ராகரதம்( 18) துளிர்க்கும் தாய்மை


ப. சரவணமணிகண்டன் 
காதலில் பிந்தொடர்தல் என்பதுதான் முதல் அத்தியாயம். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு ஆண்மகனின் பின்தொடர்தல் என்பது அவன் அவள்மீதுகொண்ட காதலால் உந்தப்பட்டது. கொஞ்சம் அழகும் கம்பீரமுமான ஆண்களின் பின்தொடர்தலில் பல யுவதிகளுக்கு ஒருவகையான ஈர்ப்பும் குறுகுறுப்பும் பிறக்கத்தான் செய்கிறது. சில ஆர்த்தோடக்ஸ்கள் விதிவிலக்கு.

நண்பர்கள் பலரின் காதல் கதைகளை ஆராய்ந்த மட்டும் பெரும்பாலும் தேடித் தேடிப் பின்தொடர்பவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. உண்மையில் பெண்களுக்குச் சமூக ரீதியிலான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அவர்களும் கிடைத்த வாய்ப்பில் கிடா வெட்டுவதில் கில்லாடிகள்தான். என்னவொன்று, ஊரறியப் பார்ப்பவன் ஆணாகவும், ஒருவருக்கும் தெரியாமல், ஏன் அவனுக்கே தெரியாமல் அவனைப் பார்ப்பதுமான கலைகளில் பெண்ணே தேர்ந்தவளாகவும் இருக்கிறாள் என்று தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நம்மவன் ஓர் ஆர்வக்கோலாறு.

பேருந்து நிறுத்தம், கல்லூரி வாயில்கள், கோவில்கள் என்று நீ எங்கெங்கே அன்பே நான் அங்கங்கேஎன்று பாடாத குறையாக தன் திருமுகத்தைக் காட்டி நிற்கும் திருமகன்களைப் பெண்களும் நோக்கத் தொடங்குகையில் அடுத்த அத்தியாயம் காதலில் பிறக்கிறது. ஆனால், எதற்கும் பிடிகொடுக்காத பெண்கள்தான் பின்தொடர்தலில் ஆணுக்கான பெரும் சவால். தன் அன்பிற்குரியவளின் கவனத்தை ஈர்க்க, நடையில், உடையில், பார்வையில் என அன்றாடம் புதுப்புது பிரயத்தனங்களை அவன் செய்தே ஆகவேண்டும்.

அணுகிப் பேசிவிடலாம் என்றாலும் தயக்கம். ஒருவழியாக தைரியவானாகப் பேசிவிட்டாலும், அண்ணா, ஃப்ரண்ட் என்பதெல்லாம் காதலில் கடக்கவேண்டிய சீனப் பெருஞ்சுவர்கள். ஆனால், தமிழ் சினிமா நாயகர்களுக்கு  இந்தக் கஷ்டமெல்லாம் இல்லை. ஒருவகையில், ஏராளமான சலுகைகளோடே திரையில் தங்கள் நாயகிகளைப் பின்தொடர்கிறார்கள் அவர்கள். பின்தொடரும் பிராயத்தில், தங்கள் நாயகிகளின் அங்கங்கள் குறித்து அவர்கள் பாடும் ஆராதனை கீதங்களெல்லாம் நிதர்சனத்தில் எண்ணிக்கையில் அடங்காத செருப்படிகளை அவர்களுக்குப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

ஆஹா மெல்ல நட, மெல்ல நட, நடையா, இது நடையா?’ ‘அபிஷேக நேரத்தில் அம்பாலை தரிசிக்க,வாடி என் கப்ப கிழங்கே,’ ‘ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரத் தேங்காஇன்று மன முதிர்வின் காரணமாக எவ்வளவு பெண்ணியம் பேசினாலும், பெண்களைக் கிண்டல் செய்யும் பாடல்களை ஒரு ஜாலி மூடில் கேட்டு ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது மனது. ஆனால், பின்தொடர்தல் பாடல்களுக்கு இவை மட்டுமே உதாரணங்கள் அல்ல.

graphic இளையராஜா
 மிக நாகரிகமாகப் பின்தொடர்தலில், உங்கள் பொன்னான கைகள்பாடலை அடித்துக்கொள்ள முடியுமா என்ன? இதற்கெல்லாம் மேலாக, பின்தொடர்தலிலும் பெருங் கண்ணியத்தைப் பேணுகிற பாடல் ஒன்று இருக்கிறது. எப்போது கேட்டாலும், தன் காதலிக்காய் தனக்குள் அளவற்ற தாய்மையைச் சுரக்கச் செய்கிற பாடல் அது.

பாடலின் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு தாலாட்டு நடையைத் தாளத்தில் வைத்திருப்பார் நம் இசை அரக்கன். ஹொய்யா எனத்தொடங்கும் குழுவினரின் குரல்களில் பாடல் முழுவதும் அலைகளின் குளிர்ச்சியை தாராளமாய் தரிசிக்கலாம். போதாதற்கு கேஜேயின் தாய்மைக்குரல். அப்பப்பா! இப்படியெல்லாம் எங்களை சுகச்சித்திரவதை செய்ய உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் ராஜா?

graphic வாலி
 ‘நிலவெங்கே சென்றாலும்,
நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாம் என்றாலும், - அது
வட்டம் இடாதா?’ இப்படியெல்லாம் கேட்டால் எந்தப் பெண்தான் வராதே போ என்பாள். வாலியின் வரிகளில் வாலிபத்திற்கா பஞ்சம்.

பாடலின் ஒவ்வொரு வரியும் அதன் நிகழ் பொழுதை இரவென்றே சொல்கிறது. ஆனால், நிலவின் குளிர் வெளிச்சத்தையும் தூய்மையான அரவணைப்பையும் இசையும் வரிகளும் இயைந்து சுட்டுகையில், அன்பே அவள் நடக்கும் பாதைக்கு வெளிச்சமாய் நின்று இருள் ஓட்டுகிறது.

வானத் தாரகைகளின் பளிச்சிடல், ராக்குருவியின் இசை என இருள் கிளர்த்தும் இன்பங்களைஒவ்வொன்றாக அவளுக்கு அறிமுகம் செய்கிறான் நாயகன். இன்னும் அவள் பார்க்காத இந்த உலகின் உன்னதங்களை அவளுக்குச் சொல்லத் துணிந்தவனாய்,
நீ தடுத்தாலும், கால் தடுத்தாலும்,
நாள் முழுக்க நான் வருவேன் மானேஎன அன்போடு உரிமை எடுத்துக்கொள்கிறான்.

இத்தனைக்குப் பிறகும் அவள் மசியவில்லை. அதனால்,
வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு;
நானும் வந்தால் என்னடி அம்மா?
தென்மதுரை சேரும்வரை ஆண்துணையாக
ஏழை என்னை ஏற்றுக்கொள்ளம்மா? இப்படி நயமாகக் கெஞ்சிய பிறகும் பிகுப்பண்ண முடியுமானால், அவள் குளிர் நிலவே கிடையாதுதானே.

இதற்குப் பிறகு வரும் வரிகளுக்கும், இசைக்கும், கேஜேயின் குரலுக்கும் மயங்காத மனங்கள் மரணித்துவிட்ட பிண்டங்கள்தான்.

ஓடாதே கிளியே தனியாக,
ஏதேனும் நடக்கும் தவறாக;
ஊர் கெட்டுக் கிடக்கு பொதுவாக,
ஒன்றாக நடப்போம் மெதுவாக.

காலடி நோக,
நாளடி போக,
பாதையிலே பூ விரிப்பேன் மானே.

பாடலைக் கேட்க 
தன் நேசத்திற்குரியவளைப் பின்தொடரும் ஒரு ஆடவனின் பிதற்றல் அல்ல இந்தப் பாடல். இதயத்தில் பூக்காடு புணரமைத்த பாடல். கேளுங்கள்.
துளிர்க்கும் தாய்மையில் தொலைந்து போவீர்கள்.
 இத்தொடரின் முந்தைய பகுதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக