அரசியலில் நாம்-9


சென்ற இதழில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பான ஸக்ஷம் இயக்கத்தின் தேசிய இணை பொதுச்செயலர் திரு. கோவிந்தராஜன் அவர்களைச் சந்தித்தோம். ஆர்.எஸ்.எஸ். குறித்த  இன்னும் சில கேள்விகளோடு இந்த இதழில் சந்திப்பு தொடர்கிறது.

graphic திரு. கோவிந்தராஜ்
1925-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் நாள் கே்சவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய  சேவக் சங். அதாவது தேசிய தொண்டர் படை. ஹிந்து தேசியத்தைக் கட்டியெழுப்ப விரும்பிய வலதுசாரி கொள்கையாளர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது நாடெங்கும் கிளை பரப்பி அமர்ந்திருக்கிறது. பிற உலக நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் இவ்வமைப்பு இயங்கிவருகிறது. இனி இவ்வமைப்பு குறித்த சில கேள்விகளுக்கு திரு. கோவிந்தராஜன் அவர்கள் கூறும் பதில்களைப் பார்ப்போம்.

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைவதற்கு முன் அந்த அமைப்பு குறித்து என்ன அறிந்திருந்தீர்கள்?
பதில்: சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். குறித்த எதிர்மறை எண்ணங்கள்தான் எனக்கு இருந்தன. காரணம், நான் படித்த பள்ளி, கல்லூரி என அனைத்தும் கிறிஸ்தவ நிறுவனங்கள். அங்கு இயல்பாகவே ஆர்.எஸ்.எஸ். குறித்த எதிர்மறை பிம்பம்தான் தரப்பட்டது.
பள்ளி வாழ்க்கை இயல்பாகவே கழிந்தது. நான் தேவாலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். வழிபாடுகளில் கலந்துகொண்டிருக்கிறேன். எனக்கு அது பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. ஆனால், நான் படித்த கல்லூரியில் பலரும் எல்லா நேரங்களிலும் கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்களாகவே இருந்தனர். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கிறிஸ்தவத்தைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கினர்.
அதன் பிறகுதான் நான் யோசித்தேன். மற்ற மதத்தினரிடம் தங்கள் மதத்தைப் பற்றி எந்தத் தயக்கமும் இன்றி பேசிப் பரப்பும் அவர்கள் மன உறுதியைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். அந்தத் தருணத்தில்தான் என்னை ஹிந்துவாக உணர்ந்தேன். ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவையை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன்.

கே: அப்போதே இயக்கத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
: இல்லை இல்லை. அதன் பிறகும் நான் பெரிய அளவில் இது குறித்து முயற்சி எடுக்கவில்லை. கிறிஸ்தவ மதக் கூடுகைகள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அதற்காக நான் கிறிஸ்தவத்தைப் பின்பற்றினேன் என்று கூறிவிடமுடியாது. எல்லா மதங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற வேட்கைதான். அவ்வப்போது என்னுடைய கருத்துகளையும் நான் அக்கூடுகைகளில் தெரிவித்திருக்கிறேன்.
கே: அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசியதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?
: சிலர் ஏற்றுக்கொண்டார்கள். ஓமலூரில் நடைபெற்ற ஒரு கூடுகையில் குலோத்துங்கன் என்ற பேச்சாளர் பேசினார். அவரிடம் நான் இப்படிக் கூறினேன்.
கிறிஸ்தவத்தின் சிறப்புகளைப் பற்றி நீங்கள் பேசுவதில் தவறில்லை. அதே நேரம் பிற மதங்களை இழிவுபடுத்திப் பேசுவது தவறுதானே!” என்று கேட்டேன். நான் சொல்வதைச் சரியென்று ஏற்றுக்கொண்ட அவர், “அப்படி யாருடைய மனமேனும் புண்பட்டிருந்தால் அவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்என்றார். இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கே: உங்கள் குடும்பத்தில் யாரும் ஆர்.எஸ்..எஸ்ஸில் இருந்திருக்கிறார்களா
?: இல்லை.
கே: பாஜக குறித்த எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
: எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் பொதுவான பண்புகளும் பாஜகவிடமும் இருக்கத்தானே செயும்.

கே: ஆர்.எஸ்.எஸ்ஸின் தேர்தல் அரசியல் பிரிவுதானே பாஜக.
: உண்மைதான். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைச் சரியாகப் பின்பற்றினால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது.
கே: அவர்கள் அப்படிப் பின்பற்றாதவை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
: ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படையே சேவையும் தேசியமும்தான்.
கே: இவற்றை அவர்களும்தானே வலியுறுத்துகிறார்கள்.
: அப்படியென்றால் இன்னும் அவர்கள் மக்கள் மனங்களை வென்றிருப்பார்கள். இல்லையென்றால், மக்கள் மனதை வெல்ல இன்னும் நிறைய  உழைக்கவேண்டியிருக்கிறது. இதை நான் பாஜகவை விமர்சிக்கவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. அவர்கள் மீதிருக்கும் அக்கறையில் கூறுகிறேன்.
கே: அப்படியென்றால், உங்களை ஆர்.எஸ்.எஸ் காரர் என்று கூறலாம். பாஜக காரர் என்று கூறமுடியாது. அப்படித்தானே!
: ஆமாம். அதற்காக நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல. என் வேலை, எங்கள் அமைப்பின் வேலை சேவை செய்வது. அவர்கள் வேலை அரசியல்.

கே: ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை வகுப்புகளி கலந்துகொண்டிருக்கிறீர்களா? அது குறித்த புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா?
: நான் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகளுக்குச் சென்றதில்லை. அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அதன்மூலம் நிறைய கற்றும் வருகிறேன்.  இயக்கம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பதற்கென இதுவரை தனியாக நான் முயற்சி எடுத்ததில்லை.
கே: ஆர்.எஸ்எஸ்ஸின் பிரசாரகர்களாக பார்வையற்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?
: ஸக்ஷமில் நிறய பார்வைமாற்றுத்திறனாளிகளைப் பார்த்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான A.B.V.P-யிலும் பார்வையற்றவர்களைப் பார்த்திருக்கிறேன். இதுவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரகராக நான் எந்தப் பார்வைமாற்றுத்திறனாளியையும் அறிந்ததில்லை.

கே: ஆர்.எஸ்.எஸ்ஸால் அடையமுடியாத இடமாக தமிழகம் இருக்கிறதே! ஏன்?
: இன்னும் நாங்கள் நிறைய உழைக்கவேண்டும். நூற்றாண்டு கால கருத்துத் திணிப்பிலிருந்து எல்லோரையும் ஒரே நாளில் மாற்றிவிடமுடியாது. அப்படி ஒருவேளை எல்லோரும் மாறிவிட்டால், அவர்கள் மீண்டும் எதிர்த் திசைக்கு ஒரே நாளில் சென்றுவிடமாட்டார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா? இவற்றை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்.
கே: ஆர்.எஸ்.எஸ்ஸில் பிராமணர் ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறதே!
: எல்லா இடங்களிலும் அவர்கள் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் எங்கே அவர்கள் ஆதிக்கம் இல்லை என்று நினைக்கிறீர்களோ, அங்கே அவர்களது உதவியாளர்களாக, வழிகாட்டிகளாக பிராமணர்கள்தான் இருக்கிறார்கள்.
கே: இந்த நிலை சரிதானா?
: இல்லை. ஏன் அவர்கள் மட்டும்தான் அறிவாளிகளா? அப்படி முத்திரை குத்தப்படுகிறார்கள். அவ்வளவுதான். பிராமணர் ஆதிக்கம் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கிறது என்றால் எல்லா இயக்கங்களிலும், இசங்களிலும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். பிற இயக்கங்களில் இல்லையென்றால், இங்கும் இல்லை. அவ்வளவுதான்.

கே: இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் பிற சாதியினரால் வரமுடிகிறதா?
: முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் பிராமணர்கள்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
கே: பெண்களுக்கு உங்கள் அமைப்பில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
: நிறய முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான இடங்களில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது.
கே: இந்தியர்களை ஒன்றுபடுத்துவதாகக் கூறிவிட்டு இந்துக்களை மட்டும் நீங்கள் ஒன்றுபடுத்துகிறீர்களே!
: இந்தியாவையும் இந்துக்களையும் பிரிக்கமுடியாது. இங்குள்ள கிறித்தவர்களையும் முஸ்லீம்களையும் இந்தியக் கிறிஸ்தவர்கள், இந்திய முஸ்லீம்கள் என்றுதான் கூறுகிறோம். இந்திய இந்துக்கள் என்று நாம் கூறுவதில்லையே! ஏனென்றால், இந்து மதத்தின் தாயகம் இந்தியா. அதற்காக இவ்வமைப்பில் இந்துக்கள் மட்டும்தான் இருக்கவேண்டும் என்றில்லை. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வரவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

கே: அவர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கமுடியுமா?
: முடியும்.
கே: உங்கள் வழிபாடு, செயல்பாடுகள் எல்லாம் ஹிந்து மதம் சார்ந்ததாக இருக்கும்போது எப்படி அது முடியும்?
: நான் பள்ளிவாசலுக்குச் சென்று இயேசுவை வணங்கமுடியாது. ஆனால் என் மனதிற்குள் வணங்கிக்கொள்ளலாம். யாராலும் அதைத் தடுக்கமுடியாது.
நான் பள்ளிக் காலங்களில் பல முறை தேவாலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு  அவர்கள் இயேசுவை வணங்கும்போது நான் பெருமாளை வணங்கலாமே! அதற்காக அங்கே நின்றுகொண்டு ஓம் நமோ நாராயணாய  என்று சத்தம் பொட்டுச் சொல்லமுடியாது. என் மனதில் இருப்பதை யாரால் மாற்றிவிட முடியும்? அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது ஆர்.எஸ்.எஸ்.

கே: நீங்கள் ஏற்கெனவே சொன்னதைப் போல, பிற மதத்தினரை இழிவுபடுத்தும் செயல்களை ஹிந்துத்துவ அமைப்புகள் செய்கின்றனவே!
: ஆர்.எஸ்.எஸ் அப்படிச் செய்வதில்லை.
கே: அந்த அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர்பே இல்லையா?
: அவை ஆர்..எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளைப் பார்த்து உருவான அமைப்புகள். அவற்றிற்கு ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டும். அதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துகளை அப்படியே அவை உள்வாங்கிச் செயல்படுவதில்லை. அவர்களது அத்தகைய செயல்பாடுகளுக்குக் காரணம் தற்காப்பாகவும் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் இத்தனை தடைகளைத் தாண்டியும் வளர்ந்திருப்பதற்குக் காரணம், அதன் கொள்கையும், செயல்பாடும்தான்.

கே: ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு உறுப்பினர் அட்டை தரப்படுவதில்லையே! ஏன்?
: தேவையில்லை என்பதால்தான்.
கே: பிறகு உங்களை எப்படி அடையாளப்படுத்திகொள்வீர்கள்?
: ஏன் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்? இந்த இயக்கத்தின் உறுப்பினர் என்ற தகுதியை வைத்துகொண்டு வேறு எதையும் நாங்கள் பெற விரும்பவில்லை. தவறாகப் பயன்படுத்தப்படுவதற்குத்தானே அடையாள அட்டைகள் பெரும்பாலும் உதவுகின்றன.
கே: காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புபடுத்தப்படுவது பற்றி
: ஓர் அமைப்பைப் பிடிக்காதவர்கள் அதைத் தூற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதற்கான ஆதாரம்தான் இது. பொய்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் உண்மையாகிவிடப் போவதிலை. தனக்கு வேண்டாத கொள்கையை உடையவர் என்பதற்காக ஒருவரை கொலை செய்வதை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை.

கே: ஹிந்துத்துவ சிந்தனை அதிகமாக உள்ள வட இந்தியாவில் வன்முறை மனநிலை பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது அதிகமாக உள்ளதே!
: எல்லா மனிதர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இது மனித இயல்பே தவிர, ஆர்.எஸ்.எஸ். இயல்பு அல்ல..
கே: உங்கள் எதிரிகளில் அறிவுப்பூர்வமானவர்கள் யார்? கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கத்தினரா? வேறு யாருமா?
: எதிரிகள் என்று யாரும் இல்லை. எதிர்க் கருத்து உள்ளவர்கள் அனைவரும் அறிவாளிகளே. அவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்துவதில்தான் பிரச்சனை இருக்கிறது.

கோவிந்தராஜன் அவர்களைத் தொடர்புகொள்ள: 9444201515


வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

1 கருத்து:

  1. வணக்கம் ஐயா மிக அருமையாக கேள்விகளைக் கேட்டீர்கள் அதற்கு சக்ஷம் அமைப்பின் தலைவர் ஐயா கோவிந்தராஜ் ஐயா அவர்கள் நன்றாக பதிலளித்தார் நாம் எந்த மதத்தை பின்பற்றினாலும் நம் மனம் நன்றாக இருந்தால் போதும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அழகாக எடுத்துக் கூறினார் என்றாலும் அவர் சில விடயங்களை வெளிப்படையாகப் பேசவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு