18+: கொரோனா காலத்தில் நான் படித்த புத்தகம் - M. பாலகிருஷ்ணன்

graphic ஓஷோ

       இந்த கொரோனா  ஊரடங்கு காலத்தில் அனைவரும் படங்கள் பார்த்தும், புத்தகங்கள் படித்தும் தங்கள் பொழுதுகளைப் போக்கி வருகின்றனர். இந்தக் கட்டுரையில் கொரோனா விடுமுறையில் நான் படித்த புத்தகம் குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்வதுடன், உங்களையும் படிப்பதற்கு வலியுறுத்தலாம் என்ற எண்ணத்தோடு இதனை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
       பொதுவாகவே, இம்மாதிரியான தனிமை காலங்களில் நான் புத்தகங்களை வாசிப்பது வழக்கம். அந்த நோக்கத்தோடு அமேசான் கிண்டிலில் ஓஷோ அவர்களின் உளவியல் தொடர்பான  புத்தகம் ஒன்றினை முன்பு ஒரு சமயம் வாசித்திருக்கிறேன். "தந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை, எழுத்தாளர் ஓஷோ என்று பார்த்ததும் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்து படிக்கத் தொடங்கினேன்.
               எனக்கு நீண்டகாலமாகச் சந்தேகம் இருந்து வந்துள்ளது. நமது நாட்டில் கள்ளக்காதலும், கருத்தரித்தல் மையமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் ஒன்றுதான். அது கணவன் மனைவி இருவருக்குமிடையே குறையும் அன்புதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உலகிற்குக்  காமசூத்திரத்தைத்  தந்த  நமது நாட்டில்  இது  அதிகரிக்கிறது  என்பதைப்  பார்க்கும் பொழுதுதான்  வருத்தமாக உள்ளது. இந்தப் புத்தகத்தில் ஓஷோ முறையான தாம்பத்தியம் மூலம்  ஏற்படும் நன்மைகளையும் அது ஒழுங்காகப் பெறப்படாமல் போகும்பொழுது ஏற்படும் தீமைகளையும் தெளிவாக அறிவியல் பூர்வமாகவும், உளவியல் பூர்வமாகவும் விளக்கியுள்ளார்.
       தயவுசெய்து யாரும் கலாச்சாரம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இந்தக் கட்டுரையையும், புத்தகத்தையும் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம், “நீங்கள் கடவுளை நம்புவீர்கள் என்றால் நல்ல உணவு, பொழுதுபோக்கு, பாலியல் இன்பம் ஆகியவற்றை  இழக்க நேரிடும்என்று சேப்பியன் என்ற நூலில் யுவால் நோவா ஹராரே குறிப்பிட்டுள்ளார். ஹராரேவின் வார்த்தை எவ்வளவு உன்மை என்பதை நான் அறிவேன். எங்கள் வீட்டில் விரதம் இருக்கும் பொழுது மாமிசம் சாப்பிட முடியாமல் நான் பட்ட அவஸ்தை, விரதம் இருந்த அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். என்னைப் போன்று நீங்கள் அவஸ்தைப் படக்கூடாது என்பதற்காகத் தான் ஹராரேவின் கூற்றை இங்கே கூறியிருக்கிறேன்.
       சரி, ஓஷோவின் தந்தரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை புத்தகம் குறித்துப் பார்ப்போம். அன்பான குடும்பம் உருவாக தந்திரமான தாம்பத்தியம் தேவை என ஓஷோ குறிப்பிடுகிறார். காமம் காரணமாகத் தான் குடும்பம் உருவானது என்று நமக்கு வரலாறு என்ன சொல்லியதோ அதையே  தந்தரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை நூலும் உணர்த்துகிறது. மனிதன் தோன்றிய காலத்தில் அவனுக்கு உணவும், பாலியலும்தான் வேலையாக இருந்துள்ளது. நாடோடியாக வாழ்ந்து வந்த மனிதன் ஒரே இடத்தில் குழுவாக வாழத் தொடங்கியுள்ளான். அவர்களுக்குள் பாலியலில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. பெண்கள் எப்பொழுதும் கையில் ஒரு குழந்தையையும், வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்த வண்ணமே இருந்தனர். இதன் காரணமாக விலங்குகளின் இரைக்கு பெண்களும், குழந்தைகளும் பலியாயினர். இவர்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டுக் குழுவாகவும், குகையிலும் வாழத் தொடங்கினர்.
       அந்தக் காலத்தில் பெண்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர். அதற்குக் காரணம் பாலியல் தேவை தான். அதேசமயம் பெண்கள் தான் அந்தக் குழுவிற்குத் தலைவராக இருந்துள்ளார்கள். அப்பொழுது தாய் என்ற உறவை தவிர வேறு எந்த உறவுமுறையும் மக்களிடையில் புழக்கத்தில் இல்லை. எந்த ஆண் பலமானவனாக இருக்கின்றானோ அவனுக்கு மட்டும் பாலியலில் இன்பம் கிடைத்து வந்துள்ளது. அதேநேரம், காமம் தான் அவர்களுக்குள் சண்டை வரவும் காரணமாக இருந்துள்ளது. அந்தச் சண்டை தந்தைக்கும் மகனுக்குமே வரும்.  தாய் தான் இவர்களைச் சமாதானப்படுத்த வேண்டும். தந்தை பலமானவராக இருப்பதனால் மகன் தனித்து விடப்பட்டிருப்பான். அவ்வேளையில் தாய் அவனுக்குத் தெரியாமல் தன் மகனுக்குப் பாலியல் இன்பத்தை வழங்கி வந்தால். இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் குடும்பமாகத் தனித் தனிக் குகைகளில் வாழத் தொடங்கியுள்ளனர்.
       தரிசு நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கிய மனிதன் படிப்படியாக சில சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டான். அதுவே பிற்காலத்தில் சட்டமாக வந்துள்ளது. அச்சட்டமே தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆதிக்கத்தையும் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் திருமணம் என்ற ஒன்று தோன்றியது. இங்கிருந்து தாய், தந்தை, பாட்டி, தாத்தா, மாமா, அத்தை, போன்ற உறவுகள் தோன்றின. இவ்வாறு தான் முறையற்ற காமத்தை முறையுள்ளதாக மாற்ற வந்தது குடும்பம்.
       குடும்பம் உருவான பிறகு அதனோடு பிரச்சனைகளும் கூடவே வரத் தொடங்கியது என ஓஷோ குறிப்பிடுகிறார். மாமியார் மருமகள் சண்டை, கணவன் மனைவி சண்டை, பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை முதலியவற்றுக்கு முக்கியக் காரணம் கணவன் மனைவி இருவரும் வள்ளுவனின் இன்பத்துப் பாலை முறையாக பருகாமையே! என ஓஷோ குறிப்பிடுகின்றார். இதனை அறிவியல் மூலமாகவும் விளக்கி இருக்கிறார் ஓஷோ.
       மனித  உடல் பல சுரப்பிகளால் ஆன ஒரு ஃபேக்டரி என ஓஷோ வருணிக்கின்றார். அச்சுரப்பிகள் ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் துணைபுரிகிறது. இவை ஒவ்வொன்றும் முறையாக சுரப்பதற்கு நமது உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் இருப்பது அவசியம். ஆக, இவை சரியாக நடைபெறக் கணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் முழு உச்சத்தை எட்ட வேண்டும். அவ்வாறு நடந்த பிறகு ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணரலாம் என ஓஷோ வலியுறுத்தியுள்ளார்.
       மேலும், மனிதர்களுக்கு ஏற்படும் இதய நோய், மூட்டு வலி, தூக்கம் இன்மை, மன நோய்கள் போன்றவை தாம்பத்திய குறைபாட்டினால் ஏற்படுகின்றன என்றும், முறையான உடலுறவின் மூலம் உச்சத்தை எட்டினால் இவ்வகையான நோய்கள் வருவதைத் தடுக்கலாம் என ஓஷோ அறிவுறுத்துகின்றார். உளவியல் மூலமாகவும் இதை விளக்குகிறார்.
graphic தந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை நூலின் அட்டைப்படம்

        மனிதனின் மனம் குறித்துப் பேசும் ஓஷோ, “இந்தியாவில் 90% கணவர்கள் மேல்மனதளவில் தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உள்மனம் வரை அதன் சிந்தனையைக் கொண்டு செல்ல மறுக்கிறார்கள். அதனால் தான் ஆண்கள் தங்களது தேவையை மட்டும் பார்க்கிறார்கள். எதிர் பாலினத்தின் ஆசையைப் பார்க்க மறந்து விடுகிறார்கள்என்று ஓஷோ இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.
       நாம் உணவு உண்பதற்கு எவ்வாறு நேரம் ஒதுக்குகின்றோமோ அதுபோல தாம்பத்தியத்திற்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒதுக்கிட வேண்டும் என்கிறார்.
       சுய இன்பம் குறித்து இப்புத்தகத்தில் பேசியிருக்கிறார். ஏன் சுய இன்பம் செய்ய கூடாது என்பதற்கு நீண்ட விளக்கத்தையும் தந்திருக்கிறார். சுய இன்பம் ஒருபொழுதும் ஆண்மையைப் பாதிப்பது இல்லை. ஆனால், சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் அதையே பழக்கமாக கொண்டு இருப்பதனால் முதல் இரவின் போதே அவரால் தனது இணையைத் திருப்திப்படுத்த முடியாமல் போகிறது. முதல் இரவின் பொழுதே அவனுக்குத் துரித ஸ்களிதம் [விந்து முந்துதல்] ஏற்பட்டுமுதல் கோனல் முற்றிலும் கோனல்என்ற மன நிலைக்குத் தள்ளப்படுகின்றான். மேலும் துரிதஸ்களிதம் என்பதும் தாம்பத்தியத்தில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று. விந்து விரைவில் வெளியேறிவிட்டால் ஆண் செயல் இழந்து விடுகின்றான். இதனை யோகாசனம் மூலமும், உடல் பயிற்சிகள் மூலமும் சரிசெய்ய சில டிப்ஸ்களை வழங்கி இருக்கிறார். அதே சமயம், விந்தை வெளியேற்றாமல் எவ்வாறு பாலியல் இன்பத்தைப் பெறுவது என்பதற்குச் சில பயிற்சிகளைச் சொல்லி இருக்கிறார்.
       திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் அதிகமான எதிர்பார்ப்புகள் தாம்பத்தியத்தில் இருவருக்கும் நாட்டம் இல்லாமல் போகக் காரணமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆபாசப் படங்களே. அந்தப் படத்தில் வருவது போலத் தாமும் இருக்க வேண்டும் என்று எண்ணிப் பள்ளி அறையினில் செல்லும் போது எதார்த்தம் அங்கு வேறுமாதிரி இருப்பதால் ஆண் ஏமாற்ந்து போகிறான். அதே சமயம் தம்மை முழுமையாகத் திருப்திப் படுத்த இயலாதவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டோமே! என்று எண்ணும் பெண்ணின் வெறுப்பும் சேர்ந்து அங்கே முழுமையான தாம்பத்தியம் நடைபெறாமல் போகின்றது. இந்தக் காரணத்தால்தான் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. எனவே, ஆபாசப் படங்களைப் பார்க்க வேண்டாம் என்றும், அதனால் கணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் முழுமையான இன்பத்தைப் பெற முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
       இறுதி பாகம் குறித்து நான் எதுவும் இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால், இப்பாகம் தான் இந்தப் புத்தகத்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனச் சொல்லலாம். இதில் தான் தாம்பத்தியத்தை நீண்ட நேரம் எவ்வாறு நீட்டிப்பது என்பது குறித்து விளக்கியிருக்கிறார். இப்புத்தகத்தில் ஓரிடத்தில் கூட  எவ்வித கொச்சைச் சொற்களும்  பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால்  எவ்வாறு புரிந்துகொள்வது என நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. பயப்பட வேண்டாம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எல்லா தூயத் தமிழ் மற்றும் சமஸ்கிருத சொற்களுக்கு இனையான நடைமுறை வார்த்தைகளைப் பட்டியலாகத் தந்திருக்கிறார்.
       பாலியல்  இன்பம் என்பது இரு பாலினத்திற்கும் பொதுவானது தான். ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை பாலின்பத்தில் ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. பெண்கள் இன்பம் கொடுப்பவர்கள், ஆண்கள் இன்பத்தைப் பெறுபவர்கள் என்ற நிலையில் இருந்து மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவர்  டீ காமராஜ் அவர்கள் சொல்லுவார்இந்தியாவில் தாம்பத்தியத்தில் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்திப் பாலின்பத்தில் பெண்கள் தங்களது உச்ச இன்பத்தையே மறந்துபோய்விட்டார்கள்”. இப்புத்தகத்தில் பல விஷயங்களைப் பற்றி ஓஷோ பேசி இருந்தாலும் அதில் ஒரு சிலவற்றை என்னால் நம்ப முடியவில்லை. எது குறித்தும் கேள்விகளைக் கேட்டுப் பதிலைப் பெறும் இணையதளமான Quora வில் கேள்விகளைக் கேட்டுப் பெற்ற பதில்களின் அடிப்படையில் தான் நம்ப முடியவில்லை என்று கூறுகிறேன்.
       நான் தோற்று நீ வெற்றி பெற்றால் இன்பம் நமக்குத் தான்’. இந்த வரியில் இருக்கும் உண்மையைப் புரிந்து தந்திரமான முறையில் தாம்பத்தியம் மேற்கொண்டு களிப்புற்று வாழ வாழ்த்துகள்.

நூல்: தந்தரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை
ஆசிரியர்: ஓஷோ
படித்தது: அமேசான் கிண்டில் தளத்தில்.

(கட்டுரையாளர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையில் M.phil   பட்டம் பெற்றவர்).
தொடர்புக்கு: m.bala10991@gmail.com

7 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. தாம்பத்தியம் தொடர்பான தெளிவை பெறத்தக்க புத்தகத்தை நீண்ட நாள் விடுமுறை காலகட்டத்தில் பகிர்ந்து சிறப்பித்து விட்டீர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஓஷோ என்பது ரஜ்னிஷ்தானா? இந்த காலகட்டத்தில் பெருகிவரும் குடும்ப வன்முறைக்குத் தீர்வு சொல்வதாய் அமைந்த நல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உடலும் மனமும் சீராய் இருந்தால் மட்டுமே இல்லரத்தில் இன்புர முடியும் என்பதை அறிந்துக்கொல்ல ஒரு நூலை அறிமுகப்படுத்திய நன்பர் பாலக்கிருஷ்னன் அவர்கலுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல புத்தகம். இந்த புத்தகத்தை நான் முயற்சித்து வருகின்றேன். கடந்த மாத துவக்கத்திலெயே புத்தகம் பகிரும் வாட்ஸப் குழுவில் பகிரப்பட்டது. மணிதனும் ஒரு சமூக விலங்கு என்பதை மீண்டும் ஞாபகம் செய்தது

    பதிலளிநீக்கு