ராகரதம் (20) உயிர் உணரும் தருணம்


சிலப்பதிகாரத்தில் ஒரு இடம் உண்டு. தன்னைப் பிரிந்த கோவலனுக்கு மாதவி ஒரு கடிதம் எழுதுவாள். ‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன். வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்.’ இந்த மடலைப் படிக்கிற கோவலன் அதை அப்படியே தன் தந்தையிடம் சேர்த்துவிடச் சொல்லிவிடுவான். “உங்கள் பாதம் வீழ்ந்து கேட்கிறேன். இதுவரை நான் சொன்ன சுடு சொற்களைப் பொருத்தருள வேண்டும்.” தன்னவள் தனக்குரைத்ததை சொல் மாற்றாமல் தன் தந்தைக்குச் சொல்லக் காப்பியத்தில் கோவலன் வாய்ப்பு பெற்றதுபோல், ஒரே பாடலை என்னவளுக்கும், என் மகளுக்குமாய் மாற்றிப் பாடிப் பார்த்தாலும் நான் பேரானந்தம் பெருகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது தமிழ்த்திரையிசை.

தொடக்கத்தில் பாடலின் முதல் அடியும் பாடலுக்கான ராகம் மட்டுமே நினைவாடிக்கொண்டிருந்ததால், இது தந்தை மகளுக்கான பாடல் என்றே நினைத்தேன். என் நினைப்பைப் பிழையென்று எப்படிச் சொல்ல முடியும்? பாடல்தான் ‘ராஜாமகள், ரோஜாமகள்’ என்று தொடங்குகிறதே.
‘ராஜாமகள், ரோஜாமகள்
வானில் வரும் வெண்ணிலா,
வாழும் இந்தக் கண்ணிலா?
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா?’ நிச்சயம் பாடல் மகளுக்கானதுதான் என்று முடிவு செய்தபடி சரணத்துக்கு முன்னேறினேன். சந்தேகம் தொடங்கியது; உபயம் ஜானகியம்மாவின் ஆஆ என்கிற ரீங்காரம்.

‘பன்னீரையும், வெந்நீரையும்
உன்னோடு நான் பார்க்கிறேன்;
பூவென்பதா, பெண் என்பதா?
உன்னோடு நான் கேட்கிறேன்.’ அவரே குழம்பிட்டாரு, பாரதியாரா, பாரதிராஜாவா மொமெண்ட்.

‘முள்ளோடுதான், கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்களாம்;
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்.’ அவள் திருவாய் மலர்த்துகிற சொல்லில் சிலநேரம் முள்ளும் இருக்கும், கள்ளும் இருக்கும்தானே.

‘கோபம் ஒரு கண்ணில்,
தாபம் ஒரு கண்ணில்,
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல? வண்ண மலரே!’ இப்போது சொல்லுங்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கோபம், தாபம்;  இது என்னவளுக்கான பாடல்தான் என்று முடிவு செய்தேன். அப்படியெல்லாம் அவசரப்படக்கூடாது என்றது அடுத்த சரணம்.

‘ஆடைகளும், ஜாடைகளும்
கொண்டாடிடும் தாமரை;
வையகமும், வானகமும்
கை வணங்கும் தேவதை.’ தேவதை என்றால்... மகல்தான்.

‘நீயும் ஒரு ஆணையிட
பொங்கும் கடல் ஓயலாம்.
மாலைமுதல், காலைவரை
சூரியனும் காயலாம்.’ மகள்களின் ஒற்றைச் சொல்லுக்கு மலையையே பெயர்த்துவரும் அனுமன்கள் தானே அப்பன்கள்.

‘தெய்வமகள் என்று
தேவன் படைத்தானோ?
தங்கச்சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ? மஞ்சள் நிலவே!’ எப்படிச் சிக்கியிருக்கிறேன் பார்த்தீர்களா?

குழப்பம் தீராத நிலையில், ஜெயச்சந்திரன் குரலை ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்றால், இந்தக் குழப்பத்தைப் பெருங்குழப்பம் ஆக்கியதே அவர் குரல்தான் என்பதும், ஒரே குரலில் ஓராயிரம் பாவத்தை உட்பொதிந்து வைத்திருக்கிற மாமேதை அவர் என்பதும் புரிந்தது. ஓடும் நீரைப் போன்றது அவர் குரல். பாத்திரத்திற்கேற்ப உருமாறும், நிறம் மாற்றும். நீங்கள் அப்பா என்று நினைத்தால் அப்பா, காதலன் என்றாலும் காதலன்; ஏன் பாசமுள்ள தாத்தா என்று நினைப்பதற்கும் இடம் தருகிற குரல் அது. பாடகர் ஜெயச்சந்திரன் ஒரு குரல்வழி குடும்பஸ்தன்.

இந்த ஜானகியம்மா ரீங்காரம்... அதையெல்லாம் அதிகம் ஆராயப் புகுந்தால், உங்களின் எண்ண மடிதனில் கிடந்து புரள்வது, உங்கள் வாழ்க்கைத் துணையா, அல்லது வயதுவந்த மகளா என்றெல்லாம் குழம்பத் தொடங்கிவிடுவீர்கள். போதா குறைக்கு இந்தச் சின்னத்தாயி மகன் வேறு தன் இசையால் செல் கிளர்த்தும் சேட்டைகள் செய்பவனாயிற்றே.

சரி இப்போதைக்கு பாடல் இடம்பெற்ற படத்தின் தலைப்பான ‘பிள்ளை நிலா’வைக்கொண்டு இது மகளுக்கான பாடல்தான் என முடிவுக்கு வரலாம் என்றால், மனம் கேட்க மாட்டேன் என்கிறது. அவளுக்கானதுதான் என்பதையும் பூரணமாய் ஏற்கப் பிடிக்கவில்லை மனதிற்கு. காரணம், அது குழப்பத்திலேயே சுகம் காண விழைகிறது. நம்ப முடியவில்லையா? இதை முயன்று பாருங்கள். உங்கள் அன்புமடி அகளவிரித்து, மனைவிக்கும் மகளுக்கும் இடம் கொடுங்கள்; பாடலை உங்கள் நினைவோடையில் நீந்தவிடுங்கள். எந்தச் சரணத்தில் எவர் தலை கோதினாலும், அந்தத் தருணமே நீங்கள் உயிர் உணரும் தருணம்.
ரதம் பயணிக்கும்.
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com

1 கருத்து: