முகம்மது அஸ்கர்.
" ஒரு குண்டுவீச்சில்
அங்குலம் அங்குலமாக உடைக்கப்பட்டது
நகரம்
எங்கும் பிணங்களின் நிழல்
பெரும் லாபங்களுக்குக்
கொல்லப்பட்டவர்கள்
ஒரே குழியில் புதைக்கப்பட்டார்கள்
"
2020 ஜனவரி 1, கவிதை கடை விரித்த மாலைப்பொழுதில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தக்கலை கிளை செயலாளர், கவிஞர் MM பைசல் அவர்களின் வாப்பாவின் மூச்சு கவிதைப் பிரதி வெளியீடு தக்கலையில் நடைபெற்றது.
தோழர் பைசல் #ராவணன் மீசை கவிதை தொகுப்பின் வாயிலாக புதுக்கவிதை உலகத்திற்கு அறிமுகமானவர். தொழில் ரீதியாக கட்டிட காண்டிராக்டராக
பணியாற்றினாலும் கவிதை, சிறுகதை என செழுமையான இலக்கிய
பங்களிப்பை சப்தமின்றி செய்துகொண்டிருக்கிறார்.
நண்பர் பைசல் ஒரு தேர்ந்த வாசிப்பாளர்.
உலகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வாசித்துப் பெற்ற அனுபவத்தின்
வெளிப்பாட்டை, தன் படைப்பிலக்கியத்தின் வாயிலாக தமிழ்
படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது வாப்பாவின் மூச்சு கவிதைத் தொகுப்பிலும் பிற மொழி கவிதை
கோடல்களின் சாயல் நிறைந்திருப்பதைக் காணலாம்
மௌனத்தின் மீது வீசப்பட்ட ஏவுகணைகள்
துளைத்து விதை நசுங்கி குரல்வளையை விட்டு வெளிவர
துடித்துக்கொண்டிருக்கும் தன் சமூகத்தின் குரலை, வாப்பாவின்
மூச்சின் வழியாக ஒலிக்கச் செய்திருக்கிறார். தன் சமூகம் சந்திக்கும் சமகாலச் சிக்கல்களை மிக வெளிப்படையாகவும்
மிகக் கூர்மையாகவும் பேசியிருக்கிறார்.
#பாரத உம்மா என்ற கவிதையில்
" உம்மா சொல்லாத வார்த்தை
தொப்பி வெக்க வழியில்லை
தாடி வெக்க வழியில்லை
பெயர் வெக்க வழியில்லை
நானும் உன் மகன்தானே
ஒரு முலையை ஏன் மறைக்கிறாய்
அல்லது உனக்கு ஒரு முலைதான் உள்ளதா
எனக்கும் பாலூட்டு
தீராத பகையுணர்வோடு பார்க்காதே உம்மா
" என்று ஒற்றைச் சார்போடு நடத்தப்படும்
முஸ்லிம்களின் அவலத்தைப் பேசியிருக்கிறார்.
எதற்கு கைது செய்யப்பட்டிருக்கிறோம்?
எதற்கு தண்டனை அனுபவிக்கிறோம்? என்பதே தெரியாத கைதிகள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அந்த அநீதியை
" கதவில்லா அறையில் ஒருவன் வசிக்கிறான்
சிறு சன்னல் மட்டுமே அவனுலகம்
வழிப்போக்கர்கள் உணவளிக்கின்றனர்
அவனிடம் ஒரு புத்தகமிருக்கிறது
அதைத் திரும்பத் திரும்பப் படிக்கிறான்
ஒரு பூச்செடி இருக்கிறது அதில் அரைப்
பூ மட்டுமே பூக்கிறது
அறையில் ஒரு நிலவு ஓவியமிருக்கிறது
ஒவ்வொரு நாளும் தேய்கிறது
எதற்கிந்த தண்டனை அவனுக்கு
வழங்கப்பட்டது
அவனுக்கும் தெரியவில்லை " என்று
எழுதுகிறார்.
இந்தியாவின் பூர்வீகக் குடிகளான
முஸ்லிம் சமூகத்திற்கு, உரிமை மறுப்பு விவகாரம் பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், நண்பர் பைசல் வாப்பாவின் மூச்சை வெளியிட்டிருக்கிறார்.
அஸ்திவாரத்தை இடித்துவிட்டு
கூரையை பத்திரப்படுத்த வழிசொல்லும்
ஆட்சியாளர்களின் அர்த்தம் நிறைந்த பேச்சை பதிவு செய்யும் ஒரு கவிதை:
" என் மொழி பேச உரிமையில்லை
என் உணவை உண்ண உரிமையில்லை
மாட்டை அறுப்பவன் கத்திகளைப் பிடுங்கி ,
பகவைப் பூசிப்பவன் தாயின்
மார்பறுக்கிறான்
குழந்தையின் குஞ்சறுத்துச் செல்கிறான்
தலைவன் சொல்கிறான்
யோகா யோகா யோகா "
சமகால அரசியலை மையப்படுத்தி எழுதப்பட்ட
கவிதைகளோடு தன் பன்முக கவிதை கோலங்களையும் வரைந்துச்
சென்றிருக்கிறார், தான் சார்ந்திருக்கும் கட்டிட தொழில்
சார்ந்த சிக்கல்கள் என்று இன்னொரு உலகத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
பத்தாவது மாடியில் இருந்து விழுந்து
இறந்து போன சித்தாள் ஒருவனின் நினைவு, அந்தக்
கட்டிடத்தை கடக்கும்போதெல்லாம் ஓலமாய் கேட்கும்
துயரத்தை கவிதை மொழிகொண்டுப் பேசுகிறார்.
அதேசமயம் தன் குடும்பம் சார்ந்த
அழகியலையும், குழந்தைகளின் உலகத்தையும் பேசுகிறார்.
காதலின் அழகையும் அனுபவத்தையும் பேசும்
நேரத்திலேயே: இனவெறியாலும் மதவெறியாலும் அரங்கேற்றப்பட்ட கொடூரத்தை
" வளரும் காலைச் சுமந்து செல்பவள்
கலங்கிய வெப்பத்துடன் அவள்
ஈழப்போரில் துண்டிக்கப்பட்ட அண்ணனின்
காலோ
இல்லை கயர்லாஞ்சியில் வல்லுறவு செய்து
கொல்லப்பட்ட தங்கையினுடையதோ
குஜராத்தில் பிள்ளைத்தாச்சியின்
வயிற்றைக் கிழித்து எடுக்கப்பட்ட பச்சிளத்தின் காலோ
அல்லது சிறுவயது முதலே அவன்
சிறுகச்சிறுக துயரத்தைச் சேர்த்து வரலாற்றில் நடந்துவரும் காலோ
பல்லி வாலாய்த் துடிக்கும் கால்
தினமும் குளிப்பாட்டி செருப்பணிவித்து
துடிக்கும் நரம்புகளை ஆசுவாசப்படுத்தி
நகங்களை வெட்டி
, கரண்டை வரை உடை உடுத்தி ,
ஏதோ ஒருசாலையில் அனுதினமும் சுமந்து
செல்கிறாள் "
என்று வெவ்வேறு முகம் மாற்றி ஒரே
குரலில் நண்பர் பைசலால் பேசமுடிகிறது.
அதிகாரம், பலவீனத்தின் மீது ஏற்படுத்தும் விபத்தையும், குப்பியை உடைத்துவிட்டு குப்பியின் அளவில் வானத்தில் பறக்கும்
தோட்டாவின் மாயாஜாலத்தையும், நக இடுக்கில் உறைந்து போயிருக்கும்
சிமெண்டின் கரை ஏற்படுத்திய, தொழில்சார் நினைவுகளையும், அதிக நெடியின்றி வீசும் மெல்லிய பூவின் காதல் நறுமணத்தையும் மாறி மாறி பேசியும், பேசாமலும் வாப்பாவின் மூச்சு விம்மிக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக