பார்வையற்ற அரசியலாளர்களை
அறிமுகப்படுத்தும் இத்தொடருக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி. நடந்து மு்டிந்த
உள்ளாட்சித் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் போட்டியிட்டிருக்கிறார் என்ற
செய்தி விரல்மொழியருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நாமக்கல் மாவட்டம் ராசம்பாளையம் ஊராட்சி
மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பார்வை மாற்றுத்திறனாளியான திருமதி. சரண்யா அவர்களின்
தொடர்பு எண் கிடைத்தால் அவரோடும் நாம் அரசியல் பேசலாம். அவரது எண் கிடைத்தால் தருமாறு
வாசகர்களை அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
. இந்த இதழில் ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தைச் சேர்ந்த திரு. கோவிந்தராஜன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
திரு. கோவிந்தராஜன்
பங்காரம்மாள் கல்விக் குழுமத்தின் இயக்குநர். ஸக்ஷம் அமைப்பின் தேசிய இ்ணைப் பொதுச்
செயலர்.
இளமைக் காலம்
1975-இல் பிறந்த
இவர், தனது 5 வயதில் பார்வையை முற்றிலுமாக இழந்தார். இவரது தந்தை தென்னக ரயில்வேயில்
பணியாற்றினார்.
தொடக்கக் கல்வியை
சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியிலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை சென்னை புனித
லூயிஸ் பார்வையற்றோர் பள்ளியிலும் படித்தார். பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில்
இளங்கலை ஆங்கிலமும், லயோலா கல்லூரியில் பொது நிர்வாகத் துறையில் முதுகலையும் படித்தார்.
ஆங்கில இலக்கியம், பொது நிர்வாகம் ஆகியவற்றோடு சட்டமும் பயின்றார் .
தனது தாய் மாமா நடத்திய
கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய கோவிந்தராஜன், 2006 முதல் தனது
இன்னொரு தாய் மாமாவின் கல்விக் குழுமமான பங்காரம்மாள் அறக்கட்டளையின் மதுரை நிறுவனங்களைக் கவனித்துவரும் இயக்குநராகப்
பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயலாற்றிவருகிறார். இரு தாய்மாமன்களும்தான் தனது இத்தகைய
வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறும் இவர், இருவரது தொழில் நிறுவனங்களிலும் தன் பங்களிப்பைச்
செலுத்திவருகிறார்.
சமூகப் பணி
சிறுவயதிலேயே கலைகளின்
மீது நாட்டம் அதிகம் இவருக்கு. “புனித லூயிஸ் பள்ளி தனது மாணவர்களைப் பாடம் தவிர பிற
செயல்பாடுகளிலும் சிறந்தவர்களாக்கியுள்ளது. குறிப்பாக, இசையிலும், விளையாட்டிலும் அங்கு
படித்த எங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டது” என்கிறார் இவர். இவரும் தேசிய
அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.
தனது நண்பர்களோடு
இணைந்து 1995-ஆம் ஆண்டு ‘சோணாசங்கீத்’ என்ற இசைக் குழுவைத் தொடங்கினார் கோவிந்தராஜன்.
இது பார்வையற்றவர்களால் நிர்வகிக்கப்படும், பார்வையற்றவர்கள் மட்டுமே பங்கேற்கும் இசைக்
குழு. இக்குழு தற்போது வெள்ளிவிழா கண்டிருக்கிறது. சோணாசங்கீத்திற்கு விரல்மொழியரின்
வெள்ளிவிழா வாழ்த்துகள்.
1998-இல்
trinity welfare trust என்ற அமைப்பை நிறுவினார் கோவிந்தராஜன். இந்த அமைப்பின் சார்பில்
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கலைப் போட்டிகளும், விளையாட்டுப் போட்டிகளும் தொடர்ச்சியாக
நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ‘ability
fest’ என்ற பெயரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்னையின் ஏதாவது ஒரு கல்லூரியில்
பிரம்மாண்டமான போட்டிகளை நடத்தி அசத்தியிருக்கிறது இந்த அமைப்பு.
இருந்தபோதிலும்,
பிறரிடம் நன்கொடை பெறுவது, பணத்தை எதிர்பார்ப்பது முதலியவை தனக்குப் பல அ்சௌகரியங்களை
ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் கோவிந்தராஜன். பொருளாதார பலம் இல்லாமல் சமூகப் பணி சாத்தியமில்லை
என்று கருதிய கோவிந்தராஜன், 2005-இலிருந்து
இப்பணியைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ்.-இல் இணைந்தது எப்படி?
2010-இல் தணிக்கையாளர்
வைகுண்டம், டாக்டர் சிவகுருநாதன் ஆகியோரது நட்பு இவருக்குக் கிடைத்தது. அவர்களோடு இணைந்து
மதுரை மாநகரில் பல பொதுக் காரியங்களை இவரும் மேற்கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருமே
ஆர்.எஸ்.எஸ்ஸில் இயங்குபவர்கள்.
விவேகானந்தர் மீதான
ஈர்ப்பும், சமூக சேவையும் அவர்களோடு தன்னை ஒன்றுபடுத்தக் காரணமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
கோவிந்தராஜன்.
2013-இல் விவேகானந்தரின்
150-ஆவது ஜெயந்தி பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வுகளுக்கான மாநிலக் குழுவில்
உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார் கோவிந்தராஜன். இப்படி மெல்ல மெல்ல அவர் தன்னை ஆர்.எஸ்.
எஸ். கொள்கை அபிமானியாக உணர்ந்திருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ்ஸும் அவரை அணைத்துக்கொண்டது.
அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ்
குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறும் இவர், பல நே்ரங்களில் எதிர்மறையாகவே
அவ்வமைப்பு குறித்துத் தனக்குக் கருத்து வழங்கப்பட்டதாகக் கூறுகிறார். அவை யாவும் பொய்
என்று தற்போது புரிவதாகவும் கூறுகிறார்.
ஸக்ஷமில் கோவிந்தராஜன்
2014-இல் ஸக்ஷமில்
இணைந்திருக்கிறார் இவர். புதுக்கோட்டையில் நடைபெற்ற ஸக்ஷம் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட
பிறகு இயல்பாய் தான் அந்த அமைப்பில் உறுப்பினரானதாகக் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸிலோ,
ஸக்ஷமிலோ தன்னை யாரும் வற்புறுத்திச் சேர்க்கவில்லை, வலியுறுத்தக்கூட இல்லை என்கிறார்
இவர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின்
பல்வேறு விதமான அமைப்புகளில் ஒன்று ஸக்ஷம். மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த அமைப்பு
2008-இல் தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016 வகைப்படுத்தும்
22 வகை மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய அமைப்பு இது. ஸக்ஷம் என்றால் திறன்
(Ability) என்பது பொருள். ஸமதிருஷ்டி க்ஷமதாவிகாஸ் ஏவம் அனுசன்தா மண்டல் என்கிற சமஸ்கிருதத்
தொடரின் சுருக்கம் தான் ஸக்ஷம். இதன் பொருள் சமமான பார்வை, சமமான வளர்ச்சி மற்றும்
ஆராய்ச்சி மையம் என்பதே.
இவ்வமைப்பு தனக்குப்
பிடித்த வகையில் இருந்ததால்தான் சேர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் கோவிந்தராஜன். அது குறித்து
அவர் வார்த்தைகளிலேயே அறிந்துகொள்வோம்.
“பொதுவாக எல்லாத்
தொண்டு நிறுவனங்களும் தனிநபர்களால் தொடங்கப்படுகின்றன; பொதுக் காரியங்களைச் செய்கின்றன;
தொடர்ந்து பொதுமக்களிடம் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்கின்றன; பிறகு அவை குடும்பச் சொத்தாகிவிடுகின்றன.
ஸக்ஷமில் அந்தப் பிரச்சனையே இல்லை. ஸக்ஷமில் இருக்கும் அனைவரும் அந்த அமைப்பில் உறவு
கொண்டாட முடியுமே தவிர, யாராலும் அவ்வமைப்பை உரிமை கொண்டாட முடியாது. இது பொதுவான அமைப்பு.
வெளியிலிருந்து பார்க்கும்போது ராணுவக் கட்டுக்கோப்புடன் இருப்பதுபோலத் தெரிந்தாலும்,
உள்ளே ஜனநாயகம் மிளிரும் அமைப்பு இது. இன்றைக்கு உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்படலாம்.
உங்கள் செயல்பாடு சரியில்லை என்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அந்தப் பொறுப்பிலிருந்து
விடுவிக்கப்படுவீர்கள். சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்படவும்
வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால், ஒருவர் ஸக்ஷமிற்கு ஒரு கோடி ரூபாய்
நன்கொடை தருகிறேன், என்னைப் பொறுப்பில் அமர்த்துங்கள் என்று கேட்டாலும் இங்கு அது நடக்காது.
செயல்பாடு மட்டும்தான் ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்” என்கிறார்.
ஸக்ஷமில் 41 பேர்
அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழு இருக்கிறது. அக்குழுவே இவ்வமைப்பை நிர்வாகம்
செய்கிறது. இவ்வமைப்பின் தற்போதைய தேசியத் தலைவர் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிதான்.
டெல்லி லால்பகதூர் சாஸ்திரி பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியரான டாக்டர் தயால்சிங்
பபார் தான் அவர்.
இவ்வமைப்பில்
2014-இல் இணைந்தார் கோவிந்தராஜன். மதுரை மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் என்ற பொறுப்புகளை
வகித்த இவர், தற்போது தேசிய இணை பொதுச் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார். தென் மாநில
விவகாரங்களைக் கவனிப்பவராகவும் இருக்கிறார்.
இவரிடம் நாம் கேட்ட ஸக்ஷம் தொடர்பான சில கேள்விகளும் , பதில்களும்.
கேள்வி: ஆர்.எஸ்.எஸ்
குறித்து தமிழகத்தில் பெருமளவில் நேர்மறைப் பார்வை இல்லை. இந்நிலையில் ஸக்ஷம் அமைப்பை
மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இங்கு சிரமங்களை உணர்ந்திருக்கிறீர்களா?
பதில்: நிறைய உணர்ந்திருக்கிறேன். திணிக்கப்பட்ட கருத்துகளிலிருந்து
மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள நிறைய காலம் பிடிக்கும். அதோடு, ஆர்.எஸ்.எஸ்ஸை மக்களிடம்
கொண்டுசேர்ப்பவனல்ல நான். எங்கள் கொள்கைகளைப் பார்த்து மக்கள் தானாக எங்களோடு இணைவார்கள். ஸக்ஷம் வாயிலாக அனைத்து பிரிவு
மாற்றுத்திறனாளிகளுக்கும் சேவை செய்வதே எங்கள் பணி..
கே: பிற மாநிலங்களைப்
போல தமிழகத்தில் ஸக்ஷமால் வளரமுடியவில்லையே!
ப: நீங்கள் எந்த
அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. தமிழகத்தில் ஸக்ஷம் சிறப்பாக
வளர்ச்சியடைந்துவருகிறது. நாங்கள் தற்போது ஒரு லட்சம் பேருடன் தொடர்பில் இருக்கிறோம்.
அவர்கள் சொல்லி இன்னும் பலரும் எங்கள் அமைப்பை நாடுவார்கள்தானே!
கே: ஸக்ஷமிற்கும்
ஆர்.எஸ்.எஸ்ஸிற்குமான ஒருங்கிணைப்பு பற்றி சொல்லுங்கள்.
ப: நாங்கள் அடிக்கடி
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் எங்கள் பணிகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிப்போம். அவர்களது
அறிவுரைகளைப் பெற்றுக்கொள்வோம்.
கே: தனியார் துறை
வருகை காரணமாக நமக்குக் குறையும் வேலை வாய்ப்புகள் குறித்து, ரூபாய் தாள்களை நம்மால்
அடையாளம் காணமுடியாமல் இருப்பது குறித்து எல்லாம் அரசிடம் வலியுறுத்தியிருக்கிறீர்களா?
ப: வலியுறுத்திக்கொண்டுதான்
இருக்கிறோம். இன்னொன்றை நான் சொல்லியாகவேண்டும். பொதுத் துறை, தனியார் துறை என்றெலாம்
இல்லை. நமக்கான வேலை வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான
சட்டங்களும் இருக்கின்றன. அதைச் செயல்படுத்துவதற்கான குழுக்களில் இருக்கும் நம்மைப்
போன்ற மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத்திறனாளி அமைப்புகளும் தான் இன்னும் கூடுதல் முயற்சி
எடுக்கவேண்டும். நாம்தான் அரசுக்கு எடுத்துரைக்கவேண்டும். அரசாங்கக் குழுக்களில் இருக்கும்
மாற்றுத்திறனாளி அமைப்பினர் பெரும்பாலும் அரசிடம் எதுவும் பேசாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த நிலைமை மாறவேண்டும்.
கே: உபகரணங்கள் வழங்குதல்,
உதவி செய்தல் முதலிய பணிகளை ஸக்ஷம் மேற்கொள்கிறது. போராட்டங்களில் ஸக்ஷமைப் பார்க்க
முடியுமா? தெருவில் இறங்கிப் போராடவேண்டும் என்றில்லை. நீதிமன்றங்களுக்குச் சென்று
சட்டப் போராட்டம் நடத்த வாய்ப்பிருக்கிறதா?
ப: எங்களிடம் சட்டப்
பிரிவு ஒன்று உண்டு. தமிழகத்தில் இன்னும் நாங்கள் அதை வளர்த்தெடுக்கவிருக்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ். குறித்த
இன்னும் பல கேள்விகளோடு திரு. கோவிந்தராஜன் அவர்களை அடுத்த இதழில் சந்திப்போம்.
கோவிந்தராஜன் அவர்களைத்
தொடர்புகொள்ள: 9444201515
ஸக்ஷம் குறித்து
மேலும் அறிந்துகொள்ள
வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த
பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல்
அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக
இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால்,
9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.
தொடர்புக்கு:
balaganesan2285@gmail.com
A small correction:
பதிலளிநீக்குமாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016 வகைப்படுத்தும் 22 வகை மாற்றுத்திறனாளிகளையும்
Its 21, not 22.
Mr. Govindarajan has to be asked about Modi's usage of Dhivyang, Indian army's blinding of Kashmiri youth.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அரசியல் பயணம்.
பதிலளிநீக்கு