ராகரதம் (21): புலன் நூறு வேண்டும் - ரா. பாலகணேசன்


வணக்கம் வாசகர்களே! ஒரு சின்ன மாறுதலுக்காக இந்த இதழில் ரதத்தின் சாரதியாக நான். வாருங்கள், ஒரு  உற்சாகமான பாடலோடு பயணிப்போம்.
2007-இல் வெளியான திரைப்படம் உற்சாகம். படத்திற்கு இசை ரஞ்சித் பரோட். தமிழில் மிகக் குறைவாகவே இசையமைத்தாலும், தனி முத்திரையோடு பாடல்களைத் தந்தவர். வி.ஐ.பி படத்தில் ‘மின்னல் ஒரு கோடி, எந்தன் உயிர் தேடி” பாடலை யாரால் மறக்கமுடியும்? அது இவர் இசையமைத்ததுதான்.
ரதத்தில் ஓடவிருக்கும் பாடலைப் பாடியிருக்கிறார்கள் ஹரிஹரன் & நந்தினி ஸ்ரீகர். ஹரிஹரனைப் பற்றி உங்களிடம் புதிதாய்ச் சொல்ல என்னிடம் என்ன இருக்கிறது? ஆனால் நந்தினி! இப்பாடலை நான் ஆழ்ந்து கேட்கத் தொடங்கியது இவர் குரலில் மயங்கித்தான்.
எனக்குப் பிடித்த பாடகிகள் பெரும்பாலும் குறைவான பாடல்களையே பாடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் மனதில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றன. நித்யஸ்ரீ, பல்லவி, சித்ரா சிவராமன் என்று அத்தகையவர்களைப் பட்டியல் போடலாம். அந்த வரிசையில் நந்தினி ஸ்ரீகரும். றெக்க படத்தில் ‘கண்ணமா கண்ணம்மா’ என்று தாய்மை நிரம்பிய குரலில் பாடினாரே! அதே குரல்தான் இங்கே காதல் சுவை சொட்டச் சொட்ட ஒலிக்கிறது.
வரிகள்: வைரமுத்து. காதல் நதியில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறார். வைரங்களையும் முத்துகளையும் அள்ளி இரைத்திருக்கிறார்.
இருவர் படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே; போலவே இதுவும்  ஒரு நல்ல முயற்சி. ஆனாலும் அந்த அளவு இப்பாடலும் பிரபலமாகவில்லை; கவிஞரும்  இப்பாடலைப் பற்றி அதிகம் பேசுவதும் இல்லை.
நந்தினியின் இனிய ஆலாபனையோடு பாடல் தொடங்குகிறது. பாடல் முழுக்க நந்தினி தான் ஆதிக்கம் செலுத்துகிறார். ஹரிஹரன் மென்மையாய் குழைகிறார்.
“நறும்பூக்கள் தேடும் திருத்தும்பியே!
எதைக் கண்டு என் மேல் மையலுற்றனை?” என்று காதலிதான் பாடலைத் தொடங்கிவைக்கிறாள். மலரும் தும்பியும் தங்கள் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கின்றன. மலராக அவள்; தும்பியாக, அதுவும் திருத்தும்பியாக அவன்.
முன்னிலை ஒருமை விகுதியான ஐ, தன்மை ஒருமை விகுதியான அம் ஆகியவை கவிஞரால் மிக இயல்பாக பாடலில் கையாளப்பட்டுள்ளன.
“குதித்தாடவே, குடைந்தாடவே
பூ என்ன தேன் குடமா?” என்று அவள் கேட்பதும்,
“ஒரு பூவினோடு ஒரு வாசம் தானே
கொடியோடு யாம் கண்டனம்
வெவ்வேறு பாகம், வெவ்வேறு வாசம்
நின்னோடு யாம் கண்டனம்” என்று அவன் குழைவதும் சிருங்காரத்தின் உச்சம்.
தான் அவனைத் தும்பியாக உருவகித்தது தவறோ என்று ஒரு கணம் மனம் மயங்கிய கவிஞர் அவனைக் கொண்டே இப்படிப் பாடவைக்கிறார்.
“பூவைச் சுற்றும் வண்டு ஓய்வு கொள்ளும்;
பூமி சுற்றும் காற்றா ஓய்வு கொள்ளும்?”
அவன்: “ஆழங்களில் தேன் தேடியே
தள்ளாடுதே தும்பியே!”
அவள்: “தேன் உண்டதும் என் ஆவியை
நீ உண்டனை தும்பியே!”
இப்பாடல் என் ஆவியையும்  உண்டுகொண்டிருக்கிறது. காரணம் தான் புரியவில்லை. வைரமுத்தின் வரிகளா, நந்தினியின் குரலா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
அப்பப்பா! இன்னும் என்ன, இன்னும் என்ன என்றுதானே கேட்கிறீர்கள். நிறைய இருக்கிறது; நீங்களே கேட்டு உற்சாகம் கொள்ளுங்கள்.
கவிஞர் இப்படி்ச் சொல்கிறார்.
“புலன் ஐந்து .போதும் பூமி வெல்ல
புலன் நூறு வேண்டும் காதல் கொள்ள”.
நூறு புலன்களுக்கான ஆற்றலோடு வாருங்கள்; புது உலகிற்கே செல்லலாம்.
4.56 நிமிடங்களுக்கு  புத்துலகில் சஞ்சரிக்க.
(ரதம் பயணிக்கும்)

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக