ஆசிரியர்க்குழு
கடந்த சில
மாதங்களாகவே, புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு குறித்தான விவாதங்களும்,
கருத்துக்கேட்பு கூடுகைகளும் பொதுத்தளங்களில் மட்டுமின்றி, நமது
மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளிலும் ஆக்கப்பூர்வமான முறையில்
முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் அனைத்தும்,
தங்களுக்குள்ளாக ஒருமித்த கருத்துகளை வரையறை செய்து, அதனை நடுவண் அரசுக்கு
அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு
பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், கடந்த 22.ஜூன்.2019 அன்று, மதுரையில்
கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும்
பட்டதாரிகள் சங்கம், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், பார்வையற்ற
முற்போக்கு சிந்தனையாளர் பேரவை, நமது விரல்மொழியர் மின்னிதழ் குழு உள்ளிட்ட பல
அமைப்புகளின் புதிய தேசியக் கல்விக்கொள்கை 2019 வரைவின் மீதான ஆட்சேபனைகள் மற்றும்
கருத்துகள் தொகுக்கப்பட்டு, நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 குறித்து வரைவில் எந்த ஒரு
இடத்திலும் குறிப்பிடப்படாதது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வியை
முற்றிலும் புறக்கணித்திருப்பது குறித்த நமது கடுமையான ஆட்சேபனைகளைத்
தெரிவித்திருக்கிறோம். மேலும், சிறப்புக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிடவும்,
அதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவான கருத்துகளையும் அரசுக்கு
அனுப்பியிருக்கிறோம்.
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்கள்
மற்றும் அமைப்புகளின் கருத்துகளைத் தொகுத்து, அதனை முறைப்படுத்தியதோடு, ஆங்கிலத்தில் ஒரு முக்கிய ஆவணமாகக் கொண்டுவந்த
திருவள்ளுவர் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றான கல்லக்குறிச்சி அரசு கல்லூரியில் பணியாற்றுபவரும்,
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன ஒருங்கிணைப்பாளருமான
முனைவர். கு. முருகானந்தன் அவர்களுக்கு எமது இதழின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு,
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளும் இந்த தருணத்தில் தங்களுக்குள்ளாகவே ஒரு
புதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, இதனைத் தொடர் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும்
என எமது இதழ் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தின் கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்கள், நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்ச்சியாக சந்திப்பது, அவர்களின் முன்னிலையில், இது தொடர்பான
கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வது என புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டு, பொதுத்தளத்தில்
மாற்றுத்திறனாளிகள் கல்விகுறித்த புதிய ஆக்கபூர்வமான புரிதல்களை ஏற்படுத்த முனைவோம்.
நமது இதழின் கருத்துகளைப் படிக்க தொடர்புடையவை:
அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை:
நமது இதழின் கருத்துகளைப் படிக்க தொடர்புடையவை:
அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக