விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர்களில்
ஒருவரும், பார்வையற்றவன் என்ற பெயரில் இணையத்தில் இயங்கிவருபவருமான திரு. பொன்.
சக்திவேல் அவர்கள், அமேசான் அறிவித்திருக்கிற போட்டியில் பங்கேற்று, ‘நூதன
பிச்சைக்காரர்கள்’ என்ற ணாடகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதன்மூலம், அமேசான் பென்
டு பப்லிஷ் போட்டியில் தமிழ்மொழி சார்ந்து பங்கேற்றிருக்கிற முதல் பார்வையற்றவர்
என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பாடப்புத்தகங்கள் தாண்டி பார்வையற்றோர்
வாசிப்பு விரிவடையாத காலம் ஒன்று இருந்தது. படிப்படியான தொழில்நுட்ப வளர்ச்சியின்
காரணமாக, தற்போது பார்வையற்றோர் வெறும் படிப்பாளர்களாக மட்டுமின்றி,
படைப்பாளர்களாகவும் மிளிரத் தொடங்கியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் இத்தகைய
ஆக்கபூர்வமான வளர்ச்சியை பார்வையற்றோராகிய நாம் ஒவ்வொருவரும் ஆரத்தழுவிக்கொள்ளுதல்
காலத்தின் கட்டாயம்.
திரு. பொன். சக்திவேல் அவர்கள், தனது
படைப்பின் வாயிலாக பார்வையற்றோரின் வாழ்வியலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறார்.
பொதுச்சமூகத்திடம் உரையாடும் ஒரு ஊடகமாக தனது படைப்பைப்ப் பயன்படுத்தியிருப்பது
பாராட்டுதலுக்குரியது. இந்தப் படைப்பின் வாயிலாகப் பொதுச்சமூகமானது, எள்முனை
அளவேனும் பார்வையற்றோரின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளுமேயானால், அது அவரின்
படைப்புக்கு மட்டும் கிடைக்கிற வெற்றியல்ல. ஒட்டுமொத்த பார்வையற்ற சமூகத்திற்கும்
கிடைக்கிற வெற்றியாகும்.
இத்தகைய வெற்றியை இலக்காகக் கொண்டிருக்கிற
திரு. பொன். சக்திவேல் அவர்களை நமது விரல்மொழியர் மின்னிதழின் சார்பில்
வாழ்த்துகிறோம். அவருடைய படைப்பை அமேசான் கிண்டில் தளத்தில் படித்து அவரின்
முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பது நமது தலையாய கடமையாகும். அத்தோடு,
நாமும் நமது படைப்புகளை வெளியிடுவதன் மூலம், பார்வையற்றோர் குறித்த பரந்துபட்ட
புரிதலைப் பொதுச்சமூகத்திடம் ஏற்படுத்துவோம்.
பொன். சக்திவேல் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பொன். சக்திவேல் அவர்களின் ‘நூதன பிச்சைக்காரர்கள்’
நாடகத்தை கிண்டிலில் படிக்க
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக