அரசியலில் நாம் (6) தைப்பூசம்

ரா. பாலகணேசன் 
graphic தைப்பூசம்
தைப்பூசம்
 பார்வையற்ற அரசியலாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய முயற்சி இத்தொடர்.

இந்த இதழில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர் ஒருவரை நாம் சந்திக்கவிருக்கிறோம். மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சியின் 4-ஆவது வார்டு தி.மு.க. செயலாளராக இருக்கிறார் திரு. தைப்பூசம் என்ற பார்வை மாற்றுத்திறனாளி. 1977-இல் கட்சியில் சேர்ந்த இவர் 42 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் களப்பணி ஆற்றிவருகிறார். இவரது அரசியல் பயணத்தைச் சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம்.

இளமைக் காலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள கப்பலூரில் பிறந்தவர் தைப்பூசம். அந்த ஊர் பள்ளியிலேயே படித்த இவர், எட்டாம் வகுப்பிலேயே பள்ளிக்கு முழுக்கு போட்டுவிட்டார். காரணம், அப்போதிருந்து இவரது பார்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. இருந்தாலும் மனம் தளரவில்லை இவர். சிறுவர் நற்பணி மன்றம்என்ற ஒரு சிறிய இயக்கத்தைத் தொடங்கினார். ்சாலைகளில் இருக்கும் கற்களை அகற்றுதல், தேவையற்ற பள்ளங்களை மேடாக்குதல் முதலிய சிறுசிறு பணிகளைச் செய்தது இவ்வியக்கம். தொடர்ந்து சிவாஜிகணேசன் ரசிகர் மன்றம், T. ராஜேந்தர் ரசிகர் மன்றம்  ஆகியவற்றிலும் தீவிரமாகச் செயல்பட்டார்.

graphic பா. சிதம்பரம் முன்னிலையில் உரையாற்றும் தைப்பூசம்
1977-இல் தி.மு.க.வில் இணைந்த இவர், இளைஞரணிச் செயலாளர் ஆனதுதான் முதல் பொறுப்பு. 1984-இல் கலைஞர் கருணாநிதியின் 60-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை அழைத்து 60 அடி உயரக் கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றிய நிகழ்வைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் தைப்பூசம். அப்போது உரையாற்றிய கலைஞர், “தம்பி, நீ பார்வை அற்றவன் அல்ல. நல் பார்வை பெற்றவன். உன் உழைப்பை இந்த உலகம் என்றாவது ஒருநாள் ஏற்றுப் போற்றும்என்று கூறியதை நினைவுகூர்கிறார் இவர். அது தனக்குத் தொடர்ந்து தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாகவும், இன்றும் சோர்வு ஏற்படும் நேரங்களில் கலைஞரின் அந்தக் கரகரத்த குரல் மனதிற்குள் ஒலித்து, தன்னைப் புது மனிதனாக்குவதாகவும் குறிப்பிடுகிறார் தைப்பூசம்.

சமூகப் பணி
1987-இல் இவருக்குத் திருமணமானது. இவரது மனைவியும் பார்வையற்றவர். இவருக்கு இரு மகன்கள். இருவருமே பார்வையிழந்தவர்கள். மூத்த மகனுக்கு 5 வயதிலும், இளைய மகனுக்கு 8 வயதிலும் பார்வை பறிபோனது. தற்போது இவ்விரு மகன்களும், படித்து, பட்டம் பெற்று, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனர்.

தனிப்பட்ட வாழ்வில் இவர் எதிர்கொண்ட இத்தனை பெரிய சோகமும் இவரது அரசியல் பணியைத் தடுக்கவில்லை. அரசியல் பணியோடு, தான் சார்ந்திருக்கும் பார்வையற்ற சமூகத்திற்கும் தன்னால் ஆன உதவிகளைச் செய்து்வருகிறார் தைப்பூசம். சக்கிமங்கலத்தில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான பார்வையற்றோர் குடும்பங்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்விக் கட்டணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதலியவற்றை நன்கொடையாளர்களின் உதவியோடு பெற்றுத்தருகிறார் இவர். 2007-இல் 60 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தமிழக அரசின் சார்பில் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது தனது தொடர் முயற்சிகளால் கிடைத்த பெரிய பலன் என்கிறார் இவர். அப்போதைய அமைச்சர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் நிலப் பத்திரங்களைப் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கிய நிகழ்வையும் மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்.

சோதனையும் வேதனையும்
2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை இவரால் அவளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது. தன் அரசியல் வாழ்வில் அதிக நெருக்கடிகளைச் சந்தித்த நாட்கள் அவை என்று நினைவுகூர்கிறார் தைப்பூசம். இவரது வீட்டில் தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுப்பதற்காக ரூ. 1200000 வைக்கப்பட்டிருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினரால் இவர் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவரது மனைவியார் சமையல் செய்துகொண்டிருக்க, இவரும், 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த இவரது இளைய மகனும் வீட்டின் முன்புறம் அமர்ந்திருக்க, வீட்டிலிருக்கும் அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிடுகிறார் அதிகாரி. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு கணம் திகைத்த இவர், கட்சித் தரப்பினர் இல்லாமல் நீங்கள் வீட்டைச் சோதனையிடக்கூடாது என கராறாகச் சொல்லிவிடுகிறார். தி.மு.க., புகார் கொடுத்த அ..தி.மு.க என இரு கட்சியினருக்கும் முன்னே சோதனை நடைபெற்றது. இவரிடம் கூடுதல் பணம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி மாறியது. இவருக்கு இன்னொரு மிகப்பெரிய சோதனை காத்திருந்தது. ஆட்சி மாறிய பத்தே நாட்களில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இவர் வைத்திருந்த தொலைபேசி பூத் அகற்றப்பட்டது. உரிய அதிகாரிகளைச் சந்தித்த பிறகும் தீர்வு கிடைக்கவில்லை. அதிமுக உள்ளூர் பிரமுகர் ஒருவரைச் சந்தித்துச் சிக்கலுக்குத் தீர்வு காண முயன்றார். அப்போது அந்த அதிமுக பிரமுகருக்கும், இவருக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

அதிமுக பிரமுகர்: உங்களப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. எங்க கட்சியில உங்களுக்கு நிறைய எதிர்ப்பு இருக்கு. உங்க பகுதியில இருக்கிற எங்க செயலாளர்கள் எல்லோருமே உங்களுக்கு எதிராத்தான் இருக்காங்க.
தைப்பூசம்: அது இயல்புதானே!
அதிமுக பிரமுகர்: இப்படி ஒரு குடும்பச் சூழ்நிலையில, பார்வையில்லாத நிலைமையில எதுக்கு நீங்க அரசியல் கிரசியல்னு இவ்வளவு கஷ்டப்படுறீங்க?
தைப்பூசம்: பார்வை இல்லைங்கிறதுக்காக மற்ற செயல்பாடுகளைச் செய்யாமல் இருக்க முடியுமா? என் கட்சி என்னை ஏத்துக்கிருச்சு. எனக்கும் அரசியல்ல ஆர்வம் இருக்கு. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
அதிமுக பிரமுகர்: அது ஒன்னுமில்ல. நீங்க எங்களோட வந்து பணியாற்றணும்.
தைப்பூசம்: இல்லைங்க. நான் தி.மு.க. கொள்கையால ஈர்க்கப்பட்டு கட்சிக்குள்ள வந்தவன். என்னால அங்கே வரமுடியாது.
அதிமுக பிரமுகர்: உங்க முடிவு இதுதானா?
தைப்பூசம்: ஆமா.
அதிமுக பிரமுகர்: (உடனிருப்பவர்களைப் பார்த்து) பாருங்க. தன் தொழிலே போனாலும் தன் கட்சிய விட்டுக்கொடுக்காம இருக்காரு. அரசியல்வாதின்னா இப்படித்தான் இருக்கணும்.

இப்படி அந்தப் பிரமுகர் பாராட்டினாலும், கடைசிவரை தைப்பூசத்திற்கு அந்தத் தொலைபேசி பூத் கிடைக்கவில்லை. பிறகு அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க. அழகிரியின் உதவியால் விக்ரம் மருத்துவமனைக்கு முன் ஒரு கடை அமைத்துகொண்டார் இவர். இன்றும் இவர்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தைத் தருவது அந்தக் கடைதான்.

தலைமை என்ன நினைக்கிறது?
கட்சியில் தான் இணைந்தது முதல் தனக்கு உதவிய மாவட்டத் தலைவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறார் தைப்பூசம். தொடக்க காலத்தில் தனக்குக் கட்சியில் ஊக்கமளித்த திருமங்கலம் நகர் மன்றத் தலைவர் அதியமான், மதுரை மாவட்டச் செயலாளராக இருந்த பொன். முத்துராமலிங்கம், மதுரை தெற்கு ஒன்றியச் செயலாளர் ரகுபதி உட்பட பலரும் கட்சியில் தன்னை வளர்த்தெடுத்ததாகப் பெருமை பொங்கக் குறிப்பிடுகிறார்.

graphic ஸ்டாலினுடன் தைப்பூசம்
 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தபோது, இவரது அரசியல் களச் செயல்பாடுகளை அறிந்து அவர் வியந்திருக்கிறார். ஒரு பார்வை மாற்றுத்திறனாளியால் இத்தனை தூரம் சிறப்பாகச் செயல்பட முடியுமா? எப்படி இதை நிகழ்த்திக் காட்டுகிறீர்கள்?” என்று அவர் கேட்டதும், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் இவரது செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள். இத்தகைய சிறந்தவர்களால்தான் தன்னால் தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற முடிகிறது என்கிறார் தைப்பூசம்.

அப்படி என்ன செய்துகொண்டிருக்கிறார்?
கட்சியின் வார்டு செயலாளர் மேற்கொள்ளும் அத்தனை பணிகளையும் இவர் செய்துகொண்டிருக்கிறார். தேர்தல் காலங்களில் தனது வார்டில் பெரும்பான்மையான வாக்குகள் தி.மு.க.விற்கே சென்றுசேரும் என்கிறார். மக்களைக் கலந்துரையாடி தன் பக்கம் ஈர்க்கும் திறன் படைத்தவராக இவர் இருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

முதலில் கட்சிக் காரர்கள் 10 பேரைத் தேர்ந்தெடுத்து மக்கள் வீடுகளுக்குச் செல்லச் சொல்வேன். எல்லோருக்கும் கட்சிக் கொள்கைகளையும், எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதையும் எடுத்துரைக்கச் சொல்வேன். அவர்கள் திரும்பி வந்து நடந்த நிகழ்வுகளை விளக்குவார்கள். சென்றவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டவர்கள், தி.மு.க குறித்த எதிர்மறை எண்ணங்களோடு இருப்பவர்களைக் குறித்துக்கொண்டு அடுத்த நாள் நான் அவர்கள் வீட்டிற்குச் செல்வேன். அவர்களிடம் அவர்கள் கேட்கும் எதிர்மறைக் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிப்பேன். உறுதியாகச் சொல்கிறேன், என் விளக்கத்திற்குப் பிறகு அவர்கள் நிச்சயம் தி.மு.கவிற்குத் தான் வாக்களிப்பார்கள்”.

கட்சிக்காக வாக்குகளைப் பெறுவதற்குத் தான் மேற்கொள்ளும் முயற்சிகளை இப்படி விளக்குகிறார் தைப்பூசம். கொடி கட்டுவது தொடங்கி அத்தனை வேலைகளையும் செய்கிறார் இவர். பலரது கிண்டல்களுக்கும், ஏளனங்களுக்கும் தொடர்ந்து உள்ளானாலும் கட்சிப் பொறுப்பை மனதார நிறைவேற்றுகிறார் தைப்பூசம். எப்படி  இவையெல்லாம் சாத்தியமாகிறது?” என்று நாம் கேட்டபோது, “நல்ல நண்பர்களால்தான்என்று புன்முறுவலோடு பதிலளிக்கிறார்.

graphic தன் குடும்பத்தினருடன் தைப்பூசம்
இவரிடம் நாம் கேட்ட இன்னும் சில கேள்விகள்
கேள்வி: 4 பார்வையற்றவர்களைக் கொண்ட குடும்பத் தலைவராகத் தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சிக்கல்கள்?
பதில்: நிறய. நிறைய. ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! நண்பர்கள் தான் என்னை எல்லாச் சிக்கல்களிலிருந்தும் மீட்டு வருகிறார்கள். பார்வையற்றவர்களுக்குத் துணையாக இருப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே. நான் கூறுவதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ தெரியவில்லை. பார்வையற்றவர்களைப் பெற்றோரும், உறவினர்களும் சரியாகப் புரிந்துகொண்டு, அவர்களை முன்னேற்றுகிறார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. நண்பர்கள் தான் அவர்கள் வாழ்வை வடிவமைக்கிறார்கள். சிக்கல்களிலிருந்து அவர்களை மீட்கிறார்கள்.
 கேள்வி: அரசியலில் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறீர்களா?
பதில்:
கேள்வி: பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏன் அரசியல் களத்தில் இறங்குவதில்லை
பதில்: இங்கு நம்மை நாமாக நிரூபிப்பதற்கே அதிக காலம் தேவைப்படும். அதற்கு நிறய பொறுமையும், தன்னம்பிக்கையும் அவசியம். நிறைய அவமானங்களைத் தாங்கியாக வேண்டும். இதனால் நம்மவர்கள் யோசிக்கக்கூடும். எல்லோரும் களத்தில் இறங்கிச் செயல்படுவது கஷ்டம்தான். பேச்சாளர்களாக நம்மவர்கள் கட்சிகளில் இணையலாம். ஆனால், அப்படியும் யாரும் வருவதில்லை. ஏன் என்று தெரியவில்லை.

கேள்வி: அரசியலில் பார்வை மாற்றுத்திறனாளியாக அனுபவிக்கும் துயரங்கள் எவை?
பதில்: ஒரு வேளை எனக்குப் பார்வை இருந்திருந்தால், என்னுடைய உழைப்பிற்கு மாவட்டச் செயலாளர் அளவிற்கு உயர்ந்திருப்பேன். ஒரு சட்டமன்றத் தொகுதி  வேட்பாளராகக் களம் கண்டிருப்பேன். நம் மூளை வேகமாகச் செயல்பட்டாலும், இந்தக் குறைபாடு நம்மை ஒரு வகையில் முடக்கத்தான் செய்கிறது. மேதகு அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது, இது குறித்து அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அக்கடிதத்தில் நான் கேட்டிருந்தேன். இப்போது சில அமைப்புகள் இக்கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள். நமக்கென்று இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது, என்னைக் கட்சி இன்னும் சிறப்பாக அங்கீகரிக்கும்.
கேள்வி: கட்சித் தலைமையிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: எனக்குத் தந்துகொண்டிருக்கும் அன்பை, ஆதரவை இன்னும் தொடர்ந்து தரவேண்டும் என்பதைத் தவிர நான் வேறு எதையும் தலைமையிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என் மரணத்திற்குப் பிறகு என் உடலில் கட்சிக் கொடி போர்த்தப்படும் பெருமையே போதும்.

இவரைத் தொடர்புகொள்ள: 9486729017
வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com
இத்தொடரின் முந்தைய பகுதிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக