ரா. பாலகணேசன்
(சென்ற இதழ் சந்திப்பின் தொடர்ச்சி)
பா: திருக்குறளில் 1330 குறள்களையும் மனப்பாடம் செய்வது ஒரு கலையாக இருக்கிறது. உங்களுக்கு 1330 குறளும் மனப்பாடமாகத் தெரியுமா?
பொ: தெரியும். ஆனால், வரிசையாக சொல்ல
இயலாது. இருந்தபோதும் ஒரு தலைப்பின் கீழ் பேச வேண்டுமென்றால், என்னால் உடனடியாக குறள்களை
தொகுத்துப் பேச இயலும்.
பா: உங்களுக்கு திருக்குறளில் ஐயம்
ஏற்பட்டால் யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வீர்கள்?
பொ: பேராசிரியர் கந்தசாமி மற்றும் பேராசிரியர் சுகுமாரன் இருவரிடமும் திருக்குறள் தொடர்பான ஐயங்களைக் கேட்டுத்
தெரிந்து கொள்வேன். மேலும் சுகுமாரனைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். 1984-இல் இருந்து என்னுடைய திறமையை அங்கீகரித்து, வாசிப்பு பழக்கத்தை
ஊக்குவித்தவர் அவர்தான். இதை இங்கே பதிவுசெதாகவேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகள்
மத்தியில் பள்ளிகளுக்கு இடையே பிரிவினை
பேதம் இருந்தது. நாங்கள் படித்தபாளை பள்ளியில் சிறு தொழிலுக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்ததால், எங்கள் பள்ளி மாணவர்கள் சற்று கீழானவர்கள். பூவிருந்தவல்லி பள்ளியில்
படித்தவர்கள் பலர் உயர்கல்வி பயின்று வந்தனர். எனவே அவர்கள் உயர்வானவர்கள் என்ற
பேதம் இருந்தது. அதனால், நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அப்படிப்பட்ட
காலகட்டத்தில் என் திறமையை சுகுமாரன் தான் அங்கீகரித்தார்.
பா: மேடையில் பேசும் திறனை எப்படி
வளர்த்துக்கொண்டீர்கள்?
பொ: பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம்
இருந்தது. ஒவ்வொரு மில் தொழிலாளர் கூட்டத்தையும் கூர்ந்து கவனிப்பேன். எப்படியாவது
நானும் அக்கூட்டத்தில் பேச்சாளராக பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். இறுதியில்
அந்தக் கனவு நனவானது. நான் ஓய்வு பெறும் போது, நான்கு வாயில் கூட்டங்களில்
பேசினேன். அது திமுகவிலிருந்து மதிமுக பிரிந்த சமயம். நான் அப்போது திமுக
தொழிற்சங்கத்தில் இருந்தேன்.அப்போது, மதிமுக தொழில்ச் சங்க கூட்டத்தில் பேசினேன்.
அந்தக் கூட்டத்தில்பேரூர் r. நடராஜன் என்பவர் என்னை பாராட்டி பொன்னாடை போர்த்தினார். ஒரு பார்வையற்றவராக இருந்துகொண்டு இப்படியெல்லாம்
பேசலாமா?பிறகு பிரச்சனை வந்தால் என்னசெவீர்கள்? என பலரும் என்னிடம் கூறினர்.
அடுத்த நாள், அதிமுக தொழில்ச் சங்க தலைவரும் எனக்கு கை கொடுத்தார். இப்படி
மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் அளவிற்கு எனது பேச்சு இருந்தது.
ஓய்வு பெற்ற பிறகும் பல தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு
அழைப்பு வருகிறது. இப்போதும் நான் அவற்றில் சென்று பேசி வருகிறேன்.
பா: திருக்குறள் தொடர்பாக முதல்முதலாக
நீங்கள் பேசிய மேடை எது?
பொ: 1985-இல், சட்டமன்ற உறுப்பினர் v.k.லட்சுமணன்
தலைமையில், தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பும் (nfb) கோவை அரிமா சங்கமும் இணைந்து ஒரு
கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த மேடையில் தான் முதல்முதலாகத் திருக்குறள்
பற்றிப் பேசினேன்.
பா: பார்வையற்றோர் அமைப்பு மற்றும்
நீங்கள் பணியாற்றிய இடம் அல்லாது திருக்குறள் பற்றி பேசிய பொதுமேடை எது?
