ரா.
பாலகணேசன்
நம்
ஊடகங்கள் பல தலைவர்களை தங்கள் வலிமையால் மறக்கமுடியாதவர்களாக மாற்றிவிடுகின்றன. ஆனால், மறக்கக்கூடாத ஒரு தலைவரை நாம் இன்னும் மக்களிடம் சரியாகச் சென்று சேர்க்கவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இக்கட்டுரை.
யார்
அவர்?
வி.பி. சிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் (1931-2008) தான் அந்தத் தலைவர். அரச குடும்பத்தில் பிறந்த இவர், உத்திரப்பிரதேச முதல்வர், மத்திய நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், இந்தியப் பிரதமர் என்று பல பொறுப்புகளுக்குப் பெருமை சேர்த்தவர். முன்னாள் பிரதமர் என்ற நிலையை அடைந்த பிறகும், பல போராட்டங்களில் களம் கண்டவர்.
இவரைப்
பற்றி நிறைய எழுத இது புத்தகம் இல்லயே! கட்டுரை தானே! அதனால், 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த வி.பி. சிங் நாட்டிற்குச் செய்த சில நற்பணிகளை இக்கட்டுரையில் காண்போம்.
மண்டல்
குழு
அண்ணல்
அம்பேத்கரின் பங்களிப்பால் பட்டியல் வகுப்பினருக்கான (scheduled caste-SC) இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது. ஆனால், நாட்டில் பெருமளவில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோரின் நிர்வாகப் பங்களிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இது குறித்து ஆராய இந்திராகாந்தி காலத்தில் அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை ஆண்டுக்கணக்கில் தூங்கிக்கொண்டிருந்தது. வி.பி. சிங் தனது பிரதமர் பதவிக் காலத்தில் அவ்வறிக்கையைத் தட்டி எழுப்பினார். மத்திய அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்டோருக்கென 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அது நிர்வாகத் துறையில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இன்னும் அந்த அதிர்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பிற்படுத்தப்பட்டோருக்கென வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தந்த இவரைப் பற்றி எந்தப் பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புகளாவது பேசியிருக்கிறார்களா? பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை நம்பியிருக்கும் அரசியல் கட்சியினராவது பயிற்றுவித்திருக்கிறார்களா?
அம்பேத்கருக்கு பாரதரத்னா
இந்திய
அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரும்பணியாற்றிய அம்பேத்கருக்கு விடுதலை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ஆம் ஆண்டு வி.பி. சிங் காலத்தில்தான் பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. 1954-இல் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. 1955-இல் ஜவஹர்லால் நேரு பாரத ரத்தினமானார்; 1971-இல் இந்திராகாந்தி பாரத ரத்தினமானார். இவர்கள் இருவரும் விருது பெறும்போது இவர்கள்தான் பிரதமர்களாக இருந்தார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். நிலைமை இப்படி இருக்க, அடித்தட்டிலிருந்து மேலெழுந்து வந்து, கோடிக்கணக்கான ்பட்டியல் இன மக்களின் வழிகாட்டியாகத் திகழும் அம்பேத்கருக்கு பாரதரத்னா 1990 வரை வழங்கப்படவில்லை.
இன்னொன்றையும் இங்கே
குறிப்பிட்டாகவேண்டும்.
இதுவரை இவ்விருது பெற்ற 48 பேரில் அம்பேத்கர் தவிர வேறு ஒருவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை.
வி..பி. சிங்கின் இந்த அருஞ்செயலை எந்தப் பட்டியல் இனத்தினருக்கான அமைப்பாவது பேசியிருக்கிறதா?
போபர்ஸ்
ஊழலை வெளிக்கொணர்ந்தார்
ராஜீவ்
காந்தி பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற வி.பி. சிங் வரி ஏய்ப்பு செய்த பல பெரும் புள்ளிகளைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தினார். நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் அம்பானி முதலியோர் இப்படி மாட்டிக்கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தால் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்ட வி.பி. சிங் ராஜீவ் காந்தியோடு தொடர்புபடுத்தி இன்றளவும் பேசப்படும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளிக்கொணர்ந்தார். ஊழல் எதிர்ப்புப் போராளிகள் யாராவது இதனை நினைவுகூர்ந்திருக்கிறார்களா?
இலங்கையிலிருந்து அமைதிப்
படையைத் திரும்பப் பெற்றார்
ராஜீவ்
காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்திய அமைதிப் படையை அனுப்பிவைத்தார். அங்கு சென்ற நம் ராணுவம் பல அப்பாவித் தமிழர்களையும் துன்புறுத்துவதாகப் புகார்கள் வந்தன. இன்றளவும் இலங்கைத் தமிழர்களால் எழுதப்படும் பல படைப்புகள் அமைதிப் படை குறித்து பேசிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிக்க முடியா வடுக்களை ஏற்படுத்திய அமைதிப் படையை வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது திரும்பப் பெற்றார். இது குறித்து தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள் நமக்குச் சொல்லியிருக்கின்றனவா?
காவிரி
நடுவர் மன்றம்
காவிரி
நதிநீர் பிரச்சனை தலையெடுத்தபோது 1990-இல் நடுவர் மன்றத்தை ஏற்படுத்தி சமரசம் செய்தவர் வி.பி. சிங். ஆண்ட, ஆளும் கட்சிகள் இதை நம் மனதில் பதியவைத்திருக்கின்றனவா?
11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த ஒருவரால் இத்தனை சாதனைகளைச் செய்யமுடியும் என்றால், ஆண்டுக்கணக்கில் பதவியில் அமர்ந்திருப்பவர்களால் என்னென்ன செய்திருக்க முடியும்? 1990-இல் நடந்த நிகழ்வுகளையே நாம் அறியாமல் இருக்கிறோமே, காலங்காலமாக என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கும்? அவை எப்படியெல்லாம் வரலாற்றில் பதிவாகாமல் தவிர்க்கப்பட்டிருக்கும்? திரிக்கப்பட்டிருக்கும்?
ஒருவேளை
1991-இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொ்லை நிகழாமல் இருந்திருந்தால் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்திருக்கக்கூடும். வி.பி. சிங் இந்தியப் பிரதமராகியிருப்பார். இந்தியா இன்னொரு முறை நல்லரசைப் பெற்றிருக்கும். ஊழலும், மதவாதமும் மிரண்டு பணிந்திருக்கலாம். இன்றைய வரலாறே மாறியிருக்கக்கூடும். அதுதான் நிகழாமல் போய்விட்டதே!
வி.பி. சிங்கும் தமிழகமும்
வி.பி. சிங் உருவாக்கிய தேசிய முன்னணிக்கு 1989 தேர்தலில் தமிழகம் வெற்றியைத் தரவில்லை. ஆனாலும், அவர் தன் பங்களிப்பால் தமிழர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அவர் மனதில் தமிழர்களும் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டனர். அவர் பதவியில் இருந்தபோதும், பதவி விலகியபோதும் திராவிடர் கழகமும், தி.மு.கவும் அவரை முழுமையாக ஆதரித்தன.
சிறுநீரகங்கள் செயலிழந்த
அவருக்குத் தங்கள் சிறுநீரகத்தைக் கொடையளிக்க ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
அவ்வுதவியை அன்போடு மறுத்த அவர் இப்படிச் சொன்னார்.
“நான் அடுத்த பிறவியிலாவது தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்”.
இந்தியாவே
அவருக்கு எதிர்நிலையில் இருந்தபோது தனது முழு ஆதரவை அவருக்குத் தெரிவித்த தமிழகம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது? திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை அமைப்புகள், தலித்திய இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் இந்த அரும்பெரும் தலைவரை மீண்டும் தமிழக மக்களுக்கு நினைவுபடுத்தவேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்கும் தலைவரை
இந்தத் தலைமுறைக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். விளம்பர மோகிகளைக் கண்டு சிரித்துக் கடப்பவர்களிடம் இந்த அதிசய மனிதரைக் கொண்டுசேர்த்தாகவேண்டும்.
அறிய வேண்டிய தகவல்கள்.
பதிலளிநீக்குஅருமை மிக அருமை!