நினைவுகள்: இளையராஜா என்ன தொக்கா? - பார்வையற்றவன்


இது ஒரு சுய தம்பட்டப் பதிவு என்பதைக் கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

2010-ஆம் ஆண்டு நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, தேர்வு எழுதித்தர வந்த புள்ள,ஒங்க கொரல் செம்மையா இருக்கு!வானொலியில் அறிவிப்பாளராக முயற்சிக்கலாமே எனச் சொன்னுச்சு. நம்ம கொரலுக்கு அப்படியொரு மகிம இருக்கா? கூடச்சுத்துர பயலுக கூடச்சொல்லலையே? நா பெரியாளா ஆயிருவேங்குர பொறாமயில சொல்லாம விட்டுருப்பாங்கே.
ஒரு பொம்பளப்புள்ள சொல்லிருச்சுங்கிறதுக்காகவே, வானொலிகளுக்கு விண்ணப்பிக்கத்தொடங்கினேன். கோவை, திருச்சி, மதுரை என வானொலி நிலையங்களுக்கு நடையாய் நடந்தேன்.
அப்போது ஒரு வானொலி நிலயத்துல, நிலைய இயக்குனர் பேசச்சொன்னார். ஒரு நிகழ்ச்சியைத்  தொகுத்துவழங்குவதுபோல் பேசிக்காட்டினேன். உடனே, அவர் பியூட்டிஃபுல் என்றார். அடுத்து, பாடச்சொன்னார்.நான் பாடியதைக்கேட்டதும், ஒண்டர்ஃபுல் என்றார். இம்முறை வேலை கிடைத்துவிடுமென்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. தாமதமாகத்தான் புரிந்தது, இங்கே இடமெல்லாம் ஃபுல்லாயிருச்சு என்பதைக் குறிப்பால் உணர்த்தவே,அவர் அத்தனை ஃபுல்களை சொல்லியிருக்கிறாரென்று.

அவர் ஒருநாள் எங்கள் விடுதியில் நடந்த ஒரு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். வந்தவர் மேடையில் பேசும்போது, என்னைச் சுட்டிக்காட்டி, “தம்பியை பார்த்து மிகவும் வியந்தேன். தொகுப்பாளர் நேர்காணலில் சிறப்பாகப் பேசினார். எது சொன்னாலும் ஒரே டேக்கில் முடித்தார். கட்டாயம் ஒருநாள் அவரை நிகழ்ச்சியில் அழைத்துப் பேசவைப்போம் என்றார். அனைவரும் கைதட்டினர். எனக்கு கோபங்கோபமாய் வந்தது. பார்வையற்றோருக்கு நாங்கள் வேலை ஏதும் தருவதில்லை என்பதை, நயமாகச் சொல்லி அவர் கைதட்டையும் வாங்கிவிட்டார்.

எங்களது விடுதிக்கு பல நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகள் பிறந்த நாள், கல்யாண நாள், கருமாதி நாள் என கண்டதுகடியதுக்கெல்லாம் சாப்பாடு போட வந்துவிடுவார்கள். ஒருவேளை சோத்தைப் போட்டுவிட்டு, அவர்கள் பேசும் பேச்சிருக்கே அம்மாடீ! பார்வையற்றோருக்கு தாங்கள்தான் அளப்பரிய சேவை செய்வதாக அளந்துவிடுவர். பார்வையற்றோர் எது கேட்டாலும் செய்யத் தயாராய் இருப்பதாகவும் கூறுவர். அவர்களிடம் உங்கள் நிறுவனத்தில் பார்வைமாற்றுத்திறனாளி ஒருவருக்கு வேலை கொடுக்கலாமே எனக் கேட்டால் போதும், அப்படியே பேச்சை மாற்றிவிட்டு ஓடிவிடுவார்கள்.
 


வானொலியை விட்டுவிட்டு 2012-ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளனாகிவிடுவது என முடிவுசெய்து கோதாவில் குதித்தேன். அப்போது புதிய தலைமுறை செய்தியாளர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்வை நடத்தியது. கட்டுரை எழுதுதல், பொதுஅறிவைச் சோதித்தல் ஆகிய இரு தேர்வுகளிலும் வென்று 6 பேர் நேர்முகத்தேர்வுக்குத் தெரிவாகியிருந்தோம்.

இப்ப சொல்லப்போ பாயிண்ட முக்கியமா கவனிக்கனும். அவ்விரு தேர்விலும் 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அதிலிருந்துதான் 6 பேர் இறுதித்தேர்வுக்கு தெரிவானோம். அதிலும், அத்தேர்வை எழுதியவர்களுள் நான் ஒருவன் மட்டுமே பார்வைமாற்றுத்திறனாளி. அந்த பெருமையை நாந்தானே பதிவுசெஞ்சாகனும். ஏன்னா? வேற யாருக்கும் அதுபற்றித் தெரியாதே?

நேர்முகத்தேர்வை நடத்த அந்த இதழின் ஆசிரியராக இருந்த மாலன் வந்திருந்தார். அத்தேர்வில், என்னிடம் பார்வையற்றோருக்கான தொழில்நுட்பங்கள் பற்றிக் கேட்டார். அப்போதுதான் என்போன்ற  பார்வைமாற்றுத்திறனாளி கணினி கற்றுக்கொள்ளாதது பெரிய தப்பென்று புருஞ்சுக்கிட்டேன். அப்புறம் அந்தப்பக்கம் தலைவச்சு படுக்கக்கூட இல்ல.

2013-ல் அம்மா மடிக்கணினி என் கைக்குக்கிட்டியது. கணினி வந்ததுமே ஆச தீரப் பாட்டு கேட்டேன், படம் பார்த்தேன். அது போரடிக்கத் தொடங்குனுச்சு. அதுனால தமிழ் டைப்பண்ண பழகினேன். அப்ப முகநூலுல 2 வரி எழுதி போஸ்ட்போட்டுட்டு நண்பர்களுக்கெல்லாம் ஃபோன் போட்டு “என் பதிவ படிச்சியா? போய் லைக்ப்போடுன்னு நச்சரிச்சுக்கிட்டுத்திரிஞ்சேன். கொஞ்சம் பெரிய பதிவா எழுதத்தொடங்குனவொடனே; அப்படி எழுதுறவங்கல்லாம் சேந்து ஒரு இதழ் தொடங்களாமுன்னு முடிவுசெய்தோம். 3 ஆண்டுகளாக அது கிடப்பில் கிடந்தது. இறுதியாக ஒரு நல்ல டீம் அமைந்தது. அதன் பயனாய் இப்போது விரல்மொழியர் மின்னிதழின் இணையாசிரியராக இருக்கிறேன்.

புதிய தலைமுறைக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்ல. ஆனா நாளை எனது வரலாற்றை எழுதுபவர் இப்படி எழுதக்கூடும்.
“அவனொரு பார்வையற்ற இளைஞன். அவனிடம், முன்னேற வேண்டுமென்ற முயற்சியும்; வெல்ல வேண்டுமென்ற வேட்கையும்; துயரத்தைத்  துடைத்தெறியும் துணிச்சலும்; வின் பண்ணுவதற்கான வீரமும் இருந்தது. எனவே, புதிய தலைமுறை மாற்றுத்திறனாளிகளின்  ஐகானாய் திகழ்ந்தான். அதே நேரத்தில், புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்தான். அங்கு அவனுக்கான பணிவாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் மனமுடைந்து போனான். உறக்கம்வராது தவித்தான். அதனால் ரகுமான் ஹிட்ஸ்சை கேட்க்கத்தொடங்கினான்.

அப்போ இளையராஜா என்ன தொக்கா? அவரோட இசை இதயத்தை வருடி இதமாய் தாலாட்டும். உறக்கத்திற்கு உகந்த இசை ராஜாவின் இசைதான். இப்படி சண்டையெல்லாம் போடக்கூடாது. இந்த போஸ்ட்டுக்கு தேவையான கண்டண்ட் ரகுமான் ஹிட்ஸ்லதான் இருக்கு.

கவலை மறந்து கானத்தில் லயித்திருந்த அவனுக்கு  அந்த வரி காதில் விழுந்தது.
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே!
அவ்வரியைக்கேட்டதும் அவனுக்கு புது உற்சாகம் பிறந்தது. அதன்பிறகு வீட்டில் ஃபேனை போடாமல் அமரத்தொடங்கினான். அவனது அம்மாவோ, “வேர்த்துக் கொட்டுதுல்ல ஃபேன போட்டுக்கிட்டு உட்கார வேண்டியதுதானே?” எனத் திட்டிவிட்டு ஸ்விட்சைப் போட்டுச்செல்வார்கள். அம்மா போனதும் ஸ்விட்சை நிறுத்திவிடுவான். அப்போது, நெற்றியில் வடியும் வேர்வையை விரல்களால் துடைக்கும்போது; அவன் மனதில் ஒரு விதை விழுந்தது.

யோகா செய்றவங்க மேலே உள்ள பாயிண்ட குறிச்சுக்கனும்.

அப்போது சரியாக பாலகணேசன் சார் ஃபோன் செஞ்சு, பொரட்டாவை பிச்சுப்போட விரல் பெரிதும் உதவுகிறது. அதனால் நம்ம இதழுக்கு விரல்மொழியர் என்றே பெயர் வைத்திடுவோமெனச் சொல்லியதும் மகிழ்ந்துபோனான். அவனது வேர்வைக்கு வெற்றி வேர்வைக்கத்தொடங்கியது. செய்தியாளனாய் வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும்; ஒரு இதழை நடத்தும் அளவிற்கு வளர்ந்துகாட்டினான். அவன், நம்பிக்கையால் உலகை வென்று வாழ்ந்துகாட்டினான்!”

அதனால்தான் சொல்லுறேன்எழுத்தாளர்கள் மீது ஒரு கண் வச்சுக்கிட்டே இருங்க.

தொடர்புக்கு: paarvaiyatravan@gmail.com

1 கருத்து:

  1. பரோட்டாவ பிச்சுப்போட மட்டுமில்ல, பிரியாணி நோண்டி பீஸெடுக்க, பிஸ்கெட் பாக்கெட் பிரிச்சு வாய்ல போட, நொங்கு நோண்டி தின்ன, ஏலனி வழுக்க எடுத்துத்திங்க ... ... அப்டீனு விரல் பல ஏரியாவுள பயன்படுது. அப்போ இதவிட சரியான டைட்டில் புதிய தலைமுறை மாலன்கூட வைக்க முடியாது. ஆனாலும், "உன்னால் முடியும் தம்பி" மாதிரி ராஜா பாட்டு எதயாவது மோட்டிவேஷனுக்கு சாங்கா வச்சிருக்கக் கூடாது??? "ஏலயராஜா என்ன தொக்காஆஆஆ?"

    பதிலளிநீக்கு