பொ: 1986ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் திருக்குறள் பற்றி குறைவான நேரம்
பேசினேன். அண்மையில் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிகழ்ச்சியில், மூன்று வாரம் திருக்குறள்
பற்றி தொடர்ச்சியாக பேசினேன். எனது மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு
சென்றபோது சித்திரை திருவிழாவில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்கள் 7 நிமிடம் மட்டுமே பேசுவதற்கு கொடுத்தனர். வள்ளுவர் வைக்கப்படும் என்ற
பதத்தை 4 குரல்களில் மட்டும் பயன்படுத்தி
இருக்கிறார். அந்த நான்கு குரல்களை மட்டும் பேசுவதற்கு தேர்ந்தெடுத்தேன்.அந்த நான்கில்
இரண்டு நேர்மறையாகவும் இரண்டு எதிர்மறையாகவும் பொருள் தரும்படி வள்ளுவர் அமைத்திருக்கிறார். அந்த நான்கு குறள்களையும் இணைத்தும்,
ஒரு அபிராமி அந்தாதி பாடல் மற்றும் ஒரு திருவாசகப் பாடலை கூறி எனது உரையை
முடித்தேன். அரங்கில் உள்ள அனைவரும் பாராட்டினர்.
பா: திருவாசகத்தை பிரேயிலில்தான்
படித்தீர்களா?
பொ: ஆம். வானொலியில் மார்கழி மாதத்தில்
திருவாசகப் பாடல்களை கேட்பதுண்டு. எனவே, அந்நூலை பிரேயிலில் படித்தால் என்ன எனத்தோன்றியது.
வானொலி டேப் ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்பதைவிட பிரேயிலில் படித்தால்தான் எனக்கு
நினைவில் நிற்கும். அதனால், திருவாசகம் எங்கேனும் பிரேயிலில் இருக்கிறதா? என விசாரித்துப்
பார்த்ததில், எங்கேயும் பிரேயிலில் இல்லை. எனவே, ஒர்த் டிரஸ்ட் பிரேயில் அச்சகத்தைத்தொடர்புகொண்டு,பிரேயிலில் அச்சிட்டு வாங்கினேன்.
அதற்கு 2,100 ரூபாய் செலவானது.
புலியூர் கேசிகன் புத்தகத்தின் விலை
வெறும் 180 ரூபாய்தான். ஆனால், அதை பிரேயிலில் மாற்ற 2100 ரூபாய் செலவாகிறது. இருப்பினும் அந்த நூலில் உள்ள அனைத்தையும் அச்சிட
முடியுமா என்றால் அதுவும் ஒரு கேள்விக்குறிதான்.
பா: இது தவிர வேறு நூல்களைப் படித்திருக்கிறீர்களா?
பொ: i.a.b. பிரேயில்
அச்சகம் வெளியிட்ட அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணா
மிஷன் வித்யாலயா வெளியிட்ட திருப்பாவை, திருவெம்பாவை போன்றவற்றை
படித்திருக்கிறேன்.அதுதவிர,மலர்விழி உள்ளிட்ட பிரேயில் இதழ்களையும்
படித்திருக்கிறேன். நாச்சியார் திருமொழியை பிரேயிலில் படிக்க ஆசை.
பா: நீங்கள் கடைசியாக படித்த நூல் எது?
பொ: இந்து தமிழ்திசை வெளியிட்ட (மாபெரும்
தமிழ் கனவு)..
பா: இந்நூலை ஒரு வாசிப்பாளர் உதவியால்
தான் படித்திருக்க முடியும். அப்படியென்றால், உங்களுக்கென ஒரு வாசிப்பாளரை
வைத்திருக்கிறீர்களா?
பொ: என் வீட்டுக்கு அருகில் ஒரு நன்பர்
இருந்தார், அவர்தான் எனக்கு வாசித்துக்காட்டுவார். தற்போது வீட்டை மாற்றிக்கொண்டு
வந்துவிட்டேன். இருந்தபோதும் வாரம் இருமுறை வந்து வாசித்துக்காட்டிவிட்டுச்
செல்கிறார். வாசிப்பாளரும் என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
பா: உங்கள் வாசிப்பாளரைப் பற்றி
கூறுங்கள்?
பொ: படித்து முடித்து பணியில் சேரும் வேலையில், அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார். அதனால், அவரால் பணியில்
சேர இயலவில்லை. நீண்டகாலமாக வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தார். அவரது தந்தை
எங்களது ஆலையில்தான் வேலை பார்த்தார். அவரோடு பழகிய போதுதான் இந்த விடயம் தெரிய
வந்தது. பின்னர் அவர் குடும்பத்திற்குச் சென்று நாங்கள் எல்லாம் வெளியே வந்து வேலை
பார்க்கிறோம். நீங்களும் வெளியே வந்தால் என்ன? எனக்கூறி, பிறகுதான்
அவரை பொது இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். இப்போது அவரே பேருந்தில் பயணிக்கும்
அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
பா: நீங்கள் யூட்யூபில் திருக்குறள்,
திருவாசகம் தொடர்பான சொற்பொழிவுகளைக் கேட்டு வருகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை மிகவும் வித்தியாசமாக யார் பேசுகிறார்கள்?
பொ: திருவாசகம் தொடர்பாக (எப்போ
வருவாரோ) என்ற நிகழ்ச்சியில் சுகி சிவத்தின் உரை மாறுபட்ட கோணத்தில் இருந்தது.
பா: அண்மைக்காலமாகவே திருக்குறளுக்கு காவிச் சாயம் பூசப்பட்டு வருகிறதே? அது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?
பொ: எந்த ஒரு எழுத்தாளனும் தன்னுடைய
கருத்தோடு, தான் வாழும் காலத்தில் உள்ள கருத்தையும் இணைத்து தான் எழுத முடியும்.
இதுதான் எதார்த்தம். அதன் அடிப்படையில் பார்த்தால், வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பே தமிழ்ச் சமூகம் மிகவும் செழிப்புற்று
வாழ்ந்திருக்கிறது. அதை வள்ளுவரே பதிவு செய்கிறார்.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”
இப்படி திருக்குறளில் மூன்று இடத்தில்
நானறிந்த என்ற பொருளில்
வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
வள்ளுவர் தன் காலகட்டத்தில்
கள்ளுண்ணாமை புலால் மறுத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறார்.
ஆனால், அதே காலகட்டத்தில் வந்த நூல்கள் சோமபானம் சுராபானம் போன்றவற்றைப் பருகச்சொல்லி
ஊக்குவித்து கொண்டிருந்தன.மேலும், வள்ளுவர் வாழ்வியலோடு இயைந்து கருத்துக்களை
எடுத்துரைக்கிறார். கணித எண்களைக் கூட குறளில் சிறப்பாக கையாண்டுள்ளார்.
“தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.” (1)
“காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.”(2)
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.”(3)
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.”(4)
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.” (5)
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”(6)
“ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.”(7)
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”(8)
வள்ளுவர் 9 என்ற எண்ணைப்
பயன்படுத்தவில்லை.
“பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.”(10)
“பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.”(70(
“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.”(100(
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.”(1000)
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.” (10000000)
இப்படி ஒன்று முதல் கோடிவரை எண்களைவள்ளுவர்
குறளில் பதிவுசெய்திருக்கிறார்.
வாழ்வியல் செய்திகள் வழியே
கருத்துக்களை எடுத்துரைக்கிறார் என்பதற்கு இன்னொரு சான்று: நாம் முதியவர்களின்
காலை தொட்டு ஆசிர்வாதம் பெறுகிறோம். ஆசிர்வாதம் பெறுவது என்பது பணிவைக் குறிக்கும்.
உடைமை என முடியும் பத்து அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் பணிவுடைமை என்று
ஒரு அதிகாரம் இல்லை. அதற்கு காரணம் அனைத்து குறள்களிலும் அவர் பணிவையே வலியுறுத்துகிறார்.
அதனால்தான் வள்ளுவர் அடி என்ற சொல்லைமட்டும்
பயன்படுத்துகிறார். அதிலும் கடவுள் வாழ்த்தில் 6 இடங்களில் அடி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
பா: அவர்கள் கடவுள்வாழ்த்து என்ற
அதிகாரத்தைத்தானே முன்னிறுத்துகிறார்கள்?
பொ: கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் பணிவைத்தான்
குறிப்பிடுகிறது. அது இறை வழிபாட்டை குறிப்பிடவில்லை. அவர் கடவுளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால்,
ஏன் 107வது அதிகாரத்தில்,
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.”
எனக் குறிப்பிடுகிறார்? கடவுள் வாழ்த்து என்ற தலைப்பைக் கூட பின் வந்தவர்கள் தான்
கொடுத்திருக்க வேண்டும். திருக்குறளில் எந்த அதிகாரத்தை எடுத்துக் கொண்டாலும்,
அதன் தலைப்பை வலியுறுத்தும் வகையில் ஒரு குறள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
பா: வாசகர்களுக்காக ஒரு சான்று சொல்லுங்கள்?
பொ: அறிவுடைமை என்ற அதிகாரத்தை எடுத்துக்
கொண்டால்,
“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”
இக்குறளில் அறிவு என்ற சொல்
இடம்பெற்றிருக்கிறது. ஆனால், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில், கடவுள் என்ற சொல்
ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை.திருக்குறளில் கடவுள் என்ற சொல்லே இல்லை.
பகவத்கீதையில்‘கடவுள்தான் 4 வர்ணத்தையும் உருவாக்கினார்’ என்ற கருத்து இடம் பெற்றிருக்கிறது.
ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தாரானால் அவர் என்ன கடவுள்? அங்கே கடவுள் என்ற
கருத்தாக்கமே அடிபட்டுப் போகிறதே. ‘எல்லாமே அவன் செயல்’ என மதவாதிகள்
குறிப்பிடுகின்றனர்.அவர்கள் தரப்பைச்சார்ந்தவராக வள்ளுவர்இருந்தால்,ஏன்?
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”
என்றும்,
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”
எனவும் குறிப்பிடுகிறார்.அதுமட்டுமல்லாமல்,
நன்மை விளையும் போது மகிழ்ச்சி அடையும் நீங்கள்; துன்பம் வரும்போது மட்டும் அது
குறித்து ஏன் பெரிதும் கவலைப் படுகிறீர்கள்?
“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?”
என இந்த குறலின் வாயிலாக கேட்கிறார்.
பொருட்பாலில் மட்டுமல்ல காமத்துப்பாலிலும்
“துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.”
என்ற குறளில் ஊக்கம் பற்றி
எடுத்துரைக்கிறார். எனவே திருக்குறள் பக்தி நூல் அல்ல அது ஒரு அறநூல். .
பா: மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கம் தரும்
குரல்களை சொல்லுங்களேன்?
பொ:“பொறியின்மை யார்க்கும் பழியன்று
அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.”
அனைவருக்கும் தேடல் இருந்தாலே போதும்
என வள்ளுவர் குறிப்பிடுகிறார். நமக்கெல்லாம் நம்பிக்கை தரக்கூடிய இன்னொரு குறள்,
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.”
வாழ்வில் தோல்வி வரும். ஆனால், உன் எண்ணத்தை மட்டும் கைவிட்டுவிடாதே எனச்
சொல்கிறார். இந்த குரல்தான் என்னையும் புடம்போட்டு வைத்திருக்கிறது.
பா: இக்கால இளைஞர்களுக்கு நீங்கள்
சொல்ல விரும்புவது?
பொ: என் வாழ்வில் நான் மூன்று
விடயங்களை தவறாமல் கடைபிடித்தேன். அதையே இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
காலத்தை முதலீடு செய்யுங்கள், எவரிடத்திலும் அன்பாய் இருங்கள், எவற்றிலும்
உண்மையாய் இருங்கள். இம்மூன்றையும் தவறாது கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி
வந்து சேரும். அது தவிர, தந்தை பெரியாரின் புத்தகங்களை படிக்க வேண்டுமாய்
இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மனிதனை மனிதனாக மதித்து உருவாவதே மனித
வாழ்வு. இதயே பெரியார் தன் எழுத்துக்களில் சொல்லியிருக்கிறார். நான் இப்போதுதான்
அவற்றைப் படிக்கத்தொடங்கியிருக்கிறேன். இளம் வயதிலேயே இந்நூல்களை படிக்காமல் தவற
விட்டு விட்டேனே என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. மேலும் இளவழகனார் என்பவர்
அறிஞர் அண்ணாவின் புத்தகங்களை தற்போது தமிழ்மண் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டு
வருகிறார். அவற்றையும் இளைஞர்கள் படிக்க வேண்டும்.
மேடைப்பேச்சு என்பது வெறுமனே மனப்பாடம்
செய்து பேசுவதல்ல. தொடர் வாசிப்பின்மூலம் பல செய்திகளை தாமாக திரட்டி பேசும் கலை.
அப்படித்தான் என்னாலும் திருக்குறள் பற்றி சரளமாக பேச முடிந்தது. எனவே, இளைஞர்கள்
வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பா: திருக்குறள் தொடர்பாக பல புதிய செய்திகளை வாசகர்களோடு
பகிர்ந்துகொண்டமைக்காக விரல்மொழியர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொ: உங்களுக்கும், உங்கள் இதழுக்கும் என் நன்றிகள்
திருக்குறள்
பொன்னுசாமி அவர்களைத் தொடர்புகொள்ள:
9655440080
(தொகுப்பு: பொன். சக்திவேல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக