இலக்கியம்: பழம் பாக்களின் இயற்கைச் செழிப்பும் இன்றைய இயற்கை நசிவும்


சி. வத்சலா லக்ஷ்மிநாராயணன்
                                                                                
       உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்திற்கும் வாழ்வியல் ஆதாரமான இயற்கை மிகவும் இன்றியமையாதது. தமிழ் மொழியில் தோன்றிய பழைய இலக்கியங்களில் விவசாயத்தின் அருமை பெருமைகளையும் , நிலத்திற்கு ஏற்றாற் போன்று செழித்திருந்த காட்சிகளையும் காண முடிந்தது.  இதற்கு முதன்மை காரணம் காலத்திற்கு ஏற்ற பருவ மழையும் மக்கள் இயற்கையை வழி வழியாகக் கண்ட அனுபவத்தின் மூலமும் , நிலத்தின் தன்மை குன்றாமல் பயிர் சுழற்சி முறையில் பாதுகாத்து வந்தார்கள்.  இப்படி செழித்தோங்கிய நம் இயற்கை காலப்போக்கில் நவீன மயமாக்கலின் தாக்கத்தால் நசிவடைந்ததை இக்கட்டுரையில் காணலாம். 

இந்திய விவசாயிகளின் அறிவுக்கூர்மை பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் கருத்து:
      இன்னும் ஓராயிரம் காலம் சென்றாலும் இந்தியாவின் நெல் பயிரிடும் முறையில் அதிக முன்னேற்றம் செய்வதற்கு எதுவும் இல்லை.  இங்கிலாந்திலிருந்து இந்திய விவசாயிகள் கற்றுக் கொள்வதற்கு புதிதாக ஏதும் இல்லை, மாறாக, ஆங்கில விவசாயிகள்தான் இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முறைகளும், விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.  இறக்குமதி செய்யப்படும் உரம், ஆங்கிலேய வேளாண்மையில் ஒரு முக்கிய இடத்தை நிறைவு செய்யும்.  ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் அதை உடனடியாக நிராகரித்து விடலாம்  என்று வோல்கர் கூறியுள்ளார்.

நிலத்தின் தன்மையைப் பற்றி விவசாயிகளின் அறிவு
         விவசாயிகளுக்கு ஒவ்வொரு பகுதியிலும் நில வளத்தைப் பெருக்குவதிலும்  மீட்டெடுப்பதிலும் எருவின் பயன்பாட்டைப் பற்றி நல்ல புரிதல் இருந்தது.  கால்நடைகளுக்கு வைக்கோலை உணவாக அளித்து எருவின் அளவைப் பெருக்கி, இலைகள் மற்றும் மக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் சேகரித்து , வைக்கோலை உலர்ந்த சாணம் , பழைய புற்கள் மற்றும் மரக்கிளைகள் ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு குவியலாக்கி அதற்கு எரியூட்டி , பிறகு அந்தச் சாம்பலை நிலத்தின் மீது பரப்பினார்கள்.  நீர் நிலைகளின் அடி ஆழங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படும் வண்டல் மண்ணும் சேறும் மதிப்பு வாய்ந்த எருவாக உபயோகப்படுத்தினார்கள்.         ஒவ்வொரு வயலைச் சுற்றிலும் கால்வாய்க் கரைகளிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அவற்றின் சிறு கிளைகளும் இலைகளும் நீக்கப்பட்டு, அவை நெல் விதைக்கும் நிலங்களின்மேல் பரப்பப்ப்பட்டு பிறகு கால்வாய் நீர் பாய்ச்சி  , அவை காலால் மிதிக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டு, பசுந்தாள் உரமிடும் முறையைப் பின்பற்றினார்கள்.

         இந்திய மக்கள் மண் வகைகளுக்கு ஏராளமான பெயர்கள் வைத்திருந்தார்கள்.  அவை சமீபத்தில் பயிர் செய்த காலம், எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பயிர் செய்வது, மக்கள் வசிக்கும் இடங்களுக்கு எவ்வளவு அருகில் உள்ளது, முக்காலத்தில் உருவான மண்ணா ,அல்லது சமீப காலத்தில் உருவான வண்டல் மண்ணா மேய்ச்சல் நிலம் , வயல் நிலம் அல்லது தோட்டமாக உள்ளதா போன்ற நிலைகளை விளக்குவதாக உள்ளன.  இயற்கையில் மண்ணின் இயல்பை விட  இந்த வெளிப்புற நிலைகள்தான் விவசாய நிலத்தின் மதிப்பீட்டுக்கு உதவுதாக நம்பினர்.         இந்திய மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களை ஆழமாகக் கவனித்து பொதுவான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அனைத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார்கள்.
         இத்தகைய இடு பொருட்களையும் வைத்துப் பயிர் செய்யத் தேவைக்கு அதிகமான நீரும் நம் விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் அவர்களும் தத்தம் பகுதிகளில் பெய்யும் மழையளவைக் கொண்டு பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தனர்.  கிணறுகள், ஏரிகள், வெள்ளப் பாசனக் கால்வாய்கள், ஊற்றுக்கால்கள், கசக்கால்கள் போன்ற பாசன அமைப்புகளைக் கவனமாக வடிவமைத்துப் பராமரித்து வந்தனர்.

           மேலே கூறிய அனைத்து சிறப்பம்சங்களும் இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு விவசாயிடம் இயல்பாய் இருந்ததை உற்று நோக்கலாம்.  இதனை தமிழ் மொழியின் முதன்மை இலக்கியமான சங்கப் பனுவல்களில் காண முடிகிறது.
                    விளைவு அறா வியன் கழனி,
                     கார்க் கரும்பின் கமழ ஆலைத்
                     தீத் தெறுவின் , கவின் வாடி,
                     நீர்ச் செறுவின் நீள் நெய்தற்,
                     பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,
                    காய்ச் செந்நெல் கதிர் அருந்து
                    மோட்டு எருமை முழுக் குழவி,
                     கூட்டு கிழல், துயில் வதியும்        
                     கோட் தெங்கின், குலை வாழை,
                     காய்க் கமுகின் , கமழ மஞ்சள்,
                     இன மாவின், இணர்ப் பெண்ணை,
                      முதற் சேம்பின் , முளை இஞ்சி,
                                            (பட்டினப்பாலை      10,15,20)

          அங்கே எல்லாக் காலங்களிலும் விளைச்சலைத் தரும் வயல்கள் நிறைந்துள்ளன. அகன்றிருக்கும் கழனிகளில் பச்சைக் கரும்புகள் , நெருக்கமான குலைகளை உடைய தென்னை, வாழை, பனை முதலிய மரங்களும், மணம் வீசும் மஞ்சள், சோம்பு,  இஞ்சி முதலிய செடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன.             மேகமானது கீழைக் கடலினின்றும் எழுந்து, மேலைக்கடல் நிரம்புமாறு, இரவு பகலெனப் பாராது மழை பொழிதலால், பள்ளம் மேடென வேறு- பாடரியவியலாதவாறு வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.  கிழங்குகள் அகழ்ந்த குழிகளில் அருவிநீர் வீழ்ந்து பேரொளி எழுப்புகின்றது. மூங்கில்கள் நிறைந்துள்ள மலைப்பக்கத்திலே யானைக் கூட்டம் அஞ்சுமாறு ஒலிக்கும் இடியுடன் கூடிய பெருமழை மிகுதலால் ஆறுகள், வெள்ளப்பெருக்கினைத் தாங்காமல், கீழ்கடலை நோக்கி விரைந்து செல்லும். ஆற்றில் பறந்து செல்லும் அவ்வெள்ளப் பெருக்கு ஊர்க் குளங்களை நிரப்பும்.  அத்தகைய நீர் வளத்தால் கழனிகளில் யானைகள் நின்றால் மறையும் அளவிற்குக் கதிர்கள் விளைந்துள்ளன.
        இத்தகு நீர்வளம் இருந்ததால் மலை உச்சியில் அழகான சோலைகளில் பலவகை மலர்கள் மரங்களின் கிளைகளில் குளிர்ச்சியுடன் பல வண்ணங்களில் மழைத்துளிகள் தொங்கின. 

                  அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
                  வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,
                   முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்தின்
                    கொருமடல் அவிழ்ந்த குழு உக்கொள் பெருங்குலை
                    நுணநீர் தெவின வீங்கிப் புடைதிரண்டு
                    தெண்ணிப் பசுங்காய் சேருகொள முற்ற
                    நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
                    குளிர்கொள் சினைய குழூஉத்துளி தூங்க,
                                  (நெடுநல்வாடை 20-30)

                     வான் போயினும் , தான் பொய்யா,
                      மலைத் தலைய கடற் காவிரி
                      புனல் பரந்து பொன் கொழிக்கும்
                                   (பட்டினப்பாலை   5-7)
         இவ்வகைச் சிறப்பமைந்த காவிரியானது எங்கும் புனலாக ஓடிப் பொன்னைக் கொழிக்கச் செய்யும்.
                                                               ..........மென் தோல்
                         மிதி உலைக் கொல்லன் முறி  கொடிற்றன்ன
                         கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதையப்
                         பைஞ் சாய் கொன்ற மண்படு மருப்பின்
                          கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்,
                          உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
                           முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில்.
                                  (பெரும் பாணாற்றுப் படை   210)

          உழவர்கள் ஏறு இல்லாமல் தம் கால்களால் தழையை மிதித்து சேற்றை உருவாக்கி வயலில் நாற்றை நடும் அளவிற்கு அனுபவம் பெற்றிருந்தனர்.

இன்றைய சூழலில் அழிந்து வரும் இயற்கை:
         வளம் வாய்ந்த நம் இயற்கையை நாம் பராமரிக்காமல் பதினெட்டாம் நூற்றாண்டு, நவீன மயமாக்கலின் தொடக்கத்திலேயே விவசாயத்தின் மரபு சார்ந்த அறிவை இழந்து விட்டோம்.  மாறாகப் புதுமையை நோக்கி உடல் உழைப்பைக் குறைத்து தொழில் நுட்பத்திற்கு அடிமையானோம்.  இதனால் மரபு சார்ந்த நவதானியம், உணவு, உடை, பயிர் வகைகள் ஆகியவற்றின் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை நம்மால் பெற முடியவில்லை.
           காடுகள், ஏரி, குளம் , குட்டை போன்றவற்றை மனிதத் தேவைகளுக்காக அழித்து மாட மாளிகைகளாக கட்டியதால் விளை நிலங்கள் பாழாகப் போனது மட்டுமின்றி உயிரினங்களின் ஆயுள்களும் கேள்விக்குரியதாகிவிட்டது.  இதன் விளைவாக சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு இயற்கையின் தன்மையே அழிந்து விட்டது.  இது மட்டுமின்றி உயிருக்கு முக்கியத்துவமான நிலத்தடி நீர் உயர பருவ காலத்திற்கு ஏற்ப மழை பெய்யாமல் பொய்த்துப் போனது.

மக்கள் தாமே சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாத்து வந்த நிலையில் அரசு அங்கங்கள் தோன்றி அவர்களின் உழைக்கும் சிந்தனையை சிதைத்து விட்டனர்.       இப்படி அதிகாரம் மக்களின் கைகளை விட்டு விலகியதன் காரணமாக நீராதாரங்களைப் பராமரிக்கும் பொறுப்புணர்ச்சியும் அவர்களிடமிருந்து மறைந்து விட்டது.            இருபதாம் நூற்றாண்டிலிருந்து இயற்கையின் சீற்றத்தினாலும் , தாக்கத்தினாலும் இரண்டு லட்சம் மேல் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள்.  முறையான பராமரிப்பின்மையாலும் அரசுக் கட்டமைப்பின் அனுபவமில்லாத ஆட்சியாலும் விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது.

      இன்றைய அனைத்துத்துறை அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த அனுபவம் இன்மையாலும் இயற்கையின் தன்மையை அறியாமையாலும் இயற்கை குறித்த அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைக்க தற்போது யாருக்கும் தெரியவில்லை. 

உழவின் சிறப்பைக் குறித்து எழுந்த நூல்கள்:
            பிருஹத் சம்ஹிதத்தின் ஒரு பகுதியான விருஷ ஆயுர்வேதம் சுரபாலர் என்பவரால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது.  விதை சேகரிப்பு, விதை தேர்ந்தெடுத்தல், பயிரிடுதல், பயிருக்கு ஊட்டமளித்தல், பயிர்ப் பாதுகாப்பு, மண்வகை தேர்ந்தெடுத்தல் , உரமிடுதல், பூச்சி-நோய் மேலாண்மை போன்ற அனைத்து அம்சங்களும் அடங்கியது இந்த சம்ஸ்கிருத நூல்.              இந்தியர்களிடம் விவசாயத்தின் அனுபவம்  நுட்பமான முறையில் கையாளப்பட்டதால் இந்நூலை எழுதமுடிந்தது.

           இவற்றையெல்லாம் படித்த பின்பு இதனை உயர்வானத நமது வேளாண் மரபு என்று வியப்பவர்கள் பலர் இருந்தார்கள்.நான் கூறியிருப்பதையெல்லாம் கண்டு ஆங்கிலேய விவசாயிகள் வியப்படையாதீர்கள்.  இந்தியர்கள் நம்மை விடப் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னதாகவே பயிர் செய்யக் கற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என்று நமது உயர்ந்த வேளாண் அறிவுக்கான காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார் வோல்கர்.

           மகாஜன் என்கிற ஒரு கொங்கணி விவசாயி வனஸ்பதி சம்வர்தன் ஷிஷக் என்ற வேளாண் நூலையும் , ஸ்ரீ நாகபூஷன கானமாத ஷிவயோகி என்பவர் கிருஷி ஞான பிரதிபீகே என்னும் வேளாண் நூலையும் எழுதியுள்ளனர்.          இதே போன்ற மற்றொரு பண்டைய சமஸ்க்ருத நூல் க்ரிஷி பாரஷாரா , 243 பாடல்களைக் கொண்ட இந்த நூல், இந்திய விவசாயிகளுக்குத் தேவையான வானிலை சம்பந்தமான அறிவை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

             இந்தப் பட்டியலுக்குத் தமிழ் நாட்டின் பங்களிப்பு, கந்தசாமி கவிராயர் இயற்றிய வேளாளர் புராணம் , உழவின் பெருமையையும் வேளாண் அறிவையும் , வேளாளரின் வரலாற்றையும் மிக அழகாக கவிநயத்துடன் பாடுகிறது.

            இயற்கைச்  செழிப்பை சீராக்கி விவசாயத்தை மேம்படுத்த நாம் பின்வரும் உத்திகளை மேற்கொண்டால் இழந்த இயற்கையைத் திரும்பப் பெற முடியும்:
பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றி ஒரே தோட்டத்தில் பலவகையான பயிர்களைச் சேர்ந்தே பயிரிடுவது.
·              மண்ணின் மேல் மூடாக்குப் போட்டு மண்ணைப் பாதுகாத்து விவசாயம் செய்வது.
·              கால்நடைகளைக் காட்டில் மேய விட்டு, விவசாயக் கழிவுகளை உணவாகக் கொடுத்து , மாட்டுச் சாணத்தை மண்ணில் சேர்த்து ஊட்டச்சத்துக்களை ஓயாமல் சுழற்சி செய்து வருதல் :  அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு எனும் பழமொழி இதற்கு ஆதாரம்.
·              ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற பயிர் வகைகளைக் கண்டறிந்து பயிரிட வேண்டும். இயற்கையின் சமநிலை பராமரிக்கப்பட்டு தாவரங்களை உட்கொள்ளும் பூச்சிகள் அளவுக்கு மீறி பயிர்களை சேதம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
        இவைகளை கடைப்பிடித்தோமானால்  நம் இளைய தலைமுறை மட்டுமின்றி எதிர் வரும் காலங்களிலும் இயற்கையின் வளம் என்றும் குன்றாது செழித்தோங்கும்.

(கட்டுரையாளர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளர்).
இவரைத் தொடர்புகொள்ள:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக