நினைவுகள்: தீபங்கள் ஏற்றிய தீக்குச்சிகள்:

பார்வையற்றவன் 
graphic சாவித்ரி பாய் பூலே

குழந்தைப் பருவம் மிகவும் கொண்டாட்டமானது. தொடக்கப் பள்ளி வாழ்க்கைதான் நாம் ஆகக்கூடிய மகிழ்ச்சியுடன் களித்த காலகட்டம். எத்தனை பொறுமையுடன் பெண் ஆசிரியர்கள் நம்மை அரவனைத்தார்கள். நான் புதுக்காடு என்னும் ஊரில் படிக்கையில் எனக்கு எதுவும் எழுதத்தெரியாது; ஒரு சிலேட்டில் சும்மா கோடுகளைக் கிரிக்கி ஆசிரியையிடம் காட்டுவேன்! அவர்கள் வெரிக்குட் எனச் சொல்வார்கள். இப்படி நான் பல முரை காட்டி இருக்கிறேன் பொறுமையுடன் அவர்கள் அத்தருணங்களைக் கடந்து போனதை இன்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

பள்ளி முடிந்ததும் நாங்கள் டீச்சருடன்தான் நடந்து வீட்டுக்கு வருவோம்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் என முறைவைத்து டீச்சர் கைகளைப்பிடித்துக்கொண்டு நடந்திருக்கிறோம்.  நம் குழந்தைப்பருவத்தை அழகாக்கிய தேவதைகள் தொடக்கப்பள்ளி ஆசிரியைகள்.

நான் புதுக்கோட்டைப் பள்ளியில் சேர்ந்த போது எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியைகள் இன்றும்   எனது மனதில் நீங்காது இடம்பிடித்திருக்கின்றனர். நான்: [பாவம் ஒரு பக்கம்; பழி ஒரு பக்கம்;] என்ற பாடலை சரோஜினி டீச்சரிடம் பாடிக்காட்ட. அவர் அது என்ன படமெனக்கேட்டார். நான் சிறைப்பறவை எனச்சொன்னேன். அன்று முதல் அவர் என்னைச் சிறைப்பறவை என்றே அழைத்தார். அப்போது அது பற்றி நான் எதுவும் சிந்திக்கவில்லை. இப்போது யோசிக்கிறேன், வீட்டை விட்டு விடுதியில் வந்து படிக்கும் என் போன்ற அனைத்து பார்வையற்றவர்களுமே சிறைப்பறவைகள் தானே

பாட்டுப்போட்டிகளுக்குப் பாடல்கள் எழுதித்தரும் விமலா காந்தி டீச்சர், ஒரு நாள் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென விரைவாய் வெளியே ஓடினார் சின்ன சிரிப்பு சத்தம்; பின் உற்சாகமாய் கூவினார் எல்லோரும் வாங்க என! எங்கோ பார்த்துக்கொண்டிருந்த சிட்டுக்குருவியைப்  பிடித்து வைத்துக்கொண்டு; இதுதான் சிட்டுக்குருவி என எங்களுக்குத் தொட்டுக்காட்டினார். 

மீனா டீச்சரை மரக்க முடியுமா? எங்களுக்கு எத்தனை கதைகளை வகுப்பில் கூறி இருக்கிறார். திரி சூழம் தொடர் கதை தொடங்கி பாரதம், ராமாயணம், தெனாலிராமன், எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவர்தான், தட்டை கடிகாரமாய் நினைத்துக்கொள்ள வேண்டும். வெஞ்சனக்கிண்ணத்தை 3 மணியிலும், தண்ணி டம்லரை 9 மணியிலும் வைக்கவேண்ண்டுமென்று, பள்ளியில் சேர்ந்ந்தபோது சொல்லிக்கொடுத்தார். அந்த உத்திதான் ஒரு கூட்டு மட்டுமே உள்ள சாதா சாப்பாட்டையும், பலவகையான பதார்த்தங்கள் பரிமாரப்படும் விருந்து சாப்பாட்டையும், ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என அறிந்துகொண்டு வெளுத்துக்கட்ட உதவுகிறது.  

வளர்மதி டீச்சர் கொஞ்சம் கண்டிப்பான டீச்சர். எனது அம்மாவிடம், “இவன் சிறப்பாகப் படிப்பான் எந்ன நினைக்கிறானோ அதைப் படிக்க வையுங்கள்என்றாராம். இதை என் அம்மா பல முரை சொல்லியிருக்கிறார். இன்றோ அந்த டீச்சர் இவ்வுலகில் இல்லை என்ன அவசரம் என்று தெரியவில்லை. விரைவாய்  விண்ணுலகம் ஏகிவிட்டார். 

தொடக்கப்பள்ளி ஆசிரியைகளை மரக்கவே முடியாது. இன்று பார்த்தாலும் அதே கணிவுடன் பேசவும், உதவவும் செய்கிறார்கள். பெண்களுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியை பணிதான் ஏற்றது போலும்!. யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.

எனக்கு வாய்த்த மேள் வகுப்பு ஆசிரியைகள் அவ்வாறு என்னவைத்துவிட்டனர்.  எனது கணித ஆசிரியையைத்தவிர. அந்த ஆசிரியைக்கு விரைவாய் அரசு வேலை கிடைத்துவிடக்கூடாது என விரும்பிய மாணவர்கள் பலர். தாங்கள் பத்தாம் வகுப்பு முடித்த பின் வேலை கிடைக்க வேண்டுமென ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் விரும்பினர். அந்த அளவிற்குக் கணிதம் சிறப்பாய் எடுப்பார் ஜூடி மிஸ். வேறு சில காரணங்களுக்காகப் பல ஆசிரியைகள் என் நினைவில் நிற்கிறார்கள். கற்பித்ததால் அல்ல வேறு விடையங்களுக்காக. 

நான் கல்லூரியில் சந்தித்த ஒரு ஆசிரியையைப் பற்றி சொல்லி ஆக வேண்டும். அவர் எனக்கு 3 ஆண்டுகள் அனைத்து பருவத்திலும்  வகுப்பெடுத்திருக்கிறார். ஒரு நாள் கூட சிரித்துப் பார்த்ததில்லை. 

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருந்த நேரம், அப்போதுதான் அவர் ஒரே ஒரு நகைச்சுவை சொன்னார். ராவணன் கைலாய மலையைத் தூக்குகிறான். பார்வதி நடுங்க, சிவன் தன் பெருவிறலால் மலையைக் கீழ் நோக்கி அழுத்த; ராவணன் கை, மலைக்கு அடியில் மாட்டிக்கொள்ள, ஒன்றைச் சொல்லிக் கத்துகிறான். உடனே சிவன் அழுத்துவதை நிறுத்திவிடுகிறார்! அவன் என்ன சொல்லிக் கத்தியிருப்பான்? என எங்களிடம் கேட்க, நாங்கள் விடை தெரியாமல் அமைதியாய் இருக்க, அவரே கைலாஸ்! கைலாஸ்! எனக் கத்தினான் என்று விடையைச் சொன்னார்.

அன்றிலிருந்து சில நாளைக்கு மழை தொடர்ந்து பேய. அந்த அம்மா நகைச்சுவை சொன்னது தான் காரணமென அரசல் புரசலா பேசிக்கொள்ள. அது அவர் காதிலும் விழ, பிறகு அந்த அம்மாவின் வழக்கமான பார்முலாவிலேயே பாடம் நடத்தத் தொடங்கிட்டாங்க.

இத்தருனத்தில்,   இப்படி பெண்கள் கல்வி நிலையத்தில் நுழைந்து சேவைகள் ஆற்ற காரணமான ஒருவரையும் நினைக்கவேண்டும். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட சுகமான நினைவுகளை நாம் சுமந்திருக்கமுடியாது.

ஜோதி ராவ் கோவிந்த பூளே [1827-1890] மகாராஷ்டிரத்தில் பெண் விடுதலைக்காகத் தீவிரமாய் போராடியவர். பெண் குழந்தைகளுக்காகப் பள்ளியை அமைக்கிறார். அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பவர் யார் தெரியுமா? அவரின் மனைவி சாவித்திரி பாய். அக்காலகட்டத்தில் படித்த பெண்கள் சமைத்தால் நஞ்சாகிவிடும் என நம்பினர்.  பல எதிர்ப்புகளை சமாளித்து பள்ளியை நிறுவுகிறார் பூலே. தன்மனைவி சாவித்திரி பாய்க்கு கற்ப்பித்து ஆசிரியை ஆக்குகிறார்.

அப்பள்ளியை நடத்த விடாமல் பல இடையூறுகளைக் கொடுக்கின்றனர் ஊர் மக்கள். சாவித்திரி பள்ளிக்குச் செல்லும் போது சானியைக்கரைத்து தலையில் ஊற்றுகின்றனர். இதைக் கணவனிடம் சொல்கிறார். நாளை முதல் மாற்று உடையை எடுத்துச் செல் அங்கே குழித்து விட்டு உடை மாற்றிக்கொண்டு பாடம் நடத்து என்றார். இது ஒரு தொடர்கதையாய் நடக்கிறது. 

இச்செய்கையைப் பார்த்த ஒரு பெண் சானி கரைத்து ஊற்றிய பெண்ணை அரைகிறால். நாம் தான் படிக்கவில்லை அந்த பிள்ளைகளாவது படிக்கட்டுமே என ஆக்ரோசமாய் சொல்ல அப்பெண்ணுடன் பல பெண்களும் கைகோர்த்து சாவித்திரிக்கு ஆதரவு தருகின்றனர். இந்த சாவித்திரிதான் இந்தியாவின் முதல் ஆசிரியை. ஜோதி ராவ் பூலே நடத்திய பெண் விடுதலை இயக்கங்களில் இவரும் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார். 

இத்தம்பதியினருக்குக் குழந்தை இல்லை. பூளே இறந்த போது சுடுகாட்டுக்குச் சென்று இவர்தான் இறுதி கிறியைகளை செய்தார். இந்த ஆசிரியைக்கும் எனது மனதில் இடம் உண்டு. 

இன்று எத்தனையோ தீபங்கள் ஒளிர்கின்றன! அதன் பிரகாசத்திற்குப் பின் தன்னை எரித்துக்கொண்ட தீக்குச்சிகள் மறைந்திருக்கின்றன. அவற்றைத் தீபங்கள் மட்டும் நினைவில் வைத்து. தனக்கு அடியில் இருக்கும் இருளில் மறைந்த படி கண்ணீர் வடிக்கின்றன. 

என்னை ஏற்றி விட்ட ஆசிரியைகளுக்கு சமர்ப்பணம்.      
தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக