விரல்மொழியர்
மின்னிதழ் மூன்றாமாண்டில் காலடி எடுத்துவைக்கிறது! 2018 ஜனவரி
27 புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் விரல்மொழியர் மின்னிதழ் தொடங்கப்பட்டது. பல
புதிய முன்னெடுப்புகள், புதிய முயற்சிகள், சிற்சில பின்னடைவுகள் என கடந்த ஆண்டு விரல்மொழியருக்கு அமைந்தது.
உருண்டோடிய இரண்டு ஆண்டுகளைத்
திரும்பிப் பார்க்கும்போது: உங்களது
பங்களிப்போடு பார்வையற்றோர் சமூகம் தொடர்பாக பலவற்றை
ஆவணப்படுத்தியிருக்கிறோம், பார்வையற்றோர் தொடர்பாக பேசப்படாத பல
விடயங்களுக்குத் தொடக்கப்புள்ளி இட்டிருக்கிறோம், முன்பே
தொட்டுக் காட்டப்பட்ட விடயங்களை விரிவாக எழுதியிருக்கிறோம் என்ற வகையில் நாம் ஓரளவு
சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இன்னும் பார்வையற்றோர் தொடர்பாக பதிவு செய்ய
வேண்டிய விடயங்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பதிவு செய்ய பல கரங்கள்
சேரவேண்டும். அதனால் உங்களின் கூடுதல் பங்களிப்பை வேண்டுகிறது விரல்மொழியர்.
தமிழ்க் கல்விச் சூழலில்
மாற்றுத்திறனாளி கல்வி எனும் துறை இன்னுமுமே தோன்றவில்லை. அது தற்போது முகிழ்ப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. இத்தகைய சூழலில், பொது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதலை உருவாக்க,
விரல்மொழியர் போன்று மாற்றுத்திறனாளிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளே எழுதும் பல
இதழ்கள் உருவாக வேண்டியது காலத்தின் தேவை.
தொடர்ச்சியாக
பல புது முன்னெடுப்புக்களை செய்துவரும் விரல்மொழியர் மின்னிதழ், இந்த
ஆண்டிலிருந்து மாற்றுத்திறன் டாட்காமோடு maatruthiran.com
இணைந்து மாற்றுத்திறனாளிகள் குறித்த செய்திகளை தரவிருக்கிறது. அதற்காக
முகப்புப் பக்கத்தில் செய்தி என்ற
தொடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சொடுக்கி இனி செய்திகளை அறிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டிலும் பல புதுமைகளோடும், பொறுப்புணர்வோடும் நடைபோட தயாராகிவிட்டோம். வாசகர்களின் ஆதரவும், பார்வையற்றோர்
சமூகத்திற்கு எங்களால் முடிந்த ஒன்றை செய்கிறோம் என்ற சந்தோஷமுமே எங்களுக்கான
உந்துசக்தி.
தொடர்ந்து பயணிக்கிறோம், எங்களால்
இலக்கை எட்ட முடியாவிட்டாலும்; எதிர்வரும் தலைமுறையினர் பயணிப்பதற்கு புதிய பாதையை உருவாக்கிக்
கொடுத்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடே.
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’
விரள்மொழியர் பார்வையற்றோர் குறித்தும் ஊனமுற்றோர் சார்ந்தும் ஆழமான பல்வேறு விவாதங்களையும் நிதர்சனமான பல்வேறு பொருண்மைகளையும் முன்வைத்திருக்கிறது. தொடர்ந்து இணைந்து நடப்போம், சமூகத்தை முடிந்த அளவில் நமது காலத்திலேயே மாற்றியமைப்போம். உங்களின் உழைப்பு என்னையும் சோம்பளிலிருந்து விடுபட்டு செயலாற்றத் தூண்டுகிறது, நம்பிக்கையூட்டும் விரள்மொழியர் பயணம் தொடரட்டும், சிறக்கட்டும்.
பதிலளிநீக்குமுருகானந்தன்