அக்டோபர் மாத விரல்மொழியர் இதழுக்காக
என் தேடல் துவங்கிய போது
அக்டோபர் 1 உலக முதியோர் தினம் என அறிந்தேன். முதியோரது இன்றைய பிரச்சனை குறித்து எழுத இதோ கனத்த இதயத்தோடு
இணைகிறேன்
எழுபிறப்பும் தீயவை தீண்டா
பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்
பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
இது என் ஐயன் வள்ளுவன் வாக்கு. ஆனால் இன்றைய கல்வி, நவநாகரீகம் பெற்றவர்களை சுமையெனக் கருதச் செய்கிறது.
தவமாய்த் தவம் கிடந்து, தன்னையும்
இழந்து, மார்பிலும் தோளிலும் சுமந்து, தன் வசதிகளையும் வாய்ப்புகளையும்
தொலைத்து பெற்றெடுத்த பிள்ளைகளை பக்குவமாய் அடை காத்து தான் பட்டினி கிடந்தும்
பிள்ளைகளுக்கு பாலையும் தேனையும் ஊட்டி உடல் வளர்த்த பெற்றோரை ... தான் கண்ட கனவுகளில் தன் மக்களை சேர்த்திட... துடிக்கும் பெற்றோரை ... சொந்தங்களையும் சுற்றங்களையும் காட்டிலும் தன் பிள்ளை சான்றோனாய்
ஆகிட அல்லும் பகலும் உழைத்திட்ட பெற்றோரை...
வாழ்க்கையின் பள்ளம் மேடுகளை
பக்குவமாய் தாண்டி வந்த முதிய குழந்தைகளைத் தனியே தவிக்கவிட்டு தனக்கென வாழாது
பிறர்க்கென வாழும் மக்களே...!
ஒன்றாய் ஆட்டு மந்தையில் குருவி கூட்டில்
அழகாய் வாழ்ந்திட வேண்டும் என கனவு கண்டு சிறு சிறு வியர்வை துளிகளை கூட விதைத்து
பொக்கிஷமாய் மாற்றிய அவர்களை தங்க கூண்டில் அடைத்து தங்கத்தையும் வைரத்தையும் வாரி
கொடுத்து என்ன பயன்??
அன்பாய் ஆறுதலாய் வாழ்வின் இறுதிவரை
துணை வரும் உறவாய் எண்ணி நம்மை சுமந்த அவர்களுக்கு என நாம் தந்த பரிசு.. !
முதியோர் இல்லங்கள்.
அயல்நாடுகளில் அடைக்கலம் தேடும்
பிள்ளைகள் தன் மரண காலத்தில் தன்னுடன் வாழ வேண்டும் என நினைத்திடும் சறுகான...
அந்த மலர்களை தன்மீது ஒட்டிய சறுகாய் எண்ணி தட்டிவிடுவது தான் காலக்கொடுமை.
தனிமை அது நரகத்தின் நுழைவாயில்.
என்பதை உணரா இன்றைய தலைமுறையினர் தன் பெற்றோரை தனிமைப்படுத்தி பின் தனக்கு.
அந்நிலை தோன்றும் என்று எண்ண மறந்தது தான், காலம் கற்பிக்கும் வாழ்க்கை பாடம். தன்னை பிரதிபலிக்கும்
கண்ணாடியாய். வாழ்க்கை சுழன்று கொண்டிருப்பதை புரியவைக்காமல் பொத்தி பொத்தி வளர்த்தது
பெற்றோரின் தவறு தான்.
வீட்டிற்கு விளக்கேற்ற அழைத்து வந்த
பெண் வீட்டிற்கே தீ மூட்டுவதும். மணமானதும் தனக்கும், தன் குடும்பத்திற்கும் அடிமையாய் மாறி தன் பிறந்த வீட்டை அடியோடு
மறந்திட கூறும் ஆண்களும் சற்றே யோசித்திட வேண்டும்
வீடுகளில் கிடந்து, வார்த்தையாலும் செயலாலும் நொந்து கிடப்பதைவிட முதியோர் இல்லங்கள் சாலச்
சிறந்தது என நினைக்கின்றனர் முதியோர். தனக்காக வாழும் சில நண்பர்களுடன் சாதி,
மத, இன வேறுபாடுகளை
மறந்து தன்னால் இயன்றவற்றை செய்து அன்பை, நட்பை பகிர்ந்து
தன் வாழ்நாள் கழிப்பவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்.
சாலைகளில் யாசகம் கேட்பவராகவும்.
மனநிலை குன்றியவராகவும் கைவிடப்பட்ட நிலையில் காலத்தோடு போராடும் வயதானவர்களை
சந்திக்கும்போது இந்நிலைக்கு தள்ளியவர்களை எட்டி மிதிக்க துடிக்கிறது மனது. அனுதினமும்
தன் தந்தையை காலை மாலை இரவு என கால நேரம் பார்க்காது எது கிடைக்கிறதோ அதை
ஆயுதமாக்கி அடிப்பவர், அவர் தன் முதல்தார மனைவி இறந்து
விட்டதை அடுத்து தன் இரண்டாவது மனைவியோடு இணைந்து தன் மனநலன் குன்றிய மகனை அடித்து
கொடுமைபடுத்தி வந்த சூழலில் வயதான தன் தந்தையையும் கொடுமைபடுத்தி
வருகிறார்.
குளிர் காலத்தில் கூட வீட்டுக்கு வெளியில்
தான் முதியவர்கள் இருவரும் படுக்க வேண்டும். மழை நேரத்தில் தாத்தா வாசலில்
சிறுநீர் கழித்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொடுமை. மழை நேரத்தில் காலை ஐந்து மணிக்கு குளிக்க வேண்டும்
வீட்டு வாசலில் அமர்வது தவறு என அனைத்திற்க்கு பிரம்பால் அடியும் உதையும். பேரன்
பேத்திகள் கூட கண்டுக்கொள்வதோ தன் பெற்றோரை கண்டிப்பதோ இல்லை. அந்த தெருவில் கேப்பார் யாரும் இல்லை. சைக்கோ மனிதன் இவன் என்பது
தான் ஊராரது பேச்சு.
மாதம் ஒருநாள், அதுவும் பென்ஸன் பணம் வாங்க கையெழுத்து வாங்கும் வரை மட்டும் அந்த நண்பர் ஆடும் நாடகம் அப்பப்பா! சன் டீவி சீரியல்
தோற்றுவிடும். தன் மனைவி தன் பிள்ளைக்கும் மருமகளுக்கும் குழந்தைகளுக்கும பணிவிடை செய்வதால் பாட்டிக்கு அடியும்,
மிதியும் சற்று குறைவு. ஆனால் தன் கணவருக்கு
ஆறுதலாக இருப்பார் பாட்டி. இதோ பாட்டியும் மாரடைப்பால்
இறந்துவிட்டார். தற்சமயம் தாத்தா பாட்டியை இழந்து தனிமை என்ற நரக வேதனையில்
கிடப்பதாக என் நண்பர் பகிர்ந்த செய்தியை கேட்டு இதோ கனத்த இதயத்தோடு எழுத
முற்பட்டேன்.
இன்னும் பாசம் எனும் பசுத்தோல் போர்த்திய
புலிகளை நம்பி ஏமாந்து நடுவீதியில் நிற்க்கும் பெற்றோரே!.. உங்கள் அனுபவத்தின்
வலியையும் அடுத்த சந்ததியினரும் உணர செய்யுங்கள். பிள்ளைகளை முழுதாய் நம்பி தனக்கென வைக்காது அனைத்து சொத்துக்களையும் தம் குழந்தைகளுக்கென பகிராதீர். என்றும் நம் கை, மட்டுமே நமக்கு உதவி. அதுபோல் நாம்
ஈன்ற பிள்ளைகள் கொடுக்க இயலாத அன்பையும், பாதுகாப்பையும்
பணம் கொடுக்கும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறீர்!
மக்கட்பேற பேரின்பம் தான். ஆனால் அந்த
இன்பமும் பணத்தின் பிடியில் இருக்கின்றன. எனவே உணருங்கள் உறுதி கொள்ளுங்கள் தன்னை பாதுகாக்கும் பிள்ளைகளுக்கு
உங்கள் மரணத்தின் பின் உங்களின் சொத்துக்கள் சென்று சேரட்டும்.
பெற்றெடுத்த தெய்வங்களை பேணிக் காக்க
மறுக்கும் கயவர்களை நீங்கள் கைவிடுங்கள். உங்களின் பாசம் உணரா அவர்களுக்கு
உங்களின் புறக்கணிப்பு சவுக்கடியாய் விழட்டும். முதியோர் இல்லங்களும் கோவில்கள் தான்... ஆனால் தெய்வங்கள் கண்ணீரோடு
வாழும் கோவில்கள். இடிக்கப்பட வேண்டிய கோவில்கள் என்பதில்
மாற்றுகருத்தில்லை.
தன் மந்தைகளில் இளைய தலைமுறையினரோடு
இனிதாய் வாழ துடிக்கும் முதியோரை அரவணைத்து வாழும் அனைவருக்கும் நன்றிகளுடன்
சோபியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக