ஞானிகளையும் துரத்தும் வல்லமை பெற்றதன்றோ பசி.
பெற்ற அன்னைக்கும், பிறந்த சிசுவுக்கும் பிணைப்பை உருவாக்குவது பசி.
குழந்தைப் பருவம் தொட்டே நாம் நம் கூட்டில் இருந்தவரை பசிப்பிணி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், நாம் நம் கூடுகளைவிட்டு, மனதாலும் உடலாலும் மெல்ல அகலத் தொடங்கிய அந்த இளமைப்பருவம்
பசியின் ருசியறிந்த பருவம்.
காதல், கல்லூரித் தேர்வு, காத்திருந்து நழுவவிட்ட தற்காளிகப்
பணிவாய்ப்புகள் என எல்லாத் தருணங்களிலும் பசித்த வயிறு நம் கூடவே இருந்தது. அதன் இருப்பின்
வலி இன்னதென்றே அறியாதபடி காத்தவர்கள்,நம்மோடே வடக்கிருந்தவாழ்வின் உன்னத
சிநேகிதங்கள்.
எனது வேலைதேடும் படலம் நிகழ்ந்தேறிய சென்னையின் அன்றாடங்கள் பல ஒருவேலை
உணவுடன் கழிந்திருக்கின்றன. புறாக்கூண்டுபோல, ஒரு சிறுவீட்டில் சுமார் நான்கைந்து
நண்பர்கள் கையில் காசில்லாமல், அடுத்தவேலை உணவுகுறித்தப் பதட்டம் ஏதுமின்றிப் பேசிப்பேசியே
பசி ஓட்டிய நாட்கள் அவை. உத்திரவாதமாய்க் கிடைத்த ஒருவேலை உணவின் உபயம் விசித்ரா.
வடையும் டீயுமாய்க் கழிந்த அந்த நாட்களில், தான் பணியாற்றிய உறவினர்
ஹோட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்று அசைவ உணவிடுவதும், அது நிமித்தம் தான்பட்ட
கடனைப் பலநாட்கள் பரோட்டா மாவு பிசைந்து
நேர் செய்வதுமே நண்பன் விஜை ஆனந்தின் வாழ்முறையாக இருந்தது. பகலில் இவர்கள்
என்றால், இரவில் உற்ற தோழனாய், எங்கள் உணர்வறிந்து பாட்டாலே பசிப்பிணி போக்கியவை
சில சென்னைப் பண்பலைகள்.
சென்னை இரவுகள் தனிமை அறியாதவை. எல்லாக் கூத்துகளும் முடிந்து
நல்லிரவில் நண்பர்களே கண்ணுறங்கிவிட்டாலும் தன் பாடல்களால் பண்பலைகள் நம்மோடு
பேசிக்கொண்டேதான் இருக்கும். காதலியோடு சிறு பிணக்கு, ஊரிலிருந்து கிடைத்த
பெரியப்பாவின் மரணச் செய்தி என மனசு தளர்வடைந்திருந்த ஒரு தனித்த இரவில், உள்ளத்திற்கு
ஒத்தடமாய் ஒலித்தது சூரியன் பண்பலையில் அந்தப் பாடல்.
‘நிலை மாறும் உலகில்,
நிலைக்கும் என்ற கனவில்’.
பாடலின் பல்லவிக்கும் சரணங்களுக்கும் இடையே ஒலிக்கும் இசைக்கோர்வைகள்,
நம் தலைகோதும் வேலைபார்க்கும். ‘ஆஆஆஆ’ என்கிற குழுவினர்க் குரல்களுக்கிடையே, நமக்காக இறைஞ்சுவதாய் நமது
காதலியின் குரல் கேட்கும். இரண்டாம் சரணத்திற்கு முந்தைய அந்த ‘ஆராரோ,
ஆரீராரோ’, தூரத்தில் ஒலிக்கும் நம் தாயின் தாலாட்டை,
நம் அருகில் ஒலிக்கத் தரும்.
பாடலுக்கான இசை மனோஜ் கீயான். தமிழ்த்திரையிசை உலகில் சில படங்களே
இசையமைத்தாலும், ‘துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே! (வெளிச்சம்)’,
‘செந்தூரப்பூவே இங்கு தேன்கொண்டு வா! (செந்தூரப்பூவே)’
போன்ற பாடல்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவை.
பாடலை எழுதியவர் ஆபாவாணன். பாடலில் பயின்றுள்ள மொத்த வரிகள்
பன்னிரண்டுதான். ஆனால், ஒவ்வொன்றும் கூர்தீட்டப்பட்ட அம்பென புத்திக்குள் இறங்கிப்
புரிதலைத் தரவல்லவை.
‘தினந்தோறும் உணவு,
அது பகலில் தோன்றும் கனவு;
கனவான நிலையில்,
புது வாழ்வுக்கிங்கே நினைவு.’
இலக்கைத் தேடி அலைகிற வெறிகொண்ட பயணத்தில், பசியெல்லாம் கணப்பொழுதில் தோன்றி
மறைபவைதான்.
‘பிறக்கின்ற போதே,
இறக்காத மனிதன்;
வாழ்கின்ற சாபம்,
அவன் முன்னோர் செய்த பாவம்.’
இலக்கைத் துரத்துகிற மனது தளர்வுற்ற நிலையில், வேறு எப்படித்தான்
யோசிக்கும்?
ஆயினும், பாடலின் வெறுமைத் தொணி அவநம்பிக்கையைத் தருவதற்குப் பதிலாக, பெரும்
ஆறுதலையே தந்தது. எனக்குப் பல தருணங்களில், துன்பக் கடல் நீந்தி, இன்பக் கரை எய்தத்
தோணியாய் திகழ்ந்தவை இதுபோன்ற இதமான திரையிசைப் பாடல்கள்தான்.
இன்று, எனக்கு செல்வக்குறைவில்லை, சிறிதும் பசியில்லை, தனித்திருக்கவில்லை.
ஆனாலும், அன்று என் பசிபோக்கிய அந்த வரிகள், இன்று எதையோ என் மன ஆழத்தில் சுரக்கச்
செய்வதற்குக் காரணம், நித்தியமான இந்த வரிகள்தானோ?
‘நிலை மாறும் உலகில்,
நிலைக்கும் என்ற கனவில்;
வாழும் மனித ஜாதி, - அதில்
வாழ்வதில்லை நீதி.
ரதம் பயணிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக