ரா. பாலகணேசன்
சென்ற இதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பங்காற்றிய பார்வை மாற்றுத்திறனாளியான பேரா. வே. சுகுமாரன் அவர்களைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் தற்கால அரசியல் தொடர்பாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கு தொடர்பாகவும் சில கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் பதில்களைக் காண்போம்.
சென்ற இதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பங்காற்றிய பார்வை மாற்றுத்திறனாளியான பேரா. வே. சுகுமாரன் அவர்களைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் தற்கால அரசியல் தொடர்பாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கு தொடர்பாகவும் சில கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் பதில்களைக் காண்போம்.
கேள்வி:
1960-களில் அரசியல் விழிப்புணர்வு அதிகம். அப்போதுதான் தமிழகத்தில் மாணவர்களின் அரசியல் பங்களிப்பு தீவிரம் பெற்றது. பார்வையற்றோர் பள்ளிகளில் படித்த மாணவர்களின் அரசியல் அறிவு எப்படி இருந்தது?
பதில்:
நான் சேலம் பார்வையற்றோர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கச் சேர்ந்த சில நாட்களில் ஒரு ஐந்தாம் வகுப்பு அண்ணன் என்னை அழைத்தார். அவர் ஒரு வாக்கியத்தை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறினார். அந்த வாக்கியம் இதுதான். ‘கோவிலை இடிக்கச் சொல்.. பள்ளிக்கூடத்தைக் கட்டச் சொல்’. அந்த அண்ணன் பெயர் மாரியப்பன். அவர் கொஞ்சம் இடதுசாரிக் கருத்துகளைக் கூறிவந்தார். ஆனாலும் சேலம் பள்ளியிலும் சரி, பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளியிலும் சரி. பெரும்பாலான மாணவர்கள் தி.மு.க ஆதரவாளர்களாகத்தான் இருந்தனர்.
கே:
அப்படியென்றால்
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நீங்கள் படித்த பள்ளியில் நடைபெற்றதா?
ப: சிறிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. அவ்வளவுதான். அங்கிருந்த அனைவருமே ஹிந்தி எதிர்ப்பாளர்களாகத்தான் இருந்தோம். பூந்தமல்லி பள்ளியில் ஹிந்தி நாவல்கள் நிறைய இருக்கும்; படிக்கலாம் என்று அந்த மாரியப்பன் அண்ணன் கூறியதால், ஹிந்தி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால், போராட்டக் காலங்களில் என் ஹிந்தி ஆசிரியையிடம் நானே ‘ஹிந்தி வேண்டாம்’ என்று கூறினேன்.
கே:
பார்வை மாற்றுத்திறனாளிகளை உங்கள் கட்சியின் பக்கம் ஈர்க்க முடிந்ததா?
ப: முடியவில்லை என்பதுதான் உண்மை. கம்யூனிசம் என்பது ஒரு முக்கியமான தத்துவம். அது குறித்து நிறைய படிக்கவேண்டும். படித்தால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும். நம்மவர்களுக்குப் படிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததாலோ என்னவோ, என்னால் பார்வையற்றவர்களைக் கட்சியின் பக்கம் ஈர்க்க முடியவில்லை.
கே:
கட்சியில் உங்களுக்கு நெருக்கமான பெருந்தலைவர்கள் யாரேனும்?
ப: ஞானய்யா என்று ஒருவர். சென்ற ஆண்டுதான் காலமானார். வயது 96. 60 ஆண்டுகள் கட்சிப் பணி மேற்கொண்டவர். அவர் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழு்தியுள்ளார். அவற்றில் விமர்சனத்திற்குரிய இரு புத்தகங்களுக்கு நான் அணிந்துரை எழுதியிருக்கிறேன். அவை: இந்தியாவும் இந்திய முஸ்லீம்களும், சீன-இந்தியப் போர் மறு ஆய்வும் தீர்வும். திரு. தா. பாண்டியன் அவர்களோடு பல முறை கலந்துரையாடியிருக்கிறேன்.
கே:
ரஷ்ய அரசு பல ரஷ்ய மொழி நூல்களைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறது. அவற்றைப் படித்து எழுத்தாளர்களானவர்கள் இங்கு அதிகம். அவற்றைப் படித்ததன் மூலம் கம்யூனிசத்தை அறிந்தவர்களும் அதிகம். அதே நேரம், ரஷ்ய அரசு பிரெயில் புத்தகங்களை ஆங்கிலத்திலோ, தமிழிலோ வெளியிட்டிருக்கிறதா?
ப: இல்லை.
கே:
கம்யூனிசம் தொடர்பான ஆங்கில பிரெயில் நூல்கள் உலக நூலகங்களில் கிடைக்கின்றனவா?
ப: லண்டன் RNIB (Royal national institute for
the blind) நூலகத்தில்
கம்யூனிசம் தொடர்பான நிறைய நூல்கள் கிடைக்கின்றன. ரஷ்ய இலக்கியங்களும் கிடைக்கின்றன.
ப: இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரண்தாஸ் குப்தா என்ற பார்வையற்றவர் தொடர்ந்து பல முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில், சென்னை IIt-யில் பணியாற்றிய வீரராகவன்
என்ற பார்வை மாற்றுத்திறனாளி. நான் சொன்ன இருவருமே CPM-இல் இருந்தவர்கள். CPI-யில் யாரும் எனக்குத் தெரியவில்லை.
கே:
நிறைய பேருக்குப் புரியாத ஒன்றுதான். கொஞ்சம்
எளிமையாகச் சொல்லுங்கள். CPI-க்கும் CPM-க்கும் அப்படி என்னதான் வித்தியாசம்?
ப: ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை. பிரிவு ஆரம்பித்தது 1962-ஆம் ஆண்டு நடந்த சீனப் போரின்போதுதான். அப்போது இந்தியாவை ஆதரித்தவர்கள் CPI. சீனாவை ஆதரி்த்தால் இந்தியாவில் கம்யூனிசத்தைக் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் CPM.
கே:
போர் முடிந்துவிட்டது. பிரிவினைவாதத் தடைச் சட்டம் உட்பட சில கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டுவிட்டன. அப்புறம் என்ன?
ப: இருவரும் அதைப் பற்றி
இப்போது பேசுவதில்லை. அவர்கள் தங்களுக்குள் சில சொற்களை (terms) வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கொண்டுதான் விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அச்சொற்கள் படித்தவர்களுக்கும் புரியாது; பாமரர்களுக்கும் புரியாது. இன்னும் தெளிவாகச் சொன்னால், தன்முனைப்புதான் இவர்களை ஒன்றுசேர விடாமல் தடுக்கிறது என்று நினைக்கிறேன்.
கே:
அது என்ன இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட்?
ப: வேறொன்றுமில்லை. CPI கட்சியினர் CPM காரர்களைத் தீவிரவாதிகள் என்று கூறிவிட்டார்கள். உடனே இவர்கள் பதிலுக்கு “ஆமாம். நாங்கள் தீவிரமானவர்கள்தான். நீங்கள்தான் வலதுசாரிகளாக இருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டார்கள். இதுதான் இடதும், வலதும். உண்மையைச் சொல்லப்போனால், CPI-யில் இருப்பவர்களுக்குத் தான் முறையான கொள்கைக் கல்வி தரப்படுகிறது. CPM-இல் அப்படி இருப்பதாகக் கூறிவிட முடியாது.
கே:
CPM-இல் பார்ப்பணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே!
ப: ஜவஹர் அவர்கள் கூட எழுதியிருக்கிறாரே! அனைத்து பிரிவினருக்கும் சரியான மதிப்பளித்து பொறுப்புகளை வழங்கியிருப்பது CPI தான் என்று அவர் எழுதியிருக்கிறார்.
கே:
தற்போதைய நாடாலுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோசமாகத் தோற்றதற்கான காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
ப: இரு கட்சிகளும்தான் காரணம். தேர்தல் நேரத்தில் மக்களைச் சந்தித்தால் போதும் என்று இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது மற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்குச் சரிதான். இவர்கள் தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துக் கொள்கை அறிவை அவர்களுக்குத் தந்துகொண்டிருக்கவேண்டும் இல்லையா?
கே:
CPM-ஐப் பொறுத்தவரை இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் முதலிய துணை அமைப்புகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. போராட்டங்களில் அவர்கள் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அவை ஏன் வாக்குகளாக மாறுவதில்லை?
ப: CPI-யிலும் இத்தகைய அமைப்புகள் இருக்கின்றன. இது குறித்து தீக்கதிர் இதழில் பணியாற்றிய குமரேசன் அவர்கள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அந்த அமைப்புகளை ஏன் கட்சி அமைப்புகளாக்கக்கூடாது என்று அவர் வினா எழுப்பியிருந்தார். ஏற்கெனவே எழுப்பப்பட்ட இத்தகைய கேள்விகளுக்கு “இத்தகைய அமைப்புகளைக் கட்டமைப்பதன் மூலம் ஜனநாயக சக்திகளை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்” என்று கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லையே!
கே:
A.B.V.P. ஒரு தனி அமைப்பு தானே! அதிலிருப்பவர்கள் அப்படியே பாஜக பக்கம் சென்றுவிடுகிறார்களே!
ப: அதுதான். அவர்கள் ABVP-யை தனி அமைப்பாக வைத்திருந்தாலும், அன்றாடம் அவர்களுக்கு RSS வகுப்புகளை நடத்திவருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தங்கள் துணை அமைப்புகளுக்குக் கொள்கை வகுப்புகளை அந்த அளவு தீவிரமாக நடத்துவதிலை.
கே:
மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் வாக்குகள் முழுமையாகக் கொள்கை எதிரியான பாஜகவிற்குச் சென்றதாகச் செய்திகள் வருகின்றனவே!
ப: சிவப்பில் அழுக்கு படிந்து காவியாகிவிட்டது என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
கே:
அதுதான். கொள்கை அறிவுள்ள கம்யூனிஸ்ட் வாக்குகள் எப்படி எதிர் கொள்கை உடையவர்களுக்குச் சென்றன?
ப:
CPM வாக்குகள் தான் அப்படி சென்றிருக்கின்றன. அது குறித்து நிறைய இதழ்கள் எழுதியிருக்கின்றன. அங்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. CPM பெரியண்ணன் மனப்பான்மையோடு இருப்பதாகத் தெரிகிறது. அக்கட்சியில் கொள்கை வகுப்புகளை எடுக்காமல்
ஏகப்பட்டவர்களை
உறுப்பினர்களாக்கியதன்
விளைவு இது.
கே:
கம்யூனிஸ்டுகள்
தேர்தலில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
ப: மக்களோடு ஊடுருவ வேண்டும். அவர்களின் பண்பாட்டில், கலையில், இலக்கியத்தில் ஊடுருவ வேண்டும். பாஜக இதைச் சரியாகச் செய்கிறது. கம்யூனிஸ்டுகள் தவறவிடுகிறார்கள். மார்க்ஸ் கூறிய பொதுவுடைமைக் கொள்கை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கிருக்கும் இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறது. மக்கள் இலக்கியங்களிலும் அது இருக்கிறது. அவற்றைக் கண்டறிந்து சாதாரண மக்களுக்கும் கம்யூனிசத்தைக் கொண்டுசேர்க்கவேண்டும்.
உதாரணமாக,
சாவு மேளம் அடிப்பவர்கள் இழவு வீடுகளில் இப்படிப் பாடுவார்கள்.
“்சொர்க்கலோகம் உங்களுக்கு; சொக்கப்பானை எங்களுக்கு
வைகுண்டம்
உங்களுக்கு; வயித்துப்பாடு எங்களுக்கு”
இதில்
சோசலிசம் இல்லையா? இந்த மாதிரி மக்கள் கலைகளில் இருக்கும் பொதுவுடைமைச் சிந்தனைகளைக் கண்டறிந்து, அவர்களோடு பயணித்து, அவர்களைக் கம்யூனிஸ்டுகளாக மாற்றவேண்டும்.
ஹரியானாவில்
மார்கழி மாதத்தில் கடுங்குளிரில் பக்தர்கள் அதிகாலை எழுந்து, குளித்து, பஜனை பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வர். இதை உள்வாங்கிகொண்ட ஒரு கம்யூனிஸ்ட் குழு அவர்களைப் போலவே, வேகமாக எழுந்து, குளித்து முடித்து கம்யூனிஸ்ட் இயக்கப் பாடல்களைப் பஜனைப் பாடல்களாகத் தெருக்களில் பாடிக்கொண்டு சென்றார்களாம். இப்படி அவ்வப்பகுதிக்கு ஏற்ற வகையில் மார்க்ஸியத்தை வளர்க்கவேண்டும். இதைத்தான் பலரும் ‘மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்’ என்று கூறிவருகின்றனர்.
கே:
இருந்தாலும், மற்ற கட்சிகளிடம் அதிக பண பலம் இருக்கிறதே! தேர்தலில் மக்களுக்கு பணம் வழங்கப்படுவது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறதே!
ப: உண்மைதான். ஆனாலும், அது இப்போது உருவான பிரச்சனை இல்லை. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதிலிருந்தே நடக்கும் ஒன்றுதான். என் அப்பா தீவிர காங்கிரஸ் காரர். ஆனாலும், அவர்கள் வாக்குகளுக்குப் பணம் தரவேண்டும் என எதிர்பார்ப்பார். 1952 தேர்தலிலேயே சம்பா ரவை உப்புமாவும், ஒன்றேகால் ரூபாயும் வாக்காளர்களுக்குத் தரப்பட்டது உண்மை. அது காலங்காலமாக வளர்ந்துநிற்கிறது. அவ்வளவுதான். இதை எதிர்த்துதான் போராடி வெல்ல வேண்டும்.
கே:
சில கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உங்களை ‘போலி கம்யூனிஸ்டுகள்’ என்று தொடர்ச்சியாக எழுதிவருகிறார்களே!
ப: அவர்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அதன் மூலமே பொதுவுடைமையை உருவாக்க முடியும் என்று நம்புபவர்கள். நாங்கள்
அப்படியல்ல.
கே:
பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு
நீங்கள் கூற விரும்பும் அரசியல் அறிவுரை?
ப: எங்களுக்குக் கிடைக்காத பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. கணினிகளில், அலைபேசிகளில் நிறைய படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இருந்தாலும், பெரும்பாலான பார்வையற்ற இளைஞர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, அறிவை வளர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. அறிவுத் தேடலில் இறங்காவிட்டால் இடதுசாரிச் சிந்தனை வளராது.
நம்மைப்
போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சரியான அரசியல் இடதுசாரி அரசியல்தான். ஏனென்றால், கம்யூனிஸ்டுகள் தான், உறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அறிவைப் போற்றுபவர்கள்; நம் உளார்ந்த செயல்திறனை மதிப்பவர்கள். இது ஏன் பெருவாரியான பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புரியவில்லை என்றுதான் தெரியவில்லை. உங்களைப் (விரல்மொழியர்) ்போன்றவர்கள் ஆழ்ந்த வாசிப்பை ஊக்குவித்து இளைஞர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தவேண்டும்.
பாலகணேசன்:
நிச்சயமாகச் செய்கிறோம் ஐயா. உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
்சுகுமாரன்:
மகிழ்ச்சி.
இவரைத்
தொடர்புகொள்ள:
9443112831
வாசகர்களே!
உங்களுக்குத்
தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக