சிந்தனை: எது அறிவு?


ரா. பாலகணேசன் 

graphic திருவள்ளுவர் உருவச்சிலை
 ‘ஆறறிவு உடையவனே மனிதன்என்பார்கள். அது தவறு. அதைச் சரியென்று கொண்டால் பார்வையற்றவர்கள் யாரும் மனிதனாக முடியாது.
  ஆம். ஆறாம் அறிவு பகுத்தறிவு என்று அறிந்திருக்கும் பலருக்கு மீதமுள்ள 5 அறிவுகள் தெரிவதில்லை. பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு ஆகியவை அவை. அப்படியென்றால் இனிபகுத்தரிவு உடையவர்களே மனிதர்கள்என்று கூறிவிடலாமா? அதுவும் தவறு. ஏனெனில் மன வளர்ச்சி குன்றியோர் அந்தப் பட்டியலுக்குள் வரமுடியாது. எனவே இத்தகைய பொத்தாம்பொதுவான வரையறைகளை விட்டுவிடுவோம்.

அறிவு என்றால் என்ன? அறிதல் என்ற சொல்லிலிருந்துதான் இது உருவாகியிருக்கவேண்டும். ஆனாலும், அறிவு என்பதன் பொருள் அறிதலைவிட ஆழமானது; அகலமானது.  ஆனால் இன்னும் அறிவை நாம் அறிதல் என்ற சொல்லுக்குள்தான் வைத்திருக்கிறோம்.

நள்ளிரவில் எழுப்பி ஃபிஜி தீவின் அதிபர் யாரென்று கேட்டாலும் சொல்பவனை அறிவாளி என்கிறோம். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும், அது குறித்த தகவல்களைச் சரமாரியாகப் பொழிபவரை அறிவாளி என்கிறோம். 1330 திருக்குறளையும் நேராக, தலைகீழாக, பொருளுடன் ஒப்பிப்பவரை அறிவாளி என்கிறோம். இதுதானா அறிவு?

அறிவு என்பது அறிந்துகொள்வது மட்டுமல்ல; அறிந்ததைப் புரிந்துகொள்வது. வள்ளுவர் அறிவு குறித்து விளக்குவதற்கென்றே அறிவுடைமைஎன்ற ஓர் அதிகாரத்தைத் தந்திருக்கிறார். அந்த அதிகாரத்தில் அவர் 5 குறள்களில் அறிவு என்றால் என்ன என்பதை விளக்குகிறார்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு’.
  போகிற போக்கில் திறமையைச் செலவழிக்காமல், நன்மைக்காய்ப் பயன்படுத்துவது அறிவு.

2. ’எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு’.
  எவர் மூலம் எச்செய்தியை அறிந்துகொண்டாலும், அதன் உண்மைத் தன்மையை ஆராய்வது அறிவு.

3. ‘எண்பொருளவாக செலச்சொல்லி, தான் பிறர்வாய்
  நுண்பொருள் காண்பது அறிவு’.
  பிறர் கூறும் கடினமான வற்றையும் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றை எளிமையாக மற்றவர்களுக்கு விளக்குவது அறிவு.

4. ‘உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு’.
  உலகில் உள்ள அனைவரையும் சமமாகப் பார்ப்பது அறிவு. தன் கொள்கையில் இருப்போரைக் கண்டு முகம் மலர்வதும், எதிர்நிலையில் இருப்போரைக் கண்டு முகம் சுழிப்பதும் அறிவாகாது.
  அடுத்த குறள்தான் எனக்குக் கொஞ்சம் சிக்கலானது.

5. ‘எவ்வ துறைவது உலகம்; உலகத்தோடு
  அவ்வ துறைவது அறிவு.
  உலகம் எப்படியிருக்கிறதோ, அதனோடு ஒட்டிச் செல்வதே அறிவு.
  திருக்குறளுக்குப் பலரும் பல மாதிரி உரை எழுதுகிறார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் மேலே உள்ள இறுதிக் குறளுக்கான உரை இப்படி இருக்கும்.
  உலகத்தின் போக்கில் சென்று அதில் உள்ள தீமைகளைக் களைய முயல்வது அறிவு. உலகம் சரியில்லை என்று கருதி அதிலிருந்து விலகி நிற்பது அறிவு ஆகாது.

மேற்கண்ட குறட்பாக்கள் அறிவு என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கும். அறிவு என்றால் அறிதல் மட்டுமல்ல என்பதையும் உணர்த்தியிருக்கும். வள்ளுவரின் கருத்தை எளிமையாகக் கூறுவதென்றால்,
அறிவு என்பது
1.   தீயவற்றின் பக்கம் செல்லாமை. 
  2. உண்மையை ஆராய்ந்தறிதல்.
  3. கடினமானவற்றையும் எளிமைப்படுத்தத் தெரிந்திருத்தல்.
  4. அனைவரையும் சமமாகக் கருதுதல்.
  5. உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்.
  இப்பண்புகள் இருந்தால்தான் நாம் அறிவாளியாகமுடியும். இன்னொன்றையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆனால் அறிவுடைமை அதிகாரத்தில் அல்ல; இன்னா செய்யாமையில். அது முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை அறிவுக்கு அவர்  கூறும் வரையறைகளிலேயே சிறந்தது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
  தன்நோய்போல் போற்றாக் கடை’.
  பிறர் துன்பங்களை, சிரமங்களைத் தன்னுடையதாக உணர்ந்து செயல்படுவதே அறிவு என்கிறார். இக்குறளைப் பின்பற்றினால் மேலே தரப்பட்ட 5 பண்புகளும் இயல்பாகவே வந்துவிடுமே!
  அறிவுடையவர்கள் எல்லாம் உடையவர்களாவதன் ரகசியம் இதுதான். 
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com‘

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக