நூல் அறிமுகம்: அறம் வெல்லும்

graphic கா. செல்வம்
கா. செல்வம்
ஊ. மகேந்திரன்
 விரல்மொழியர் பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழில் இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம்? என்கிற தொடர் மூலமாக வாசகர்களுக்கு அறிமுகமானவர் திரு. கா. செல்வம் அவர்கள். சமீபத்தில் அறம் வெல்லும் என்கிற தனது கட்டுரை தொகுப்பை அமேசான் கிண்டிலில் வெளியிட்டார். இந்த நூலைப் பார்வையற்றவர்களால் நடத்தப்படும் இலக்கிய வட்டமான அந்தகக்கவி பேரவையின் 34 ஆவது கூட்டத்தில் நமது விரல்மொழியரில் அவ்வப்போது தனது அனல்பறக்கும் படைப்புகளை வழங்கிவரும் திரு. உ. மகேந்திரன் [உதவிப்பேராசிரியர் தியாகராயர் கல்லூரி சென்னை] அவர்கள் அறிமுகம் செய்து ஆற்றிய உரையின் தொகுப்பை வாசகர்களுக்கு அளிக்கிறோம். இனி உரையின் முக்கியமான சில குறிப்புகள் மகேந்திரன் அவர்களின் வார்த்தையில்.


கிண்டிலில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிற "அறம் வெல்லும்!" என்கிற இந்த நூலைப்பற்றி பேசுவதற்குமுன் அது உருவான வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும். வெற்று  வதந்திகளும் வெட்டி அரட்டைகளும் மட்டுமே நடப்பதாக நம்பப்படும் சமூக ஊடகத்தை தனது வித்தியாசமான ஆழமான விமர்சனக் கருத்துக்களை கட்டுரைகளாக  பகிர்ந்து அந்த நம்பிக்கையை  பொய்யாக்கினார் நூலாசிரியர் திரு. கா. செல்வம் அவர்கள்.

graphic அறம் வெல்லும் நூலின் அட்டைப்படம்

அறவழிச்சாலை என்கிற வாட்சாப் குழுமத்தில் அன்றாடம் செய்தித்தாள்களை ஆக்கிரமிக்கும் முக்கியமான செய்திகளை  எடுத்துக்கொண்டு இந்த செய்திகளுக்குள் மறைந்திருக்கும் மற்றொரு பக்கத்தை எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில்,  பல முன்னணி  ஊடகங்களின் தலையங்கத்திற்கு இணையாக சில சமயங்களில் அதற்கும் ஒருபடி  சிறப்பான தலையங்கங்களை தினந்தோறும் பகிர்ந்துவந்தார். அந்த தலையங்கக் கட்டுரைகளில் சிறந்த 25 கட்டுரைகளை திரு. சரவணமணிகண்டன் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தொகுத்து "அறம் வெல்லும்!" என்கிற நூலின் முதல் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அவை வெளியான தேதிகள் இடம்பெற்றிருக்கிறது. கிண்டில் வெளீயீடு என்பதால் பார்வையற்றவர்கள் மிக எளிமையாக இந்த நூலைப் படிக்கலாம்.

இவரது கட்டுரைகளின் சிறப்புகளில் முதன்மையானது இவர் கையாளும் ஒப்பீடுகள். தற்போதைய மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் தீவிரத்தை புரியவைக்க முன்னால் பிரதமர் மன்மோஹன்சிங் ஆட்சியை நினைவுபடுத்துகிரார். வெறுமனே இதைவிட அந்த ஆட்சி சிறந்தது என்று சொல்லாமல் மன்மோஹன்சிங்கை ஃபிடல் காஸ்ட்ரோவோடு ஒப்பிடுவதன் மூலமாக மன்மோஹன்சிங் தற்போதைய ஆட்சியாளர்களைவிட எவ்வளவு மேன்மையானவர் என்பதை நமக்கு புரியவைக்கிறார். வரலாறு ஒருநாள் என்னை விடுவிக்கும் என்று சொன்ன ஃபிடில்காஸ்ட்ரோவை, வரலாறு எதிர்காலத்தில் என்னைக் கருணையோடும்  நியாயமாகவும் மதிப்பீடு செய்யும் என்று சொன்ன மன்மோஹன் சிங்கோடு ஒப்பிடுவதன்மூலம் உலக அரசியலையும் நமக்கு கொஞ்சம் தொட்டுக்காட்டுகிறார்.

வெறுமனே ஆட்சியாளர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகம் சிறப்பாக இயங்க ஒவ்வொரு தனிமனிதனுடைய பொறுப்பையும், நடப்பு அரசியலையும் சமூகத்தையும் ஒவ்வொருவரும்  புறிந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் மிக தெளிவாக எடுத்துக்கூறுகிறார். அரசியலையும் சமூகத்தையும் புறிந்துகொள்ள நாம் ஊடகங்களையே நம்பியிருக்கிறோம். அந்த ஊடகங்கள் எந்த நோக்கத்தோடு அந்த செய்தியை வெளியிடுகிறது என்பதைப் புரிந்துகொண்டு எது நமக்கான ஊடகம் என்பதை புறிந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தேவாலயங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பை மிகக் காட்டமாக  சேசப்பா என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த தினமலர், கும்பமேளா நெரிசலில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்ததை இதே போன்று கேலியான தலைப்பிட்டு வெளியிடுவதில்லை என சுட்டிக்காட்டுகிறார். இதுபோல இவரது கட்டுரை முழுக்க இவர் கையாளும் ஒப்பீடுகளும் கருத்துக்களும் ஆணித்தரமாக எவராலும் மறுக்கமுடியாத வகையில் இருக்கிறது.

சமகால அரசியல் குறித்து தெளிவாக புறிந்துகொள்ள கடந்தகால வரலாறு பற்றி தெளிவாக அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம் "அறம் வெல்லும்!".


அந்தகக்கவி பேரவையின் செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள
anthakakavi.blogspot.com
அறம் வெல்லும் நூலினை  அமேசான் கிண்டிலில் இலவசமாக படிக்க
https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-ebook/dp/B07TSYGWVQ
எழுத்தாளர் திரு. கா. செல்வம் அவர்களை தொடர்புகொள்ள
teacherselvam@gmail.com
 எழுத்தாக்கம்: ஜோ. யோகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக