X. செலின்மேரி
ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்னும் கருத்து நெடுங்காலமாகவே வழக்கத்தில் உள்ளது. ஆம். தம்மிடம் பயில வரும் மாணவர்களைத் தம் சொந்தக் குழந்தைகள் போலப் , அன்பையும் அறிவையும் ஊட்டி, கனிவும் கண்டிப்பும் கலந்து, அவர்களுக்கு வெளி உலகை அறிமுகம் செய்கின்ற அத்தனை ஆசிரியர்களும் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்கள் தாம். அதிலும் குறிப்பாக, தம் பள்ளியில் வந்து சேரும் மாற்றுத் திறன் பெற்ற குழந்தைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு,, அவர் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிப் பாடங்களை விட வாழ்வியல் பாடங்களையும், உலகியல் அனுபவங்களையும், கலையியல் புரிதல்களையும் ஏற்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கின்ற எல்லா நல்லுள்ளம் கொண்ட சிறப்பாசிரியர்களையுமே நமது கண்கண்ட தெய்வங்கள் என்று போற்றினாலும் அது மிகையாகாது.
ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்னும் கருத்து நெடுங்காலமாகவே வழக்கத்தில் உள்ளது. ஆம். தம்மிடம் பயில வரும் மாணவர்களைத் தம் சொந்தக் குழந்தைகள் போலப் , அன்பையும் அறிவையும் ஊட்டி, கனிவும் கண்டிப்பும் கலந்து, அவர்களுக்கு வெளி உலகை அறிமுகம் செய்கின்ற அத்தனை ஆசிரியர்களும் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்கள் தாம். அதிலும் குறிப்பாக, தம் பள்ளியில் வந்து சேரும் மாற்றுத் திறன் பெற்ற குழந்தைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு,, அவர் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிப் பாடங்களை விட வாழ்வியல் பாடங்களையும், உலகியல் அனுபவங்களையும், கலையியல் புரிதல்களையும் ஏற்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கின்ற எல்லா நல்லுள்ளம் கொண்ட சிறப்பாசிரியர்களையுமே நமது கண்கண்ட தெய்வங்கள் என்று போற்றினாலும் அது மிகையாகாது.
என்
கல்விக் கண்ணைத் திறந்த மதுரை மாவட்டம் பரவையில் அமைந்துள்ள புனித வளனார்
பார்வையற்றோர் பள்ளியில் கடந்த 25
ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையற்றோர் சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் தன்
பார்வையை பதிக்க தவறாத பார்வையுள்ள ஆசிரியையாகிய திருமதி R. மரிய ஜெஸி அவர்களை அவர்களுடைய பழைய மாணவி
என்ற முறையிலும், விரல்மொழியரின்
எழுத்தாளர் என்ற வகையிலும் சந்தித்து
அவர்களோடு சிறியதோர் உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்புக் கிட்டியது. வழக்கமான வணக்கம்
மற்றும் நலம் விசாரித்தலோடு எங்கள் உரையாடல் தொடங்கியது.
கேள்வி:
டீச்சர் உங்களைப்பற்றிய சிறியதோர் அறிமுகத்தை விரல் மொழியர் வாசகர்களுக்காகக்
கூறுங்கள்.
பதில்:
நான் பிறந்தது 08.05.1964
அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ஞான ஒளி புறத்தில். தந்தை பெயர் திரு. A. ரோமன் மைக்கெல். தாயார் திருமதி. R.இருதய மேரி. என்னுடைய நடுநிலைப் பள்ளிக்
கல்வி வரை ஹோலி ஃபேமிலி பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை கேப்ரன் ஹால்
பள்ளியிலும் படித்தேன். மேல்நிலைக்
கல்வியில் நர்சிங் பாடத்தை முதன்மையாகக் கொண்ட படிப்பைத் தேர்ந்தெடுத்துப்
படித்தேன். நான் கடலூரில்
உள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையத்தில் இடைநிலை ஆசிரியருக்கான பட்டயப் படிப்பை
முடித்தேன்.
