அடித்தட்டு மனிதன் தொடங்கி, அரசின் முதன்மைகள் என அனைவரின் நாக்கும் அனுதினமும் உச்சரிக்கும் பெயர் கொரோனா. அபர்னா, ஆராதனா, கீர்த்தனா, வந்தனா எனத் தமிழ் விகுதியற்ற பிள்ளைகளின் பெயர்களில் உச்சிக் குளிர்கிற தமிழ்ச்சமூகத்திற்குக் கிடைத்திருக்கிற மற்றும் ஒரு பெயர் கொரோனா.
குடியுரிமையைச் சோதித்துக் கோடுகிழிக்கப் பார்த்தவர்களின் கொட்டம் அடக்கித், தொற்றுக்கு ஆளானவர், ஆளாகாதவர் என மக்கள்தொகைப் பதிவேட்டை மாற்றிப் பதிவிட பணித்திருக்கிறது கொரோனா. கோயில் நடைசாத்து; ஆலயக் கதவடை; தர்காவிற்குத் தாளிடு; மதம் மற; மனிதம் பேணு என ஈரோட்டுச் சிங்கத்தின் வார்த்தைகளை எல்லோரையும் உச்சரிக்க வைத்திருக்கிறது கொரோனா.
பள்ளியில் நீங்கள் படித்த கடவுள் வாழ்த்துப் பாடல்களைக் கொரோனாவோடு பொருத்திப் பாருங்கள். அங்கிங்கெனாதபடி, வானாகி மண்ணாகி… அடடா! எத்தனை பொருத்தம். அதிலும் ‘கோனாகி அவரவரைக் கூத்தாட்டுவானாய்’ ஊரடங்கு என்ற பெயரில் கொரோனா நடத்தும் கூத்துகளுக்குத் தப்பியவர் யார் இருக்கிறார்கள்??
நெடுந்தொடர்களை நிறுத்தி, வீட்டுப் பெண்களை நிற்கதியாக்கி, இந்தியத் தொலைக்காட்சிகளில் இருநூறாவது முறையாக அரண்மனைகளையும், கும்கிகளையும் காட்சிப்படுத்திய பெருமையைக் கொரோனாவிடம் விடுவானேன். எனவே நாயகன் களமிறங்கி, ‘நான் ஆணையிட்டால்’ என்ற தலைப்பைத் தூசு தட்டி எடுத்து, “தட்டுங்கடா, தட்டுங்கடா, கையத் தட்டுங்கடா”, “வெளக்கேத்து, வெளக்கேத்து ஞாயித்துக்கெழம” எனச் சில தமிழ்த்திரையிசைப் பாடல்களுக்குப் பட்டி டிங்கர் பார்த்ததில், “ஆஹா! படம் சுவாரசியமாய் நகர்கிறதே” எனப் பார்த்தால், இறுதிக் காட்சிகளில் கை தட்டிய அத்தனை மக்களின் கைகளிலும் கற்கள், உருட்டுக் கட்டைகள். கொரோனாவிற்குத் தன்னுயிரைப் பணையம் வைத்து மானுடம் போற்றிய மருத்துவர்களின் உடலைப் புதைக்கக்கூட இடம் தராத மனசாட்சியற்ற மக்களை அறிவியல் படுத்த வேண்டியதன் அவசியத்தை நாயகனுக்கே உணர்த்திச் செல்கின்றன திரைக்கதையில் அவரை மீறியும் காலம் திணித்துவிட்ட இறுதிக் காட்சிகள்.
நெடுந்தொடர்களை நிறுத்தி, வீட்டுப் பெண்களை நிற்கதியாக்கி, இந்தியத் தொலைக்காட்சிகளில் இருநூறாவது முறையாக அரண்மனைகளையும், கும்கிகளையும் காட்சிப்படுத்திய பெருமையைக் கொரோனாவிடம் விடுவானேன். எனவே நாயகன் களமிறங்கி, ‘நான் ஆணையிட்டால்’ என்ற தலைப்பைத் தூசு தட்டி எடுத்து, “தட்டுங்கடா, தட்டுங்கடா, கையத் தட்டுங்கடா”, “வெளக்கேத்து, வெளக்கேத்து ஞாயித்துக்கெழம” எனச் சில தமிழ்த்திரையிசைப் பாடல்களுக்குப் பட்டி டிங்கர் பார்த்ததில், “ஆஹா! படம் சுவாரசியமாய் நகர்கிறதே” எனப் பார்த்தால், இறுதிக் காட்சிகளில் கை தட்டிய அத்தனை மக்களின் கைகளிலும் கற்கள், உருட்டுக் கட்டைகள். கொரோனாவிற்குத் தன்னுயிரைப் பணையம் வைத்து மானுடம் போற்றிய மருத்துவர்களின் உடலைப் புதைக்கக்கூட இடம் தராத மனசாட்சியற்ற மக்களை அறிவியல் படுத்த வேண்டியதன் அவசியத்தை நாயகனுக்கே உணர்த்திச் செல்கின்றன திரைக்கதையில் அவரை மீறியும் காலம் திணித்துவிட்ட இறுதிக் காட்சிகள்.
இது கொரோனா நடத்திய தேசக்கூத்து என்றால், ஊரடங்கின் காரணமாய் மூடியே கிடக்கின்றன மருந்துக் கடைகள். எத்தனால், ஹேண்ட்வாஷ் என தனக்குத்தானே குடிமகன்கள் கைவைத்தியம் பார்த்துக்கொண்ட பிராந்தியக் கூத்துகளும் ஏராளம். சரி எவருமே தப்பாத இந்த ஆட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தப்புவது எப்படிச் சாத்தியம்? இன்னும் உள்ளது உள்ளபடி சொன்னால், இந்த இக்கட்டான சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் படிக்கும் மாணவர்கள் தொடங்கி, பத்திப் பைதூக்கும் எண்ணற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளே.
சுய ஊரடங்கின் முந்தைய நாள், அதாவது மார்ச் 21 இரவே சென்னைப் பெருநகர இரயில்கள் நின்றுவிட்டன. அடுத்தநாள், நிமிடத்திற்கு ஒரு செய்தி, அரசின் அறிவிப்பு என பரபரக்கத் தொடங்கியது தமிழகம். அதிலும் புதிய தலைமுறையின் அந்த டான்டட டான்டட டான் என்ற இசைக்கீற்று அப்பலோவின் அந்த 75 நாட்களை நினைவூட்டித் திகிலூட்டியது.
எந்த ஒரு அவகாசமுமின்றி, மார்ச் 24 ஆம் தேதி, மாலை ஆறு மணிக்கு மாநிலத்தில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்படும் என்று மார்ச் 23 ஆம் நாளின் பிற்பகலில் வந்த அரசின் அறிவிப்பில் திணறியது சென்னை கோயம்பேடு. கூட்டம் சேராதே! என்று சொன்ன அதே அரசுதான், நிக்காம ஓடு, ஓடு, ஓடு, என என்னைப் போன்ற வெளியூர்வாசிகளைச் சென்னையிலிருந்து மூட்டைகட்ட வைத்தது.
வருகிற எல்லாப் பேருந்துகளிலும் மனித மூட்டைகள் திணிக்கப்பட்டதில், நிற்கக்கூட இடமின்றி, அத்தனை வெளியூர்ப் பேருந்துகளும் சமூக நெருக்கத்தில் சஞ்சரித்தன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் குறித்தான வினாக்களெல்லாம் அன்றைய பொழுதில் வெட்டி நியாயங்களாய் போயின.
இந்த மாநில ஊரடங்கில் அதிக மன உலைச்சலுக்கு
உள்ளானவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் சிறப்புப் பள்ளி மாணவர்கள். 11ஆம் வகுப்பின் எஞ்சிய ஒரே ஒரு பொதுத்தேர்வு ரத்து என்கிற அறிவிப்பு மார்ச் 23ஆம் தேதி இரவு எட்டுமணிக்குத்தான் வெளியானது. இன்னும் இருக்கும் அவகாசம் 20 மணிநேரம் மட்டுமே. அதற்குள் தூர ஊர்களிலிருக்கிற தங்கள் பெற்றோர் வந்து தங்களை எப்படி அழைத்துச் செல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் பல மாணவர்களுக்கு என்றால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கோ, இந்த விடுமுறைக் காலத்தில் விடுதியிலேயே தேங்கிவிடுவோமோ! என்ற கவலை.
ஒருவித மனக்கலக்கத்தோடே தங்களின் இறுதித் தேர்வை எதிர்கொண்டார்கள் 12ஆம் வகுப்புப் பயிலும் சிறப்புப் பள்ளி மாணவர்கள். பிற்பகல் இரண்டரை மணிக்குத் தேர்வு முடியவிருந்த நிலையில், அரைமணி நேரத்திற்கு முன்பாக வந்தது இரண்டரை மணியோடு கோயம்பேட்டிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்கிற போக்குவரத்துத் துறையின் அந்தப் பொறுப்பற்ற அறிவிப்பு. அதிக விலை கொடுத்து கார் சவாரி, லாரி ஏறிப் பயணம் எனப் பல்வேறு சாகசங்களைச் செய்தே, சிறப்புப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஊர் சென்று சேர்ந்தார்கள்.
தங்களின் நேரடி கவனத்திலும், கட்டுப்பாட்டிலும்
இருக்கிற சிறப்புப் பள்ளி மாணவர்களையே தவிக்கவிட்ட அரசிடம், மாற்றுத்திறனாளிகள் குறித்த எந்த ஒரு தரவும் இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழலில், இரயில் சார்ந்து பிழைக்கும் பார்வையற்றோருக்கு அரசு என்ன செய்துவிடப்போகிறது? என்று எங்களின் ஹெலன்கெல்லர் அமைப்பு யோசித்தது. ஒரு நூறுபேருக்காவது நம்மால் முடிந்ததைச் செய்யலாம் என எங்களின் தலைவர் தைரியம் கொடுத்தார்.
அதற்குமேல் என்ன செய்வது, என்கிற விரக்தியிலும், வேதனையிலும்தான் எழுத்தின் வழியே யாசிப்பது என முடிவு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த யாசிப்பு பொதுமக்களைத் தூண்டியதைக் காட்டிலும், எம்மவர்களை அதிகம் எழுச்சிகொள்ளச் செய்தது. ‘நமக்கு நாமே’ என்ற ரீதியில், பார்வையற்ற வியாபாரிகளின் கண்ணீர் துடைக்கக் களமிறங்கிவிட்டார்கள் படித்துப் பணியிலுள்ள பார்வையற்றவர்கள்.
தனித்தும், அமைப்பாகவும் இணைந்து கொஞ்சமே கொஞ்சமேனும் அவர்கள் துயர் துடைத்துக்
கொண்டிருக்கிறோம் நாம். இது எல்லாமே தற்காலிகம்தான். வாழ்வாதாரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. எனவே அரசு அவர்களைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட வாரியாகக் கணக்கெடுத்து, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ. 2000 உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்களின் மருத்துவம் மற்றும் இதரத் தேவைகளை அறிந்துகொள்ள குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களின் இடம் சென்று பார்வையிட வேண்டும். இத்தகைய பணிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் மறுவாழ்வு வாகனங்கள் (mobile vans) பயன்படுத்தப்படுவதை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
விடிந்தால் முடிவது கூத்து. ஆனால், ஒவ்வொரு விடியலிலும் உயர்கிற எண்ணிக்கையைப் பார்த்தால், கொரோனா நடத்தும் ஊரடங்குக் கூத்து எப்போது முடியும் என்பதில் எவருக்கும் திண்ணமில்லை.
என்ன செய்யப் போகிறோம் நாம்? கூத்து முடிந்தவுடன் களையப்போகிறோமா? அல்லது, கூத்தில் நிகழ்வது ஒரே காட்சிதான் என்றாலும், அதற்கு ஒரு சாரார் சிரிப்பதும், மறு சாரார் அழுவதுமான இந்த இடைவெளியைக் களையப்போகிறோமா?
(கட்டுரையாளர்: பூவிருந்தவல்லி பார்வைக் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்).
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com
இடுக்கண் வரும்போது நகுவது இதுதானோ? உண்மையில் நீங்கள் எழுதிய அந்தக் கட்டுரைதான் என்னைப் போன்ற இன்னும் பலரையும் பார்வையற்ற குடும்பங்களுக்கு மிகச் சிறிய அளவிலாவது நிவாரணத்தைக் கொண்டுசேர்க்க வேலை செய்ய வைத்தது என்பதில் கொஞ்சமும் மிகையில்லை. கொரொனாவிற்குப் பிந்தய காலகட்டத்தில் ஒரு புதிய எதார்த்தம் (New Normality) உருவாகப் போகிறது என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் காலம் வரை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட எல்லா விளிம்புநிலை மக்களும் உயிரோடாவது வாழ வேண்டும், அதனை இந்தச் சமூகமும் அரசும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் உருவாகப்பொகும் புதிய எதார்த்தம் பழய தவறுகளைக் கலைந்து பார்வையற்றோருக்கும் பிறருக்கும் இதுவரை கிடைக்காத சமத்துவத்தை வழங்கியாகவேண்டும். அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇந்தப் பேரிடர் காலம் நமது பார்வையற்றோர் சமூகத்தில் புதிய ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியே. மனதிலிருந்து அச்சிலேறும் வார்த்தைகளுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்ற என்னுடைய நெடுநாள் விரக்தி கழிந்தது. நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.
நீக்குமிகவும் சிறந்த நடையில் பார்வையற்றோரின் இடர்பாடுகளை எடுத்து வைத்தபடி பயணிக்கிறது உங்களில் கட்டுரை. அரசியல் சினிமா உள்ளிட்டவற்றை ஓடு ஒப்பிட்டு தந்த விதம் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் உங்களுக்கு.
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள்கட்டுரை
நீக்குமிகவும் சிறந்த நடையில் பார்வையற்றோரின் இடர்பாடுகளை எடுத்து வைத்தபடி பயணிக்கிறது உங்களில் கட்டுரை. அரசியல் சினிமா உள்ளிட்டவற்றை ஓடு ஒப்பிட்டு தந்த விதம் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் உங்களுக்கு.
பதிலளிநீக்குஎழுத்து வழக்கம்போலவே சிரப்பு. இதில் உங்களை பாராட்ட துவங்கினாள் அது போய்க்கொண்டே இருக்கும். இந்த கட்டுறையில் முதல் பாதி எள்ளலும் ஏளனமும் அருமை. இண்டர்வலுக்கு பிரகு அப்படியே கதையை மடைமாற்றி. கல எதாற்த்தத்தை பரைசாற்றியிருப்பது பாராட்டுதலுக்கு உரியதே. அதிலும் போகிரபோக்கில் மாற்றுத்திரணாளிகளை மாற்றத்தை நோக்கி தூண்டச்செய்யும் வார்த்தைகள் போட்டு கட்டுறையை முடித்திருப்பது. சமுகத்திடையே எழுத்தாளரின் எதிற்பாற்பை காட்டுகின்றது.
பதிலளிநீக்குஎன்னுடைய கட்டுரையை இடைவேலைக்கு முன் பின் என்று பகுத்துப் புரிந்துகொண்ட முதல் நபர் நீங்கள்தான். எனக்கும் எழுதிவிட்டுப் படிக்கையில் இதே உணர்வு எழுந்தது. கூத்து என்று தலைப்பிட்டுவிட்டதால் கொஞ்சம் பொருத்தமாகத் தோன்றுகிறதோ என்னவோ? நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு.
பதிலளிநீக்கு