கே:
நமது பள்ளியின் பணி வாய்ப்பு உங்களைத் தேடி வந்ததா டீச்சர்?
ப:
இல்லை; பயிற்சியை
முடித்து சில காலம் பணி வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது செயின்ட்
ஜோசப்ஸ் பார்வையற்றோர் பள்ளியில் ஆசிரியருக்காண காலிப்பணியிடம் இருப்பதாகக்
கேள்விப்பட்டு, பள்ளிக்குச்
சென்று பார்த்தபோது அந்தச் சூழலும் குழந்தைகளின் அணுகுமுறையும் என்னை மிகவும்
கவர்ந்து விட்டது. பிறகு சென்னை பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான இடைநிலை
ஆசிரியர் பட்டயப்படிப்பை நடத்தும் மையத்திற்குச் சென்று ஓராண்டு முறையான சிறப்புப்
பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். மேலும் YMCA அமைப்பின்
மூலம் Mobility & Orientation பயிற்சியையும்
பெற்றேன். 1991
இல் நமது பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணி வாய்ப்பைப் பெற்றேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு என் பணி
நிரந்தரமாக்கப்பட்டது. இன்றுவரை மகிழ்ச்சியோடும், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் இங்கு
பணியாற்றி வருகிறேன்.
கே:
நமது பார்வையற்றோர்
பள்ளியின் பார்வையுள்ள ஆசிரியராக நீங்கள் கற்றுக்கொண்டவற்றையும், பெற்றுக்கொண்டவற்றையும்,
கற்றுக்
கொடுப்பவற்றையும் பற்றி வாசகர்களுக்குச் சொல்லலாமே.
ப:
முதலில் பார்வையற்றோர்
பள்ளியில் பணிபுரியும் வாய்ப்பை இறைவன் எனக்கு ஏற்படுத்தித் தருவார் என்பதே எனக்கு
வியப்பாகத் தான் இருந்தது. குழந்தைகளின் அறிமுகம் பெற்றவுடன், அவர்களது உலகம் புதுமையானது; அன்பு, பரிவு, பாசம், ஏக்கம் இவற்றை மட்டுமே எதிர்பார்க்கின்ற
கவலைகள் இல்லாத, கனவுகளுடன்
கூடிய வினோதமான இயல்பைப் பெற்றது என்பதை நான் முதலில் புரிந்துகொண்டேன். மேலும்,
அவர்களுக்கு ஆசிரியர்
என்ற முறையில் பாடங்களைக் கற்பிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களுடைய குடும்பப் பின்னணி, மனநிலை என ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு,
ஒவ்வொரு சூழ்நிலையையும்
எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் எனக்குத் தெரிந்த முறையில் குழந்தைகளுக்குக்
கற்றுக் கொடுப்பேன். வெளியுலக அனுபவம் பெற முதலில் நமக்குள் சகஜமாக பேசி பழக
தெரிந்திருக்க வேண்டும்; மேலும்
பயமில்லாமல் அனைவருடனும் பழகும் முறையும் நிச்சயம் எட்டாம் வகுப்பை முடித்து பள்ளியை விட்டு
வெளியேறும் குழந்தைக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவ்வப்போது என்
செயல்களின் மூலம் உணர்த்திக் கொண்டே இருப்பேன்.
பிறகு
பிரெயில் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த நான் சிறு வயதிலிருந்தே பிரெயில்
எழுதுதல் மற்றும் வாசித்தலின் அவசியத்தை என் வகுப்புக் குழந்தைகளுக்கு
உணர்த்துவதோடு, அதற்கென்று நேரம் செலவழித்துக் கற்றுக்
கொடுப்பேன். வாசித்துப் பழகி சிறப்பான
முறையில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறும் குழந்தைகளைத் தொடர்ந்து வெற்றிபெற
ஊக்குவித்துக் கொண்டே இருப்பேன். குழந்தைகள் அனைவருடனும் தனிப்பட்ட முறையில் பேசி,
ஒவ்வொருவர் பற்றிய
புரிதலை உருவாக்கிக் கொள்வேன். சிறப்பாக வகுப்பறையில் அமைதி காக்கும் குழந்தைகளைத்
தேடித் தேடி அவர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துப் பேச வைப்பேன்.
பார்வையுள்ளோருக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் முன்னேறும் அளவிற்கு நமது
திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே
குழந்தைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு குழந்தையின்
வெற்றியின் போதும் வாழ்த்துச் சொல்லி அவர்களை விட நான் மகிழ்ந்ததையும் நீ
அறிந்திருப்பாய்..
கடவுளுடைய
இரக்கம், கிருபை,
பார்வை எல்லாமே
பார்வையற்ற குழந்தைகள் எல்லோர்மீதும் எப்போதும் இருக்கின்றது என்பதை உணர்த்தி, தேவைப்படும் சமயத்தில் அவர்களுக்காக
ஜெபிப்பேன். அவர்களும் என்னிடம் ஜெபிப்பது ஒரு புதிய வழக்கமாக உருவாக்கி மதிய உணவு
இடைவேளைகளில் என்னைத் தேடி வந்து பைபிள் வாசிக்கச் சொல்லி தங்கள் வேண்டுதல்களையும்
என்னிடம் கூறி நாங்கள் ஒரு குடும்பமாக ஜெபிப்போம். மேலும்,
நடந்து செல்வதற்குத்
தடுமாறும் குழந்தைகளுக்கு விழிக்கோலின் அவசியத்தை அவ்வப்போது எடுத்துரைப்பேன்.
வெளியில் மேடு பள்ளங்களை அறிந்து அவற்றிற்கேற்ப நிதானமாக நடந்து செல்லவும்,
வெளி உலகச் சூழலைப்
புரிந்துகொண்டு, எதிர்ப்படும்
சவால்களைச் சமாளித்து மற்றவர்களோடு சமமாக போட்டி போடவும், மற்றவர்களோடு தொடர்ந்து சிறந்த உறவு
முறையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் தேவையான அத்தனை அணுகுமுறைகளையும் என் அறிவுக்கு
எட்டிய வரைப் பயிற்றுவிக்கிறேன்.
கே:
நமது பள்ளி மாணவர்களுக்கு நாடகம், நடனம்,
பேசுதல், கவிதை எழுதுதல் என பல்வேறு திறமைகளை
உருவாக்குவதும், கலை
நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதிலும் உங்கள் பங்கு மகத்தானது. மாணவர்களைக்
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை எங்களோடு
பகிர்ந்து கொள்ளலாமே.
ப:
சொல்கிறேன்.
வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போதே ஒவ்வொரு மாணவரின் குண நலன்கள் மற்றும்
தனித்திறமைகளை அடையாளம் கண்டு விடுவேன். பொதுவாக வகுப்பறையில் அமைதி காக்கும்
குழந்தைகளுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.
அவர்களுக்கு stage fear போக
வேண்டும் என்பதற்காக சிறுசிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகளை முதலில்
கொடுப்பேன். பின்
அவர்களே கேட்டு வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிடுவார்கள். நான்
பயிற்றுவித்த ஞானக் கிறுக்கன் நாடகத்தை ஏறக்குறைய 25 இடங்களில் நடித்துக் காட்டியதாக சங்கர்
என்ற மாணவர் சொல்லக்கேட்டு பெருமிதம் அடைந்தேன்.
கே:
நமது பள்ளி குழந்தைகளின் இசை மற்றும் நடனத்தில் உங்களுடைய பங்களிப்பு பற்றி…
ப:
இசை மற்றும் நடனத்திற்கென தனித்தனி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத
சமயங்களிலும், வெளி
இடங்களுக்கு போட்டிகளுக்காக அழைத்துச் செல்லும் பொழுதும், குழந்தைகளை வழிநடத்தலில் என்னுடைய
பங்களிப்பைச் செலுத்தத் தவறுவதில்லை.
கே:;நமது பள்ளியின் ஆசிரியர் தினக்
கொண்டாட்டங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே..
ப:
நிச்சயமாக. நமது பள்ளியில் ஆசிரியர் தினவிழா ஒரு சிறப்புப் பண்டிகை போலக்
கொண்டாடப்படும் என்பது உனக்குத் தெரியும் தானே! குழந்தைகள் ஆசிரியர்கள்
அருட் சகோதரிகளுக்குத்
தெரியாமல் சுயமாக பாடல்கள், கவிதைகள்,
நடனங்கள், நகைச்சுவைக் கருத்துக்கள், சிந்தனைகள் மற்றும் புதுமையான
நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியர்களை மகிழ்விப்பர். எங்கள் பயிற்றுவிப்பின் வெற்றி நமது
குழந்தைகளின் பயிலும் முறையிலும், அவர்கள்
தாமாக திறமைகளை வெளிக்கொணரும் விதத்திலும் அடங்கி இருப்பதாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு
குழந்தையின் பங்களிப்பும் பாராட்டத் தகுந்த வகையில் இருப்பதோடு, அவர்களின் சிறப்புவ் பரிசுகளும் எங்களை
சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துவிடும். அவர்களுக்கு பாடல் எழுதவோ
கவிதை கட்டுரை என ஏதோ ஒன்றை சுயமாகப் படைக்கவோநாங்கள் கற்றுக் கொடுத்திருந்தாலும்,
எங்கள் தலையீடீன்றி
அவர்களாக புதுமையாக அதிலும் சிறப்பாக ஒரு செயலை எங்களை மகிழ்விப்பதற்காகச்
செய்கையில், அவற்றைக்
காணும்போது நாங்கள் அடையும் அளவில்லா ஆனந்தத்தையும், பெருமிதத்தையும் வார்த்தைகளில் சொல்லி
விட முடியாது தான்!
கே:
விளையாட்டுப் போட்டிகளில் உங்களுடைய ஈடுபாடு பற்றி .
ப:
ஆம். விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம் தான். மொபிலிட்டி ஒரியண்டேஷன் பயிற்சி
பெற்றிருப்பதால் எனக்கு பார்வையற்றோருக்கான விளையாட்டுகளை எப்படி அவர்களுக்குப்
பயிற்றுவிப்பது என்பது நன்றாக தெரியும். விளையாட்டுப் பாட வேளைகளில் குழந்தைகளின் ஆர்வத்தைக்
கணித்து விடுவேன். அதற்குப் பிறகு அவரவர் திறமைக்கு ஏற்பப் பள்ளியில் நடைபெறும்
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பேன். பெரும்பாலும் விளையாட்டுப்
போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யும்பொழுது, எந்த குழந்தையும் விடுபடாத அளவுக்கு
எல்லாருக்கும் அவர்களுக்கு ஏற்றார்போல ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை
உருவாக்கி விடுவேன். அவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறும்போது அவர்களைவிட நான்
மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
கே:
வெளி இடங்களுக்கு குழந்தைகளை விளையாட அழைத்துச் சென்ற அனுபவங்கள்..
ப:
ஆம். குழந்தைகளை
வெளியில் அழைத்துச் செல்வது என்றாலே எனக்கு தனி ஆர்வம் தான். அவர்களைக் கண்ணும்
கருத்துமாக கவனித்துக் கொள்வதோடு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும்
வழிமுறைகளையும் கற்பிப்பேன். குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது
போட்டி நடத்துபவருடன்
எப்படியாவது கேட்டு ப்பெற்றுக் கொடுத்து விடுவேன். சில சமயங்களில், பரிசுகள் மாற்றி எழுதப்படுவதும் உண்டு;
அப்போது, எங்கள் குழந்தைகளுக்காக போராடி அவரவர்
திறமைக்கு ஏற்ற பரிசுகளை பெற்றுக் கொடுத்து விடுவேன். அத்தோடு நமது பள்ளியின் பழைய
மாணவர்கள் அந்த மைதானத்தில் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் வாய்ப்புகள்
மறுக்கப்படுவது தெரிந்தால் அவர்களுக்காகவும் தொடர்ந்து வாதாடி அவர்கள்
பங்களிப்பையும் உறுதி செய்யும் வரை ஓயமாட்டேன்.
ப:
எனக்குக் குழந்தைகளோடு கல்விச் சுற்றுலாவாக எங்கு சென்றாலும் மகிழ்ச்சி தான்.
குழந்தைகளை புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, மேடு பள்ளங்களில் கவனமாக பயணப்படச்
செய்வது, சிற்பங்கள்
மற்றும் ஓவியங்களைத் தொட்டுப்பார்க்க சொல்லி அவர்கள் முகம் மலர்ச்சியைக் கண்டு
மகிழ்வது,, வெளியுலக
உறவுகளுடன் பழகவும், தனியாகப்
பயணிக்கவும் கற்றுக்கொடுப்பது மேலும் ஒவ்வொரு இடத்திற்குச் சென்று திரும்பும் போதும்
குழந்தைகளின் எண்ணிக்கையைச் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்வது என
ஒவ்வொரு பணியையும் விரும்பி ஏற்றுக் கொள்வேன். என்னுடைய கவனிப்பு சுற்றுலாத்
தளங்களுக்கு வரும் பல பயணிகளையும் ஈர்த்திருப்பதாக பலர் பாராட்டுவதைக் கேட்டு
இன்புற்றிருக்கிறேன்.
கே:
உங்களுடைய நீண்ட தூரப் பயணம் என்றால் எதைச் சொல்வீர்கள்?
ப:
கடந்த 2000 ஆவது ஆண்டில் கலை நிகழ்ச்சிகளுக்காக
பத்துக் குழந்தைகள், இரண்டு
அருட்சகோதரிகள் மற்றும்
இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் 14
பேர் டெல்லிக்குச் சென்றோம். YMCA & AICB நடத்திய தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளுக்கான
போட்டி அது. அப்போது தொடர் வண்டியில் செல்லும் போதும், அங்கு குழந்தைகள் தங்குமிடம், அவர்களது உணவு மற்றும் இதரத் தேவைகள்,
குழந்தைகளுக்கு போட்டி
நடைபெறும் இடங்கள், போட்டியின்
பரிசு விபரங்கள், ஒவ்வொன்றாக
விரும்பித் தேடிப் போய்த் தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன்.
அதிலும் நமது மாணவர்கள்
நடித்துக் காட்டிய, Skit அதாவது,
சமுதாயத்தில்
ஊனமுற்றோர் ஒடுக்கப்பட்டோர் அனைவரும் கடவுளின்ன் படைப்புகள் என்று கூறி அவர்களைத்
தேற்றி அவர்களது உயர்வுக்கு ஓர் இளம் பெண்மணி வழிகாட்டுவதாகவும், சில ஆண்டுகளுக்குப்பிறகு அந்த ஊனமுற்றோர்
தங்களைப் புறக்கணித்த சமுதாயம் பற்றிக் கவலைப்படாமல் தம் சமூகத்தின் உயர்வுக்கு
உதவுவதாகவும் வடிவமைக்கப்பட்ட நாடகம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றது. அதில்
நீயும் நடித்திருந்தாய் தானே?
கே:
ஆமாம் டீச்சர். அபார நினைவாற்றல் உங்களுக்கு. வியப்பாக இருக்கிறது. டீச்சர்,
உங்களிடம் படித்த பழைய
மாணவர்களோடு இப்போதும் தொடர்பில் உள்ளீர்களா?
ப:
ஆம். என்னிடம் படித்த 500
–க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுப்
பணிகளைப் பெற்று குடும்பத்தோடு வாழ்ந்து சமுதாயத்தில் சிறப்பானவர்களாக மிளிர்ந்து
கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை
என்னுடைய மாணவன் உதயகுமார் என்னைப்பற்றிக் கூறும்போது, "நான் தற்போது அரசுப் பள்ளியில் ஆங்கில
ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஜெசி டீச்சர் சொல்லிக்கொடுத்த
ஆங்கிலம்தான்" என்று சொல்லக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். மேலும், பலரையும் பல கோணங்களில் கண்டு
களிப்படைந்திருக்கிறேன். என்னிடம்
படித்த பழைய மாணவன் விஜயகுமாரை அவ்வப்போது சந்திப்பதுண்டு. அவர் என்னை எங்கு எப்போது பார்த்தாலும்
மரியாதை கலந்த அன்போடு தொடர்ந்து பேசிப் பழகுவதோடு, அவருடைய நண்பர்களிடம் என்னைப் பற்றிப்
பெருமையாகக் கூறுவார். அதைக் கேட்டு நானும் பெருமிதம் அடைந்திருக்கிறேன்.
கே:
டீச்சர், உங்கள்
குடும்பம் பற்றி…
ப:
என்னுடைய கணவர் டேவிட் ஜோசப் மற்றும் என் மகன் பிரெய்சன் ஜேக்கப் ஆகியோருடன்
அளவில் சிறியதும், அன்பிலும்
இறை பக்தியிலும் பெரியதுமானது தான் எங்கள் குடும்பம்.
கே:
இப்போது நமது பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் பற்றி…
ப:
முன்பெல்லாம்
குழந்தைகள் எதைச் சொன்னாலும் உடனே புரிந்துகொண்டு, படித்தல் உட்பட எல்லா வேலைகளையும்
சிறப்பாகச் செய்து முடித்து விடுவார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு பல முறை
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
கல்வியின் மீதான ஈடுபாடு இப்பொழுது பயிலும் குழந்தைகளுக்கு உங்களைவிடச் சற்றுக்
குறைவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்..
கே:
மாற்றுத்திறன் குழந்தைகளைத் தேடி பல இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள். அதுபற்றி...
ப:
பொதுவாக மாற்றுத்திறன் குழந்தைகளைத் தேடிச் செல்லும் பொழுது என்னுடன் ஒரு
பார்வையற்ற ஆசிரியரை அழைத்துக் கொண்டுதான் செல்வேன். பார்வையற்ற குழந்தைகளின்
பெற்றோரிடம் முதலில் அவர்களின் கல்வியின் அவசியத்தையும், நமது பள்ளியின் சிறப்பையும், அரசின் சலுகைகளையும், மேலும் கல்வி கற்று வாழ்வில்
உயர்ந்திருக்கும் பலரைப் பற்றியும் பல விளக்கங்கள் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைத்து விடுவேன்.
ஒரு சிலர் உள்ளடங்கிய கல்வியில் சேர்த்து இருப்பதாகக் கூறி ஓரிரு ஆண்டுகள் கழித்து
பள்ளிக்கு வந்து, அந்தக்
குழந்தையைச் சேர்த்து விட்டு, தன்
குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்டு தாம் தவறு செய்து விட்டதாகக் கூட என்னிடம்
சொல்லி வருந்தி இருக்கிறார்கள்.
கே:
டீச்சர், எதிர்காலத்தில்
சிறப்புக் கல்வியின் நிலை எப்படி இருக்கும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?
ப:
சிறப்புப் பள்ளிகள் இருப்பதால்தான்சிறப்புக் குழந்தைகள் முறையான கல்வி பெற்று
வாழ்வில் உயர முடிகிறது. 10 மாணவர்களுக்கு
1 ஆசிரியர்
என்ற வழக்கம் நடைமுறையில் இருப்பதால், ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக் குழந்தைகளின் கல்வியையும் தாண்டி
பழக்க வழக்கங்கள், தன்
சுத்தம், சுற்றுப்புறத்
தூய்மை, கடமைகள்
மற்றும் பொறுப்புகள், மகளிர்
பராமரிப்புக் கல்வி மற்றும் உளவியல் சார் நடவடிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்த
முடிகிறது. உள்ளடங்கிய கல்வியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் , சிறப்புக் கல்வியின் தேவையை உணர்ந்து,
தங்கள் பிள்ளைகளைச்
சிறப்புப் பள்ளிகளில் சேற்ப்பதில்
அதிக முனைப்புக் காட்டத் தொடங்கி விட்டனர்.
சில
சமயங்களில், சாதாரணப்
பள்ளி ஆசிரியர்களே பிரெயில் புள்ளிகளைப் பற்றித் தவறான கருத்துகளை பார்வையற்ற
குழந்தைகளின் பெற்றோரிடம் விதைத்து விடுகின்றனர். அதற்குப் பிறகு நமது பள்ளியில்
அந்தக் குழந்தை வந்து சேர்ந்து நல்ல முறையில் படிக்கும் போதுதான் ஆசிரியர்களின்
அந்த அணுகுமுறை தவறானது என்பதைப் புரிந்து கொள்வதோடு எங்களிடமும் வருத்தத்துடன்
பகிர்ந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன். எனவே எதிர்காலத்தில் , குழந்தைகளை முறைப்படுத்துவதில்
தவறேதும் நிகழாமல்
இருக்க சிறப்புப் பள்ளிகள் குறித்த விளம்பரங்கள், விழிப்புணர்வுப் பதாகைகள், கருத்துப் படங்கள் மற்றும் குறும்படங்கள்
அவ்வப்போது சமூக ஊடகங்களை அலங்கரிக்க வேண்டும். சிறப்புக் கல்வி குறித்த சரியான புரிதல்
பொதுவெளியில் ஏற்படும் பட்சத்தில்ஃ, சிறப்பு கல்விக்கு என்றுமே தோல்வி என்பதே இல்லை.
கே:
எதிர்காலச் சந்ததிக்கு உங்களுடைய அறிவுரை...
ப:
தந்நம்பிக்கை, தைரியம்,
அன்பு, அறிவு, ஒழுக்கம், உண்மை, உழைப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை ஆகியவற்றை சிறு வயதில்
இருந்தே வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். அடுத்தவருக்காக அல்லாமல் ,தம்முடைய முன்னேற்றத்திற்காக மட்டுமே
கல்வி கற்கிறோம் என இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும். மேலும், இறை பக்தியோடு, அனைத்து நற்குணங்களையும்
வளர்த்துக்கொண்டு, கல்வியில்
முழு ஈடுபாட்டை செலுத்தி படிக்கும் பட்சத்தில் இப்போது உள்ள அனைத்து குழந்தைகளும்
வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே என்னுடைய கருத்து.
செலின்:
டீச்சர் உங்களுடைய பொன்னான நேரத்தை விரல் மொழியருக்காகச் செலவிட்டமைக்கு நன்றி.
ஜெஸி
டீச்சர்: உன்னிடம் பேசுவது எனக்கு நேர விரையம் அல்ல. இந்த வாய்ப்பு எனக்கு
கிடைத்திருப்பது ஆண்டவர் கிருபை தான் மகிழ்ச்சி. உனக்காகவும், உன் குடும்பத்திற்காகவும், விரல்மொழியரின் வளர்ச்சிக்காகவும்
தொடர்ந்து ஜெபித்துக் கொள்கிறேன். நன்றி!
தொடர்புக்கு: celinmaryx@gmail.com
தொடர்புக்கு: celinmaryx@gmail.com
உங்களிடம் மாணவனாக படித்தது என்னுடைய பாக்கியம்
பதிலளிநீக்குமிகவும் நல்ல ஆசிரியர் அன்பான பாசமான ஆசிரியர் அவரைப்பற்றி சொல்ல வார்த்தை இல்லை
பதிலளிநீக்கு